Showing posts with label ழான்றே - நகைச்சுவை. Show all posts
Showing posts with label ழான்றே - நகைச்சுவை. Show all posts

Thursday, November 15, 2012

அம்மாவின் கைபேசி 13-11-2012 தங்கர் பச்சன் - ஒரு வரலாறு

என்னத்த சொல்லறது , எல்லாம் என் நேரம் .இல்லாட்டி நன்பன்கிற போர்வையில இருந்த படுபாவி சொன்னத நம்பி , "அம்மாவின் கைபேசி" படத்துக்கு போவனா? முந்தநாள் என் பையன சேனல் சர்ப் பண்ணும் போது தங்கரோட பேட்டியோட ஒரு பகுதி காதுல விழுந்தது, அதுல நம்மாளு  " இந்த படத்தை ஒவ்வருவரும் மூணு முறையாவது பாக்கணும் ஒவ்வரு முறையும் ஒரு புது விஷயம் புது கோணத்தில் தெரியும் " அப்படின்னாரு , அத நம்ம்பி ( கவனிக்கவும் எக்ஸ்ட்ரா அழுத்தம்) நானும் பொண்டாட்டி புள்ளைகள கூட்டிகிட்டு கொட்டாய்க்கு போய்ட்டேன். போனப்புறம் தான் தெரிஞ்சது , பயலோட முகமூடி கிழிஞ்சது ( ரைமிங் ). நம்மகிட்ட ஒன்னுமன்னா பழகிக்கிட்டு ,உள்ளுக்குள்ள எவ்வள்ளவு காண்டு வச்சுகிட்டு இருக்கான்கன்னு. எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்கிற கீத வசனம் ( பைபிளா ,இல்ல திருக்குறளா ?) புரிஞ்ச மாதிரி தெரிஞ்சது , ஏன்னா நண்பனுக்குள்ள இருந்த துரோகிய அடையாளம் தெரிஞ்சிகிட்டேன் .ஆனா அந்த லாஜிக் படத்துக்கு செட்டாகல.

படத்துல தங்கர் ஆடுறத பாத்து பயந்துபோன நம்ம பய ,அப்பா வூட்டுக்கு போலாம்பான்னு அழ ஆரம்பிக்க, ஏண்டா ஒன்னால தான டிவில அந்த கருமத்த பாத்துட்டு இங்க வந்து தொலயவேண்டியதா போச்சின்னுட்டு நறுக்குன்னு தலைல ஒன்னு வச்சேன், ஒடனே பயபுள்ள தீபாவளிக்கு அதிரசதுக்கு பதிலா ஆட்டம்பாம முழுங்கின மாதிரி கத்த ஆரம்பிச்சிட்டான். அவன சமாதனபடுத்த ஐஸ் க்ரீம் வாங்கி குடுக்க கேண்டீன் போனா அவன் என்னான்னா ஐநூறு ரூபாய்க்கு சில்லரைஇல்லன்னு அலையவுட்டுட்டான்.

இந்த கடுப்பைஎல்லாம் சேத்துவச்சு மட்டிவுட்ட ராஸ்கோல போன்ல புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு கேட்டேன் ஏண்டா , தீவாளிக்கு எங்கிட்ட வாங்கிகுடிச்ச ஓசி குடியோட போத தெளியறதுக்கு முன்னாலேயே இப்புடி மட்டிவுட்டுடியேடான்னு . அலட்டிக்காம அந்த கெரகம் புடிச்சவன் சொல்லறான் , மாப்பள, நீயி பாண்டிச்சேரி போயி ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு புல் வாங்கிட்டு வந்துட்டு அதகாட்டியே எழுநூத்து அம்பது ரூபா தந்தூரி சிக்கன ஒண்டியா திண்ணுட்ட ,மேக்கொண்டு இதுதான் நியுட்டனோட தியரி, என்னஎப்புடி தாண்டவம் ஒரு சிறந்த படம்னு ஒரு ஒலகமகாபுளுகை புளுகி மாட்டிவுட்டெல்ல, அதோட எதிர்வினை தாம்ப்பு இது அப்புடின்னு லாஜிக்கா மடக்குனான் பாருங்க ,நிர்மலா டீச்சர் இடுப்ப பாத்துட்டு படிக்க மறந்து போன நியுட்டனோட மூணாவது விதி ( அந்த கெரகத்த பாத்தது ஒரு கொலைவெறி ப்ளாஷ்பேக் ) பளிச்சுன்னு ஞாபகம் வந்துடிச்சு}.

சரிடான்னு ,படம் பாத்த மத்த ரெண்டு பயபுள்ளங்கள கூப்பிட்டு , கோட்டு போட்டுக்கிட்டு கேமரா முன்னால வோக்காந்துகிட்டு இருகிறதா நெனச்சிகிட்டு ஒரே வரில படத்த பத்தி சொல்லுங்க ன்னேன், ஒருத்தஞ்ச்சொன்னான்"மிஸ்டு கால்" இன்னொருத்தன் சொன்னான் " பேட்டரி காலி ". படம் முடிஞ்சபொறவு ஒரு எலக்கிய வட்டார தோழர் பொன் போட்டு கேட்டார் படம் எப்புடின்னு நாஞ்சொன்னேன் " தங்கர் பச்சான் ஒரு வரலாறு " அந்த இலக்கியம் நா ஏதோ பாராட்டுன மாதிரி பிரமதம்ன்னு சொல்லிட்டு போன வச்சிடுச்சு.அநேகமா இன்னம் ரெண்டு நாள்ல படம் பாத்துட்டு கொலவெறியோட போன் பண்ணும்னு நெனைக்கிறேன்.

இல்லாட்டி இத்தோட நம்ம கூட்டே வேணாம்ன்னு வெலகிடும் ( நடந்தா நல்லதுதான், இல்லாட்டி எம்புட்டு நேரந்தான் அதோட போன்ல சமகாலம் ,முன்நவீனத்துவம் ,பின்னிரவு நேரங்களின் முன்போழுதுகளில் அப்புடின்னு இலக்கிய சம்பார குடிக்கிறது ( ஏன் இலக்கிய ரசம் இருக்கும் போது சாம்பார் இருக்ககூடாதா?) போன் பேசுறத கேட்டுகிட்டு பக்கத்துல இருந்த பொண்டாட்டி கேட்டா ,"ஏங்க அதுக்கு என்னங்க அர்த்தம்" நாஞ்சொன்னேன் அதுக்கு பேர்தான் " முடிஞ்ச கல்யாணத்துக்கு மோளம் அடிக்கிறதுன்னு " இத படிச்சுட்டு படத்தோட விமர்சனம் என்ன அப்புடின்னு என்ன கேக்கிற புண்ணியவான் தயவுசெஞ்சு, படத்த பாத்துட்டு வந்து உயிரோட இருந்தா, கத என்னன்னு சொல்லி எனக்கு மெயில் போடுங்க.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1 Bullet

1/6  ஒரே ஒரு தோட்டா,அதுவும் கூட போனாப் போவுதுன்னுதான்!

சாவியின் பன்ச்: மிஸ்ட் கால - தங்கர் இஸ் ஹிஸ்டரி.

Tuesday, June 21, 2011

பேஜா ப்ரை 2 விமர்சனம் (Bheja Fry Part 2 Hindhi Film 17th June 2011)

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.

ஹிந்தி சினிமாக்களில் மல்டிபிளெக்ஸ் சினிமாக்கள் என்று ஒரு வகை உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட வகையினரை மட்டுமே மனதில் கொண்டு எடுக்கப்படும் படங்கள். தெளிவாக சொல்வதென்றால் ஹிந்தியில் எடுக்கப்படும் ஆங்கில சினிமாக்கள் என்றும் இவற்றை சொல்லலாம். அதாவது, படம் வெறும் ஏ சென்டர்களில் மட்டுமே ஓடும் அளவிற்கு கதையையும், கதை நடைபெறும் களனையும் கொண்டு இருக்கும். ஆகையால் இவற்றை ஒரே திரை கொண்ட சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டரில் திரையிட தயங்குவார்கள். ஆனால் பல திரைகளை கொண்டு இருக்கும் மல்டிபிளெக்ஸ் அரங்கங்களில் இப்படி பட்ட பிரச்சினைகள் இருக்காததால் தைரியமாக இந்த மாதிரி படங்களை வெளியிடுவார்கள். இப்படி பட்ட படங்களில் ஒரு தனி மரியாதை பெற்ற படமே பேஜா ப்ரை (மூளையை வறுத்தல் அல்லது மூளை பொறியல்).

படத்தின் பின்னணி: நான்கு வருடங்களுக்கு முன்பு சாகர் பெல்லாரி என்கிற இயக்குனர் தி டின்னர் கேம் என்கிற பிரெஞ்சு படத்தின் கதையை ஹிந்தியில் எடுத்தார். ஒரு அப்பிரானியின் சாகசங்கள் என்கிற வகையில் இந்த படம் சேர்த்தி. போகோ சேனலில் மிஸ்டர் பீன் என்றொரு பாத்திரம் வரும் (பின்னர் இரண்டு திரைப்படங்கள் வேறு). அதனைப்போலவே இந்த பாத்திரமும் புத்திகூர்மையில் சோடை போனாலும் தன்னுடைய தூய மனதால்,வெள்ளை உள்ளத்தால் பார்ப்பவர் அனைவரையும் கவரும் விதத்திலேயே இருந்தது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலும் டிவி நட்சத்திரங்களை மட்டுமே கொண்டு எடுக்கப்பட்ட் இந்த பேஜா ப்ரை என்கிற படம் மல்டிபிளெக்ஸ் படங்களில் ஒரு முக்கியமான படமாக மாறியது (அதற்க்கு முன்னர் மல்டிபிளெக்ஸ் எல்லாம் வருவதற்கு முன்பு வந்த ஒரு முக்கியமான படம் ஹைதராபாத் ப்ளூஸ்).

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் பல இன்டி படங்கள் வந்து வெற்றியையும் பெற்றன. அதனை தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வந்துள்ளது. முதல் பாகம் ஏப்ரலில் வந்ததால் இரண்டாம் பாகமும் ஏப்ரலில் ரிலீஸ் செய்யலாம் என்று முதலில் ஏப்ரல் மாதத்தில் வருவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்த இந்த படம் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது.

பேஜா ப்ரை படத்தின் கதை: பல துறைகளில் தடம் பதித்து, வெற்றியும் பெற்று புகழுடன் இருக்கும் ஒரு போலி தொழில் அதிபர் (கே கே மேனன்). இவர் ஒரு சபலிஸ்ட். இவர் அடுத்து தொலைக்காட்சி துறையில் வரவிருப்பதை அடுத்து அவரது நிதி உதவியை பெற நினைக்கிறார் பிரபல தொலைக்காட்சியின் அதிபராகிய அவரது நண்பர் (ராகுல் வோரா). அப்போது அவரது சேனலில் நடக்கும் ஒரு போட்டியில் ஜெயிக்கிறார் இன்கம் டேக்ஸ் துறையில் பணி புரியும் நம்ம ஹீரோ (வினய் பாதக்).அந்த நிகழ்ச்சியின் புரோட்டியூசர் ரஞ்சனி (மினிஷா லாம்பா).வெற்றி பெற்றதால் ஒரு சொகுசு கப்பலில் பிரயாணம் செய்யும் வாய்ப்பை பெறுகிறார் வினய். இன்கம் டேக்ஸ் ரெயிட் இருப்பதால் தன்னுடைய இன்வெஸ்டார் மீட்டிங்கை கப்பலில் வைக்கவும், இவர்களுடன் பிரயாணம் செய்யவும் சம்மதிக்கிறார் கே கே மேனன். அவருக்கு ரஞ்சனி மீது ஒரு ரெண்டு கண்.

இந்த நிலையில் கே கே மேனனின் வரி ஏய்ப்பு பற்றி விசாரிக்கும் வினய் பாதக்கின் உயர் அதிகாரி மாறுவேடத்தில் அதே கப்பலில் வருகிறார். இந்த தகவலை அரை-குறையாக தெரிந்துகொள்ளும் கே கே மேனன், வினய் தான் அந்த இன்கம் டேக்ஸ் அதிகாரி என்றெண்ணி அவரை அழிக்க திட்டமிடுகிறார். இதன் பிறகு நடந்தது என்ன என்பதை (கண்டிப்பாக) வெள்ளி திரையில் கண்டு களிக்கவும்.

படத்தின் சிறப்பு அம்சங்கள்: கண்டிப்பாக இயக்கமும், பாத்திரங்கள் தேர்வும் முதல் இடத்தை பிடிக்கின்றன. குறிப்பாக கே கே மேனன், தீவில் தனியே இருக்கும் பர்மன், கே கே மேனனின் பாதுகாப்பு அதிகாரி, வினய் பாதக்கின் உயர் அதிகாரியாக வரும் சுரேஷ் என்று இவர்களது பாத்திரங்களும், அந்த பாத்திரங்களின் அமைப்பிற்கு இவர்களது பாந்தமான நடிப்பும் பிரம்மாதம். குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் கே கே மேனனும், வினய்’யும் போட்டி போட்டுக்கொண்டு நம்மை மகிழ்விக்கிறார்கள். இவர்களது வசனங்கள் மற்றும் டைமிங் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.

இரண்டாம் பாகம் என்பதால் மிகுந்த பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வந்து உள்ளது இந்த படம். அதுவும் மூன்று மாதங்கள் கால தாமதமாக வந்து இருப்பதால் இன்னமும் கூடி உள்ளது எதிர்ப்பார்ப்பு. அதன் காரணமாகவே இந்த படம் நன்றாக இருந்தாலும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். அதுவும் வினய் பாதக் கதாபாத்திரம் இன்னமும் சிறப்பாக காமெடி சாகசங்கள் செய்யும் என்று பலரும் கற்பனையுடன் வந்து இருப்பார்கள். அவர் நன்றாகவே நடித்து இருந்தாலும், எதிர்ப்பார்ப்பு மிகுதி என்பதால் சற்று ஏமாற்றமே வருகிறது. அதுவும் முதல் பகுதி கொஞ்சம் போர் என்று அருகில் இருந்த இளம் பெண் கைபேசி மூலம் தன நண்பர்களுக்கு அப்டேட் செய்துக்கொண்டு இருந்ததை மறுக்க இயலாது (அதாவது கொஞ்சம் போர் என்பதை மறுக்க இயலாது).

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:   3/6 - மூன்று தோட்டாக்கள்!

கிங்'ஸ் பன்ச்: பேஜா ப்ரை - பேஷா ட்ரை (பண்ணலாம்). மூளைக்கு வேலை இல்லை.

Tuesday, June 7, 2011

ரெடி-2011-ஹிந்திப்படம்

சல்மான் கானின் தீன்க சிக்கா, தீன்க சிக்கா, தீன்க சிக்கா, தீன்க சிக்கா,ஹொய், ஹொய், ஹொய், ஹோய்

இந்த வருடத்தின் மிகப்பெரிய முதல் இந்தியப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இன்னும் பல காத்திருக்கின்றன. என்ன, ராணா பற்றி ஏதாவது பேசுகிறேனோ என்று நினைப்பவர்கள் எல்லாம் ஒரு ஸ்டெப் பேக். நான் சொல்வது ஜனங்களின் ஸ்வீட்ஹார்ட் சல்மான் கானின் லேட்டஸ்ட் படமாகிய ரெடி பற்றி. 23 வருடங்களாக நடித்துக்கொண்டு இருந்தாலும்கூட சமீபத்தில்தான் நம்ம சூப்பர் ஸ்டாரின் பாணியை பின்பற்ற ஆரம்பித்து இருக்கும் சல்மானுக்கு தபங் படத்திற்கு பிறகு மற்றுமொரு மகத்தான வெற்றி(யை தரப்போகும்)  படமே இந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன ரெடி. இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னாள் கொஞ்சம் கொசுவத்தி கலந்த ஹிஸ்டரி.

ஒரு சின்ன பிளாஷ்பேக்: கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு முன்பாக தெலுகு இயக்குனர் சீனு வைட்லாவின் இயக்கத்தில் ராம், ஜெனிலியாவின் நடிப்பில் வந்து சக்கை போடு போட்ட சூப்பர் ஹிட் படம் ரெடி. இந்த படத்தை உடனடியாக அடுத்த வருடமே கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரை ஹீரோவாக்கி எடுத்தார்கள் (ஒரு நாள் பெங்களுருவில் நம்ம ப்ரியாமணியின் போஸ்டரைக்கண்டு நண்பரிடம் விசாரிக்க, அவர் நம்மை படத்துக்கே அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், அதுதான் இந்த படம்) . அந்த படமும் வெள்ளிவிழா கண்டு சூப்பர் ஹிட் ஆகி விட்டது. அதற்க்கு அடுத்த வருடம் அந்த படத்தை தமிழில் எடுத்து சரிந்திருந்த தனுஷ் மார்கெட்டை தூக்கி நிறுத்தினார் மித்திரன் R ஜவஹர். தெலுகில் ரெடி என்று வந்தது கன்னடாவில் ராம் என்று ஆனதுபோல தமிழில் இது உத்தமபுத்திரன் என்று பெயர் மாற்றப்பட்டது. இப்போது இந்த ரெடி படமே ஹிந்தியில் ரிமேக்கப்பட்டு இருக்கிறது. தமிழில் நான் உத்தமபுத்திரன் படம் பார்த்துவிட்டேன். காமெடி காட்சிகளை டிவியிலே பார்த்துகொள்கிறேன் என்று சொல்பவர்கள் மறுபடியும் ஒரு முறை யோசியுங்கள். இது தெலுகு, கன்னட மற்றும் தமிழ் படங்களை விட சிறப்பாக வந்துள்ளது.

என்னை எங்க அப்பா சின்ன வயசுல இலக்கியவாதியாக படிக்க வைக்காததால், நான் வெகுஜன ரசனையோடு வளர்ந்துவிட்டேன். ஆகையால் ஒரு படத்தை இப்படிதான் பார்க்கவேண்டும், படங்களின் காட்சிகள் இடையே இருக்கும் குறியீட்டை இப்படிதான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆகையால் அறிவுஜீவிகள் இந்த படத்திற்கு செல்லவேண்டாமென்று சொல்வதோடில்லாமல் இரண்டரை மணி நேரம் டைம் பாஸ் செய்ய நினைப்பவர்கள் அனைவருமே கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இந்த ரெடி என்றும் சொல்வேன்.

கதை: இந்த கதை என்கிற வஸ்து இந்த படத்தில் இருக்குமா என்று முந்தைய பத்தியை படித்துவிட்டு சந்தேகப்படும் நண்பர்கள் பயப்பட வேண்டாம். எண்பதுகளில் வந்த இரண்டு குடும்பங்களை சேர்த்து வைத்து காதலியை கைப்பிடிக்கும் ஹீரோவின் கதையே ரெடி. என்னடா முப்பது வருடதிற்ற்கு முந்தைய கதையை கொண்டுள்ள படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று சொல்கிறானே என்று நினைக்கவேண்டாம். படத்தின் சிறப்பு அம்சங்களாக காமெடி காட்சிகளும், சிரிப்பை வரவழைக்கும் வசனங்களும், மிகச்சிறப்பான பாடல்களும் இருந்தாலும் மூன்று விஷயங்களே படத்தை பார்க்க தூண்டுகிறது: சல்மான் கானின் I, ME & MYSELF. சுருங்க சொல்வதாயின் இது ஒரு சல்மான் கான் படம். வேறு எதையும் எதிர்பார்த்து செல்லாதீர்கள். சல்மானின்ரி வேறில்லை இந்த ரெடியில்.

நடிப்பு: சல்மான் கானைப்பற்றி சொல்லவே தேவை இல்லை. மனுஷன் அசத்தி விட்டார். இந்த படத்தில் காமெடி விஸ்வரூபம் எடுத்துள்ளார் சல்மான். அசின் பல இடங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் சில இடங்களில் சுமாரே. ஆனால் அதை ஈடுகட்டும் விதத்தில் கர்சீப்பை விட சின்ன வெள்ளைக்கலர் ஸ்கர்ட்'டில் செமையான குத்தாட்டம் போட்டு 'திறமையை' வெளிப்படுத்தியுள்ளார்.  ஹிந்தியின் மிகச்சிறந்த குணசித்திர நடிகராக (நான் கருதும்) பரேஷ் ராவல் இந்த படத்தில் சிக்சர் மேல் சிக்சர் அடித்துள்ளார். ஆனால் காமெடியில் அனைவரையும் மிஞ்சுபவர் சிறிதே அறிமுகம் ஆன சுதேஷ் லேஹ்ரி. அவருக்கு ஒரு ஓ போடுவோம்.

இதையும் தாண்டி படத்தில் சல்மானின் தந்தையாக வரும் இயக்குனர் மகேஷ் மான்ஜ்ரேகர், அங்கிள்களாக வரும் மனோஜ் ஜோஷி மற்றும் மனோஜ் பக்வா, வில்லன்களாக வரும் சரத் சக்சேனா, அகிலேந்திர மிஸ்ரா, அவர்களின் தந்தையாக வரும் புனீத் இஸார் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. 

இயக்குனர் அனீஸ் பாஸ்மி என்றாலே நட்சத்திரங்களின் கூட்டம் இருக்கும் என்று ஹிந்தியில் சொல்வார்கள்.அதை நிரூபிக்கும் வகையில் இந்த படத்திலும் பலர் மரியாதி நிமித்தம் தலையை காட்டியுள்ளார்கள். அஜய் தேவ்கன், சஞ்சய் தத், அர்பாஸ் கான், சங்கி பாண்டே, கங்கனா ருனாவட், ஜரின் கான் என்று பலர் கெஸ்ட் ரோலில் வந்து நம்ம அய்யம்பாளையத்தார் போல 'உள்ளேன் ஐயா' என்று அட்டென்டன்ஸ் இட்டு உள்ளார்கள்.

பாடல்கள்: நம்ம யூனா மாதிரி படம் ஆரம்பிக்கும் முன்னாடியே சென்று விடுங்கள். அப்போதுதான் ஆரம்பத்திலேயே வரும் சூப்பர் ஹிட் பாடல் 'கேரக்டர் டீலா' பாடலை ரசிக்க முடியும். அதைப்போலவே படம் முடிந்தவுடனேயே கிளம்பி விடாதீர்கள். தீன்க சிக்கா ரீமிக்ஸ் பாடல் படம் முடிந்தவுடன் வருகிறது (அசின் இன் ரெட் ஸ்கர்ட்). தெலுகில் சென்ற ஆண்டு வந்த ஆர்யா படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்தீர்களா? அதில் வந்த ரிங்க ரிங்கா பாடலைதான் ஹிந்தியில் தீன்க சிக்கா என்று மாற்றியுள்ளார்கள். அந்த பாடலும், அதற்க்கு சல்மான் + அசினின் குத்தாட்டமும், அதனை படமாக்கிய விதமும் சூப்பர். மொத்தத்தில் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக வருவதற்கு பிரகாசமான வாய்ப்புகளை பெற்றுள்ளது இந்த தீன்க சிக்கா பாடல்.

தியேட்டர் நோட்ஸ்: படம் பார்க்கும் ஆடியன்ஸிடமிருந்து செம ரெஸ்பான்ஸ்! குறிப்பாக சல்மான் கானின் ஒவ்வொரு வசனத்திற்கும் ஏகப்பட்ட கைதட்டல்கள். அதிலும் கிளைமேக்சில் சல்மான் சட்டையை கழட்டி தன்னுடைய கட்டுடலை காட்டும் அந்த காட்சியில் பெண்களே கத்தி ஆரவாரம் செய்கிறார்கள் (விட்டால் விசில் கூட அடிப்பார்கள் போல) அதிலும் அந்த காட்சியில் அசினின் முக பாவங்களும் அந்த வசனமும் அற்புதம் (கோயி தொ ரோகோ). இந்த படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸ் கண்டிப்பாக இருப்பார்கள்.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6. ஐந்து தோட்டாக்கள்.

imageஒரு கட்டை விரல் மேலே. 

கிங்'ஸ் பன்ச்: ரெடி, கோடை கடுமைக்கு மழை தந்த இடி.