Showing posts with label தமிழ் படம். Show all posts
Showing posts with label தமிழ் படம். Show all posts

Thursday, November 15, 2012

அம்மாவின் கைபேசி 13-11-2012 தங்கர் பச்சன் - ஒரு வரலாறு

என்னத்த சொல்லறது , எல்லாம் என் நேரம் .இல்லாட்டி நன்பன்கிற போர்வையில இருந்த படுபாவி சொன்னத நம்பி , "அம்மாவின் கைபேசி" படத்துக்கு போவனா? முந்தநாள் என் பையன சேனல் சர்ப் பண்ணும் போது தங்கரோட பேட்டியோட ஒரு பகுதி காதுல விழுந்தது, அதுல நம்மாளு  " இந்த படத்தை ஒவ்வருவரும் மூணு முறையாவது பாக்கணும் ஒவ்வரு முறையும் ஒரு புது விஷயம் புது கோணத்தில் தெரியும் " அப்படின்னாரு , அத நம்ம்பி ( கவனிக்கவும் எக்ஸ்ட்ரா அழுத்தம்) நானும் பொண்டாட்டி புள்ளைகள கூட்டிகிட்டு கொட்டாய்க்கு போய்ட்டேன். போனப்புறம் தான் தெரிஞ்சது , பயலோட முகமூடி கிழிஞ்சது ( ரைமிங் ). நம்மகிட்ட ஒன்னுமன்னா பழகிக்கிட்டு ,உள்ளுக்குள்ள எவ்வள்ளவு காண்டு வச்சுகிட்டு இருக்கான்கன்னு. எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்கிற கீத வசனம் ( பைபிளா ,இல்ல திருக்குறளா ?) புரிஞ்ச மாதிரி தெரிஞ்சது , ஏன்னா நண்பனுக்குள்ள இருந்த துரோகிய அடையாளம் தெரிஞ்சிகிட்டேன் .ஆனா அந்த லாஜிக் படத்துக்கு செட்டாகல.

படத்துல தங்கர் ஆடுறத பாத்து பயந்துபோன நம்ம பய ,அப்பா வூட்டுக்கு போலாம்பான்னு அழ ஆரம்பிக்க, ஏண்டா ஒன்னால தான டிவில அந்த கருமத்த பாத்துட்டு இங்க வந்து தொலயவேண்டியதா போச்சின்னுட்டு நறுக்குன்னு தலைல ஒன்னு வச்சேன், ஒடனே பயபுள்ள தீபாவளிக்கு அதிரசதுக்கு பதிலா ஆட்டம்பாம முழுங்கின மாதிரி கத்த ஆரம்பிச்சிட்டான். அவன சமாதனபடுத்த ஐஸ் க்ரீம் வாங்கி குடுக்க கேண்டீன் போனா அவன் என்னான்னா ஐநூறு ரூபாய்க்கு சில்லரைஇல்லன்னு அலையவுட்டுட்டான்.

இந்த கடுப்பைஎல்லாம் சேத்துவச்சு மட்டிவுட்ட ராஸ்கோல போன்ல புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு கேட்டேன் ஏண்டா , தீவாளிக்கு எங்கிட்ட வாங்கிகுடிச்ச ஓசி குடியோட போத தெளியறதுக்கு முன்னாலேயே இப்புடி மட்டிவுட்டுடியேடான்னு . அலட்டிக்காம அந்த கெரகம் புடிச்சவன் சொல்லறான் , மாப்பள, நீயி பாண்டிச்சேரி போயி ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு புல் வாங்கிட்டு வந்துட்டு அதகாட்டியே எழுநூத்து அம்பது ரூபா தந்தூரி சிக்கன ஒண்டியா திண்ணுட்ட ,மேக்கொண்டு இதுதான் நியுட்டனோட தியரி, என்னஎப்புடி தாண்டவம் ஒரு சிறந்த படம்னு ஒரு ஒலகமகாபுளுகை புளுகி மாட்டிவுட்டெல்ல, அதோட எதிர்வினை தாம்ப்பு இது அப்புடின்னு லாஜிக்கா மடக்குனான் பாருங்க ,நிர்மலா டீச்சர் இடுப்ப பாத்துட்டு படிக்க மறந்து போன நியுட்டனோட மூணாவது விதி ( அந்த கெரகத்த பாத்தது ஒரு கொலைவெறி ப்ளாஷ்பேக் ) பளிச்சுன்னு ஞாபகம் வந்துடிச்சு}.

சரிடான்னு ,படம் பாத்த மத்த ரெண்டு பயபுள்ளங்கள கூப்பிட்டு , கோட்டு போட்டுக்கிட்டு கேமரா முன்னால வோக்காந்துகிட்டு இருகிறதா நெனச்சிகிட்டு ஒரே வரில படத்த பத்தி சொல்லுங்க ன்னேன், ஒருத்தஞ்ச்சொன்னான்"மிஸ்டு கால்" இன்னொருத்தன் சொன்னான் " பேட்டரி காலி ". படம் முடிஞ்சபொறவு ஒரு எலக்கிய வட்டார தோழர் பொன் போட்டு கேட்டார் படம் எப்புடின்னு நாஞ்சொன்னேன் " தங்கர் பச்சான் ஒரு வரலாறு " அந்த இலக்கியம் நா ஏதோ பாராட்டுன மாதிரி பிரமதம்ன்னு சொல்லிட்டு போன வச்சிடுச்சு.அநேகமா இன்னம் ரெண்டு நாள்ல படம் பாத்துட்டு கொலவெறியோட போன் பண்ணும்னு நெனைக்கிறேன்.

இல்லாட்டி இத்தோட நம்ம கூட்டே வேணாம்ன்னு வெலகிடும் ( நடந்தா நல்லதுதான், இல்லாட்டி எம்புட்டு நேரந்தான் அதோட போன்ல சமகாலம் ,முன்நவீனத்துவம் ,பின்னிரவு நேரங்களின் முன்போழுதுகளில் அப்புடின்னு இலக்கிய சம்பார குடிக்கிறது ( ஏன் இலக்கிய ரசம் இருக்கும் போது சாம்பார் இருக்ககூடாதா?) போன் பேசுறத கேட்டுகிட்டு பக்கத்துல இருந்த பொண்டாட்டி கேட்டா ,"ஏங்க அதுக்கு என்னங்க அர்த்தம்" நாஞ்சொன்னேன் அதுக்கு பேர்தான் " முடிஞ்ச கல்யாணத்துக்கு மோளம் அடிக்கிறதுன்னு " இத படிச்சுட்டு படத்தோட விமர்சனம் என்ன அப்புடின்னு என்ன கேக்கிற புண்ணியவான் தயவுசெஞ்சு, படத்த பாத்துட்டு வந்து உயிரோட இருந்தா, கத என்னன்னு சொல்லி எனக்கு மெயில் போடுங்க.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1 Bullet

1/6  ஒரே ஒரு தோட்டா,அதுவும் கூட போனாப் போவுதுன்னுதான்!

சாவியின் பன்ச்: மிஸ்ட் கால - தங்கர் இஸ் ஹிஸ்டரி.

Friday, July 13, 2012

காணத் தவறாதீர்கள் வாலிபன் சுற்றும் உலகம்

Vaaliban Sutrum Ulagam

வணக்கம்.

ரொம்ப நாளாகவே இந்த பக்கம் வர முடியவில்லை. ஆனால் இன்று தமிழ் சினிமாவை திருப்பி போடும்படியாக ஒரு சம்பவம் நடந்தது (கண்டிப்பாக பில்லா ரிலீஸ் அல்ல). அதனாலேயே இந்த வலைப்பதிவு இங்கேயும் சரித்திரத்திலும் இடம் பெறுகிறது. இன்று காலையில் தினத்தந்தி படித்துக் கொண்டு இருந்தபோது இங்கே அருகில் இருக்கும் இந்த விளம்பரம் என்னை கவர்ந்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் போலவே வாலிபன் சுற்றும் உலகம் என்று டைட்டில் இருந்தது, புரட்சித் தலைவர் எம்ஜியார் போலவே இருக்கும் ஒருவர் நடிப்பதுவுமே காரணமாக இருக்கலாம்.

ஏற்கனவே சென்ற ஆண்டு நாமக்கல் எம்ஜியார் என்றொருவர் நடித்து ஒரு படம் (ஆட்சி மாறியதும்) ரிலீஸ் ஆனது நினைவிருக்கலாம். அதிஷா கூட அந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டு,அவரது ஆசை நிறைவேறாமலேயே போனது ஒரு தனிக்கதை. ஆனால் அந்தப்படம் போல மொக்கையாக இல்லாமல் சற்றே நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த விளம்பரத்தை மறுபடியும் பார்த்தேன். இந்த படத்தின் இயக்குனர் யாரென்று பார்த்தால் A.R. லலிதசாமி என்றிருந்தது. என்னுடைய வாழ்நாளில் நான் பலவிதமான,வித்யாசமான பெயர்களை எல்லாம் கேட்டிருக்கிறேன்(அதில் ஒரு போலீஸ்காரர் தன்னுடைய மகனுக்கு கலவரம் என்றெல்லாம் பெயரிட்டு இருந்தது அடங்கும்). ஆனால் சத்தியமாக இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லை. ஆகையால் அவர் யார், எனன செய்கிறார் என்று விசாரிக்கவாவது ஆசைப்பட்டு  தகவல்களை சேகரித்தேன். அதன் விளைவே இந்த பதிவு.

பழனியை சேர்ந்த சிவா என்பர்தான் ஹீரோ. பொள்ளாச்சியை சேர்ந்த லலிதசாமி தான் இயக்குனர். நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு T.M.சவுந்தர்ராஜனும் P,சுசீலாவும் சேர்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். இன்று சென்சார் போர்டுக்கு செல்லும் இந்த படம் அடுத்த வாரமோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரமோ ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13072012256

ACTORS:

M.G.R SIVA

M.G.R HARI

A.R.LALITHASWAMY

MEENATHCHI

LATHA

AADAVAN

ASHOKRAJ

SENTHILVEL

MANAORMA

MUTHUKUMAR

SURULI MANAOHAR

SKOVAI SENTHIL

MUSIC: Mellisai mannar M.S.Viswanathan

LYRICS:

Padmasri ' Vali'

Kamakodian ( That bhut Tanjavuru)

Story ,screen play , Direction

A.R.LALITHASWAMY

13072012258

Play Back Singers:

M.S.Viswanathan

T.M.Sounderarajan

Ananth

S.P.Balasubramaniam

P. Suseela

Chitra

Jayashree

Katrthika

Songs

Ramavararthi thottamithu

Mudal tamil un vizhilnile

Naan deivatahi pettra pillai

Unnai naan santhithen

Thentrale ini ennai thodathe

That bnut tanjavuru

Camera - Rajarajan

Stunts - Super Subbarayan

Art - Vinodth

Stills - Chandru

Production manager - Arumugam

Public relations officer - Venkat

Studio - A.V.M

Lab - Gemini

Production unit - Seven mounten

13072012259

இன்று இந்த இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விரிவாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றிரவு அவர் திரும்பவும் பொள்ளாச்சி செல்கிறார். திரும்பவும் சென்னை வந்து என்னை சந்திப்பதாகவும், ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றும் கூறியுள்ளார். பார்க்கலாம்.

Friday, February 10, 2012

தியேட்டர் டைம்ஸ்-10th Feb 2012 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம் Part 1

ப்ரிய தோழமைக்கு, ஒரு அருமையான திரைப்படம் ஏற்படுத்தும் உணர்வானது நெடுநாள் பிரிந்த நல்ல சிநேகிதத்தை மீண்டும் சந்தித்தமைக்கு சமம். அவ்வாறே இந்த வாரமும் திரைக்கு வரும் படங்களில் நல்ல சிநேகிதம் கிட்டுமா என்ற கேள்வியுடன் இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன்.நம்பிக்கையே வாழ்க்கையெனும் செயலுக்கு வினையூக்கியாக இருப்பதைப்போல, நானும் நம்பிக்கையுடன் இந்த வாரத்தில் திரைக்குவரும் படங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

வழக்கம் போல ஆரம்பிக்கலாம் என்று நினைத்துதான் ஆரம்பித்தேன். ஆனால் காலச்சுவடு, தீராநதி போன்ற இலக்கிய(வியாதி) புத்தகங்களை ஒரு நோக்கு நோக்கியதால் இப்படி தானாகவே டைப் ஆகி வந்துவிட்டது. மன்னிக்கவும். இனிமேல் அந்த புத்தகங்களை ஏறேடுத்துகூட பார்க்ககூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். அதுவுமில்லாமல் நான் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதனை நானே மதிப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்தானே?

இந்த வெள்ளிக்கிழமை மட்டும் பத்து படங்கள் (அல்லது பதினொன்றா?) ரிலீஸ் ஆகிறது. பத்தாம் தேதி என்பதால் பத்து படம் ரிலீஸ் ஆகிறதா என்று நியூமராலஜிப்படி கேட்க்க தோன்றியது. கட்டுப்படுத்திக்கொண்டேன்.

01: தோனி* (நாட் அவுட்): சிக்ஷானச்ச ஐச்சா கோ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு மராத்திப்படத்தின் ரீமேக் தான் இந்த தோனி படம் என்று ஒரு உறுதிப்படுத்தாத தகவல். அந்த மராத்திப்படம் ஆரம்பம் முதலே பல சிக்கல்களில் சிக்கியது. மராத்தி தெரியாதவர்களுக்கு: சிக்ஷானச்ச ஐச்சா கோ என்றால் "இந்த கல்விமுறை நாசமாகப்போக" என்று அர்த்தம் கொள்ளலாம். முதல் முறையாக தமிழில் பிரகாஷ்ராஜ் இயக்கம் படம் என்பதாலும், டூயட் மூவீஸ் மேல் மக்களுக்கு ஒரு நல்ல மரியாதை இருப்பதும் எதிர்ப்பார்ப்புக்கு காரணம்.

Dhoni pOSTER

  • படம் பெயர் : தோனி நாட் அவுட்
  • இயக்குனர்: பிரகாஷ் ராஜ் 
  • நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், ஆகாஷ் பூரி (பூரி ஜகன்னாத் மகன்), தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம், ராதிகா ஆப்டே, பிரபுதேவா (கௌரவ  தோற்றம்)
  • பட ஜானர்: குணசித்திரம்
  • தயாரிப்பாளர்: டூயட் மூவீஸ் பிரகாஷ் ராஜ் 
  • இசை இயக்குனர்: இசைஞானி இளையராஜா 
  • மொழி:  தமிழ் மற்றும் தெலுகு 
  • என்ன மேட்டர் படத்துல: இப்போதுதான் நண்பர்கள் படத்தின் மூலம் தற்போதைய கல்வி முறையை சாடி ஒரு படம் வந்தது. இந்த படம் கூட கிட்டத்தட்ட அதே சாயலில் கல்விமுறையை எதிர்த்து வந்துள்ள ஒரு படம். குறிப்பாக பள்ளி மாணவர்கள் என்னமாதிரி மன அழுத்தத்தை உணருகிறார்கள் என்றும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை பற்றியும் அலசும் ஒரு படம் தோனி.

02 ஒரு நடிகையின் வாக்குமூலம்: படத்தின் பெயரும் போஸ்டர் டிசைனும் "ஒரு மாதிரி"யாக இருந்தாலும் படத்தின் இயக்குனர் ராஜ் கிருஷ்ணா படம் அப்படிப்பட்டதல்ல என்று விளக்கமாக கூறுகிறார். பலவருட போராட்டங்களுக்கு பிறகு இயக்கம் படம்,அதனை "ஒரு மாதிரி" படம் எடுத்து கெடுத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். இந்த படத்தின் மூலம் சோனியா அகர்வால் செல்வராகவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க போவதாக பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

Oru Nadigaiyin Vaakkumooolam

  • படம் பெயர் : ஒரு நடிகையின் வாக்குமூலம்
  • இயக்குனர்: ராஜ் கிருஷ்ணா
  • நடிகர்கள்: சோனியா அகர்வால், கோவை சரளா,கஞ்சா கருப்பு, மனோ பாலா
  • பட ஜானர்: சோசியல் டிராமா 
  • தயாரிப்பாளர்: Ayangaran + SG Movies புன்னகை பூ கீதா 
  • இசை இயக்குனர்: ஆதிஷ்    
  • மொழி: தமிழ் 
  • என்ன மேட்டர் படத்துல: ஒரு பெண் நடிகையாவதர்க்கு என்னென்ன "தியாகங்கள்" செய்ய வேண்டியுள்ளது என்றும், திரைத்துறையில் உள்ள அவலங்களை தோலுரித்து காட்டும் ஒரு படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் திரைக்கதையை சரியான முறையில் கையாண்டால், தி டர்டி பிக்சர் போல ஒரு ஜாக்பாட் அடிக்கவும் வாய்ப்புண்டு.
  • 03 விளையாட வா: கேரம் போர்ட் விளையாடுவது எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பதின்ம வயது முதல் முப்பது வயது வரை அனைவருக்குமே ஒரு விருப்பமான விளையாட்டாக இருந்து வந்தது. கேபிள் டிவி மற்றும் விடியோ கேம்ஸ் வந்ததில் இருந்து இந்த விளையாட்டு மங்க ஆரம்பித்து விட்டது. இப்போது ஆட்டோ ஸ்டாண்டில் மற்றும் கிளப்புகளில் மட்டுமே விளையாடும் ஒரு ஆட்டமாக இருக்கிறது. தமிழில் விளையாட்டை வைத்து வந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வகையில் இந்த படம் முழுக்க முழுக்க கேரம் போட விளையாட்டை மைய்யமாக கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாய்ஸ் சித்தார்த் நடித்து ஒரு படம் வந்து காணாமல் போய் விட்டது. இந்த படமாவது ஓடுமா என்பதை பார்ப்போம்.

    Vilaiyaada Vaa

  • படம் பெயர் : விளையாட வா 
  • இயக்குனர்: விஜைய நந்தா 
  • நடிகர்கள்: விஸ்வநாத் பாலாஜி, திவ்யா பத்மினி, பொன்வண்ணன், ஐஸ்வர்யா, லட்சுமி ராமகிருஷ்ணன், மனோபாலா, லிவிங்க்ஸ்டன், மயில்சாமி, சார்லி
  • பட ஜானர்: விளையாட்டு சோசியல் டிராமா 
  • தயாரிப்பாளர்: திரிபுர சுந்தரி சினி கிரியேஷன்ஸ்
  • இசை இயக்குனர்: கமலேஷ் குமார்
  • மொழி: தமிழ் 
  • என்ன மேட்டர் படத்துல: ஆதரவில்லாத நாயகன் விஸ்வநாதன் பாலாஜிக்கு பொன்வண்ணன் அடைக்கலம் கொடுத்து, கேரம் விளையாட்டையும் கற்றுக்கொடுக்கிறார்.நாயகன் கேரம் விளையாட்டில் எப்படி வெற்றிப்பெற்று, சாம்பியனாகிறார் என்பதே விளையாட வா திரைப்படத்தின் திரைக்கதையாகும்.
  • 04 ஒரு மழை நான்கு சாரல்: புதுமுகங்கள் ரவி, சுதர்ஷன், கணா, சதீஷ் ஆகிய நான்கு பேருடன் அனகா மற்றும் ரம்யா இணைந்து நடித்திருக்கும் படம் ‘ஒரு மழை நான்கு சாரல்’. தமிழ் இலக்கண விதிமுறைகளுக்கு மாறாக இப்படத்தின் தலைப்பு அமைந்திருப்பதாக சிலர் குறை கூறினாலும் திரையுலக இலக்கத்தின்படி தனது படைப்பு தரமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஆனந்த். இந்த படத்தின் ஆடியோ விழா சென்ற ஆண்டு ஜூன் மாதம் நடந்த போதே மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்து விட்டது. சற்றே தாமதமாக ரிலீஸ் ஆகிறது இந்த படம்.

    1 Mazhai 4 Saaral

  • படம் பெயர் : ஒரு மழை நான்கு சாரல் 
  • இயக்குனர்: ஆனந்த் 
  • நடிகர்கள்: ரவி, சுதர்ஷன், கணா, சதீஷ், அனகா, ரம்யா, ஆக்ஷன் பிரகாஷ், சிங்கமுத்து
  • பட ஜானர்: காதல் என்கிற மென்மையான உணர்வை வெளிப்படுத்தும் காவியம் 
  • தயாரிப்பாளர்: சிகே3 புரொடக்ஷன் - பத்ரி (நம்ம பத்ரி இல்லீங்கோவ்) நாராயணன் 
  • இசை இயக்குனர்: A.D.மேஹன் 
  • மொழி: தமிழ் 
  • என்ன மேட்டர் படத்துல: சோகம் என்பதையே அறியாத ரெண்டு பேரும், சோகத்தை தவிர வேறெதையும் அறியாத ரெண்டு பேரும் சந்திக்கிறார்கள். நட்பை மட்டுமே உறவாக கொண்ட இந்த நாலு பேரும் தங்கள் லட்சிய போராட்டத்தை ஆரம்பிக்க, இவர்களில் ஒருவருக்கு வருகிறது லவ். (அந்த பொண்ணுதான் மழையாக்கும்) இந்த காதலால் மொத்த லட்சியமும் மழைக்கால சென்னை மாதிரி ஆகிவிட, முடிவு என்ன என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறாராம் புதுமுக இயக்குனர் ஆனந்த்.
  •  

    05 வாச்சாத்தி:  தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலை பகுதியான வாச்சாத்தியில் கடந்த 1992ம் ஆண்டு சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை, வருவாய்துறை, காவல் துறையினரால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.அப்போது, பழங்குடி மக்களின் வீடுகள், பொருட்களை சூறையாடியதுடன் 18 பெண்களை பாலியல் பாலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 19 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 269 அரசு அதிகாரிகள் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்து, தண்டனையும் விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், ‘வாச்சாத்தி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது.

    Vachchaathi

  • படம் பெயர் : வாச்சாத்தி
  • இயக்குனர்: ரவித்தம்பி
  • நடிகர்கள்: அறிமுக நாயகன் ரமேஷ் ,நடிகை தர்ஷனி 'பெசன்ட் நகர்’ ரவி, 'மீசை’ ராஜேந்திரன், மகேந்திரன், பாண்டு, நெல்லை சிவா, பாபு ஆனந்த், கொட்டாச்சி, அப்புராஜ், ஷகீலா
  • பட ஜானர்: உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் திரைப்படம்
  • தயாரிப்பாளர்: சிகே3 புரொடக்ஷன் - பத்ரி (நம்ம பத்ரி இல்லீங்கோவ்) நாராயணன் 
  • இசை இயக்குனர்: அறிமுக இசையமைப்பாளர் ஜாக்சன்
  • மொழி: தமிழ் 
  • என்ன மேட்டர் படத்துல: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வாச்சாத்தி சம்பவத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டது. உண்மை சம்பவம் அது நடந்த இடத்திலேயே எடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது . தொடர்ந்து 20 நாள் இப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகனாக புதுமுகம் ரெத்னா ரமேஷ், கீழத்தெரு கிச்சா படத்தில் நடித்த கதாநாயகி தர்ஷனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரையில் தமிழில் உண்மை சம்பவங்களை மைய்யமாக கொண்டு வந்த படங்கள் வெற்றி பெற்றதில்லை. இந்த படம் எப்படி என்பதி நாளை மாலைக்குள் தெரிந்து கொள்ளலாம்.
  • 06 சூழ்நிலை: நெல்லு என்கிற படத்தில் ஹீரோவாக நடித்த சத்யா கதாநாயகனாக நடிப்பதைவிட இசையமைப்பாளர் தினா வில்லனாக நடிப்பதே இந்த படத்தின் அறிமுகம். படத்தின் ஆடியோ விழாவில ஹீரோயின் பவீனா திறந்த வெளியில் திறமை காண்பித்ததை யாரும் மறக்க முடியாது. இது போன்ற விழாக்களுக்கு எல்லாம் பழம்பெரும் பாடகி பீ.சுசீலா ஏன் வருகிறார் எனபதே தெரியவில்லை. 

    Soozhnilai

  • படம் பெயர் : சூழ்நிலை 
  • இயக்குனர்: தர்மசீலன் செந்தூரன் 
  • நடிகர்கள்: சத்யா, பவீனா, நிழல்கள் ரவி, இசையமைப்பாளர் தினா, கஞ்சா கருப்பு 
  • பட ஜானர்: வழக்கமான மசாலா படம் 
  • தயாரிப்பாளர்: Global Television
  • இசை இயக்குனர்: இசையமைப்பாளர் தினா
  • மொழி: தமிழ் 
  • என்ன மேட்டர் படத்துல: ஒரு வருஷத்திற்கு முன்பு இயக்குனர் செந்தூரன் தினாவை சந்தித்தபோது அவர் இசையமைப்பதை பற்றி மட்டுமே பேசினார். ஆனால் தினாவின் நெடுமுடி மற்றும் அவரது குறளின்பால் கவர்ந்து, இந்த படத்திற்கு அவரையே வில்லனாக புக் செய்துவிட்டார் இயக்குனர். ஏற்கனவே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார், இப்போ தினா வில்லனாக நடிக்கிறார். அடுத்தது என்ன? நடிகர்கள் எல்லாம் இசையமைக்கப்போகிறார்களா?
  • இதைதவிர இன்னும் ஐந்து படங்கள் இன்று ரிலீஸ் ஆக உள்ளன. அவற்றை பற்றிய பதிவை இன்று மாலையில் பார்ப்போம்.

    Sunday, June 26, 2011

    பிள்ளையார் தெரு கடைசி வீடு–திரைவிமர்சனம்:24-06-2011

    இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிந்து கொள்வது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

    சூப்பர் குட் பில்ம்ஸ் படக்கம்பெனியின் உரிமையாளர் R.B.சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ் (கோ பட ஹீரோ ஜீவா'வின் அண்ணன்). ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி 'ஜித்தன்' ரமேஷ் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு அறிமுகமான இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு படங்களில் தொடர்ந்து நடித்தார். அவற்றின் ஓட்டம், ‘ஓட்டம்’ கண்டதால் கடந்த நான்கு ஆண்டுகளாக படங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். இப்போது அவரின் படம் பிள்ளையார் தெரு கடைசி வீடு ரிலீஸ் ஆகி இருக்கிறது. நான்கு ஆண்டுகளாக படம் எதனையும் ஒப்புக்கொள்ளாத  ரமேஷ் இந்த படத்தில் நடித்திருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை தந்தாலும், ஒருவிதமான எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கி இருந்ததை மறுக்க முடியாது. ஆந்திராவின் சிறந்த கதை சொல்லியாகிய எழுத்தாளர் பி.வி.எஸ்.ரவியிடமிருந்து தமிழுக்கு முதல் முறையாக இயக்க வந்திருக்கும் கிஷோரை பற்றியும் ஒரு விதமான கேள்விக்குறி இருந்தது. இத்தகைய எதிர்ப்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்கிறதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்.

    பிள்ளையார் தெரு கடைசி வீடு கதை: எண்பதுகளில் வந்த குடும்ப கதை பார்முலா தான் இந்த படத்தின் ஆரம்ப ஒரு மணி நேர கதை. வேலை வெட்டி இல்லாமல் நான்கு நண்பர்களுடன் சுற்றும் ஹீரோ, நகரத்தில் கல்லூரியில் படிக்கும் (எப்போதும் அவனை திட்டிக்கொண்டே இருக்கும்) அவனது தங்கை, மகன் செய்யும் தவறுகளை எப்போதும் மன்னிக்கும் அன்பு மிகுந்த தாய் (துளசி மேடம் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?), கண்டிப்பான ஆனால் மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட அப்பா (ஜெயப்பிரகாஷ்), வெகுளியான மாமா என்று ஒரு அக்மார்க் தமிழ் கிராம குடும்பம். இவர்கள் வசிப்பது பிள்ளையார் தெருவின் கடைசி வீட்டில். இதை தவிர ஜெயப்பிரகாஷின் தங்கையை மணந்து கொண்ட பொறுப்பில்லாத குடிகார தந்தையாக இளவரசு, அவரது மகளாகிய வள்ளி (ஹீரோவுக்கு முறைப்பெண்-திரையில் தோன்றும்போதெல்லாம் பாவாடை தாவணியுடன் சேலை கட்டிக்கொண்டு இருக்கும்படியே அறிமுக காட்சிகள் - இரண்டு முறை) என்று தனி டிராக் வேறு.

    இப்படி அமைதியாக செல்லும் கதையில் கல்லூரி விடுமுறைக்காக தங்கையின் தோழி (சஞ்சிதா படுகோனே) ஊரில் வந்து தங்க, அப்போதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. தமிழ் சினிமா இலக்கணப்படி அவரிடம் காதல் கொள்கிறார் ஹீரோ. அதே சமயம் இளவரசு தன்னுடைய கடன்களை கட்டிய போஸ் வெங்கட்டுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்ய முடிவெடுக்க, (ஜித்தன் ரமேஷை கேட்காமலேயே) தன்னுடைய தங்கை மகளை மருமகளாக்க முடிவெடுக்கிறார் ஜெயப்பிரகாஷ். தந்தை சொல்லை தட்டவும் இயலாமல், தன்னுடைய காதலை சொல்லவும் இயலாமல் தவிக்கும் ரமேஷ், திருமண நாளன்று திடீரென்று சஞ்சிதாவையே திருமணம் செய்துக்கொண்டு வந்து அனைவரையும் திகைக்க வைக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்துக்கொண்டது வெறும் காதலுக்காக மட்டும் அல்ல என்பதே கதையை தூக்கி நிறுத்தும் ட்விஸ்ட். அது என்ன ட்விஸ்ட் என்பதை தயவு செய்து வெள்ளித்திரையில் கண்டு ஒரு நல்ல முயற்சியை ஊக்கப்படுத்துங்கள்.

    படம் எப்படி?: கதையின் தலைப்புக்கும் படத்திற்கும் முக்கியமான தொடர்பு இல்லையென்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த படங்களிலேயே வித்தியாசமான தலைப்பை கொண்டது இந்த படமே என்பதை மறுக்கவியலாது. முதல் ஒரு மணி நேரம் வழக்கமான தமிழ் படம் தான். ஹீரோ எதற்க்காக டி.ராஜேந்தரின் விசிறி ஆக வருகிறார் என்பது கதைக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் ஓரிரு காட்சிகளை நகர்த்த உதவுகிறது. நண்பர்கள் காமெடி, படத்தின் ஆரம்ப காட்சி, ஹீரோ வருகை, நாயகியை சந்திப்பது, காதலை சொல்ல முயலும் காட்சிகள் என்று தொடர்ந்து பல காட்சிகள்  மொக்கை என்றாலும் விறுவிறுப்பான இரண்டாம் பகுதி காரணமாக இவற்றை மன்னிக்கலாம். இதற்காக இதனை வழக்கமான தமிழ் படம் என்றெண்ணி விடாதீர்கள்.

    இயக்கம் - இயக்குனர்: சமீபத்தில் வேறு எந்த ஒரு முதல்பட இயக்குனரும் தமிழில் இந்த அளவுக்கு வலுவான கதையையும், புத்திசாலித்தனமான திரைக்கதையையும் திரையில் கொண்டு வரவில்லை என்பதே உண்மை (தயவு செய்து 95 சதவீதம் ஸ்பானிய படங்களை காப்பி அடித்து எடுத்த படங்களை எல்லாம் பின்னூட்டத்தில் வந்து சொல்லவேண்டாம்). இதோ இந்த காட்சியில் ஒரு காதல் பாட்டு வரும் என்று அடித்து சொல்லும் ரசிகர்களை எல்லாம் தவிக்க விட்டு அங்கே பாடல்களை வைக்காமல் தவிர்த்து இருக்கிறார் கிஷோர். அதே போல மூன்றாவது தடவையாக ஹீரோ ஒரு தனி பாடலை பாடுகையில், 'அய்யோ' என்று எண்ணிக்கொண்டே இருக்கையில் அந்த பாடலை ஒரே ஒரு சரணத்துடன் முடித்துவிட்டு மறுபடியும் நம்மை திகைக்க வைக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒரு ட்விஸ்டில் மற்றுமொரு ட்விஸ்ட்டை புகுத்தி எதிர்பாராத ஒரு முடிவை நோக்கி திரைக்கதையை நகர வைக்கும்போது கிஷோரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    நடிகர்கள் - ஜித்தன் ரமேஷ்: கண்டிப்பாக இந்த படம் இவரது வாழ்வில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. ஜீவாவிற்கு எப்படி ராம் திருப்புமுனையாக அமைந்ததோ, இந்த படம் அதைவிட சிறந்த திருப்புமுனையாக ரமேஷிற்கு அமையும். முதல் பாதியில் நடன காட்சிகளில் திறமையை அற்புதமாக வெளிப்படுத்திய இவர், கடைசி நாற்பது நிமிடங்களில் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கிறார். இந்த பதிவின் ஆரம்பத்தில் ஜீவா'வின் அண்ணன் என்று எழுதி இருப்போம். இதே போல நல்ல இயக்குனரும், சிறந்த திரைக்கதையும் கொண்டால், விரைவில் ஜீவா'வை ரமேஷின் தம்பி என்று எழுத வேண்டிய சூழல் வரும்.

    ரமேஷிற்கு அவருடைய குரல் ஒரு தடையே என்றாலும் இந்த படத்தில் முடிந்த வரையில் அவர் முயற்சி எடுத்து மாறுபடுத்த முயன்றுள்ளார். இருந்தாலும் மைக் மோகன் போல இவரும் ஒரு டப்பிங் குரலை தேர்ந்தெடுத்தல் நலம். கிளைமேக்சில் அந்த மழை பெய்யும் காட்சியில் உண்மையில் ரமேஷ் நடித்துள்ளார். ஹாட்ஸ்  ஆப் டு யு, ரமேஷ். அதுவும் இந்த அளவுக்கு ஒரு கட்டுபடுத்தப்பட்ட (ரெஸ்டிரெயின் ஆன) நடிப்பை சமீபத்தில் வேறெந்த தமிழ் நடிகரிடமும் காணவில்லை எனதே உண்மை. கண்டிப்பாக இந்த படத்திற்காக அவர் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

    ஹீரோயின் - சஞ்சிதா படுகோனே: வேட்டைக்காரன் படத்தில் விஜய்'யின் தங்கையாக வருவாரே, அவர்தான் இவர். இந்த படத்தில் இவர் ஆரம்பத்தில் மொக்கையாக தெரிந்தாலும் படம் முன்னேற முன்னேற, தன்னுடைய நடிப்பிலும் முன்னேற்றத்தை காண்பித்துள்ளார், குறிப்பாக ரமேஷிடம் தன்னுடைய காதலை ஒப்புக் கொள்ளும்போதும்,  கிளைமேக்சிலும் இவரது நடிப்பு அற்புதம். இந்த படம் இவருக்கு ஒரு முக்கியமான மைல்கல். ஆனால் அநேகமாக தமிழ் சினிமா இலக்கணப்படி இனிமேல் இவர் ஹீரோவின் தங்கையாகவோ, மாமனை கட்டிக்கொள்ள ஆசைப்படும் இரண்டாவது முறைப்பெண் ஆகவோ கூட மாறக்கூடும்.

    மற்ற பாத்திரங்கள்: இதனை தவிர, ஜெயப்பிரகாஷ் தன்னுடைய டிரேட்மார்க் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீப காலங்களில் நான் இவரின் மிகப்பெரிய விசிறி ஆக மாறிவருகிறேன் என்பதை மறுக்கவியலாது. அதே சமயம் இவரை தொடர்ந்து ஒரே மாதிரி வேடங்களில் பார்ப்பதும் சலிப்பையே அளிக்கிறது. மாற்றிக்கொள்ளுங்கள் சார், இல்லையென்றால் உங்களை இதே மாதிரி பாத்திரங்களுக்கு டைப்காஸ்ட் செய்துவிடப்போகிறார்கள். திருடா, திருடி படம் வந்தபோது மாணிக்க விநாயகம் அவர்களுக்கும் இதே மாதிரி வரவேற்ப்பு இருந்தது. ஆனால் அவர் இப்போது எங்கே என்று யோசித்துப்பாருங்கள்.

    ஹீரோவின் தங்கையாக வரும் அகிலாவும், ஹீரோவின் அம்மாவாக வரும் துளசியும் ஆரம்ப காட்சிகளில் வழக்கமாக தெரிந்தாலும் படத்தின் கிளைமேக்சில் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார்கள். அந்த நாற்பது நிமிடமும் படத்தின் உச்சகட்டம். பிரகாஷ் ராஜ் ஒரே ஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்தாரா என்ன என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வரும் அந்த இரண்டு காட்சிகளும் படத்தின் திருப்புமுனை. தயவு செய்து இதுபோன்ற பாலிஷ் ஆன பாத்திரங்களிலேயே நடியுங்கள் பிரகாஷ், உங்களது வில்லன் நடிப்பு எல்லாம் வேண்டாம்.

    ஹீரோவின் நண்பராக வரும் சூரி, வழக்கமான நண்பன் பாத்திரம்தான் என்றாலும் கடைசி இரண்டு காட்சிகளில் தன்னால் நடிக்க இயலும் என்பதை நிரூபித்து உள்ளார். அதைப்போலவேதான் அவரது நண்பர் மாரியும். அதுவும் கிளைமேக்சில் மாரி ஆட்டம் போடுவது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் கதையுடன் ஒன்றியிருப்பதே அதன் சிறப்பு. ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் வருகிறார் இளவரசு. அலட்டல் இல்லாமல் அறிமுக காட்சியில் சிக்ஸ் அடிப்பதில் இருந்து வரும் காட்சிகளில் எல்லாம் கைதட்டல் வாங்குகிறார். கொஞ்சமே வந்தாலும் பின்னுகிறார்.

    படத்தின் + கள்:

    • எங்கேயும் திருடாத நேர்மையான கதை
    • எதிர்ப்பார்ப்பை தோற்கடிக்கும் காட்சிகளும், திருப்பங்களும்
    • சிறந்த திரைக்கதை
    • இரண்டாம் பகுதியில் நல்ல இயக்கம்
    • மிகையில்லாத நடிப்பு
    • கடைசி நாற்பது நிமிடங்கள்

    படத்தின் - கள்:

    • தேவையில்லாத அந்த ஒரு ஹீரோயிச சண்டைக்காட்சி
    • எண்பதுகளின் தமிழ் படங்களை நினைவுபடுத்தும் கதையோட்டம்
    • மெதுவாக நகரும் முதல் பகுதி
    • கவனத்தை கவராத இசை

    திருஷ்டி போட்டு: படத்தில் பல விஷயங்கள் கவர்ந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே உறுத்திக்கொண்டு இருந்தது. படத்தின் ஒரு காட்சியில் ஹீரோயின் வீதியில் நின்றுக்கொண்டு இருக்கும்போது சில பல ரவுடிகள் வந்து கிண்டல் செய்ய, அதில் ஒருவன் அவரது பின்பக்கத்தை தட்டிவிடுகிறான். அதானால் கோபமடைந்த ஹீரோ அவனது கையை உடைத்து விடுகிறார். இதில் தவறு எதுவும் இல்லையென்றாலும், அவன் தடவியது இடது கையால், ஹீரோ உடைத்தது வலது கையை.

    தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 3 bullets 3/6. மூன்று தோட்டாக்கள்.

    கிங்'ஸ் பன்ச்: பிள்ளையார் தெரு கடைசி வீடு – குடியிருக்கலாம்.

    Saturday, June 25, 2011

    உதயன் - திரைப்பட விமர்சனம் 24-06-2011

    இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிவது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

    கொஞ்ச நாளாக இருந்த தேக்க நிலை மாறி, இந்த வாரம் மூன்று புத்தம் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் மூன்று படங்களுமே அறிமுக இயக்குனர்களால் இயக்கப்பட்டவை எனபதே. இன்று ரிலீஸ் ஆகிய பிள்ளையார் தெரு கடைசி வீடு படமும், உதயன் படமும் வெளியான அனைத்து இடங்களிலுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அருள்நிதி 'நடிப்பில்' வெளிவந்த உதயன் படத்தினை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

    உதயன் - படத்தின் கதை: சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் அருள்நிதி (வசந்த்), எதேச்சையாக ஒருநாள் ப்ரனீதாவை சந்தித்து உடனடியாக திருமணம் பற்றி பேசி, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். பின்னர் தோழியின் வங்கி கடனுக்காக ப்ரியாவும் வசந்திடம் வந்து உதவி கேட்க, மோதலில் ஆரம்பித்தது சிறிய ஊடல்களுக்கிடையே காதலாக மாறுகிறது. ப்ரியாவின் தந்தை ஒரு பெரிய சக்தியின் ஆடிட்டராக பணிபுரிபவர். இந்த காதலை இவர் எதிர்க்க, வசனத்தை மிரட்ட வரும் அந்த பெரிய தாதாவின் தம்பி வசந்த்தை கண்டவுடன் மிரண்டு போய், வசந்த்தை கத்தியால் குத்திவிட, அப்போது எங்கே வந்து அவனை கொன்றுவிடுகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. அவரை பார்த்தவுடன் வசந்த் "அப்பா" என்று கூறியபடி சரிய, இடைவேளை ஆரம்பிக்கிறது. வசந்த் யார்? அவனுக்கும் அந்த பெரிய சக்திக்கும் என்ன பிரச்சினை? எதற்க்காக வசந்தின் அப்பா அவர்களை தேடி வருகிறார்? இந்த காதல் ஜோடிகள் கை கோர்த்தார்களா? என்பதை உண்மையிலே தைரியம் இருந்தால் வெள்ளி திரையில் காண்க.

    அருள்நிதி: சில பேர் நேரில் பார்க்க அழகாக இருப்பார்கள்; ஆனால் போட்டோவில் அவர்களை காண சகிக்காது. அதே சமயம் சிலர் போட்டோவில் நன்றாக இருப்பார்கள், ஆனால் நேரில் பார்த்தல் அவர இவர்? என்று வினவும்படி இருப்பார்கள். நம்ம ஹீரோ அருள்நிதி போட்டோக்களில் பார்க்கையில் ஹான்ட்சம் ஆகவே இருக்கிறார். ஆனால் படத்தில் பார்க்கையில் ஒருவிதமான (கஷ்டப்படுகிற) உடல்மொழியுடனே (பாடி லாங்குவேஜ்) இருப்பதை உணர முடிகிறது. உதாரணமாக அவரது கைகளை எப்படி பொசிஷனில் வைப்பது என்பதே அவருக்கு இன்னமும் கைவராத கலை. அதன் பின்னர் அவரது குரல். ஜித்தன் ரமேஷைவிட ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஹீரோவின் குரல் யாருடையது என்றால், வெகு சுலபமாக அருள்நிதியின் குரலே என்று சொல்லிவிடலாம். கண்டிப்பாக ஒரு டப்பிங் குரல் இவருக்கு தேவை. அதே போல இவருடைய உடல் அமைப்பே படங்களில் ஒருவிதமாக Ungainly ஆக இருக்கிறது. ஆனால் போட்டோக்களில் பார்க்கையில் உயரமான பில்லா அஜித்தை போல ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.

    ஆரம்ப காலங்களில் அமிதாப் பச்ச்னைப்பற்றி கூறுகையில் "He’s got 2 Left Shoes" என்று கூறுவார்கள். அதாவது அவருக்கு நடனம் ஆட வராது என்பதையே அப்படி கிண்டலாக சொல்லி வந்தார்கள். பின்னர் அவர் படிப்படியாக முன்னேறி இப்போது தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு ஒரு அட்டகாசமான நடனம் புரிபவராக மாறிவிட்டார். ஆனால் அருள்நிதி இப்போதும் 2 Left shoes உடனே இருக்கிறார். கண்டிப்பாக இவருக்கு ஒரு நடன பயிற்சியாளர் தேவை. அதே சமயம் முகத்தில் ஒரு Dead-Pan expression எப்போதும் இருக்கிறது. யாராவது வந்து ஒரு சோகமான செய்தியை சொன்னால் கூட " என்ன, இன்னைக்கு வெள்ளிகிழமையா?" என்று விசாரிப்பதைப்போலவே அவரது முகபாவனைகள் உள்ளன.

    என்னடா இவன் தொடர்ந்து ஒரே நெகடிவ் விஷயங்களையே சொல்கிறான் என்று யோசிக்காதீர்கள். அருள்நிதியிடம் ஹீரோக்களுக்கான பல நல்ல குணாதிசயங்கள் உள்ளன. அவரது உயரம் ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயின்ட். சண்டை காட்சிகளில் அனாயசமாக ஐந்து பேரை அடிக்கிறார் (ஆரம்ப கால -திமிரு பட-விஷால் போல). ஸ்மார்ட் ஆக தெரிகிறார். ஒரு நல்ல ஆளுமை இவரிடம் இருக்கிறது. கொஞ்சம் ஹோம்வர்க் செய்தால் கண்டிப்பாக ஒரு பெரிய ரவுண்ட் வருவார்.

    பிரனீதா: இந்த படம் பார்க்க சென்றதின் முதல் நோக்கமே இவரை மறுபடியும் திரையில் பார்க்கவேண்டும் என்றா ஆசைதான். சென்ற தீபாவளிக்கு பிறகு ரிலீஸ் ஆன பாவா என்கிற தெலுகு படத்தில்தான் இந்த அழகியை நான் முதலில் பார்த்தேன். நல்ல முகபாவங்கள், நேர்த்தியான முகம், ஒல்லியான உடல்வாகு என்று செம கியூட்டாக தெரிந்தார் இவர். ஒரு துறுதுறுப்பான கல்லூரி பெண் பாத்திரத்தில் நன்றாக நடித்து இருந்தார். ஆகையால் இந்த படத்தில் இவரை பார்க்கவே சென்றேன். இந்த படத்தில் இவரை பார்க்கையில் நடிப்புக்கும் இவருக்கும் கொஞ்சம் தூரம் என்றே தோன்றுகிறது. ஒல்லியான பெண்கள் தமிழில் நிலைப்பது அரிதே. ஆனால் இவர் திறமையான ஒரு நடிகை. அதே சமயம் 'தெறம' காட்டும் நடிகையும் கூட. பார்க்கலாம்.

    சந்தானத்தின் இரட்டை அர்த்தம் நேரிடையான அர்த்தம் கொண்ட காமெடியும், இரண்டு இளமை ததும்பும் பாடல்களும் இல்லை என்றால் தியேட்டரில் இருந்து மனம் நொந்து வந்திருப்பேன். இடைவேளைக்கு பிறகு எதாவது வித்தியாசமாக இருக்கும் என்றால், இதுவரை இரண்டாயிரம் தடவை தெலுகு படங்களில் வந்துள்ள அதே பழிவாங்கும் கதை தான். ஆனால் வில்லனுக்கும் உதயனுக்கும் சண்டை ஏற்படும் காட்சியில் நியாயம் என்னவோ வில்லன் பக்கமே இருக்கிறது. பின்னே என்னங்க, வில்லன் காரில் வந்துக்கொண்டு இருக்கும்போது உதயன் அவரின் காருக்கு முன்னே செல் போனில் பேசிக்கொண்டே வழிவிடாமல் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு செல்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு கடுப்பாகும் வில்லன் அவரின் வண்டியை ஒரு தட்டு தட்ட, உதயன் கீழே சேற்றில் விழுந்து விடுகிறார். அப்போதும்கூட வில்லன் நல்லதொரு அறிவுரையை மட்டுமே கூறுகிறார் (வண்டி ஓட்டும்போது செல் போனில் பேசவேண்டாம், கூப்பிடுவது எமனாக கூட இருக்கலாம்). ஆனால் உதயன் அவரை துரத்தி சென்று அடித்து, சட்டையை கழட்டி ஊரெல்லாம் நடத்தி சென்று அவமானப்படுத்துகிறார். பின்னர் இவர்களுக்குள் பகை ஆரம்பிக்கிறது. இதில் உதயன் செய்ததே தப்பு என்று படுகிறது.

    படத்தின் + கள்:
    சந்தானம் + காமெடி
    புதிய ஹீரோயின்
    இரண்டு பாடல்கள்
    சற்றே புத்திசாலித்தனமான வசனங்கள்
    இடைவேளை ட்விஸ்ட்
    கிளைமேக்ஸ் சண்டையில் திருப்பம்


    படத்தின் - கள்:
    நடிப்பு ?
    மிகவும் பழக்கப்பட்ட திரைக்கதை, யூகிக்ககூடிய காட்சிகள்
    இங்கே பாடல் வரும் என்று தெளிவாக அறியும் காட்சியமைப்பு
    வித்தியாசம் இல்லாத காட்சிகள், கதையமைப்பு
    இசை

    இவ்வளவு எதுக்குங்க பாஸ், இரண்டு அருள்நிதி பாத்திரங்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா? ஒருவர் விபூதி வைத்து இருப்பார், இன்னொருவர் வாயில் பீடா போட்டுக்கொண்டே இருப்பார். இதுக்கு மேல என்னங்க வேண்டும் உங்களுக்கு? எம்ஜியார் ஒரு மரு வச்சா, அது மாறுவேஷம் எண்ணும்போது, இந்த வித்தியாசம் போதாதா?

    தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: single bullet 1/6 (ஒரே ஒரு தோட்டா).

    கிங்'ஸ் பன்ச்: உதயன் - அஸ்தமனம் ஆகிவிட்டான்.

    Wednesday, June 8, 2011

    ஆண்மை தவறேல்: 03-06-2011 : விமர்சனம்

    நேர்மை என்று ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது எடுத்துக்கொண்டதை அதே சிந்தனையில் முடிக்கும் நேர்மை. தமிழ் சினிமா உலகில் இந்த நேர்மை பெரும்பாலும் இருக்கவே இருக்காது என்பது அடியேனின் கருத்து. எண்பதுகளில் விசு படங்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே சில்க் ஸ்மிதா பாட்டு வைக்கவேண்டிய சூழல் உருவானது நமக்கு தெரிந்ததே. அதாவது விநியோகஸ்தர்களுக்கு என்று 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு தேர்ந்தெடுத்த கதையையும், திரைக்கதையையும் மாற்றி சினிமா எடுக்க வேண்டிய நிலை பெரும்பாலான இயக்குனர்களுக்கு வந்து இருக்கிறது, இருக்கிறது, கண்டிப்பாக இருக்கும். இப்படி பல சிக்கல்களையும் மீறி தான் எடுத்துக் கொண்ட கதையை வேறு எதற்கும் 'அட்ஜஸ்ட்' செய்யாமல் 'நேர்மையாக' முடிக்கும் இயக்குனர்கள் குறைவே. அப்படி படமெடுத்தாலும், அவை திரையில் வருவதற்கு பல மாமாங்கம் ஆகும். சரி, எதற்கு இவ்வளவு பீடிகை என்றால், சமீபத்தில் நான் பார்த்த 'ஆண்மை தவறேல்' படத்தில் அப்படி ஒரு நேர்மை இருந்தது. அதாவது எடுத்துக்கொண்ட கதையை நேர்மையாக (எந்தவிதமான வியாபார/சந்தை மயமாக்கலுக்கும் வளைந்து கொடுக்காமல்) கொண்டு செல்லும் அந்த துணிவு இந்த படத்தில் இருந்தது என்பது அடியேனின் எண்ணம். அதைப்பற்றியே இந்த சில வார்த்தைகள்.

    கதை: படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாட்கள் கழித்து எழுதப்படும் விமர்சனம் என்பதால் அதிகமாக கதையை பற்றி சொல்ல வேண்டியது இல்லை என்பது அடியேனின் சிந்தனை (அதுக்குள்ளாக வலைரோஜா நண்பர்கள் விமர்சனம் எழுதி இருப்பார்கள்). சமகால சூழலில் பெண்கள் கடத்தப்படுவதை அலசி ஆராயும் ஒரு படம் இது. படத்தின் ஒன் லைனர் இதுதான்.காதலியை கடத்தல்காரர்கள் இடம் பறிகொடுத்த நாயகன் ஒரு (முன்னாள்) காவலரின் உதவியுடன் மீட்கப்போராடுவதே ஆண்மை தவறேல் படத்தின் நாடி. கதை அரதப்பழசாக தெரிந்தாலும் திரைக்கதை அதனை சுமாராகவே நகர்த்திக்கொண்டு செல்கிறது. தமிழ் சினிமாவில் புதிய காட்சிகள் பலவற்றை இந்த சினிமாவில் காண முடிந்தது.

    படத்தில் அடியேன் அவதானித்த விடயம் என்னவெனில் இம்மியளவும் திரைக்கதை என்ற நேர்க்கோட்டில் இருந்து வியாபார விடயங்களுக்காக மாற்றிக்கொள்ளாத தன்மையே. குறிப்பாக படத்தின் இரண்டாவது பகுதியில் ஒரு குத்துப்பாட்டு, ஒரு சோகப்பாட்டு வைக்க பல காட்சிகள் இடம் கொடுத்ததும் அவற்றை இடம்பெறாமல் செய்தது படத்தின் நேர்மையை உணர்த்தும். படத்தின் முதல் பகுதியும் சற்று வேகமாக நகர்ந்து இருந்தால் படம் இன்னும் சிறப்பாக பேசப்பட்டு இருக்கும்.

    நடிப்பு: ஹீரோ த்ருவா என்று ஒரு புதியவர். கட்டுமஸ்தான உடல்வாகுவுடன், நட்பில்லாத குரலுடன் அறிமுகமாகிறார். கொஞ்சம் மெனக்கெட்டால் நடிக்கவும் செய்வார் போல. படம் ஓடும் தியேட்டர்களில் அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-அயனாவாரம் கிளை, அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-பெரம்பூர் கிளை, அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-வடபழனி கிளை என்று பலத்த ஆதரவுடன்தான் களம் இறங்கி இருக்கிறார். அடுத்து வரும் படங்கள் தான் இவரை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர உதவும். ஹீரோயினுக்கு இரண்டாவது படம். பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. அந்த அற்புதமான (பெண் என்பேன், பூ என்பேன்) பாடலில் இயக்குனர் சற்றே சிரமம்பட்டு சிரத்தையாக காட்சியமைத்து இருக்கலாம். கஷ்டப்பட்டு பாஸ் மார்க் வாங்குவார் ஹீரோயின். 

    சம்பத் திடீரென்று எப்படி இவ்வளவு மாஸ் நடிகர் ஆனார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அவர் அப்படி கவுரவ வேடங்களில் நடித்த படங்களில் எல்லாம் மொக்கையாகவே இருக்கிறார் (உதாரணம்-பாவானி). இந்த படத்தில் பரவாயில்லை. கொஞ்சம் நல்ல பாத்திரம். ஆனால் அவர் தன்னுடைய பாத்திரங்களை இனிமேலாவது நன்றாக யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையென்றால் அவரையும் வீணடித்து விடுவார்கள். 

    திரையில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பசைபோல ஒட்டிக்கொள்பவர் ஜான் விஜய். அவருடைய ஸ்டைலும், வசன உச்சரிப்பும் நேர்த்தி. கன்னட பிரசாத் என்ற இவரது பாத்திரத்தை சரியாக திரையில் கொண்டு வந்துள்ளார்கள். மற்றபடி அந்த 3 வில்லன்கள் அவ்வளவாக சித்தரிக்கப்படாததால் அவர்கள் மேல் பயமோ, கோபமோ ஏற்படவில்லை. இங்கேதான் இயக்குனர் தோற்று விடுகிறார் (பரவாயில்லை, முதல் படத்தில் இது ஓக்கேதான்).

    லாஜிக்: படத்தை ரசிக்க விரும்பினால் லாஜிக் என்கிற விஷயத்தை எதிர்ப்பார்க்காதே என்பது எங்கள் தலைவர் யூனாவின் கொள்கை. இருந்தாலும் அடியேன் இந்த படத்தில் இருக்கும் அத்துமீறல்களை விளக்கவில்லை எனில் என்னை கண்ணிருந்தும் குருடனாக்கி விடும் இந்த சமுதாயம்.  ஆகையால் சம்பத் எப்படி உயிரோடு வந்தார் என்கிற மகா மொக்கை கேள்விகளை எல்லாம் கேட்காமல் டெக்னிகலாக ஒரு விஷயம் மட்டும் உங்களின் கனிவான கவனத்துக்கு:

    சம்பத் கன்னட பிரசாத் என்கிற தரகரிடம் இருந்து பெண்களை ஏலம் விடும் இணையதளத்தின் முகவரி, நுழைவுக்குறியீடு மற்றும் காப்புச்சொல்லை மிரட்டி வாங்குகிறார். பின்னர் ஹீரோவும், சம்பத்தும் ஒரே சமயத்தில் அதே யூசர் நேம், பாஸ் வார்டை பயன்படுத்துகின்றனர். மின் அஞ்சல் தளங்களில் கூட ஒரே நேரத்தில் இருவர் உபயோகப்படுத்துவதை மிக சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்கையில் இருவரும் ஒரே யூசர் நேமை உபயோகப்படுத்தினால் அதை எப்படி வில்லன்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள்? இல்லை ஜான் விஜய் தான் ஏலம் எடுக்கவில்லையா? அப்படி இருந்தாலும் ஜான் விஜய் யூசர் நேம் மூலம் ஏலம் எடுத்த பெண்ணை அவரிடம் அல்லவா ஒப்படைக்க வேண்டும்? இங்கே மட்டுமின்றி இன்னும் சில இடங்களில் கூட இயக்குனர் சிறிது தடுமாறி இருக்கிறார்.

    தியேட்டர் டைம்ஸ்: நண்பர் க'னா பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர் சென்னைக்கு புதியவர். ஆகையால் அவர் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் S.S.R பங்கஜம் தியட்டருக்கு சென்று (11.45 AM) அங்கிருந்த மேலாளரிடம் படம் எத்துனை மணிக்கு? என்று வினவியுள்ளார். அவர்களும் 12.15க்கு என்று பதிலளிக்க, சரி இன்னும் அரை மணி நேரம் இருக்கிறதே என்று அருகில் இருந்த பழமுதிர் நிலையம் சென்று மொத்தம் மூணு ஜூஸ் குடித்து நேரம் கழித்தார். 25 நிமிடங்கள் கழித்து (12.10 AM) தியேட்டருக்கு வந்து பார்த்தால் படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிறதே என்று அதே நபர் சொன்னாராம். என்ன வாழ்க்கைடா இது என்று நொந்துக்கொண்டார் நண்பர் க'னா. இதுதான் கொடுமை என்றால். அந்த தியேட்டரில் குளிரூட்டும் வசதி மருந்துக்கு கூட கிடையாதாம். நொந்து போய் வந்தார் க'னா.

     

    பின் குறிப்பு: இந்த படத்தை பற்றிய விமர்சனங்களில் பல நகைச்சுவைகளை காண முடிந்தது. உதாரணமாக வெப் துனியா'வில் இது டேக்கன் (ஆங்கில விருதகிரி) படத்தின் தழுவல் என்று எழுதி இருந்தார்கள். இன்னும் சில தளங்களில் பெயருக்கு / வாய்க்கு வந்த சினிமாக்களை எல்லாம் சுட்டிக்காட்டி இருந்தார்கள். உண்மையில் இந்த படம் Independence Day, Godzilla, The Day After Tomorrow, 10,000 BC போன்ற படங்களை இயக்கிய Roland Emmerich’ன் புரொடக்ஷனில், நம்ம Ashok Amritraj இணை தயாரிப்பில் வந்த Trade என்கிற ஜெர்மனி படத்தின் முழுமையான தழுவலாகும். (நம்ம கேபிளார் படத்தின் தலைப்பை சரியாக சொல்லி இருந்தாலும் அது பிரேசில் படம் என்று சொல்லி இருப்பார்).இந்த படத்தை ஆங்கிலத்தில் நம்ம லயன்ஸ்கேட் நிறுவனத்தினர் வெளியிட்டனர். லயன்ஸ் கேட் இப்படி சிறிய, பி கிரேட் படங்களை வெளியட்டு காசு பார்ப்பதில் கில்லாடிகள். 

    நம்முடைய வேண்டப்பட்ட விரோதியாகிய பயங்கரவாதி டாக்டர் செவன் இது போன்ற விடயங்களில் கில்லாடி. அவர்தான் இந்த படத்தின் கதையை நான் சொல்கையிலே அந்த படத்தை பற்றியும், அதன் IMDB ரேட்டிங் பற்றியும், அதனை டவுன்லோட் செய்யும் தளத்தின் முகவரியையும் கூறி உதவினார்.

    தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 3 bullets 3/6. மூன்று தோட்டாக்கள்.

    கிங்'ஸ் பன்ச்: ஆண்மை தவறேல் - பார்க்க தவறேல் (நேர்மைக்காக).

    Wednesday, May 25, 2011

    மைதானம்–தமிழ்ப்படம்–24-05-2011

    கடந்த வெள்ளிக்கிழமை அன்று மொத்தம் மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவதாக இருந்தது (எத்தன், கண்டேன் & மைதானம்). இதில் எத்தன் பற்றி ஏற்கனவே ஒரு ரிபோர்ட் வந்து விட்டதால் அதனை அடுத்த வாரம்தான் பார்க்க முடியும் என்பது தெளிவாகிவிட்டது (அதாவது படம் ரிலீஸ் ஆகாது). கண்டேன் படம் பற்றி இண்டஸ்ட்ரி டாக் அது தேறாது என்பதை தெளிவாக்கி விட்டது. ஆனால் மூன்றாவது படத்தை பற்றி யாருக்குமே எதுவும் தெரியவில்லை (மைதானம்).

    அதைப்பற்றி தீவிரமாக விசாரிக்கையில் அந்த படத்தின் இயக்குனர் (M.S.சக்திவேல்) பலரிடம் உதவி இயக்குனராக சேர முயற்சி செய்து அது கைகூடாததால் அவரே இந்த படத்தை நேரிடையாக இயக்கியுள்ளதாக தெரியவந்தது. இருந்தாலும் அவர் சிறிது காலம் ஒரு முன்னணி தொலைக்காட்சியின் ரியாலிடி ஷோவில் உதவி இயக்குனராக பணியாற்றியது நமக்கு தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் நான்கு உதவி இயக்குனர்களை அவர் நடிக்க வைத்துள்ளது சற்றே பயத்தை கிளப்பியது (ரிமெம்பர் மாத்தி யோசி?).

    ஆகையால் இந்த வாரம் தமிழ் படம் எதுவும் பார்க்கப்போவதில்லை என்று முடிவெடுத்து உருப்படியாக ரவி தேஜாவின் தெலுகு படத்தையும் (சொதப்பல்) இரண்டு அற்புதமான ஹிந்தி படங்களையும் (பதிவை எதிர் பாருங்கள்) பார்ப்பது என்று முடிவெடுத்தேன். இதில் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் 4 சிறப்பு காட்சியை வேறு வியாழன் அன்றே பார்த்தாகி விட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எந்த படத்தையும் பார்க்காமல் அந்த வாரக்கடைசி ஓடியது (எக்சுவலாக கொஞ்சம் வேலை அதிகம் என்றும் கொள்ளலாம்).

    இப்படியாகப்பட்ட சூழலில்தான் என்னுடைய நண்பர் க'னா இன்று சென்னை வந்தார். அலுவலக வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவாகியது. ஆனால் நான் தாமதமாக வந்ததால் அந்த படத்திற்கு செல்ல இயலவில்லை. அப்போதுதான் எங்கள் தல யூ’னா மைதானம் என்று ஒரு படம் ரிலீஸ் ஆகியுள்ளது என்ற தகவலை தெரிவித்தார். அந்த படம் சற்று தாமதமாக ஆரம்பிப்பதால் மெலடி தியேட்டருக்கு சென்றால் பார்க்க முடியும் என்று ஊக்கப்படுத்தியதும் அவரே. ஒரு வழியாக தியேட்டருக்கு வந்து படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்த்தோம்.

    மைதானம் - கதை பின்னணி: திருப்பூர் மாவட்டம் கனியூர் (பெயரிலேயே அரசியல்?) என்கிற ஒரு கிராமத்தில் இந்த கதை நடைபெறுவதாக படமாக்கப்பட்டு உள்ளது (ஆனால் உண்மையில் ஷூட்டிங் நடந்தது எல்லாம் உடுமலையில் தான்). அமைதியாக வாழும் ஒரு குடும்பத்தில் தவறான நட்பால் எப்படி குடும்பம் சீர்குலைகிறது என்றும், அதே சமயம் உண்மையான நட்பு எப்படி என்றும் கைகொடுக்கும் எந்தையும் விளக்கும் ஒரு அக்மார்க் சென்டிமென்ட் கதை இது. ரொம்ப நாள் கழித்து அகத்தியன் சார் நடித்துள்ளார். அவர்தான் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவர். அவரின் மனைவியாக ரீ என்ட்ரி கொடுத்தள்ளார் என் உயர் தோழன் படத்தின் ரமா. இவர்களின் மகனாக உதவி இயக்குனர் சுரேஷ் குருவும், மகளாக ஸ்வாசிகாவும் நடித்துள்ளனர். மகனின் நெருங்கிய தோழர்களாக மற்ற மூன்று உதவி இயக்குனர்கள் (M.A கென்னடி, ஜோதி ராஜ் & சிவா) நடித்து உள்ளனர்.

    குடும்பம் (அண்ணன், தங்கை, அப்பா & அம்மா) நண்பர்கள்:Kennedy,Suresh Guru, Jyothi Raj & Siva

    தேவதை போன்ற அழகுடன் ஸ்வாசிகா

    Maidanam-Tamil-Movie-Photo-Gallery-73 Maidanam-Tamil-Movie-Photo-Gallery-94 Maidanam-Tamil-Movie-Photo-Gallery-61

    மைதானம் - திரைப்படம்: படத்தின் நாயகி தன்னுடைய அண்ணனின் மூன்று நண்பர்களில் ஒருவரை காதலிக்கிறார். ஆனால் அந்த நண்பரோ நட்புக்கு துரோகம் செய்ய முடியாது என்று காதலை புறக்கணிக்கிறார். அதே சமயம் வேறொரு நண்பரும் கதாநாயகியையே ஒருதலையாக விரும்ப, நாயகி அவரை மறுக்கிறார். இருந்தாலும் மனதில் காதலுடனே தொடர்கிறார் அந்த நண்பர். இதே சமயம் கதாநாயகிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் திட்டமிட, நாயகி மறுத்தும் நிச்சயம் செய்யப்படுகிறது - அவரது காதலன் நட்பை மீறி ஒன்றுமே செய்யவில்லை. இந்த சூழலில் திருமண நாள் குறித்தாகிவிட்ட நேரத்தில் நாயகி ஒரு நாள் காணாமல் போகிறார். அவரை தேடும் படலமும் அதன் பின்னணியுமே கதை.

    அப்படியே ஒரு கிராமத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். வசனங்களும், காட்சி அமைப்பும், நடிப்பும் முதல் தரம். படத்தின் மற்றுமொரு முக்கியாமான அம்சம் - ஒளி ஓவியம். கேமராமென் யாரென்று தெரிந்தால் அவரை பாராட்ட வேண்டும். அதே சமயம் படத்தின் பல காட்சிகளில் வித்தியாசமான கேமரா ஆங்கிளை வைத்தமைக்கும் பாராட்ட வேண்டும். அதன் பின்னர் லைட்டிங். சொல்லவே வேண்டாம் - டாப் கிளாஸ். கடைசியாக பின்னணி இசையும், பாடல்களும். இது போன்ற படங்களுக்கு பாடல்களே தேவை இல்லை தான். இருந்தாலும் பாடல்கள் ஸ்கோர் செய்கின்றன. குறிப்பாக இரண்டாம் பகுதியில் வரும் அந்த பாடல். பின்னணி இசை பல இடங்களில் கதையின் போக்கை தெளிவாக உணர்த்துகிறது. சபேஷ் முரளி மிஷ்கினிடம் மட்டுமே சிறப்பாக இசை அமைப்பார் என்பதை இந்த படம் மாற்றும்.

    தமிழில் நல்ல படங்களே வருவதில்லை என்று சொல்லிக்கொண்டு பன்னாட்டு மொழிப்படங்களை தேடிப்பார்க்கும் நம் நண்பர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கவேண்டும். இவ்வருடத்திய மிகச்சிறந்த படங்களில் இந்த படம் கண்டிப்பாக முதல் மூன்று இடங்களில் வந்துவிடும் என்பதை இங்கு உறுதிபட கூறுகிறேன். அவ்வளவாக விளம்பரத் துணையும், நல்ல தியேட்டர்களின் துணையும், மீடியாவின் துணையும் இல்லாமல் இந்த படம் தள்ளாடுகிறது. நாங்கள் சென்ற அந்த காட்சியில் பால்கனியில் மொத்தமே முப்பது பேர்தான் – This film deserves more. ஆனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த முதல் முயற்சிகளில் இந்த படம் இடம்பெறும்.

    படத்தின் அட்டகாசமான காட்சி: தன்னுடைய மகளிற்கு இவ்வளவு சீக்கிரமே திருமணம் செய்துவிடுகிறோமே என்று அகத்தியன் சார் தன்னுடைய மனைவியிடம் சொல்லி விட்டு பிரேக் டவுன் ஆகும் அந்த காட்சியை ஒவ்வொரு தந்தையும் கண்டிப்பாக பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக அந்த காட்சியில் அவரது முகம் தெரியாமல் கண்ணாடியில் மட்டுமே அவரது ரியாக்ஷன்கள் தெரிய, ச்சே, சான்சே இல்லை. மூவ் ஓவர் அப்பா கேரக்டர் நடிகர்ஸ், இதோ வந்து விட்டார் நடிக்க தெரிந்த ஒருவர். படத்தின் ஹை லைட்டே அகத்தியன் சாரின் நடிப்புதான். ஒரு கிராமத்து தந்தையை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என்று சொன்னால் அது மிகை ஆகாது. இதற்க்கு மேலும் விருது கமிட்டி மற்ற படங்களை பார்க்க வேண்டுமா என்பது கேள்விதான். இந்த வருடத்தின் சிறந்த குணசித்திர நடிகர் விருது இப்போதே முடிவு செய்யப்பட்டு விட்டது. அகத்தியன் சாருக்கு ஒரு ராயல் சல்யூட். இவரது ரியாக்ஷன்களுக்கென்றே மறுபடியும் ஒரு முறை படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    படத்தின் சுமாரான காட்சி(கள்): படத்தின் முதல் பகுதியில் பல காட்சிகள் மிகவும் ஸ்லோ ஆக நகர்வதாகவே தெரிகிறது. கிட்டத்தட்ட ஒரு மெகா சீரியல் போலவே தோன்றியது. படத்தின் இரண்டாம் பகுதிக்கு இவை வித்திட்டாலும்கூட, இவை சற்றே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வேறு ஒரு எடிட்டர் இந்த காட்சிகளை வேறு விதமாக (குறிப்பாக வேகமாக)  மாற்றியிருப்பாரோ என்று நினைக்க வைக்கிறது. அதே சமயம் படத்தின் பட்ஜெட்டும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். "நேரமும், சக்தியும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் சாதிக்கலாம், ஆனால் இவற்றின் துணை இல்லாமலே சாதிப்பவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள்" என்று என் தந்தை சொல்வதைப்போல இந்த படத்தின் இயக்குனர் தன்னுடைய சகதிக்குள் பல நல்ல விஷயங்கள் செய்துள்ளார். ஆகையால் இந்த முதல் பகுதி காட்சிகள் பெரிதாக கவனிக்கப்படாது.

    படத்தின் ஹைலைட்: நாயகியை கண்டறிந்த நண்பன் அதனை மற்றவர்களிடம் சொல்லும் காட்சியும், அதன் பின்னர் திரையில் தோன்றும் அந்த பத்து பதினைந்து நிமிடங்கலுமே செலுலாயிட் சித்திரங்கள். இந்த நான்கு உதவி இயக்குநர்களுமே போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். இதற்க்கு மேல் சொன்னால் படத்தின் சுவாரஸ்யம் கெட்டுவிடும் என்பதால் சொல்லவில்லை. குறிப்பாக நாயகியின் அண்ணன் பாத்திரத்தில் இருக்கும் நடிகர். இந்த பாத்திரத்தை இவரைவிட வேறு யாரும் இந்த அளவிற்கு பிரம்மாதமாக செய்யவே முடியாது என்று சவால் விடும் அளவிற்கு நடித்துள்ளார் (இனிமேல் விஜய், அஜித், விக்ரம் போன்றவர்களின் படத்தில் அவர்களின் நண்பராக வர வாய்ப்புகள் கண்டிப்பாக குவியும்). அதிலும் அந்த காதலை மறுக்கும் நண்பரின் பாத்திரம் ஒரு சூப்பர் கேரக்டரைசேஷன் (பழைய இதயம் முரளி போல). அந்த காட்சி வரை தன்னுடைய செட் ஆகாத குரலால் வெறுப்பேற்றி வந்த அந்த நான்காவது உதவி இயக்குனர் கூட (வயதில் முதிர்ந்தவர்) அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார். அவரது வசனங்களும், உச்சரிப்பும் அந்த காட்சியில் பின்னுகிறது. 

    செகண்ட் ஹைலைட்: படத்தின் கிளைமேக்சில் நாயகியை நண்பர் வீட்டிற்க்கு தெரியாமல் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார். அந்த காட்சியில் அந்த நாயகியின் பாத்திரம், அந்த கேரக்டரைசேஷன் மொத்தமாக அடிபட்டு போகிறதே என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். ஆனால் இயக்குனர் அங்கே ஒரு திருப்பம் கொண்டு வந்து தன்னுடைய திறமையை நிரூபித்து உள்ளார். ஹாட்ஸ் ஆப் டு யூ, Mr M.S.Shakthivel.

    Ticket 2 Ticket 1

    தமிழில் பெரும்பாலான இயக்குனர்கள் தங்களின் முதல் படத்தில் ஜெயித்து விடுவார்கள் (அது ஒரு பெரிய கான்செப்ட்). ஆனால் தங்களுடைய முழு திறமையையும் முதல் படத்திலேயே காண்பித்து விட்டதால் இரண்டாம் படத்தில் தடுமாறியவர்கள் பலர். ஆகையால் நான் எப்போதுமே ஒரு இயக்குனரை அவரது இரண்டாம் படத்தை வைத்தே எடை போடுவேன்.  சக்திவேல் சார், இதைப்போல கூட தேவை இல்லை, இதில் பாதி அளவிற்கு இன்னுமொரு படம் கொடுங்கள். தமிழ் திரையுலகம் உங்களை தலையில் வைத்து கொண்டாடும். இதோ இங்கே திரையில் இருக்கும் உங்களின் இந்த பட டிக்கெட்டிற்கு நான் தங்க பிரேம் போட்டு உங்களிடம் கொடுக்கிறேன். வாழ்த்துக்கள் சார். ஆல் தி பெஸ்ட்.

    படத்தின் ட்ரைலர்:

    தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6. ஐந்து தோட்டாக்கள்.இரண்டு கட்டை விரல்கள் மேலே (2 Thumps Up).

    கிங்'ஸ் பன்ச்: (Within Limits) விளையாடி இருக்கிறார் இயக்குனர்.