கடந்த வெள்ளிக்கிழமை அன்று மொத்தம் மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவதாக இருந்தது (எத்தன், கண்டேன் & மைதானம்). இதில் எத்தன் பற்றி ஏற்கனவே ஒரு ரிபோர்ட் வந்து விட்டதால் அதனை அடுத்த வாரம்தான் பார்க்க முடியும் என்பது தெளிவாகிவிட்டது (அதாவது படம் ரிலீஸ் ஆகாது). கண்டேன் படம் பற்றி இண்டஸ்ட்ரி டாக் அது தேறாது என்பதை தெளிவாக்கி விட்டது. ஆனால் மூன்றாவது படத்தை பற்றி யாருக்குமே எதுவும் தெரியவில்லை (மைதானம்).
அதைப்பற்றி தீவிரமாக விசாரிக்கையில் அந்த படத்தின் இயக்குனர் (M.S.சக்திவேல்) பலரிடம் உதவி இயக்குனராக சேர முயற்சி செய்து அது கைகூடாததால் அவரே இந்த படத்தை நேரிடையாக இயக்கியுள்ளதாக தெரியவந்தது. இருந்தாலும் அவர் சிறிது காலம் ஒரு முன்னணி தொலைக்காட்சியின் ரியாலிடி ஷோவில் உதவி இயக்குனராக பணியாற்றியது நமக்கு தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் நான்கு உதவி இயக்குனர்களை அவர் நடிக்க வைத்துள்ளது சற்றே பயத்தை கிளப்பியது (ரிமெம்பர் மாத்தி யோசி?).
ஆகையால் இந்த வாரம் தமிழ் படம் எதுவும் பார்க்கப்போவதில்லை என்று முடிவெடுத்து உருப்படியாக ரவி தேஜாவின் தெலுகு படத்தையும் (சொதப்பல்) இரண்டு அற்புதமான ஹிந்தி படங்களையும் (பதிவை எதிர் பாருங்கள்) பார்ப்பது என்று முடிவெடுத்தேன். இதில் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் 4 சிறப்பு காட்சியை வேறு வியாழன் அன்றே பார்த்தாகி விட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எந்த படத்தையும் பார்க்காமல் அந்த வாரக்கடைசி ஓடியது (எக்சுவலாக கொஞ்சம் வேலை அதிகம் என்றும் கொள்ளலாம்).
இப்படியாகப்பட்ட சூழலில்தான் என்னுடைய நண்பர் க'னா இன்று சென்னை வந்தார். அலுவலக வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவாகியது. ஆனால் நான் தாமதமாக வந்ததால் அந்த படத்திற்கு செல்ல இயலவில்லை. அப்போதுதான் எங்கள் தல யூ’னா மைதானம் என்று ஒரு படம் ரிலீஸ் ஆகியுள்ளது என்ற தகவலை தெரிவித்தார். அந்த படம் சற்று தாமதமாக ஆரம்பிப்பதால் மெலடி தியேட்டருக்கு சென்றால் பார்க்க முடியும் என்று ஊக்கப்படுத்தியதும் அவரே. ஒரு வழியாக தியேட்டருக்கு வந்து படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்த்தோம்.
மைதானம் - கதை பின்னணி: திருப்பூர் மாவட்டம் கனியூர் (பெயரிலேயே அரசியல்?) என்கிற ஒரு கிராமத்தில் இந்த கதை நடைபெறுவதாக படமாக்கப்பட்டு உள்ளது (ஆனால் உண்மையில் ஷூட்டிங் நடந்தது எல்லாம் உடுமலையில் தான்). அமைதியாக வாழும் ஒரு குடும்பத்தில் தவறான நட்பால் எப்படி குடும்பம் சீர்குலைகிறது என்றும், அதே சமயம் உண்மையான நட்பு எப்படி என்றும் கைகொடுக்கும் எந்தையும் விளக்கும் ஒரு அக்மார்க் சென்டிமென்ட் கதை இது. ரொம்ப நாள் கழித்து அகத்தியன் சார் நடித்துள்ளார். அவர்தான் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவர். அவரின் மனைவியாக ரீ என்ட்ரி கொடுத்தள்ளார் என் உயர் தோழன் படத்தின் ரமா. இவர்களின் மகனாக உதவி இயக்குனர் சுரேஷ் குருவும், மகளாக ஸ்வாசிகாவும் நடித்துள்ளனர். மகனின் நெருங்கிய தோழர்களாக மற்ற மூன்று உதவி இயக்குனர்கள் (M.A கென்னடி, ஜோதி ராஜ் & சிவா) நடித்து உள்ளனர்.
குடும்பம் (அண்ணன், தங்கை, அப்பா & அம்மா) | நண்பர்கள்:Kennedy,Suresh Guru, Jyothi Raj & Siva | தேவதை போன்ற அழகுடன் ஸ்வாசிகா |
மைதானம் - திரைப்படம்: படத்தின் நாயகி தன்னுடைய அண்ணனின் மூன்று நண்பர்களில் ஒருவரை காதலிக்கிறார். ஆனால் அந்த நண்பரோ நட்புக்கு துரோகம் செய்ய முடியாது என்று காதலை புறக்கணிக்கிறார். அதே சமயம் வேறொரு நண்பரும் கதாநாயகியையே ஒருதலையாக விரும்ப, நாயகி அவரை மறுக்கிறார். இருந்தாலும் மனதில் காதலுடனே தொடர்கிறார் அந்த நண்பர். இதே சமயம் கதாநாயகிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் திட்டமிட, நாயகி மறுத்தும் நிச்சயம் செய்யப்படுகிறது - அவரது காதலன் நட்பை மீறி ஒன்றுமே செய்யவில்லை. இந்த சூழலில் திருமண நாள் குறித்தாகிவிட்ட நேரத்தில் நாயகி ஒரு நாள் காணாமல் போகிறார். அவரை தேடும் படலமும் அதன் பின்னணியுமே கதை.
அப்படியே ஒரு கிராமத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். வசனங்களும், காட்சி அமைப்பும், நடிப்பும் முதல் தரம். படத்தின் மற்றுமொரு முக்கியாமான அம்சம் - ஒளி ஓவியம். கேமராமென் யாரென்று தெரிந்தால் அவரை பாராட்ட வேண்டும். அதே சமயம் படத்தின் பல காட்சிகளில் வித்தியாசமான கேமரா ஆங்கிளை வைத்தமைக்கும் பாராட்ட வேண்டும். அதன் பின்னர் லைட்டிங். சொல்லவே வேண்டாம் - டாப் கிளாஸ். கடைசியாக பின்னணி இசையும், பாடல்களும். இது போன்ற படங்களுக்கு பாடல்களே தேவை இல்லை தான். இருந்தாலும் பாடல்கள் ஸ்கோர் செய்கின்றன. குறிப்பாக இரண்டாம் பகுதியில் வரும் அந்த பாடல். பின்னணி இசை பல இடங்களில் கதையின் போக்கை தெளிவாக உணர்த்துகிறது. சபேஷ் முரளி மிஷ்கினிடம் மட்டுமே சிறப்பாக இசை அமைப்பார் என்பதை இந்த படம் மாற்றும்.
தமிழில் நல்ல படங்களே வருவதில்லை என்று சொல்லிக்கொண்டு பன்னாட்டு மொழிப்படங்களை தேடிப்பார்க்கும் நம் நண்பர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கவேண்டும். இவ்வருடத்திய மிகச்சிறந்த படங்களில் இந்த படம் கண்டிப்பாக முதல் மூன்று இடங்களில் வந்துவிடும் என்பதை இங்கு உறுதிபட கூறுகிறேன். அவ்வளவாக விளம்பரத் துணையும், நல்ல தியேட்டர்களின் துணையும், மீடியாவின் துணையும் இல்லாமல் இந்த படம் தள்ளாடுகிறது. நாங்கள் சென்ற அந்த காட்சியில் பால்கனியில் மொத்தமே முப்பது பேர்தான் – This film deserves more. ஆனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த முதல் முயற்சிகளில் இந்த படம் இடம்பெறும்.
படத்தின் அட்டகாசமான காட்சி: தன்னுடைய மகளிற்கு இவ்வளவு சீக்கிரமே திருமணம் செய்துவிடுகிறோமே என்று அகத்தியன் சார் தன்னுடைய மனைவியிடம் சொல்லி விட்டு பிரேக் டவுன் ஆகும் அந்த காட்சியை ஒவ்வொரு தந்தையும் கண்டிப்பாக பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக அந்த காட்சியில் அவரது முகம் தெரியாமல் கண்ணாடியில் மட்டுமே அவரது ரியாக்ஷன்கள் தெரிய, ச்சே, சான்சே இல்லை. மூவ் ஓவர் அப்பா கேரக்டர் நடிகர்ஸ், இதோ வந்து விட்டார் நடிக்க தெரிந்த ஒருவர். படத்தின் ஹை லைட்டே அகத்தியன் சாரின் நடிப்புதான். ஒரு கிராமத்து தந்தையை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என்று சொன்னால் அது மிகை ஆகாது. இதற்க்கு மேலும் விருது கமிட்டி மற்ற படங்களை பார்க்க வேண்டுமா என்பது கேள்விதான். இந்த வருடத்தின் சிறந்த குணசித்திர நடிகர் விருது இப்போதே முடிவு செய்யப்பட்டு விட்டது. அகத்தியன் சாருக்கு ஒரு ராயல் சல்யூட். இவரது ரியாக்ஷன்களுக்கென்றே மறுபடியும் ஒரு முறை படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
படத்தின் சுமாரான காட்சி(கள்): படத்தின் முதல் பகுதியில் பல காட்சிகள் மிகவும் ஸ்லோ ஆக நகர்வதாகவே தெரிகிறது. கிட்டத்தட்ட ஒரு மெகா சீரியல் போலவே தோன்றியது. படத்தின் இரண்டாம் பகுதிக்கு இவை வித்திட்டாலும்கூட, இவை சற்றே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வேறு ஒரு எடிட்டர் இந்த காட்சிகளை வேறு விதமாக (குறிப்பாக வேகமாக) மாற்றியிருப்பாரோ என்று நினைக்க வைக்கிறது. அதே சமயம் படத்தின் பட்ஜெட்டும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். "நேரமும், சக்தியும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் சாதிக்கலாம், ஆனால் இவற்றின் துணை இல்லாமலே சாதிப்பவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள்" என்று என் தந்தை சொல்வதைப்போல இந்த படத்தின் இயக்குனர் தன்னுடைய சகதிக்குள் பல நல்ல விஷயங்கள் செய்துள்ளார். ஆகையால் இந்த முதல் பகுதி காட்சிகள் பெரிதாக கவனிக்கப்படாது.
படத்தின் ஹைலைட்: நாயகியை கண்டறிந்த நண்பன் அதனை மற்றவர்களிடம் சொல்லும் காட்சியும், அதன் பின்னர் திரையில் தோன்றும் அந்த பத்து பதினைந்து நிமிடங்கலுமே செலுலாயிட் சித்திரங்கள். இந்த நான்கு உதவி இயக்குநர்களுமே போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். இதற்க்கு மேல் சொன்னால் படத்தின் சுவாரஸ்யம் கெட்டுவிடும் என்பதால் சொல்லவில்லை. குறிப்பாக நாயகியின் அண்ணன் பாத்திரத்தில் இருக்கும் நடிகர். இந்த பாத்திரத்தை இவரைவிட வேறு யாரும் இந்த அளவிற்கு பிரம்மாதமாக செய்யவே முடியாது என்று சவால் விடும் அளவிற்கு நடித்துள்ளார் (இனிமேல் விஜய், அஜித், விக்ரம் போன்றவர்களின் படத்தில் அவர்களின் நண்பராக வர வாய்ப்புகள் கண்டிப்பாக குவியும்). அதிலும் அந்த காதலை மறுக்கும் நண்பரின் பாத்திரம் ஒரு சூப்பர் கேரக்டரைசேஷன் (பழைய இதயம் முரளி போல). அந்த காட்சி வரை தன்னுடைய செட் ஆகாத குரலால் வெறுப்பேற்றி வந்த அந்த நான்காவது உதவி இயக்குனர் கூட (வயதில் முதிர்ந்தவர்) அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார். அவரது வசனங்களும், உச்சரிப்பும் அந்த காட்சியில் பின்னுகிறது.
செகண்ட் ஹைலைட்: படத்தின் கிளைமேக்சில் நாயகியை நண்பர் வீட்டிற்க்கு தெரியாமல் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார். அந்த காட்சியில் அந்த நாயகியின் பாத்திரம், அந்த கேரக்டரைசேஷன் மொத்தமாக அடிபட்டு போகிறதே என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். ஆனால் இயக்குனர் அங்கே ஒரு திருப்பம் கொண்டு வந்து தன்னுடைய திறமையை நிரூபித்து உள்ளார். ஹாட்ஸ் ஆப் டு யூ, Mr M.S.Shakthivel.
தமிழில் பெரும்பாலான இயக்குனர்கள் தங்களின் முதல் படத்தில் ஜெயித்து விடுவார்கள் (அது ஒரு பெரிய கான்செப்ட்). ஆனால் தங்களுடைய முழு திறமையையும் முதல் படத்திலேயே காண்பித்து விட்டதால் இரண்டாம் படத்தில் தடுமாறியவர்கள் பலர். ஆகையால் நான் எப்போதுமே ஒரு இயக்குனரை அவரது இரண்டாம் படத்தை வைத்தே எடை போடுவேன். சக்திவேல் சார், இதைப்போல கூட தேவை இல்லை, இதில் பாதி அளவிற்கு இன்னுமொரு படம் கொடுங்கள். தமிழ் திரையுலகம் உங்களை தலையில் வைத்து கொண்டாடும். இதோ இங்கே திரையில் இருக்கும் உங்களின் இந்த பட டிக்கெட்டிற்கு நான் தங்க பிரேம் போட்டு உங்களிடம் கொடுக்கிறேன். வாழ்த்துக்கள் சார். ஆல் தி பெஸ்ட்.
படத்தின் ட்ரைலர்:
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 5/6. ஐந்து தோட்டாக்கள்.இரண்டு கட்டை விரல்கள் மேலே (2 Thumps Up).
கிங்'ஸ் பன்ச்: (Within Limits) விளையாடி இருக்கிறார் இயக்குனர்.