Showing posts with label ழான்றே - த்ரில்லர். Show all posts
Showing posts with label ழான்றே - த்ரில்லர். Show all posts

Friday, October 4, 2013

ஜான்டே இந்திப்பட விமர்சனம் JohnDay 13-09-2013 Hindi Film

John Day மங்களூர் எர்போர்ட்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஷிமோகா என்கிற இந்த சிறிய ஊர். இந்த ஊரின் மைய்யமாக ஜவகர்லால் நேரு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் மோகம் அதிகம் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். கிரிக்கெட் ஆர்வம் அப்படி இருந்தாலும்கூட ஷிமோகா என்கிற ஒரு சிறிய ஊருக்கு ஒரு சாதாரண A அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியை காண பத்தாயிரம் பேர் வருவது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கே இப்போதெல்லாம் இந்த அளவுக்கு கூட்டம் வருவதில்லை. ஆனால் ஷிமோகாவில் நடக்கும் ஒரு சாதாரண போட்டிக்கு இந்த கூட்டம் வந்தது எதனால்? என்று பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் சூப்பர் ஸ்டார்களாக இருந்த வீரேந்திர சேவாக் மற்றும் ஜாகீர் கான் ஆகிய இருவரும் அணியில் திரும்ப வருவதற்கான முயற்சியில் இந்த போட்டியில் விளையாடுவதே ஆகும்.

இப்படி நமக்கு தெரிந்த சூப்பர் ஸ்டார்கள் இருந்ததால் 10,000 பேர் வந்து அந்த மைதானத்தை ஆக்ரமித்துக் கொண்டு காத்திருந்தனர். ஆனால் இரண்டாம் நாள் (இன்று அக்டோபர் 3) முடிவில் அவர்கள் அனைவருக்குமே சற்று வருத்தமே. இரண்டு ஸ்டார்களும் சோபிக்கவில்லை. கிட்ட தட்ட அந்த போட்டியை நேரில் பார்த்துவிட்டு வந்தவர்களின் மனநிலையில் தான் நானும் John Day என்கிற இந்த இந்திப் படத்தை பார்த்து விட்டு வந்தேன்.

படத்தின் பின்னணி: தமிழில் ஒலக நாயகன் நடித்து வந்த "உன்னைப்போல ஒருவன்" படம் நினைவிருக்கிறதா? அந்த படத்தின் மூலமான A Wednesday படக்குழுவினரிடம்  அடுத்த படம் என்கிற போஸ்டர் வாக்கியமே என்னை இந்த படத்தின் பால் ஈர்த்தது. அதுவும் சமீப படங்களில் தன்னுடைய Moody, நெகடிவ் நடிப்பால் என்னை கவர்ந்த ரந்தீப் ஹூடா, இந்த படத்தில் என்னுடைய All Time Favourite நசீருத்தின் ஷாவுடன் இனைந்து நடிக்கிறார் என்கிற அழைப்பிதழ் வேறு, கேட்கவா வேண்டும்? உடனே படம் பார்க்கும் ஆவல் மேலிட்டது.

ஆனால் இந்த மாதிரி "From The Producer Of" என்கிற விளம்பர தொனியில் இதுவரை வந்த படங்கள் எதுவுமே சோபிக்கவில்லை என்பதே நான் கண்டறிந்த உண்மை. At Least நான் பார்த்த படங்களில் மட்டுமாவது இந்த விஷயம் தொடர்கிறது. ஆகையால் ஒரு நடிப்பின் இலக்கணமும், மற்றுமொரு ப்ராமிசிங் நடிகர் கொண்ட இந்த கூட்டணி மீது நம்பிக்கை இருந்தாலும் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒரு வண்டு ரீங்காரமிட்டுக்கொண்டு இருந்தது.

JD

படத்தின் கதை: இதுவரையில் நாம் படித்த இரண்டாயிரத்து சொச்சம் ராஜேஷ் குமார் நாவல்களின் திரை வடிவமே இந்த JohnDay திரைப்படம். திரைப்படமும் கிட்டத்தட்ட அதே பாணியிலும் அமைந்து இருப்பது ஒரு தனி விஷயம்.

  • ஒரு மர்மமான, புரியாத, சம்பந்தமில்லாத ஆரம்பம்.
  • கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரம் & அதை சார்ந்த திரைக்கதை (Hero).
  • கதையின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் & அதை சார்ந்த திரைக்கதை (Anti Hero).
  • கதையின் முடிவில் இந்த இரண்டு தனித்தனி ட்ராக்குகளையும் ஒருங்கே இணைத்து அந்த ஆரம்ப காட்சியுடன் முடிச்சு போட்டு கதையை முடித்தல்.

ஆரம்பம்: இளம்பெண் தன்னுடைய ஆண் நண்பனுடன் வனாந்திர பகுதிக்கு விடுமுறையில் வருவது, அங்கு ஏதோ நடக்கப் போகிறது என்பதை காட்சிகளால் உணர்த்தி ஆனால் என்ன நடந்தது என்பதை காட்டாமலேயே அடுத்த கட்டத்திற்கு நகர்கிற திரைக்கதை யுக்தி.

N Shah முதல் ட்ராக்: ஜான்டே ஒரு வங்கி மேலாளர். அவரது மனைவி வீட்டில் தனித்து இருக்கும்போது  ஒருவன் அவரை பணயக்கைதியாக வைத்து, அவரது வங்கியை கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளை முடிந்தவுடன் ஜான்டே வின் மனைவியை அடித்து கோமாவுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் வேறொரு பெரிய சம்பவத்தை மறைக்கும் ஒரு கண்துடைப்பு என்பதை பின்னர் உணரும் ஜான்டே தனியாக துப்பறிய துவங்குகிறார்.

Randeep Hooda இரண்டாவது ட்ராக்: ஒரு "மார்க்கமான" போலிஸ், அவருக்கு இருக்கும் ஒரு சிறுவயது வன்ம  நினைவுகள்,அதனாலேயே இன்னமும் மூரக்கமாக செயல்படும் அவரது நிலைப்பாடு என்று ஆரம்பிக்கும் இரண்டாவது ட்ராக், திடீரென்று அந்த போலிஸ் அதிகாரி ட்ராக் மாறி பயணிக்க ஆரம்பிக்கும்போது சூடு பிடிக்கிறது. ஒரு மாஃபியா டானுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் அவர் பாதியில் அந்த டானின் பரம எதிரிக்காக வேலை செய்ய துவங்குவதில் படம் சூடு பிடிக்கிறது.

இதற்க்கு மேல் என்ன நடந்தது என்பதை வெள்ளிதிரையிலோ (இன்னும் எங்காவது ஒரு மல்ட்டிபிளெக்ஸில் ஒரே ஒரு இரவுக்காட்சி மட்டும் ஓடிக்கொண்டு இருக்கும் பட்சத்தில்) அல்லது நல்ல டிவிடியிலோ பார்த்து தெரிந்து கொள்ளவும்.

climax 

படத்தின் நிறைகள்:

  • 50 வயதை தாண்டிய ஒருவரை ஹீரோவாக வைத்து கதையெழுதி அதனை திரைப்படமாக எடுக்கவும் ஒரு தனி தைரியம் உண்டு. நசீருத்தின் ஷா அவர்களுக்காகவே இந்த படம் எழுதப்பட்டு இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு படம் பாருங்கள். அவரது மிகச்சிறந்த    முயற்சிகளில் இதுவும் ஒன்று.
  • படத்தில் சில காட்சிகள் நம்மை மறந்து விசிலடிக்க வைக்கின்றது.
  • இரண்டு கொடூரமான காட்சிகள் நாற்காலியின் நுனிக்கு மன்னிக்கவும் நாற்காலியில் இருந்து தடுமாறி விழ வைக்கிறது (ஒன்று ஹூடாவுக்கு, ஒன்று ஷாவுக்கு).
  • உண்மையிலேயே முதல் பாதி  சிறப்பாக (சில க்ளீஷே காட்சிகள் இருந்தாலும்) அமைந்து இருக்கிறது. இயக்குனருக்கு இது முதல் படம் என்பதால் இரண்டாவது பாதியில் அவர் பாதையில் இருந்து தவறி இருப்பதை காண முடிகிறது.

  • ரந்தீப் ஹூடாவின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக அர்ஜுன் ராம்பால் இப்படித்தான் ஆரம்பித்தார். ஹூடா சிறப்பாக நடிக்க வாழ்த்துக்கள்.

  • ஹூடாவின் கேரக்டர் ஒரு மூடியான டைப் என்பதால் அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை சத்தியமாக கணிக்கவே முடியவில்லை. சாதாரண ஒரு காட்சியில் பொசுக்கென்று சுட்டுக்கொன்று விடுவதும், சீரியசான ஒரு காட்சியில் சாதாரணமாக "எனக்கு இன்றைக்கு மூட் நன்றாக இருக்கிறது, பிழைத்துப்போ" என்று சொல்வதும்,ஹ்ம்ம் மனிதர் அதகளம் செய்து இருக்கிறார்.  இவருக்கு சரியான ஒரு இயக்குனர் கிடைத்தால் பின்னி பெடலெடுத்து விடுவார். இம்தியாஸ் அலி இயக்கத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் இவரது அடுத்த படத்தை இந்த ஒரு விஷயத்திற்காகவே மிகவும் எதிர்பார்க்கிறேன்.

  • நெடுநாட்களுக்கு பிறகு ஷரத் சக்சேனாவுக்கு ஒரு நல்ல பாத்திரம். அமைதியாக அலட்டல் இல்லாமல் நடித்து இருக்கிறார்.

  • படத்தின் முடிவில் ஷரத் சக்சேனா பேசும் ஒரு வசனம் இருக்கிறதே, அடடா, கண்டிப்பாக இந்த இயக்குனரின் அடுத்த படத்தை இந்த மாதிரி வசனங்களுக்காகவே பார்க்க தூண்டிவிடுகிறார் (தயவு செய்து ஹிந்தி தெரிந்தால் மட்டுமே இந்த படத்தை பார்க்கவும்).

  • ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மகராந்த் தேஷ்பாண்டே (கிருஷ்ணா), மற்றும் ஆனந்த் மகாதேவன் (பத்திரிகை அதிபர்) இருவருமே அட்டகாசமான நடிப்பால் சபாஷ்! போட வைக்கிறார்கள்.

படத்தின் குறைகள்:

  • இப்போதெல்லாம் மூன்றில் இரண்டு படங்களில் ஹூடாவின் பாத்திரம் இந்த மாதிரியானதாகவே அமைந்து இருக்கிறது. டைப் காஸ்ட் ஆகிவிட்டார். ஆகவே கிட்டத்தட்ட இதனை எதிர்பார்த்தே நாம் செல்கிறோம்.
  • படத்தின் பின்பகுதியில் ஒன்றுமே இல்லாதது போல இருப்பது, ஷா வில்லன் ஆட்களிடம் இருந்து தப்பிப்பது போன்ற காட்சிகள் படத்தின் மிகப்பெரிய குறை.
  • மிகச்சிறந்த த்ரில்லர் படங்களுக்கு உதாரணம் சொல்லும் அளவிற்கு ஆரம்பித்த இந்த படம் பின்னர் ஒரு த்ரில்லர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக மாறி விடுவது கொடுமை.
  • இளையராஜாவின் தேவையை இதுபோன்ற படங்களில் கிடைக்கும் பின்னணி இசையைக்கொண்டே மதிப்பிட முடிகிறது.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3 Bullets

3/6 மூன்று தோட்டாக்கள்! ஷாவுக்கு 1, ஹூடாவுக்கு 1 & இயக்குனருக்கு 1.

தமிழ் சினிமா உலகின் பன்ச்: JohnDay – Watch it on a Holiday.

ட்ரைலர்:

பின் குறிப்பு: இந்த பதிவின் ஆரம்பத்தில் சம்பந்தமே இல்லாமல் மூன்று பத்திகள் எதற்கு எழுதப்பட்டு இருக்கிறது? என்று கேட்கும் பாவப்பட்ட ஜென்மங்களுக்கு இந்த பதில்: ஒரு ஆளுமை தன்னுடைய பார்வையிலேயே காட்சிகளையும் சம்பவங்களையும் அவதானிக்கிறான். அதனாலேயே அவனுடைய தனித்தன்மை சம்பந்தப்பட்ட விஷயத்துடன் கலந்து வெளியாகிறது.

#சாவுங்கடா

Monday, June 27, 2011

நகரம் நித்ர போதுன்ன வேல 2011 (Nagaram Nidhra Pothunna Vela) - தெலுகு பட விமர்சனம்

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இந்த படத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிந்து கொள்வது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகமாக இருக்கும் நடிகை சார்மியின் மார்கெட்டை சரிகட்ட அவரும் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். அதீத கவர்ச்சி காட்டி நடித்த பல படங்கள், தனி நாயகியாக (அருந்ததியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட) மங்களா படம் - இது ஸ்பைடர்மேன் இயக்குனர் சாம் ரெய்மியின் Drag me to Hell படத்தின் தழுவல்-, ஒரே ஒரு குத்தாட்ட பாடல் போட்ட படம், ராம் கோபால் வர்மாவின் வித்தியாச படம் -தொங்கால முட்டா-, என்று பல படங்கள். ஆனாலும் முடிவு ஒன்றுதான் - படுதோல்வி. சரி இனிமேல் விஜயசாந்தி போல புரட்சிகரமான பாத்திரங்களை முயற்சிப்போம் என்று துணிந்து நடித்த படமே நகரம் நித்ர போதுன்ன வேள (நகரம் உறங்கும் வேளை). அருமையான, கவித்துவமான தலைப்பு கொண்ட இந்த படத்தில் ஜோடியாக (?!?) நடிப்பவர் ஜகபதி பாபு. இவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு ஹிட் படத்திற்காக துடித்துக்கொண்டு இருப்பவர்தான். இப்படி ஒரு வெற்றிப்படதிற்க்காக ஏங்கும் இரு முன்னணி நட்சத்திரங்கள் சேர்ந்து வந்ததாலேயே இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு கூடியது.

படத்தின் பின்னணி: இந்த படத்தில் முதல் பாடலாக இருக்கும் அந்த தெலங்கானா / பிராக்ஷனிஷ பாடலை பலமுறை தொடர்ந்து டிரைலரில் ஒளிபரப்பி ஒருவிதமான எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருந்தார்கள். அதுவும் இல்லாமல் ஜகபதி பாபுவின் அந்த டைட்டில் சாங் (நித்ர போதுந்தி பட்னம்), அருமையான வரிகளுடன் தாலாட்டி தூங்க வைக்கும் தன்மையை கொண்டிருப்பதால் மற்ற பாடல்களும், படமும் நன்றாகவே இருக்கும் என்று நம்பி இருந்தேன். அதுவுமில்லாமல் படத்தின் இயக்குனர் வேறு இது ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் பின்னணி கதை என்றெல்லாம் சொல்லி இருந்தார். அதுவும் எதிர்ப்பார்ப்பை கூட்டியது. மேலும் அந்த லிப் டு லிப் முத்தம் பற்றிய தகவல் கசிந்தது இளசுகளின் மத்தியில் கிலுகிலுப்பை ஏற்படுத்தியது. இதைதவிர கடந்த நான்கு வாரங்களில் ரிலீஸ் ஆகும் முதல் நேரிடை தெலுங்கு படம் இது என்பதால் மேலும் ஒரு ஆவல். இப்படியாக பலவிதமான எதிர்ப்பர்ப்புகளுடன்  நுழைந்தேன்.

படத்தின் கதை: தனியார் தொலைக்காட்சியில் பனி புரியும் ஒரு துணிச்சலான பெண் நிருபர். அவருடைய சமுதாய நல்லெண்ண சிந்தனைகள் நிறைந்த செய்திகளை,ரேட்டிங் வராது என்பதால் ஒளிபரப்ப மறுக்கிறார் தொலைக்காட்சியின் அதிபர். அதனால் கடுப்பான அந்த நிருபர் "இன்று இரவு நகரத்தில் நடக்கும் அத்தனை தவறான காரியங்களையும் வெளிக்கொணருகிறேன்" என்று கிளம்புகிறார். நிற்க. இது கதை அல்ல. ஆனால் இனிமேல் நான் சொல்லப்போகும் ஒன் லைனரை கவனிக்கவும்.

துணிச்சலான அந்த பெண் நிருபரை துறத்துகிறது ஒரு கொலைகார கும்பல். எதற்க்காக துறத்தப்படுகிறோம் என்பதே தெரியாமல் ஓடுகிறார் அந்த நிருபர். அவரை காப்பாற்றுவது ஒரு மர்மமான நபர். அவன் பேசுவது உண்மையா என்பது அவனுக்கே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவனது துடுக்குத்தனமான (ரா.பார்த்திபன் போன்ற) கேள்விகளால் பலரும் கடுப்பாகின்றனர். இவர்கள் இருவரும் அப்படி எந்த ஒரு உண்மையால் துறத்தப்படுகின்றனர்?

இப்படி ஒரு ஒன் லைனர் இருந்தால் எந்த ஒரு பெரிய நட்சத்திரத்தின் கால்ஷீட்டையும் (நன்கு பேசத்தெரிந்த) ஒரு இயக்குனரால் இலகுவாக பெற இயலும். இங்கேயும் அதுதான் நடந்துள்ளது. ஆனால் இயக்கவே தெரியாத ஒரு இயக்குனரிடம் இந்த ஒரு த்ரில்லர் கதை மகா மொக்கை கதையாகி நின்றதே இந்த படத்தின் அடுத்த கட்டம்.

மொக்கையாகிப்போன திரைக்கதை: ஒரு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்லும்போது காட்டில் அவர்கள் ஒரு பென் டிரைவை கண்டெடுக்கிறார்கள். அது நிஹாரிகா என்ற தொலைகாட்சி நிருபருடயது. அதில் இருக்கும் சம்பவங்களால் கவரப்பட்ட அவர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் செல்கிறார்கள். ஆனால் நிஹாரிகா காணாமல் போய்விட்டது அங்கே சென்ற பின்னரே தெரியவருகிறது. மறுபடியும் அந்த காட்டிற்கு வந்து தேடும்போது இரத்தம் தோய்ந்த சில இடங்களை பார்க்கிறார்கள். அப்போது நிஹாரிகாவின் தோழி இதுவரை நடந்தவற்றை பிளாஷ் பேக்கில் சொல்கிறார்.

பிளாஷ் பேக்: எதிர்கட்சி தலைவர்,  நாட்டில் வன்முறை, கலவர வெறியாட்டங்களை தூண்டிவிட்டு, ஆட்சி மாற்றம் நடத்தி முதல்வராக துடிக்கிறார். அவரது இந்த சதியாலோசனை நிஹாரிகாவின் கேமராவில் அவரையறியாமலேயே பதிவாகி விடுகிறது. அப்போதுதான் அவர் நகரம் தூங்கும்போது அதன் குற்றப்பின்னணியை கண்டறிய புறப்படுகிறார். அவரை கொன்று அந்த பதிவான சங்கதிகளை அழிக்க ஆட்களை ஏவுகிறார் எதிர்கட்சி தலைவர் (இவர் பார்ப்பதற்கு N.T.R மாதிரியே வேறு இருக்கிறார்). அப்போது அவரை காப்பற்றுகிறார் ஜகபதி பாபு. இதன் பின்னர் என்ன நடந்தது என்பதை தயவு செய்து நீங்கள் தெரிந்து கொள்ளாமலே இருத்தல் நலம். அப்படி தேய்ந்து கொள்ள ஆசைப்பட்டு படத்திற்கு சென்றீர்கள் என்றால் (ஒன்று) பாதியிலேயே ஓடி வந்து விடுவீர்கள் (இரண்டு) கடுப்பாகி விடுவீர்கள்.

ஏனென்றால் படம் அதுவரையாவது ஓரளவுக்கு சுமாராக போய்க்கொண்டு இருந்தது. அதற்க்கு பிறகு, அய்யோடா சாமி, சொல்லவே முடியல. படம் திடீரென்று காந்தியின் அஹிம்சா போதனைகளை கொண்டு முன்னேறுகிறது. அதாவது பின்னணியில் காந்தி சிலை இருக்கும், அதன் முன்னே அரசியல்வாதிகளை நக்சலைட்டுகள் (அவங்கதானே?) வந்து கொன்று விட்டு செல்கிறார்கள். அதாவது நியாயம் கேட்டு நிஹாரிகா அஹிம்சா வழியில் போராடியதால் நக்சலைட்டுகள் கொதித்து எழுந்து அந்த அரசியல்வாதிகளை கொன்றுவிட்டு மறுபடியும் காட்டிற்கே சென்றுவிடுவார்கள். நிஹாரிகாவின் கையில் ஒரு இந்தியக்கொடியை கொடுத்துவிட்டு மக்களும் சென்று விடுவார்கள். நம்ம தலையில் மொளகா அரைத்து விட்டு இயக்குனரும் சென்று விடுவார்.

நடிப்பு: வில்லனாக நடிப்பவர் ஓரளவுக்கு சுமாராக நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்த ஜகபதி பாபு ரசிகர்கள் கண்டிப்பாக மனம் நொந்து போய் இருப்பார்கள். நான் அவரின் விசிறி கிடையாது என்றாலும் ஜகபதி பாபுவின் சில படங்களில் அவரது அற்புதமான நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அவர் எந்த பாத்திரம் கிடைத்தாலும் ஒக்கே சொல்கிறார் போலும், இல்லை என்றால் இந்த படத்தில் அவர் நடிக்க சம்மதித்தது எப்படி என்பது அவருக்கே புரியாத புதிராகும். சார்மி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். பேசாமல் மறுபடியும் சார்மி உச்சகட்ட கவர்ச்சிக்கே திரும்புவதே உசிதம். மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேறொன்றும் இல்லை.

இயக்கம் - இயக்குனர்: கண்டிப்பாக இந்த படத்தின் இயக்குனர் (பிரேம்ராஜ்) கையில் கிடைத்தால் அவருக்கு ஒரு பத்து, பதினைந்து டிவிடிக்கள் கொடுத்து அவற்றை பார்க்கும்படி சொல்வேன். ஏனென்றால் இவருக்கு படமெடுப்பது எப்படி என்ற அடிப்படையே சரியாக தெரியவில்லை. ஏன் இவ்வளவு கோபப்படுகிறேன் என்றால் படம் வருவதற்கு முன்பும், ரிலீஸ் ஆன பின்பும் இவர் செய்த சேஷ்டைகள் அப்படி. படம் வருவதற்கு முன்பு படத்தில் சிறந்த காட்சி எது என்று கேட்டால் சார்மியும், ஜகபதி பாபுவும் லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் காட்சியே என்று சொன்னார் (படத்தில் அப்படி ஒரு காட்சியே இல்லை).

இது கூட பரவாயில்லை. படம் ரிலீஸ் ஆன வெள்ளியன்று மதியமே படம் புட்டுகிச்சு என்கிற விஷயம் ஊரெல்லாம் பரவ, மனுஷன் கொஞ்சமும் சளைக்காமல் "இந்த படத்தின் வில்லனுக்கும் கிரண் ரெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, விஷமிகள் சில அப்படி பிரச்சாரம் செய்கிறார்கள்" என்று இவரே கிளப்பிவிட்டு விளம்பரம் தேடப்பார்த்தார். அப்படியும்கூட இந்த படத்தை யாரும் சீண்டவில்லை.

படத்தின் + கள்: எதுவுமே இல்லை. (அப்படியே சொல்லவேண்டுமென்றால் ஓரிரு பாடல்களை சொல்லலாம்)

படத்தின் - கள்: எல்லாமுமே.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 0/6/ இந்த படத்திற்க்கெல்லாம் தோட்டாக்களை வீணடிக்க விரும்பவில்லை.

கிங்'ஸ் பன்ச்: நகரம் தூங்கும் வேளை - திரைக்கதையும் தூங்கிவிட்டது.

Wednesday, June 22, 2011

தி ரெசிடென்ட்-ஆங்கில திரைப்பட விமர்சனம் (The Resident 2011)

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.

தி ரெசிடென்ட் என்கிற பெயரை கேட்டவுடன் என்னுடைய நண்பர் கூறிய கமென்ட் இதுதான் - "படத்தின் பெயரில் ஈவில் சேர்த்து ரெசிடென்ட் ஈவில் என்று வெளியிட்டால் தமிழ் நாட்டில் படம் செமையாக ஹிட் ஆகும்". அது என்னமோ உண்மைதான். சமீபத்தில் வந்த ரெசிடென்ட் ஈவில் படத்தின் மொக்கை பாகம் கூட தமிழில் வசூலை அள்ளிக்குவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் படத்தின் தலைப்பில் ரெசிடென்ட் வருவதும், படத்தின் முக்கிய பாத்திரம் ஒரு பெண் என்பதைத்தவிர வேறெந்த ஒற்றுமையும் இந்த படங்களில் இல்லை.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை இரண்டு முறை வென்ற ஹிலரி ஸ்வான்க் நடித்துள்ளதே இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்டியது. இது போன்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுவது இல்லை. அப்படியே செய்தாலும்கூட அதனை ஒரு மூன்றாம்தர ரசனையுடனே வெளியிடுவார்கள் (சமீபத்திய உதாரணம் கேட் வின்ஸ்லேட்டின் தி ரீடர் படம் தமிழில் ஒரு கில்மா படம் போல விளம்பரப் படுத்தப்பட்டு வந்தது). இப்படி விளம்பரபடுத்தப்பட்டால், மக்கள் அதே எதிர்ப்பார்ப்புடன்தானே வருவார்கள்? அப்போது அவர்களுக்கு கிட்டுவது ஏமாற்றமே அன்றி வேறொன்றுமில்லை (கிட்டத்தட்ட இதைப்போன்ற மனநிலையில் தான் பல பதிவர்களும் செயல்படுகிறார்கள் என்று அண்ணன் கா'னா கூறுகிறார்). நல்லவேளையாக இந்த படத்தை அப்படி வெளியிடவில்லை.

படத்தின் கதை: தன்னை ஏமாற்றிய காதலனை விட்டு பிரிந்து தனியாக வாழ வீடு தேடுகிறார் டாக்டர் ஜூலியட் (ஹிலரி ஸ்வான்க்). அப்போது மிகவும் குறைந்த வாடகையில் ஒரு இருப்பிடம் கிடைக்கிறது. சில பல குறைகள் இருந்தாலும் வீடு பிடித்திருப்பதாலும், வீட்டு உரிமையாளர் ஒரு தாடி வைத்த ஜார்ஜ் க்ளூனி போல இருப்பதாலும் (மேக்ஸ் ஆக ஜெப்ரி டீன் மார்கன்) அந்த வீட்டை வாடகைக்கு எடுக்கிறார் ஜூலியட். நாளடைவில் மேக்ஸ் உடன் நட்பு பலப்படுகிறது. மேக்ஸின் பழகும் தனமையால் கவரப்பட்டு ஒரு முறை தன்னையே இழக்கிறார் ஜூலியட். பிறகு இருவரின் நட்பும் தொடர்கிறது. ஆனால் நாளடைவில் மேக்ஸின் உண்மை சொரூபம் வெளிப்படுகிறது. மேக்ஸ் கிட்டத்தட்ட ஒரு சைக்கோ போலவே செயல்படுகிறார். ஜூலியட் மேல் ஒரு அபரீதமான வெறி கொண்டு இருக்கிறார். ஜூலியட்டின் பழைய காதலன் மனம் திருந்தி வந்தவுடன் அவனை ஜூலியட் ஏற்றுக்கொண்டதை கண்டு மனம் நொந்து அவனை கொன்றும் விடுகிறார்.

ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு மேக்ஸின் மேல் சந்தேகம் கொள்ளும் ஜூலியட் அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயல்கிறார். இருவருக்கும் இடையே நடக்கும் திருடன் - போலிஸ் ஆட்டமே படத்தின் மீதம். ஜூலியட்டால் மேக்சிடம் இருந்து தப்பிக்க முடிந்ததா? ஜூலியட் தப்பித்து எப்படி? மேக்சிர்க்கு என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் காண்க (அல்லது எண்மிய பல்திற வட்டில் கண்டு ரசிக்கவும்).

படத்தின் + கள்: படம் ஓரளவுக்கு விருவிறுப்புடனே செல்கிறது. படத்தின் இரண்டு பிரதான பாத்திரங்களும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். ஹிலரி ஸ்வான்க் நடித்துள்ள பல படங்களை நான் கண்டுள்ளேன் என்பதால் அவரது அலட்டல் இல்லாத நடிப்பு புதிதல்ல. ஆனால் ஜெப்ரி டீன் மார்கன் நடித்த படங்கள் எதனையும் நான் இதுவரையில் கண்டதில்லை. முதல் முறை பார்க்கும்போதே கவரும் ஒரு ஆளுமை இவரிடம் இருக்கிறது. அதுவே பின்னர் சைக்கோ நடிப்பாக மாறும்போது சிலிர்க்க வைக்கிறார். அதுவும் ஜூலியட் வீட்டில் இல்லாதபோது அவரின் டூத் பிரஷ்ஷை கொண்டு பல் விளக்கி ஒரு எக்ஸ்பிரெஷன் கொடுப்பார் பாருங்கள், பிரகாஷ்ராஜ் தோற்றுவிடுவார் இவரிடம். அதுவும் சாவித்துவாரம் வழியாகவும், மறைந்து இருந்தும் ஜூலியட்டை ரசிப்பது, அவரை மயக்க மருந்து கொடுத்து தனது இச்சைகளை தீர்த்துக்கொள்வது, அவர் கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டு ...... விடுங்கள், இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் எப்படி? படத்தில் பாருங்கள்.

படத்தின் - கள்: ஹாலிவுட்டில் இதுவரை எட்டு லட்சத்தி முப்பதாயிரத்தி ஐநுற்றி இருபத்தி ஆறு முறை இதே கதையை திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் கதையை ஊகிக்க முடிகிறது. சில கட்டங்கள் சைக்கோ படங்களின் க்ளீஷே ஆகவும் இருக்கிறது. இருவரின் நடிப்பையும் எடுத்துவிட்டு பார்த்தால் படத்தில் எதுவுமே இல்லை என்பதே உண்மை. இந்த மாதிரியான சைக்கோ த்ரில்லர் படங்கள் ஹாலிவுட்டில் வருடத்திற்கு நூறு வரும். அவற்றில் ஒன்றில் இருந்து மற்றவற்றை வேறுபடுத்துவது இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான நடிகர்களின் நடிப்பே. ஆகையால் இந்த இருவரை மட்டுமே மனதில் கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

இந்த படத்தை பற்றி கூகிளாண்டவரிடம் விசாரித்ததில் இது முதலில் நேரிடையாக ஹோம் டிவிடியாக வெளியிடப்பட்டது தெரியவருகிறது. ஓரளவுக்கு சுமாரான வரவேற்ப்பை பெற்ற பின்னரே தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த படம் டிவிடியில் வந்து விட்டது.

தியேட்டரில் பல காட்சிகளை தணிக்கை செய்துள்ளார்கள். குறிப்பாக படத்தின் பத்தாவது நிமிடத்தில் ஜூலியட் குளிக்கும் காட்சி தணிக்கை செய்யப்பட்டது. இதனை கண்டித்து அண்ணன் கா'னா வரும் வெள்ளியன்று காலை எட்டு மணி  முதல் மதியம் இரண்டு மணி வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். இப்படியாக பல காட்சிகள் தணிக்கை துறையால் துண்டிக்கப்பட்டாலும் படம் த்ரில்லராகவே நகர்கிறது.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:2 bullets  2/6. இரண்டு தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: தி ரெசிடென்ட் - வாடகைக்கே. நிரந்தரமாக அல்ல.

Monday, June 13, 2011

சைத்தான் 2011 ஹிந்திப்படம் விமர்சனம்

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.

சமீபத்தில் இந்த படத்திற்கு உருவாக்கப்பட்ட எதிர்ப்பார்ப்பை போல வேறு எந்த மத்திம தர ஹிந்தி படத்திற்கும் உருவாக்கப்படவில்லை. மத்திம தரம் என்பது நட்சத்திரங்களை வைத்து கூறப்பட்ட வார்த்தை. இந்த படத்தில் ராஜீவ் காண்டேல்வால் தவிர வேறு எந்த நடிகரையும் நீங்கள் பேர் சொல்லி இனம் காண முடியாது. அப்போ ஏன் மத்திம தரம் என்று கேட்பவர்களுக்கு இந்த பதில்: படத்தில் இருக்கும் டெக்னிகல் திறமையாளர்களை கண்டு தான் இந்த படம் இப்படி ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது (தமிழில் சமீபத்தில் இப்படி பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வந்த படம் ஆரண்ய காண்டம்).

படத்தின் பின்னணி: இந்த படத்தின் இசை இயக்குனரும், என்னுடைய பழைய சகாவும், நண்பருமாகிய பிரஷாந்த் பிள்ளை இந்த படத்தை பற்றி அழகாக விவரிப்பார். இந்த படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த கதையை ரெடி செய்துவிட்டு பல தயாரிப்பாளர்களிடம் சான்ஸ் கேட்டுக்கொண்டு இருந்த சமயம். அப்போது படத்தில் வரும் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்துக்கு முன்னாபாய் புகழ் அர்ஷத் வார்சியை புக் செய்துவிட்டு படத்தில் வரும் ஐந்து முக்கிய இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராக புதுச்சேரியை சேர்ந்த கல்கி கோயலீனை தேர்ந்தெடுத்து இருந்தார். கல்கி அந்த வருடம் வந்த அனுராக் காஷ்யப் படமாகிய தேவ் டி படத்தில் நடித்ததற்காக பில்ம் பேர் விருது வாங்கி இருந்த நேரம் (அதே சமயம் அனுராக்கை காதலிக்க ஆரம்பித்த நேரமும் கூட). கதையை சொல்ல அவர் அடிக்கடி கல்கியின் வீட்டிற்கு செல்வார். அப்போதெல்லாம் அங்கே அனுராக்கையும் காண்பார்.

நாளாக, நாளாக இவரைப்பற்றி விசாரித்த அனுராக், கதையை கேட்டு இம்ப்ரெஸ் ஆகிவிட்டு “வேறு எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை என்றால் சொல்லுங்கள், ஓரளவுக்கு சுமாரான பட்ஜெட்டில் நானே தயாரிக்கிறேன்” என்று சொல்ல, நம்பியாருக்கு அடித்தது யோகம். ஏனென்றால் 'நல்ல' சினிமாவை எடுப்பவர் என்று பெயர் வாங்கிய அனுராக் காஷ்யப் தயாரிப்பில் வந்த படம் என்றாலே படத்திற்கு ஓபனிங் வந்து விடும் என்பது பாலிவுட் விதியாகி இருந்த நேரமது.இப்படியாக அனுராக் தயாரிப்பாளராக மாறியவுடன் படத்தின் பட்ஜெட் குறைந்து (படிக்கவும்: நட்சத்திரங்கள் நீக்கப்பட்டனர்). திறமையான புதிய நடிகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புதிய உத்வேகத்துடன் வெளிவந்துள்ள படமே இந்த ஷைத்தான்.

ஷைத்தான் படத்தின் கதை: ஏற்கனவே தேவர் மகன் படத்தில் நம்ம கமல் சொன்ன வசனமே இந்த படத்தின் மைய்யக்கரு (நம்ம எல்லாருக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிட்டு இருக்கு, அதை நாம எப்போ எழுப்புறோம் என்பதே கேள்வி). படத்தில் ஐந்து நண்பர்கள். அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்து இருக்கும் எமி (கல்கி), தந்தையின் சொத்தை அழிக்க பாடுபடும் கேசி (குல்ஷன் தேவையா), சீரியல்களில் நடிக்கும் தான்யா (கீர்த்தி), நண்பர்களுக்காக எதையும் செய்யும் ஜுபின் (நீல் பூபாளம்) மற்றும் கஞ்சா விற்று உல்லாசம் காணும் டேஷ் (ஷிவ் பண்டிட்). இதில் கல்கிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. குறிப்பாக தன்னுடைய மனநலம் குன்றிய தாயின் மறைவுக்கு பின்னர் மறுமணம் செய்துக்கொண்ட தந்தையை வெறுக்கும் காட்சிகளிலும், இல்லாத அம்மாவை நினைத்து உருகுவதாகட்டும் கல்கி, கல்கி அவதாரம் எடுக்கிறார்.

இந்த ஐந்து நண்பர்களும் எதற்காகவும், யாருக்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள். ஜாலியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் மேல்தட்டு மக்களின் பிள்ளைகள் அடுத்து என்ன செய்வதென்பது தெரியாமல் வாழும் வாழ்க்கையை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் இயக்குனர். ஒருநாள் திடீரென்று ஒரு விபத்து. அந்த விபத்தை மறைக்கவும், தங்களை காக்க போலிஸ்காரனுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகிறது. ஒன்றல்ல, ரெண்டல்ல, மொத்தம் 25 லட்சங்கள். அந்த பணத்தை புரட்ட அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும், ஒவ்வொரு நடையிலும், தாங்கள் விரித்த வலையில் தாங்களே சிக்குவது தெரியாமல் தொடர்ந்து திட்டத்தை மேற்கொள்ள, இவர்களை கண்டுபிடிக்க வருகிறார் ஒரு நேர்மையான, துடிப்பான போலிஸ் அதிகாரி (ராஜீவ் காண்டேல்வால்). இது வரையில் ஓடிக்கொண்டு  இருந்த படம் இதற்க்கு பின்னர் புயல் வேகத்தில் பறக்க ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் இருக்கும் அந்த சைத்தான் சூழ்நிலையை இனம்கண்டு வெளியே வந்து நம்முடைய உண்மையான சொரூபத்தை உலகுக்கு காட்டுகிறதா அல்லது நம்முடைய சமூக அந்தஸ்தும், நம்முடைய நடத்தைகளும் அந்த சைத்தானை கட்டுப்படுத்துகிறதா என்பதே கேள்வி. இந்த படம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். மிஸ் செய்து விடாதீர்கள். 

படத்தின் சிறப்பு அம்சங்கள்: இயக்கம்-இந்த படத்தை பற்றி பிரஷாந்த் கூறும்போதே எனக்கு பார்க்கும் ஆசைவந்துவிட்டது. ஆனால் என்னை பயமுறுத்திய ஒரே விஷயம் இந்த படத்தின் இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனர் என்பதே. எங்கே அவரைப்போலவே படம் எடுத்துவிடுவாறோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அவ்வாறெல்லாம் இல்லை என்று இசை அமைக்கும்போதே நம்பிக்கையூட்டி இருந்தான் பிரஷாந்த். ஆகையால் தைரியமுடன் சென்று பார்த்தேன். முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவுக்கு அப்படி ஒரு முழுமையான ஆளுமை நம்பியாருக்கு. படத்தின் முதல் நாற்பது நிமிடங்கள் கொஞ்சம் ஸ்லோவாக தெரிந்தாலும் இரண்டாவது பாதியின் அசுர ஓட்டத்திற்கு அது தேவையே. இயக்குனரின் திறமையை பறைசாற்ற இரண்டே இரண்டு காட்சிகளை மட்டும் சொல்கிறேன்:

ஆக்சிடென்ட்: படத்தில் வரும் முக்கியமான் காட்சி. ஆனால் அந்த விபத்து நடப்பதற்கு முந்தைய காட்சிகளில் அவ்வளவு வேகமாகவும், சப்தங்களுடனும் இருக்கும் திரை திடீரென்று மரண அமைதியுடன் அந்த செல் போன் விழுவதையும், அடுத்த காட்சியில் கேசி ஸ்டியரிங்கை நடுங்கும் கைகளுடனும் விடுவதையும் மட்டுமே பின்னணி இசையில்லாமல் காட்டி அந்த விபத்தை விளக்கி இருப்பார் இயக்குனர். ஹாட்ஸ் ஆப் டு யு, பிஜாய். 

தப்பித்தல்: ஐந்து பெரும் போலிசுக்கு பயந்து ஒரு மொக்கையான லாட்ஜ் போன்ற இடத்தில் தங்கி இருக்க, அங்கிருக்கும் ஒரு சபலிஸ்ட் தான்யாவை இழுத்து சென்றுவிடுகிறான். அதே நேரம் போலிஸ் அங்கே வர, உண்மையிலேயே பெண்களை கடத்தும் ஒரு கும்பல் அதே இடத்தில இருக்க முழு வேகத்தில் காட்சிகள் நகருகின்றன. திடீரென்று அந்த ஐவரும் மொட்டைமாடியின் கதவுகளை திறந்து கொண்டு ஓட, அங்கே ஆரம்பிக்கிறது ஸ்லோ மோஷன் காட்சிகளும், அந்த அற்புதமான 'கோயா கோயா சாந்' பாடலும். ஒரு முழு நீள துப்பாக்கிசண்டை நடக்க, இந்த ஐவரும் தப்பிக்க வழி தேடி ஓட, பின்னணியில் வெறும் இந்த பழைய பாடல் மட்டுமே. (கண்டிப்பாக இதே போன்று கட்சி இந்த வருடத்திற்குள் ஒரு தெலுகு/தமிழ் படத்தில் வந்துவிடும்). இங்கே ரீமிக்ஸ் செய்யாமல் பழைய பாடலை அப்படியே கொடுத்த இயக்குனருக்கு நன்றி.

நடிப்பு: படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் பின்னி, பெடலேடுத்து இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. அதில் சிக்சர் அடித்து இருபது கல்கியும், ராஜீவும். இதனை தவிர்த்து ஷிவ் பண்டிட்டும், கேசியும் அசதி இருக்கிறார்கள். குறிப்பாக எந்த நடிகருமே சோடைபோகவில்லை என்பதே சிறப்பு அம்சம். ராஜீவுக்கு இது ஒரு திருப்பு முனை படமாக அமையும். அவரது அந்த கோபமான பாத்திரம் கண்டிப்பாக பேசப்படும். அதிலும் குறிப்பாக கமிஷனரிடம் 'என்னை இந்த கேசில் இருந்து எடுத்து விட்டு நீங்களே கண்டுபிடியுங்கள்' என்று கத்தி விட்டு திரும்புகையில் ஒரு இன்ஸ்பெக்டர் வந்து புதிய தகவை சொல்ல, அப்படியே திரும்பி கமிஷனருக்கு சல்யூட் அடித்துவிட்டு கடமையை செய்ய செல்லும் காட்சியாகட்டும், கிளைமேக்சில் கல்கியை பார்க்கும் பார்வையில் ஆகட்டும், மனுஷன் அசத்துகிறார். அதே சமயம் இவரது முன்கோப புத்தியை காட்டமட்டுமே வரும் கிளைக்கதையாக தோன்றினாலும் அவரது அந்த டைவர்ஸ்-கோபம்-அன்பு-குடும்பம்-மனைவி விஷயங்கள் ஒரு தனி ஹைக்கூ.

இசை: படத்தில் தனியாக பாடல்கள் என்று எதுவுமே இல்லை. எல்லாமே பின்னணியில் வருபவை மட்டுமே. ஆனாலும் இசை 'உள்ளேன் ஐயா' என்று அய்யம்பாளயத்தாரை போல இருப்பினை உணர்த்துகிறது. அதுவே தனி பலம். இதற்க்கு மேலும் சொன்னால் அது நண்பனை புகழ்வது போல ஆகிவிடும் என்பதால் இப்போதைக்கு ஸ்டாப். 

இதற்க்கு மேலும் படத்தின் ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் புகழ்ந்துகொண்டே போகலாம் தான். இப்போதே பதிவின் நீளம் அதிகம் என்று தோன்றுவதால், படம்  பாருங்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6. ஐந்து தோட்டாக்கள்.

2 Thumbs Upஇரண்டு கட்டை விரல்கள் மேலே! (2 Thumbs Up).

கிங்'ஸ் பன்ச்: சைத்தான் - வேதம் ஓதுகிறான்.

Wednesday, June 8, 2011

ஆண்மை தவறேல்: 03-06-2011 : விமர்சனம்

நேர்மை என்று ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது எடுத்துக்கொண்டதை அதே சிந்தனையில் முடிக்கும் நேர்மை. தமிழ் சினிமா உலகில் இந்த நேர்மை பெரும்பாலும் இருக்கவே இருக்காது என்பது அடியேனின் கருத்து. எண்பதுகளில் விசு படங்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே சில்க் ஸ்மிதா பாட்டு வைக்கவேண்டிய சூழல் உருவானது நமக்கு தெரிந்ததே. அதாவது விநியோகஸ்தர்களுக்கு என்று 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு தேர்ந்தெடுத்த கதையையும், திரைக்கதையையும் மாற்றி சினிமா எடுக்க வேண்டிய நிலை பெரும்பாலான இயக்குனர்களுக்கு வந்து இருக்கிறது, இருக்கிறது, கண்டிப்பாக இருக்கும். இப்படி பல சிக்கல்களையும் மீறி தான் எடுத்துக் கொண்ட கதையை வேறு எதற்கும் 'அட்ஜஸ்ட்' செய்யாமல் 'நேர்மையாக' முடிக்கும் இயக்குனர்கள் குறைவே. அப்படி படமெடுத்தாலும், அவை திரையில் வருவதற்கு பல மாமாங்கம் ஆகும். சரி, எதற்கு இவ்வளவு பீடிகை என்றால், சமீபத்தில் நான் பார்த்த 'ஆண்மை தவறேல்' படத்தில் அப்படி ஒரு நேர்மை இருந்தது. அதாவது எடுத்துக்கொண்ட கதையை நேர்மையாக (எந்தவிதமான வியாபார/சந்தை மயமாக்கலுக்கும் வளைந்து கொடுக்காமல்) கொண்டு செல்லும் அந்த துணிவு இந்த படத்தில் இருந்தது என்பது அடியேனின் எண்ணம். அதைப்பற்றியே இந்த சில வார்த்தைகள்.

கதை: படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாட்கள் கழித்து எழுதப்படும் விமர்சனம் என்பதால் அதிகமாக கதையை பற்றி சொல்ல வேண்டியது இல்லை என்பது அடியேனின் சிந்தனை (அதுக்குள்ளாக வலைரோஜா நண்பர்கள் விமர்சனம் எழுதி இருப்பார்கள்). சமகால சூழலில் பெண்கள் கடத்தப்படுவதை அலசி ஆராயும் ஒரு படம் இது. படத்தின் ஒன் லைனர் இதுதான்.காதலியை கடத்தல்காரர்கள் இடம் பறிகொடுத்த நாயகன் ஒரு (முன்னாள்) காவலரின் உதவியுடன் மீட்கப்போராடுவதே ஆண்மை தவறேல் படத்தின் நாடி. கதை அரதப்பழசாக தெரிந்தாலும் திரைக்கதை அதனை சுமாராகவே நகர்த்திக்கொண்டு செல்கிறது. தமிழ் சினிமாவில் புதிய காட்சிகள் பலவற்றை இந்த சினிமாவில் காண முடிந்தது.

படத்தில் அடியேன் அவதானித்த விடயம் என்னவெனில் இம்மியளவும் திரைக்கதை என்ற நேர்க்கோட்டில் இருந்து வியாபார விடயங்களுக்காக மாற்றிக்கொள்ளாத தன்மையே. குறிப்பாக படத்தின் இரண்டாவது பகுதியில் ஒரு குத்துப்பாட்டு, ஒரு சோகப்பாட்டு வைக்க பல காட்சிகள் இடம் கொடுத்ததும் அவற்றை இடம்பெறாமல் செய்தது படத்தின் நேர்மையை உணர்த்தும். படத்தின் முதல் பகுதியும் சற்று வேகமாக நகர்ந்து இருந்தால் படம் இன்னும் சிறப்பாக பேசப்பட்டு இருக்கும்.

நடிப்பு: ஹீரோ த்ருவா என்று ஒரு புதியவர். கட்டுமஸ்தான உடல்வாகுவுடன், நட்பில்லாத குரலுடன் அறிமுகமாகிறார். கொஞ்சம் மெனக்கெட்டால் நடிக்கவும் செய்வார் போல. படம் ஓடும் தியேட்டர்களில் அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-அயனாவாரம் கிளை, அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-பெரம்பூர் கிளை, அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-வடபழனி கிளை என்று பலத்த ஆதரவுடன்தான் களம் இறங்கி இருக்கிறார். அடுத்து வரும் படங்கள் தான் இவரை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர உதவும். ஹீரோயினுக்கு இரண்டாவது படம். பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. அந்த அற்புதமான (பெண் என்பேன், பூ என்பேன்) பாடலில் இயக்குனர் சற்றே சிரமம்பட்டு சிரத்தையாக காட்சியமைத்து இருக்கலாம். கஷ்டப்பட்டு பாஸ் மார்க் வாங்குவார் ஹீரோயின். 

சம்பத் திடீரென்று எப்படி இவ்வளவு மாஸ் நடிகர் ஆனார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அவர் அப்படி கவுரவ வேடங்களில் நடித்த படங்களில் எல்லாம் மொக்கையாகவே இருக்கிறார் (உதாரணம்-பாவானி). இந்த படத்தில் பரவாயில்லை. கொஞ்சம் நல்ல பாத்திரம். ஆனால் அவர் தன்னுடைய பாத்திரங்களை இனிமேலாவது நன்றாக யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையென்றால் அவரையும் வீணடித்து விடுவார்கள். 

திரையில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பசைபோல ஒட்டிக்கொள்பவர் ஜான் விஜய். அவருடைய ஸ்டைலும், வசன உச்சரிப்பும் நேர்த்தி. கன்னட பிரசாத் என்ற இவரது பாத்திரத்தை சரியாக திரையில் கொண்டு வந்துள்ளார்கள். மற்றபடி அந்த 3 வில்லன்கள் அவ்வளவாக சித்தரிக்கப்படாததால் அவர்கள் மேல் பயமோ, கோபமோ ஏற்படவில்லை. இங்கேதான் இயக்குனர் தோற்று விடுகிறார் (பரவாயில்லை, முதல் படத்தில் இது ஓக்கேதான்).

லாஜிக்: படத்தை ரசிக்க விரும்பினால் லாஜிக் என்கிற விஷயத்தை எதிர்ப்பார்க்காதே என்பது எங்கள் தலைவர் யூனாவின் கொள்கை. இருந்தாலும் அடியேன் இந்த படத்தில் இருக்கும் அத்துமீறல்களை விளக்கவில்லை எனில் என்னை கண்ணிருந்தும் குருடனாக்கி விடும் இந்த சமுதாயம்.  ஆகையால் சம்பத் எப்படி உயிரோடு வந்தார் என்கிற மகா மொக்கை கேள்விகளை எல்லாம் கேட்காமல் டெக்னிகலாக ஒரு விஷயம் மட்டும் உங்களின் கனிவான கவனத்துக்கு:

சம்பத் கன்னட பிரசாத் என்கிற தரகரிடம் இருந்து பெண்களை ஏலம் விடும் இணையதளத்தின் முகவரி, நுழைவுக்குறியீடு மற்றும் காப்புச்சொல்லை மிரட்டி வாங்குகிறார். பின்னர் ஹீரோவும், சம்பத்தும் ஒரே சமயத்தில் அதே யூசர் நேம், பாஸ் வார்டை பயன்படுத்துகின்றனர். மின் அஞ்சல் தளங்களில் கூட ஒரே நேரத்தில் இருவர் உபயோகப்படுத்துவதை மிக சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்கையில் இருவரும் ஒரே யூசர் நேமை உபயோகப்படுத்தினால் அதை எப்படி வில்லன்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள்? இல்லை ஜான் விஜய் தான் ஏலம் எடுக்கவில்லையா? அப்படி இருந்தாலும் ஜான் விஜய் யூசர் நேம் மூலம் ஏலம் எடுத்த பெண்ணை அவரிடம் அல்லவா ஒப்படைக்க வேண்டும்? இங்கே மட்டுமின்றி இன்னும் சில இடங்களில் கூட இயக்குனர் சிறிது தடுமாறி இருக்கிறார்.

தியேட்டர் டைம்ஸ்: நண்பர் க'னா பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர் சென்னைக்கு புதியவர். ஆகையால் அவர் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் S.S.R பங்கஜம் தியட்டருக்கு சென்று (11.45 AM) அங்கிருந்த மேலாளரிடம் படம் எத்துனை மணிக்கு? என்று வினவியுள்ளார். அவர்களும் 12.15க்கு என்று பதிலளிக்க, சரி இன்னும் அரை மணி நேரம் இருக்கிறதே என்று அருகில் இருந்த பழமுதிர் நிலையம் சென்று மொத்தம் மூணு ஜூஸ் குடித்து நேரம் கழித்தார். 25 நிமிடங்கள் கழித்து (12.10 AM) தியேட்டருக்கு வந்து பார்த்தால் படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிறதே என்று அதே நபர் சொன்னாராம். என்ன வாழ்க்கைடா இது என்று நொந்துக்கொண்டார் நண்பர் க'னா. இதுதான் கொடுமை என்றால். அந்த தியேட்டரில் குளிரூட்டும் வசதி மருந்துக்கு கூட கிடையாதாம். நொந்து போய் வந்தார் க'னா.

 

பின் குறிப்பு: இந்த படத்தை பற்றிய விமர்சனங்களில் பல நகைச்சுவைகளை காண முடிந்தது. உதாரணமாக வெப் துனியா'வில் இது டேக்கன் (ஆங்கில விருதகிரி) படத்தின் தழுவல் என்று எழுதி இருந்தார்கள். இன்னும் சில தளங்களில் பெயருக்கு / வாய்க்கு வந்த சினிமாக்களை எல்லாம் சுட்டிக்காட்டி இருந்தார்கள். உண்மையில் இந்த படம் Independence Day, Godzilla, The Day After Tomorrow, 10,000 BC போன்ற படங்களை இயக்கிய Roland Emmerich’ன் புரொடக்ஷனில், நம்ம Ashok Amritraj இணை தயாரிப்பில் வந்த Trade என்கிற ஜெர்மனி படத்தின் முழுமையான தழுவலாகும். (நம்ம கேபிளார் படத்தின் தலைப்பை சரியாக சொல்லி இருந்தாலும் அது பிரேசில் படம் என்று சொல்லி இருப்பார்).இந்த படத்தை ஆங்கிலத்தில் நம்ம லயன்ஸ்கேட் நிறுவனத்தினர் வெளியிட்டனர். லயன்ஸ் கேட் இப்படி சிறிய, பி கிரேட் படங்களை வெளியட்டு காசு பார்ப்பதில் கில்லாடிகள். 

நம்முடைய வேண்டப்பட்ட விரோதியாகிய பயங்கரவாதி டாக்டர் செவன் இது போன்ற விடயங்களில் கில்லாடி. அவர்தான் இந்த படத்தின் கதையை நான் சொல்கையிலே அந்த படத்தை பற்றியும், அதன் IMDB ரேட்டிங் பற்றியும், அதனை டவுன்லோட் செய்யும் தளத்தின் முகவரியையும் கூறி உதவினார்.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 3 bullets 3/6. மூன்று தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: ஆண்மை தவறேல் - பார்க்க தவறேல் (நேர்மைக்காக).