மங்களூர் எர்போர்ட்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஷிமோகா என்கிற இந்த சிறிய ஊர். இந்த ஊரின் மைய்யமாக ஜவகர்லால் நேரு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் மோகம் அதிகம் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். கிரிக்கெட் ஆர்வம் அப்படி இருந்தாலும்கூட ஷிமோகா என்கிற ஒரு சிறிய ஊருக்கு ஒரு சாதாரண A அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியை காண பத்தாயிரம் பேர் வருவது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கே இப்போதெல்லாம் இந்த அளவுக்கு கூட்டம் வருவதில்லை. ஆனால் ஷிமோகாவில் நடக்கும் ஒரு சாதாரண போட்டிக்கு இந்த கூட்டம் வந்தது எதனால்? என்று பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் சூப்பர் ஸ்டார்களாக இருந்த வீரேந்திர சேவாக் மற்றும் ஜாகீர் கான் ஆகிய இருவரும் அணியில் திரும்ப வருவதற்கான முயற்சியில் இந்த போட்டியில் விளையாடுவதே ஆகும்.
இப்படி நமக்கு தெரிந்த சூப்பர் ஸ்டார்கள் இருந்ததால் 10,000 பேர் வந்து அந்த மைதானத்தை ஆக்ரமித்துக் கொண்டு காத்திருந்தனர். ஆனால் இரண்டாம் நாள் (இன்று அக்டோபர் 3) முடிவில் அவர்கள் அனைவருக்குமே சற்று வருத்தமே. இரண்டு ஸ்டார்களும் சோபிக்கவில்லை. கிட்ட தட்ட அந்த போட்டியை நேரில் பார்த்துவிட்டு வந்தவர்களின் மனநிலையில் தான் நானும் John Day என்கிற இந்த இந்திப் படத்தை பார்த்து விட்டு வந்தேன்.
படத்தின் பின்னணி: தமிழில் ஒலக நாயகன் நடித்து வந்த "உன்னைப்போல ஒருவன்" படம் நினைவிருக்கிறதா? அந்த படத்தின் மூலமான A Wednesday படக்குழுவினரிடம் அடுத்த படம் என்கிற போஸ்டர் வாக்கியமே என்னை இந்த படத்தின் பால் ஈர்த்தது. அதுவும் சமீப படங்களில் தன்னுடைய Moody, நெகடிவ் நடிப்பால் என்னை கவர்ந்த ரந்தீப் ஹூடா, இந்த படத்தில் என்னுடைய All Time Favourite நசீருத்தின் ஷாவுடன் இனைந்து நடிக்கிறார் என்கிற அழைப்பிதழ் வேறு, கேட்கவா வேண்டும்? உடனே படம் பார்க்கும் ஆவல் மேலிட்டது.
ஆனால் இந்த மாதிரி "From The Producer Of" என்கிற விளம்பர தொனியில் இதுவரை வந்த படங்கள் எதுவுமே சோபிக்கவில்லை என்பதே நான் கண்டறிந்த உண்மை. At Least நான் பார்த்த படங்களில் மட்டுமாவது இந்த விஷயம் தொடர்கிறது. ஆகையால் ஒரு நடிப்பின் இலக்கணமும், மற்றுமொரு ப்ராமிசிங் நடிகர் கொண்ட இந்த கூட்டணி மீது நம்பிக்கை இருந்தாலும் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒரு வண்டு ரீங்காரமிட்டுக்கொண்டு இருந்தது.
படத்தின் கதை: இதுவரையில் நாம் படித்த இரண்டாயிரத்து சொச்சம் ராஜேஷ் குமார் நாவல்களின் திரை வடிவமே இந்த JohnDay திரைப்படம். திரைப்படமும் கிட்டத்தட்ட அதே பாணியிலும் அமைந்து இருப்பது ஒரு தனி விஷயம்.
ஆரம்பம்: இளம்பெண் தன்னுடைய ஆண் நண்பனுடன் வனாந்திர பகுதிக்கு விடுமுறையில் வருவது, அங்கு ஏதோ நடக்கப் போகிறது என்பதை காட்சிகளால் உணர்த்தி ஆனால் என்ன நடந்தது என்பதை காட்டாமலேயே அடுத்த கட்டத்திற்கு நகர்கிற திரைக்கதை யுக்தி.
முதல் ட்ராக்: ஜான்டே ஒரு வங்கி மேலாளர். அவரது மனைவி வீட்டில் தனித்து இருக்கும்போது ஒருவன் அவரை பணயக்கைதியாக வைத்து, அவரது வங்கியை கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளை முடிந்தவுடன் ஜான்டே வின் மனைவியை அடித்து கோமாவுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் வேறொரு பெரிய சம்பவத்தை மறைக்கும் ஒரு கண்துடைப்பு என்பதை பின்னர் உணரும் ஜான்டே தனியாக துப்பறிய துவங்குகிறார்.
இரண்டாவது ட்ராக்: ஒரு "மார்க்கமான" போலிஸ், அவருக்கு இருக்கும் ஒரு சிறுவயது வன்ம நினைவுகள்,அதனாலேயே இன்னமும் மூரக்கமாக செயல்படும் அவரது நிலைப்பாடு என்று ஆரம்பிக்கும் இரண்டாவது ட்ராக், திடீரென்று அந்த போலிஸ் அதிகாரி ட்ராக் மாறி பயணிக்க ஆரம்பிக்கும்போது சூடு பிடிக்கிறது. ஒரு மாஃபியா டானுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் அவர் பாதியில் அந்த டானின் பரம எதிரிக்காக வேலை செய்ய துவங்குவதில் படம் சூடு பிடிக்கிறது.
இதற்க்கு மேல் என்ன நடந்தது என்பதை வெள்ளிதிரையிலோ (இன்னும் எங்காவது ஒரு மல்ட்டிபிளெக்ஸில் ஒரே ஒரு இரவுக்காட்சி மட்டும் ஓடிக்கொண்டு இருக்கும் பட்சத்தில்) அல்லது நல்ல டிவிடியிலோ பார்த்து தெரிந்து கொள்ளவும்.
படத்தின் நிறைகள்:
-
50 வயதை தாண்டிய ஒருவரை ஹீரோவாக வைத்து கதையெழுதி அதனை திரைப்படமாக எடுக்கவும் ஒரு தனி தைரியம் உண்டு. நசீருத்தின் ஷா அவர்களுக்காகவே இந்த படம் எழுதப்பட்டு இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு படம் பாருங்கள். அவரது மிகச்சிறந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று.
-
படத்தில் சில காட்சிகள் நம்மை மறந்து விசிலடிக்க வைக்கின்றது.
-
இரண்டு கொடூரமான காட்சிகள் நாற்காலியின் நுனிக்கு மன்னிக்கவும் நாற்காலியில் இருந்து தடுமாறி விழ வைக்கிறது (ஒன்று ஹூடாவுக்கு, ஒன்று ஷாவுக்கு).
-
உண்மையிலேயே முதல் பாதி சிறப்பாக (சில க்ளீஷே காட்சிகள் இருந்தாலும்) அமைந்து இருக்கிறது. இயக்குனருக்கு இது முதல் படம் என்பதால் இரண்டாவது பாதியில் அவர் பாதையில் இருந்து தவறி இருப்பதை காண முடிகிறது.
-
ரந்தீப் ஹூடாவின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக அர்ஜுன் ராம்பால் இப்படித்தான் ஆரம்பித்தார். ஹூடா சிறப்பாக நடிக்க வாழ்த்துக்கள்.
-
ஹூடாவின் கேரக்டர் ஒரு மூடியான டைப் என்பதால் அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை சத்தியமாக கணிக்கவே முடியவில்லை. சாதாரண ஒரு காட்சியில் பொசுக்கென்று சுட்டுக்கொன்று விடுவதும், சீரியசான ஒரு காட்சியில் சாதாரணமாக "எனக்கு இன்றைக்கு மூட் நன்றாக இருக்கிறது, பிழைத்துப்போ" என்று சொல்வதும்,ஹ்ம்ம் மனிதர் அதகளம் செய்து இருக்கிறார். இவருக்கு சரியான ஒரு இயக்குனர் கிடைத்தால் பின்னி பெடலெடுத்து விடுவார். இம்தியாஸ் அலி இயக்கத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் இவரது அடுத்த படத்தை இந்த ஒரு விஷயத்திற்காகவே மிகவும் எதிர்பார்க்கிறேன்.
-
நெடுநாட்களுக்கு பிறகு ஷரத் சக்சேனாவுக்கு ஒரு நல்ல பாத்திரம். அமைதியாக அலட்டல் இல்லாமல் நடித்து இருக்கிறார்.
-
படத்தின் முடிவில் ஷரத் சக்சேனா பேசும் ஒரு வசனம் இருக்கிறதே, அடடா, கண்டிப்பாக இந்த இயக்குனரின் அடுத்த படத்தை இந்த மாதிரி வசனங்களுக்காகவே பார்க்க தூண்டிவிடுகிறார் (தயவு செய்து ஹிந்தி தெரிந்தால் மட்டுமே இந்த படத்தை பார்க்கவும்).
-
ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மகராந்த் தேஷ்பாண்டே (கிருஷ்ணா), மற்றும் ஆனந்த் மகாதேவன் (பத்திரிகை அதிபர்) இருவருமே அட்டகாசமான நடிப்பால் சபாஷ்! போட வைக்கிறார்கள்.
படத்தின் குறைகள்:
-
இப்போதெல்லாம் மூன்றில் இரண்டு படங்களில் ஹூடாவின் பாத்திரம் இந்த மாதிரியானதாகவே அமைந்து இருக்கிறது. டைப் காஸ்ட் ஆகிவிட்டார். ஆகவே கிட்டத்தட்ட இதனை எதிர்பார்த்தே நாம் செல்கிறோம்.
-
படத்தின் பின்பகுதியில் ஒன்றுமே இல்லாதது போல இருப்பது, ஷா வில்லன் ஆட்களிடம் இருந்து தப்பிப்பது போன்ற காட்சிகள் படத்தின் மிகப்பெரிய குறை.
-
மிகச்சிறந்த த்ரில்லர் படங்களுக்கு உதாரணம் சொல்லும் அளவிற்கு ஆரம்பித்த இந்த படம் பின்னர் ஒரு த்ரில்லர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக மாறி விடுவது கொடுமை.
-
இளையராஜாவின் தேவையை இதுபோன்ற படங்களில் கிடைக்கும் பின்னணி இசையைக்கொண்டே மதிப்பிட முடிகிறது.
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:
3/6 மூன்று தோட்டாக்கள்! ஷாவுக்கு 1, ஹூடாவுக்கு 1 & இயக்குனருக்கு 1.
தமிழ் சினிமா உலகின் பன்ச்: JohnDay – Watch it on a Holiday.
ட்ரைலர்:
பின் குறிப்பு: இந்த பதிவின் ஆரம்பத்தில் சம்பந்தமே இல்லாமல் மூன்று பத்திகள் எதற்கு எழுதப்பட்டு இருக்கிறது? என்று கேட்கும் பாவப்பட்ட ஜென்மங்களுக்கு இந்த பதில்: ஒரு ஆளுமை தன்னுடைய பார்வையிலேயே காட்சிகளையும் சம்பவங்களையும் அவதானிக்கிறான். அதனாலேயே அவனுடைய தனித்தன்மை சம்பந்தப்பட்ட விஷயத்துடன் கலந்து வெளியாகிறது.
#சாவுங்கடா