Wednesday, June 22, 2011

தி ரெசிடென்ட்-ஆங்கில திரைப்பட விமர்சனம் (The Resident 2011)

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.

தி ரெசிடென்ட் என்கிற பெயரை கேட்டவுடன் என்னுடைய நண்பர் கூறிய கமென்ட் இதுதான் - "படத்தின் பெயரில் ஈவில் சேர்த்து ரெசிடென்ட் ஈவில் என்று வெளியிட்டால் தமிழ் நாட்டில் படம் செமையாக ஹிட் ஆகும்". அது என்னமோ உண்மைதான். சமீபத்தில் வந்த ரெசிடென்ட் ஈவில் படத்தின் மொக்கை பாகம் கூட தமிழில் வசூலை அள்ளிக்குவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் படத்தின் தலைப்பில் ரெசிடென்ட் வருவதும், படத்தின் முக்கிய பாத்திரம் ஒரு பெண் என்பதைத்தவிர வேறெந்த ஒற்றுமையும் இந்த படங்களில் இல்லை.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை இரண்டு முறை வென்ற ஹிலரி ஸ்வான்க் நடித்துள்ளதே இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்டியது. இது போன்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுவது இல்லை. அப்படியே செய்தாலும்கூட அதனை ஒரு மூன்றாம்தர ரசனையுடனே வெளியிடுவார்கள் (சமீபத்திய உதாரணம் கேட் வின்ஸ்லேட்டின் தி ரீடர் படம் தமிழில் ஒரு கில்மா படம் போல விளம்பரப் படுத்தப்பட்டு வந்தது). இப்படி விளம்பரபடுத்தப்பட்டால், மக்கள் அதே எதிர்ப்பார்ப்புடன்தானே வருவார்கள்? அப்போது அவர்களுக்கு கிட்டுவது ஏமாற்றமே அன்றி வேறொன்றுமில்லை (கிட்டத்தட்ட இதைப்போன்ற மனநிலையில் தான் பல பதிவர்களும் செயல்படுகிறார்கள் என்று அண்ணன் கா'னா கூறுகிறார்). நல்லவேளையாக இந்த படத்தை அப்படி வெளியிடவில்லை.

படத்தின் கதை: தன்னை ஏமாற்றிய காதலனை விட்டு பிரிந்து தனியாக வாழ வீடு தேடுகிறார் டாக்டர் ஜூலியட் (ஹிலரி ஸ்வான்க்). அப்போது மிகவும் குறைந்த வாடகையில் ஒரு இருப்பிடம் கிடைக்கிறது. சில பல குறைகள் இருந்தாலும் வீடு பிடித்திருப்பதாலும், வீட்டு உரிமையாளர் ஒரு தாடி வைத்த ஜார்ஜ் க்ளூனி போல இருப்பதாலும் (மேக்ஸ் ஆக ஜெப்ரி டீன் மார்கன்) அந்த வீட்டை வாடகைக்கு எடுக்கிறார் ஜூலியட். நாளடைவில் மேக்ஸ் உடன் நட்பு பலப்படுகிறது. மேக்ஸின் பழகும் தனமையால் கவரப்பட்டு ஒரு முறை தன்னையே இழக்கிறார் ஜூலியட். பிறகு இருவரின் நட்பும் தொடர்கிறது. ஆனால் நாளடைவில் மேக்ஸின் உண்மை சொரூபம் வெளிப்படுகிறது. மேக்ஸ் கிட்டத்தட்ட ஒரு சைக்கோ போலவே செயல்படுகிறார். ஜூலியட் மேல் ஒரு அபரீதமான வெறி கொண்டு இருக்கிறார். ஜூலியட்டின் பழைய காதலன் மனம் திருந்தி வந்தவுடன் அவனை ஜூலியட் ஏற்றுக்கொண்டதை கண்டு மனம் நொந்து அவனை கொன்றும் விடுகிறார்.

ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு மேக்ஸின் மேல் சந்தேகம் கொள்ளும் ஜூலியட் அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயல்கிறார். இருவருக்கும் இடையே நடக்கும் திருடன் - போலிஸ் ஆட்டமே படத்தின் மீதம். ஜூலியட்டால் மேக்சிடம் இருந்து தப்பிக்க முடிந்ததா? ஜூலியட் தப்பித்து எப்படி? மேக்சிர்க்கு என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் காண்க (அல்லது எண்மிய பல்திற வட்டில் கண்டு ரசிக்கவும்).

படத்தின் + கள்: படம் ஓரளவுக்கு விருவிறுப்புடனே செல்கிறது. படத்தின் இரண்டு பிரதான பாத்திரங்களும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். ஹிலரி ஸ்வான்க் நடித்துள்ள பல படங்களை நான் கண்டுள்ளேன் என்பதால் அவரது அலட்டல் இல்லாத நடிப்பு புதிதல்ல. ஆனால் ஜெப்ரி டீன் மார்கன் நடித்த படங்கள் எதனையும் நான் இதுவரையில் கண்டதில்லை. முதல் முறை பார்க்கும்போதே கவரும் ஒரு ஆளுமை இவரிடம் இருக்கிறது. அதுவே பின்னர் சைக்கோ நடிப்பாக மாறும்போது சிலிர்க்க வைக்கிறார். அதுவும் ஜூலியட் வீட்டில் இல்லாதபோது அவரின் டூத் பிரஷ்ஷை கொண்டு பல் விளக்கி ஒரு எக்ஸ்பிரெஷன் கொடுப்பார் பாருங்கள், பிரகாஷ்ராஜ் தோற்றுவிடுவார் இவரிடம். அதுவும் சாவித்துவாரம் வழியாகவும், மறைந்து இருந்தும் ஜூலியட்டை ரசிப்பது, அவரை மயக்க மருந்து கொடுத்து தனது இச்சைகளை தீர்த்துக்கொள்வது, அவர் கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டு ...... விடுங்கள், இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் எப்படி? படத்தில் பாருங்கள்.

படத்தின் - கள்: ஹாலிவுட்டில் இதுவரை எட்டு லட்சத்தி முப்பதாயிரத்தி ஐநுற்றி இருபத்தி ஆறு முறை இதே கதையை திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் கதையை ஊகிக்க முடிகிறது. சில கட்டங்கள் சைக்கோ படங்களின் க்ளீஷே ஆகவும் இருக்கிறது. இருவரின் நடிப்பையும் எடுத்துவிட்டு பார்த்தால் படத்தில் எதுவுமே இல்லை என்பதே உண்மை. இந்த மாதிரியான சைக்கோ த்ரில்லர் படங்கள் ஹாலிவுட்டில் வருடத்திற்கு நூறு வரும். அவற்றில் ஒன்றில் இருந்து மற்றவற்றை வேறுபடுத்துவது இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான நடிகர்களின் நடிப்பே. ஆகையால் இந்த இருவரை மட்டுமே மனதில் கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

இந்த படத்தை பற்றி கூகிளாண்டவரிடம் விசாரித்ததில் இது முதலில் நேரிடையாக ஹோம் டிவிடியாக வெளியிடப்பட்டது தெரியவருகிறது. ஓரளவுக்கு சுமாரான வரவேற்ப்பை பெற்ற பின்னரே தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த படம் டிவிடியில் வந்து விட்டது.

தியேட்டரில் பல காட்சிகளை தணிக்கை செய்துள்ளார்கள். குறிப்பாக படத்தின் பத்தாவது நிமிடத்தில் ஜூலியட் குளிக்கும் காட்சி தணிக்கை செய்யப்பட்டது. இதனை கண்டித்து அண்ணன் கா'னா வரும் வெள்ளியன்று காலை எட்டு மணி  முதல் மதியம் இரண்டு மணி வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். இப்படியாக பல காட்சிகள் தணிக்கை துறையால் துண்டிக்கப்பட்டாலும் படம் த்ரில்லராகவே நகர்கிறது.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:2 bullets  2/6. இரண்டு தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: தி ரெசிடென்ட் - வாடகைக்கே. நிரந்தரமாக அல்ல.

3 comments:

Lucky Limat - லக்கி லிமட் said...

வந்தோம்ல பஸ்ட்

Cibiசிபி said...

// குறிப்பாக படத்தின் பத்தாவது நிமிடத்தில் ஜூலியட் குளிக்கும் காட்சி தணிக்கை செய்யப்பட்டது. இதனை கண்டித்து அண்ணன் கா'னா வரும் வெள்ளியன்று காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார் //

இதற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம் அண்ணன் கா'னா அவர்களே ;-)
.

Anonymous said...

வருடம் 100 படங்கள் ஹாலிவுட்டில் இது மாதிரி வருகிறதா ஆச்சர்யமக இருக்கிறது..தமிழ் படம் எடுக்க பெரும்பாலும் இதை சுட்டாலே போதுமே

Post a Comment