Friday, December 23, 2011

MISSION: IMPOSSIBLE - ரகசிய வரைமுறை - 16.12.2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,


ஜேம்ஸ்பாண்ட் பாணி உளவாளி கதைகள் பெருவெற்றி பெற்றிருந்த காலம் 1960கள்! அப்போது தொலைக்காட்சித் தொடராக ஆரம்பித்த மிஷன் இம்பாசிபிள் மாபெரும் வெற்றியடைந்தது! அதன் வெற்றிக்கு லாலோ ஷிஃப்ரின் இசையமைத்த தீம் மியூசிக் மிகப்பெரிய காரணம்! பின்னர் 1996ல் டாம் க்ரூஸ் நடிப்பில் திரைப்படமாக வந்தது! அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட தொடர்ந்து படங்கள் வந்த வண்ணமிருந்தன!


மிஷன் இம்பாசிபிள் பட வரிசையின் மிகப் பெரிய ரசிகன் நான் இல்லை! இருப்பினும் அவாரிசைப் படங்கள் எப்போதுமே ஜனரஞ்சக வெற்றியில் சோடை போனதில்லை! ஆகையாலேயே இந்த நான்காம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது!


கதை:


வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் பாணி கதைதான்! ரஷ்ய அணு ஆயுதங்களை முடக்கி விடக்கூடிய ரகசிய கோட்-ஐ ஒரு தீவிரவாதி கைப்பற்றி விடுகிறான்! பழியோ அமெரிக்க உளவாளிகளான ஈதன் ஹண்ட் (டாம் க்ரூஸ்) குழுவின் மீது விழுகிறது! ஆகையால் அவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறையிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்காத நிலை உருவாகிறது!

பிறகு ஈதன் ஹண்ட் குழுவினர் ரஷ்யா, துபாய், இந்தியா என்று ஊர் சுற்றி சாகஸம் செய்து உலகை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தான் கதை!


சுவாரசியமான துணுக்குகள்:
  • வழக்கமாக மிக சீரியஸாக செல்லும் ஆக்‌ஷன் பட வரிசையான மிஷன் இம்பாசிபிள் தொடரில் இப்படம் ஒரு வரவேற்கத் தக்க மாற்றம்! படம் முழுக்க விரவிக் கிடக்கும் சுய நையாண்டி படத்தின் மிகப் பெரிய பலம்! மிஷன் இம்பாசிபிள் படங்கள் என்றாலே ஒரு சில குறிப்பிட்ட காட்சிகள் ஃபார்மூலா போல் எல்லா படங்களிலும் வரும்! அவை அனைத்தையுமே இப்படத்தில் நக்கல் செய்து விதிமுறைகளை மீறியுள்ளனர்! ஜேம்ஸ்பாண்ட் பட வரிசை ஏன் போரடிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! புதிதாக எதுவுமே முயற்சிப்பதில்லை!
  • மிஷனை விளக்கும் ஆரம்பக் காட்சியில் ரகசிய தகவல் வழங்கிய பின் அந்த டேப் வெடித்துச் சிதறுவது வழக்கம்! இப்படத்தில் அதுவும் கிண்டலுக்குள்ளாக்கப் பட்டுள்ளது! 
  • மிஷன் இம்பாசிபிள்  படங்களில் வழக்கமாக ஹீரோதான் மாஸ்க் அணிந்து சென்று வில்லன்களின் பாசறையில் நுழைந்து சாகஸம் செய்வார்! இதில் கடைசி வரை ஹீரோ மாஸ்க் அணிய முடியாமல் போகிறது! ஆனால் வில்லன் மாஸ்க் போட்டு ஹீரோவை ஏமாற்றி விடுகிறார்!
  • டாம் க்ரூஸிற்கு வயது ஏறவே ஏறாதோ?!! இன்னும் இளமை பொங்க வலம் வருகிறார்! ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் டூப் போடாமலே நடித்து அசத்தியுள்ளார்!
  • அந்த துபாய் ஸ்டண்ட் காட்சிகள் மயிர் கூச்செரிய வைக்கும் ரகம்! படத்தின் ஹை-லைட்டே அதுதான்! அற்புதம்! அற்புதம்!
  • ஆனால் அதற்கு பிறகு வரும் மணல் புயல் சண்டையும், இந்தியக் காட்சிகளும் சற்றே போர் அடிக்கின்றன!
  • அணில் கபூர் ஒரேயொரு காட்சியில் மட்டும் காமெடி பீஸாக வருகிறார்! இதற்கு இவருக்கு டாம் க்ரூஸுக்கு இணையாக பில்டப் போஸ்டர் வேறு! அவர் வரும் காட்சி மொக்கையோ மொக்கை!
  • மும்பை என்று சொல்லி விட்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் முழுவதையும் பெங்களூருவில் எடுத்துள்ளனர்! பெங்களூரு சன் டிவி ஆபீசும் முக்கிய காட்சியில் வருகிறது! இதனாலேயே இரண்டாம் பாதி காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
நிறைகள்:
  • டாம் க்ரூஸ்!
  • மயிர்கூச்செரிய வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்!
  • படம் நெடுக விரவிக் கிடக்கும் நையாண்டி தொணி!
குறைகள்:
  • அணில் கபூர்!
  • மணல் புயல் காட்சி!
  • இந்தியாவில் படமாக்கப் பட்ட காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

4/6 - நான்கு தோட்டாக்கள்!
ஒரு கட்டை விரல் மேலே!

ஆக்‌ஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!

ட்ரைலர்:

Thursday, December 22, 2011

PUSS IN BOOTS (3D) - 02.12.2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

ஷ்ரெக் அனிமேஷன் பட வரிசையின் மிகப் பெரிய ரசிகன் நான்! அதில் சைடு ஹீரோவாக வரும் பூடிஸ் கால் பூனையின் (PUSS IN BOOTS) சாகஸங்கள் தனி திரைப்படமாக வரப்போகிறது என்ற அறிவித்த முதலே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது! ஒரு வழியாக மிகத் தாமதமாக பார்த்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே பதிவிடத் தூண்டியது! நீண்ட நெடுநாட்கள் கழித்து இவ்வலைப்பூவை உயிரூட்ட இதுவே காரணம்!

கதை:

பூடிஸ் கால் பூனை,  ஜாக்கும் மந்திர அவரைக்கொடியும்,  ஹம்டி டம்டி, ஜாக்கும் ஜில்லும், தங்க முட்டையிடும் வாத்து, கதை சொல்லும் அம்மா வாத்து முதலிய தேவதைக் கதைகளையும், பாலகர் பாடல்களையும் காமெடியுடன் கலந்து கட்டி அடித்து விட்டால் அதுதான் கதை!

சுவாரசியமான துணுக்குகள்:
  • அண்டோனியோ பண்டெராஸ், சல்மா ஹயெக், பில்லி பாப் தார்ண்டன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்திற்கு குரல் கொடுத்துள்ளனர்!
  • முதலில் இப்படம் DIRECT-TO-VIDEOவாகத்தான் வெளிவரவிருந்தது! ஆனால் ஷ்ரெக் தொடரின் வெற்றியினால் இது முழு நீள 3D திரைப்படமாக வெளிவந்து நமக்கெல்லாம் விருந்தளித்துள்ளது! 
  • குங்ஃபூ பாண்டா 2 பெரு வெற்றியைத் தொடர்ந்து ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு SURE-FIRE WINNER இப்படம்! டிஸ்னியெல்லாம் இனி ரொம்பவே கஷ்டப் பட வேண்டியிருக்கும்! இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன்!
  • NO COMMENTS!

தியேட்டர் டைம்ஸ்:
  • கோவையில் ப்ரூக்ஃபீல்ட் ப்ளாசாவில் புதிதாக துவங்கப் பட்டுள்ள thecinema திரையரங்கில் இப்படத்தை 3Dல் கண்டு களித்தேன்!
  • தினசரி மாலை 4:30 மணிக்கு ஒரேயொரு காட்சி மட்டுமே இப்படம் திரையிடப்பட்டிருப்பதால் அரங்கம் நிறைந்திருந்தது!
  • 3D அதியற்புதமாக இருந்தது! இதுவரை கோவை கனகதாரா தியேட்டரில் இத்துனூண்டு ஸ்கீரினில் மொக்கை 3Dல் படம் பார்த்துவிட்டே ‘ஆஹா! ஓஹோ!’ வென புகழ்ந்து கொண்டிருந்த எனக்கு இந்த அனுபவம் ஒரு EYE-OPENER! 
  • சத்யம் நிறுவத்தின் ஒரு அங்கம்தான் thecinema! மொத்தம் ஆறு திரையரங்குகள்! சத்யம் நிறுவனத்தினரின் தரம் காய்ந்து போய் கிடக்கும் கோவை வாசிகளுக்கு வரப்பிரசாதம்!
  • சென்னையில் 3D திரையரங்குகளில் வழக்கமாக முதல் மற்றும் கடைசி மூன்று வரிசைகள் காலியாகவே விடப்பட்டிருக்கும்! பார்வாயாளர்களின் வசதிக்காக இப்படியொரு ஏற்பாடு! ஆனால் கோவையில் முதல் வரிசையிலும் மக்கள் அமரவைக்கப் பட்டிருப்பது ஆச்சரியமளித்தது!
  • பக்கத்து சீட்டில் ரெண்டு பொடியன்கள் அமர்ந்து செம கூத்து அடித்துக் கொண்டிருந்தனர்! கொறிப்பதற்கு வேறு ஏகப்பட்ட அயிட்டங்களை திரையரங்கினுள்ளேயே ஆர்டர் செய்து படம் முடியும் வரை தின்றே தீர்த்தனர்! இதில் ஒருவன் கண்ணாடியை வேறு தொலைத்து விட்டு இடைவேளை வரை இருட்டில் தேடிக் கொண்டேயிருந்தான்! படத்தை பார்த்து ரசிப்பதா, இவர்களை கண்டு சிரிப்பதா என்றே தெரியவில்லை?!!
நிறைகள்:
  • எல்லாமே
குறைகள்:
  • ஒன்றுமேயில்லை!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:


6/6 - ஆறு தோட்டாக்கள்!

இரண்டு கட்டை விரல்கள் மேலே!

அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்! அதுவும் நிச்சயம் 3Dல்!

பயங்கரவாதியின் பன்ச்: PUSS IN BOOTS - இந்தப் பூனை பீரையும் குடிக்கும்!

ட்ரைலர்:

Friday, July 8, 2011

சல்மான் கானின் ச்சில்லர் பார்ட்டி (Chillar Party) 08th July 2011

சல்மான் கானின் ச்சில்லர் பார்ட்டி என்றவுடன் ஏதோ சல்மான் கான் நடித்த புதிய படமோ அல்லது புதிய பார்ட்டியோ என்று எண்ணிவிடவேண்டாம். இது யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் உடன் இணைந்து சல்மான் கான் தயாரித்து வந்துள்ள குழந்தைகளுக்கான படம். இந்த படத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தேன். சல்மான் கான் மற்றும் யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு, ட்ரைலரில் சல்மான் கான் தோன்றி ஆச்சர்யப்படுத்தியது, முதல் முறையாக ரன்பீர் கபூர் ஒரு ஐட்டம் பாட்டிற்கு குத்தாட்டம் போட்டது, ராஜு என்கிற செல்ல நாய்க்குட்டி பிடு என்கிற பெயரில் நடித்துள்ளது, ஒரு நாய்க்குட்டிக்கும் அரசியல் தலைவருக்கும் நடக்கும் போராட்டம் என்று விளம்பரப்படுத்தியது, ரொம்ப நாள் கழித்து நட்சத்திரங்கள் இல்லாத ஒரு முழு நீள குழந்தைகளுக்கான படம் என்று பல விஷயங்கள் இந்த படத்தை எதிர்ப்பார்க்க வைத்தது.
குழந்தைகளுக்கான படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். ஏனென்றால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், குழந்தைகளுக்கான படம் எடுக்கிறேன் பேர்வழி என்று முழுக்க முழுக்க வயது முதிர்ந்தவர்களுக்கான படங்களை சிறுவர்களை நடிக்க வைத்து மொக்கை போடுவார்கள். அதிலும் அந்த படத்தில் வரும் சிறுவர்கள் தங்களது வயதுக்கு முதிர்ந்த வசனங்களை பேசி, வயதை மீறிய விஷயங்களை செய்வார்கள். அதையும் நாம் பார்த்து தொலைக்க வேண்டி இருக்கும். இருட்டிலேயே படம் எடுக்கும் மணிரத்னம் முதல் லேட்டஸ்ட் ஆக படம் எடுத்த பாண்டிராஜ் வரை அனைவருமே இதற்க்கு விதி விலக்கல்ல. சிறுவர்களுக்கான படம் என்றால் என்ன என்பதை இந்த படம் தெளிவாக உணர்த்துகிறது. சமீபத்தில் ஹிந்தியில் கூட கச்சா லம்பூ, ஸ்டான்லி க டப்பா என்று சிறுவர்களை மைய்யப்படுத்தி படங்கள் வந்தாலும் அவை சீரியஸ் ஆன கருத்துக்களை கொண்ட படங்களே தவிர சிறுவர்களுக்கான படங்கள் அல்ல.
ச்சில்லர் பார்ட்டி படத்தின் கதை: ஒரு காம்பவுண்டில் குடி இருக்கும் சிறுவர்களின் கிரிக்கெட் டீமிற்கு அந்த காலனி வாசிகள் வைத்த பெயரே ச்சில்லர் பார்ட்டி (சில்லரைப் பசங்க). திடீரென்று அந்த காம்பவுண்டில் வேலைக்கு வரும் ஒரு சிறுவனும் அவனுடைய ஒரே துணைவனான பீடு என்கிற செல்ல நாய்க்குட்டியும் இந்த சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். மோதலில் ஆரம்பித்து நட்பில் முடிகின்ற வேளையில் திடீரென்று ஒரு பிரச்சினை முளைக்க, அதனை சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதை மிகவும் அற்புதமான திரைமொழியில் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள் விகாஷ் பல் மற்றும் நிதேஷ் திவாரி. 6 முதல் 66 வயதுள்ள, ஏன் அதற்க்கும் மேலுள்ள அணைத்து வயது சிறுவர்களும் ரசிக்கும்படி, போரடிக்காமல் நகருகிறது இந்த படம். தெளிவான திரைக்கதையும், அற்புதமான நடிப்பும் இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள். போத்திஸ் விளம்பரத்தில் வரும் சிறுமி ஸ்ரேயா இந்த படத்திலும் ஒரு விளம்பர மாடலாக வருகிறார் (யாருப்பா அது, இந்திரன் Part 3 படத்துக்கு ரஜினிக்கு ஹீரோயின் ரெடி).
திரைக்கதை: தெளிவான நீரோட்டம் போல அழகான, நேர்க்கோட்டில் பிரயாணம் செய்யும் திரைக்கதை. முதல் காட்சியில் ஒவ்வொரு சிறுவனாக அறிமுகம் ஆவதில் இருந்து படத்தின் கடைசி காட்சி வரை எங்கேயுமே சலிப்படைய வைக்காத, நேர்த்தியான இயக்கம் இந்த படத்தை மறுபடியும், மறுபடியும் பார்க்க வைக்கும். இந்த படத்தை சிறுவர்களுக்கான படம் என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. படத்தில் பிடு என்கிற ஒரு நாய்க்குட்டி மிக முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. செல்லப்பிராணிகள் பிரியர்களுக்கு, குறிப்பாக நாய்க்குட்டிகளை வளர்ப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் (அப்போ சாரு நிவேதிதா இதுக்கும் விமர்சனம் எழுதுவாரா?). மற்றவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
படத்தின் +கள்:
  • நட்சத்திரங்கள் யாருமே இல்லாத ஒரு அணிவகுப்பு
  • சிறப்பான நடிகர் தேர்வு
  • யாரையுமே நோகடிக்காத திரைக்கதை
  • ரசிக்க வைக்கும் காட்சிகள்
  • நம்ப வைக்கும் சிறுவர் பாத்திரங்கள்
  • அருமையான பின்னணி இசை
  • டெக்னிகலாக அனைத்துமே சிறப்பாக இருப்பது
படத்தின் - கள்:
  • ரன்பீர் கபூரின் அந்த ஐட்டம் பாடல், படம் முடிந்து பெயர்கள் போடப்பட்ட பிறகு வருவது வேஸ்ட்.
  • வேறு குறைகளே கண்ணிற்கு தெரியாமல் படம் எடுத்தது.
தியேட்டர் டைம்ஸ்: அண்ணன் க'னா இந்த படத்தை சென்னை வுட்லண்ட்ஸ் தியட்டரில் இன்று காலை பார்த்தார். மொத்தம் மூன்று பேர் மட்டுமே பால்கனியில் இருந்ததாக கூறி கலைப்பட்டார். ஆனால் படம் பார்த்த அந்த மூவருமே படம் முடிந்து கடைசி வரை எழுந்து செல்ல மனமில்லாமல் சென்றதாக கூறினார். மும்பையில் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மல்டிப்ளெக்ஸ் படம்தான், இருந்தாலும் கண்டிப்பாகஒரு முறை பார்க்க வேண்டிய படம்.
ச்சில்லர் பார்ட்டி பட ட்ரைலர்: இந்தியாவின் மாஸ் ஹீரோ சல்மான் கான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரே இந்த படத்தின் ட்ரைலரை வழங்கி உள்ளார். மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப்பட்ட இந்த காணொளி, சமீபத்தில் நான் பார்த்த சிறந்த ட்ரைலர்களில் ஒன்றாகும்.
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6 (ஐந்து தோட்டாக்கள்). imageஒரு கட்டை விரல் மேலே.
சாவியின் பன்ச்: ச்சில்லர்ஸ் பார்ட்டி - சில்லறை அல்ல, முழு ஆயிரம் ருபாய் நோட்டு.

Tuesday, July 5, 2011

CARS 2 (3D): 24.06.2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

டிஸ்னி பிக்ஸார் தயாரிப்பில் இதுவரை வெளிவந்துள்ள அனிமேஷன் படங்களிலேயே மிக மொக்கையானது எனப் பெயர் பெற்ற படம் கார்ஸ்! அப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது என்றதும் ‘இதைப் போய் யாராவது இரண்டாம் பாகம் வேறு எடுப்பார்களா?!!’ என்ற கேள்வி எழுந்தது! அந்த பயம் நியாயமானதே என்று நிரூபிக்கிறது கார்ஸ் 2 (3D)!

முதல் பாகம் பற்றி அறியாதோருக்கு ஒரு சிறு அறிமுகம்! முழுக்க முழுக்க பேசும் கார்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமே கார்ஸ்! லைட்னிங் மெக்குவீன் என்ற தலைக்கனம் பிடித்த சாம்பியன் ரேஸ் கார் தான் ஹீரோ! அது எப்படி தன்னிலை உணர்ந்து வாழ்விலும் ரேஸிலும் வெற்றி பெறுகிறது என்பதே கதை! ஓவன் வில்சன், பால் நியூமன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் தங்கள் குரல் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும் படத்தின் நீளம் ஒரு பெரிய குறையாகவே இருந்தது! கார்ஸ் 2ம் அப்படித்தான்!

பரவலான கருத்து என்னவென்றால் முதல் பாகத்தை விட இது படு மொக்கை என்பதே! நான் இதில் வேறுபடுகிறேன்! ஏனெனில் இதில் வரும் ஜேம்ஸ்பாண்ட் கார் கதாபாத்திரமே! அது மட்டும் இல்லையெனில் மேடரின் மொக்கைகள் தாங்க முடியாமல் தியேட்டரை விட்டு ஓடியிருப்பேன்!

கதை:

முதல் பாகத்தில் அல்லக்கையாக வரும் மேடர் தான் இதில் ஹீரோ! இந்த ஓட்டை லாரியை அமெரிக்க உளவாளி என்று இருதரப்பு உளவாளிகளும் எண்ணிவிட என்ன நடக்கிறதென்பதே கதை! நடுவில் வழக்கமான டிஸ்னியின் நட்பு, உறவுகள், காதல் பற்றிய செண்டிமெண்ட் காட்சிகள்!

சுவாரசியமான துணுக்குகள்:

  • லைட்னிங் மெக்குவீன் என்பது பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்டீவ் மெக்குவீன் நினைவாக வைக்கப்பட்ட பெயராகும்! ஸ்டீவ் மெக்குவீன் நமது தல அஜீத்தைப் போலவே தீவிர ரேஸ் பிரியர்! இவர் பல படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தார்! கார் சேஸிங் காட்சிகளில் டூப் போடாமல் தானே காரை ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்!
  • லைட்னிங் மெக்குவீனுக்கு குரல் கொடுத்திருப்பது ஓவன் வில்சன்!
  • பால் நியூமன் இறந்து விட்டதால் அவரது கதாபாத்திரம் இப்படத்தில் இல்லை!
  • ஜேம்ஸ் பாண்ட் கார் வழக்கமாக ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் ஓட்டி வந்து சாகஸம் புரியும் ஆஸ்டன் மார்ட்டின் கார்களை ஒத்திருக்கிறது! இதற்கு குரலளித்திருப்பவர் மைக்கேல் கெய்ன்!
  • இவர்கள் தவிர ஃப்ராங்கோ நீரோ, வனெஸ்ஸா ரெட்க்ரேவ், சீச் மரின் போன்ற பல பிரபலங்கள் சிறு சிறு வேடங்களை ஏற்றுள்ளனர்!
  • ரேஸில் பங்கேற்கும் கார்கள் சிலவற்றுக்கு நிஜ ரேஸ் கார் ட்ரைவர்களே குரல் கொடுத்துள்ளனர்! அவர்கள் நிஜத்தில் ஓட்டும் கார் போலவே படத்திலும் கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்!
  • கார்ஸ் திரைப்படங்களின் இயக்குனர் ஜான் லாஸிட்டர் ஒரு கார் வெறியர்! இவர் தன் படங்களுக்கு உந்துதலாக அமைந்தது டிஸ்னியின் இந்த கார்ட்டூன் தான் என்று குறிப்பிடுகிறார்! இந்தக் கார்ட்டூன் கார்ஸ் படங்களை விட பல மடங்கு உயர்ந்தது என்று பார்த்தாலே புரியும்!


தியேட்டர் டைம்ஸ்:

  • இப்படம் கோவையில் ரிலீஸாகவில்லை! சென்னையில் ஐநாக்ஸில் 3Dல் கண்டு களித்தேன்!
  • இப்படம் 3Dல் உருவாக்கப்படிருந்தாலும் கூட குங் ஃபூ பாண்டா, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் அளவுக்கு 3D சிறப்பாக இல்லை!

நிறைகள்:

  • ஜேம்ஸ்பாண்ட் காரின் சாகஸங்கள்!
  • போப், இங்கிலாந்து ராணி, இளவரசர் வில்லியம் போன்ற பல பிரபலங்களை கார் வடிவில் சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது! டிஸ்னி பிக்ஸார் கலைஞர்களின் கற்பனைத்திறனுக்கு இது ஒரு சோறு பதம்!
  • ஒவ்வொரு ஊருக்கும் கதை பயணிக்கும் போதும் காட்டப்படும் அந்தந்த ஊரின் கண்கவர் காட்சிகள்! 3Dல் இன்னும் சிறப்பு!

குறைகள்:

  • நீளம்!
  • அனிமேஷன் படத்தில், அதுவும் ரேஸ் கார்கள் பற்றிய படத்தில் பேசியே கழுத்தறுக்கிறார்கள்! வளவளா வசனங்கள்!
  • டிஸ்னியின் வழக்கமான குழந்தைகள் பட ஃபார்மூலா! சலிப்பு தட்டி விட்டது!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3/6 - மூன்று தோட்டாக்கள்!

அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்! முடிந்தால் 3Dல்!

பயங்கரவாதியின் பன்ச்: CARS 2 - கட்டை வண்டி!

ட்ரைலர்:

Monday, July 4, 2011

TRANSFORMERS: DARK OF THE MOON (3D) - 29.06.2011 - திரைவிமர்சனம்!


வணக்கம்,

விம்பிள்டன் காலிறுதியில் ரோஜர் ஃபெடரர் தோற்றதிலிருந்து கடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த எனது வேண்டப்பட்ட விரோதி கடந்த வாரம் முழுதும் பல படங்களைப் பார்த்தும் கூட பதிவுகளேதும் இடாமல் இருந்தார்! ஃபெடரர் ‘டொக்’காயிட்டாருன்னு சொன்னால் அடிக்க வருகிறார்! ஆனால் இறுதியில் நடால் தோற்றதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தவர் இன்று முதல் மீண்டும் பதிவுகள் இடுவதாக கூறுகிறார்! மக்களே... உஷார்!!!

விமர்சனத்திற்கு முன் TRANSFROMERS பற்றிய சிறு குறிப்பு! 1980களில் HASBRO எனும் ஜப்பானிய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த பொம்மைகளே ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்! இந்த பொம்மைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் சாதாரண கார் அல்லது லாரி போலத் தோன்றும் இவற்றை பிரித்தால் ஒரு ரோபோவாக உருமாறும்! நூதனமான இந்த பொம்மைகள் உலகெங்கிலும் சூப்பர் ஹிட்!

இந்த பொம்மைகளின் சாகஸங்களை காமிக்ஸ் புத்தகங்களாகவும், கார்ட்டூன் தொடர்களாகவும் வெளியிட்டு மேலும் காசு பார்த்தார்கள்! க்ராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தின் அசுரப் பரிணாம வளர்ச்சியின் மூலம் இந்த பொம்மைகளின் சாகஸங்களை இப்போது நாம் திரைப்படங்களாகவும் கண்டு மகிழ முடிகிறது!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் மைக்கேல் பே இயக்கத்தில் ஷியா லபீஃப், கவர்ச்சிக் கன்னி மெகான் ஃபாக்ஸ் நடிக்க முதல் படம் வந்தது! படம் உலகெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்! இரண்டாவது பாகமும் வந்தது! அதுவும் சக்கை போடு போட்டது! இப்போது மூன்றாம் பாகம் 3Dல் வந்திருக்கிறது!

ஒரு மாதமாக ட்ரைலர்கள் மூலம் திரையரங்குகளிலும், டிவியிலும் மிரட்டி படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தார்கள்! ஏற்கெனவே முதலிரண்டு பாகங்களைப் பார்த்திருக்கிறேன்! அவற்றின் மீது பெரிதாக ஈடுபாடு ஏற்படவில்லை! எனினும் ட்ரைலர்கள் உண்டாக்கிய பெருத்த எதிர்பார்ப்புடன் திரையரங்கினுள் நுழைந்தேன்!

கதை: வழக்கம் போல கெட்ட ரோபோக்களுடன் சண்டை போடும் நல்ல ரோபோக்களின் கதைதான்! புதிதாக ஏதுமில்லை!

தியேட்டர் டைம்ஸ்:

  • இப்படம் உலகெங்கிலும் 29-06-2011 புதனன்று ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது! இந்தியாவில் ஆங்கிலத்திலும், தமிழ் உட்பட பல மாநில மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது!
  • ஐநாக்ஸில் செவ்வாய் இரவே சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள்! அந்த ஷோவும் ஹவுஸ்-ஃபுல்!!! அவ்வ்வ்வ்வ்...!!! 
  • கோவை கனகதாராவில் புதனன்றே ரிலீஸாகி விட்டாலும் வெள்ளிக்கிழமை வரை டிக்கெட் கிடைக்கவில்லை! 
  • பைலட் தியேட்டரில் வழக்கத்தை விட கால் மணி நேரம் முன்பாகவே படம் ஆரம்பித்து விட்டது! முதல் காட்சியில் ஏசி பல நேரங்களில் வேலை செய்யவில்லை! சவுண்ட் பல இடங்களில் சுத்தமாக காதில் விழவில்லை! இருந்தாலும் தியேட்டரில் ஃபுல் கூட்டம் என்று அண்ணன் ‘க’னா கூறிகிறார்! 
  • ஐநாக்ஸில் படம் பார்க்க வந்திருந்த பீட்டர் இளசுகள் படம் முழுவதும் ‘அடிச்சான் பாரு!’, ‘செம குத்து!’ என்றெல்லாம் ஆங்கிலத்தில் ஆர்ப்பரித்த படியிருந்தனர்! படம் முடிந்ததும் கேட்ட கைதட்டல்களும், விசில்களும் இப்படங்களுக்கு ரசிகர்கள் இல்லாமலில்லை என்று உணர்த்தியது! இனி எத்தனை பாகங்கள் வந்தாலும் இவர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு!
  • தமிழில் டப்பிங் வழக்கம் போல சுமார்தான் என்று அண்ணன் ‘க’னா கூறுகிறார்! ஆங்கிலத்தில் இரண்டாவது முறையாக பார்த்த அவர் பல விஷயங்கள் தெளிவாகப் புரிவதாக கூறினார்!
  • க்ளைமாக்ஸில் வரும் ஒரு சண்டைக் காட்சி அப்படியே எந்திரன் க்ளைமாக்ஸிலிருந்து அப்பட்டமாக சுடப் பட்டிருப்பதாக அண்ணன் ‘க’னா கூறுகிறார்!

நிறைகள்:

  • 3D
  • க்ராஃபிக்ஸ்
  • இதுதான் கடைசி பாகமாம்! தப்பிச்சோம்டா சாமி!!! ஆனால் இந்தப் படம் ஓடி விட்டால் எப்படியும் நாலாவது பாகத்தையும் எடுத்து நம்மை மேலும் சோதிப்பார்கள் என்று அண்ணன் ‘க’னா வேறு டெரரை கிளப்புகிறார்!

குறைகள்:

  • மெகான் ஃபாக்ஸ்! அவர் படத்தில் இல்லாதது பெரும் குறை! ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கும் அவருக்கும் ஏதோ சண்டையாம்! அதுக்காக படத்திலிருக்கும் ஒரேயொரு நல்ல விஷயத்தையும் இல்லாமல் செய்து நம்மை இப்படி பழி வாங்கலாமா?!! இதனால் அண்ணன் ‘க’னா பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்!
  • ஷியா லபீஃப்! இவர் ஒரு ஹாலிவுட் அபிஷேக் பச்சன்! நடிப்பென்றால் கிலோ என்ன விலையென்று கேட்கிறார்! ராட்சத ரோபோக்கள் படம் முழுவதும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருக்க இவர் புத்திசாலித்தனமாக ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் காச் மூச்சென்று கத்திக் கொண்டு தேமேவென்று திரிகிறார்!  
  • ஏற்கெனவே நீளமான படத்தில் காட்டுத்தனமாக ஓடிக் கொண்டேயிருக்கும் அமெரிக்கப் படை வீரர்கள்! இவர்கள் வரும் காட்சிகளைத் துண்டித்திருந்தாலே படம் ஒரு அரை மணி நேரம் குறைந்திருக்கும்!
  • ஒரே மாதிரியான சண்டைக் காட்சிகள்! 3Dம், க்ராஃபிக்ஸும் திகட்டி விடுகிறது!
  • பாக்கியுள்ள அனைத்து விஷயங்களும்!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

2/6 - இரண்டு தோட்டாக்கள்!
முதலிரண்டு பாகங்களின் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்! 3Dல் கண்டு களித்தல் மேலும் சிறப்பு!

பயங்கரவாதியின் பன்ச்: 

TRANSFORMERS - OVERKILL!

ட்ரைலர்:

Monday, June 27, 2011

நகரம் நித்ர போதுன்ன வேல 2011 (Nagaram Nidhra Pothunna Vela) - தெலுகு பட விமர்சனம்

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இந்த படத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிந்து கொள்வது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகமாக இருக்கும் நடிகை சார்மியின் மார்கெட்டை சரிகட்ட அவரும் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். அதீத கவர்ச்சி காட்டி நடித்த பல படங்கள், தனி நாயகியாக (அருந்ததியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட) மங்களா படம் - இது ஸ்பைடர்மேன் இயக்குனர் சாம் ரெய்மியின் Drag me to Hell படத்தின் தழுவல்-, ஒரே ஒரு குத்தாட்ட பாடல் போட்ட படம், ராம் கோபால் வர்மாவின் வித்தியாச படம் -தொங்கால முட்டா-, என்று பல படங்கள். ஆனாலும் முடிவு ஒன்றுதான் - படுதோல்வி. சரி இனிமேல் விஜயசாந்தி போல புரட்சிகரமான பாத்திரங்களை முயற்சிப்போம் என்று துணிந்து நடித்த படமே நகரம் நித்ர போதுன்ன வேள (நகரம் உறங்கும் வேளை). அருமையான, கவித்துவமான தலைப்பு கொண்ட இந்த படத்தில் ஜோடியாக (?!?) நடிப்பவர் ஜகபதி பாபு. இவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு ஹிட் படத்திற்காக துடித்துக்கொண்டு இருப்பவர்தான். இப்படி ஒரு வெற்றிப்படதிற்க்காக ஏங்கும் இரு முன்னணி நட்சத்திரங்கள் சேர்ந்து வந்ததாலேயே இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு கூடியது.

படத்தின் பின்னணி: இந்த படத்தில் முதல் பாடலாக இருக்கும் அந்த தெலங்கானா / பிராக்ஷனிஷ பாடலை பலமுறை தொடர்ந்து டிரைலரில் ஒளிபரப்பி ஒருவிதமான எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருந்தார்கள். அதுவும் இல்லாமல் ஜகபதி பாபுவின் அந்த டைட்டில் சாங் (நித்ர போதுந்தி பட்னம்), அருமையான வரிகளுடன் தாலாட்டி தூங்க வைக்கும் தன்மையை கொண்டிருப்பதால் மற்ற பாடல்களும், படமும் நன்றாகவே இருக்கும் என்று நம்பி இருந்தேன். அதுவுமில்லாமல் படத்தின் இயக்குனர் வேறு இது ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் பின்னணி கதை என்றெல்லாம் சொல்லி இருந்தார். அதுவும் எதிர்ப்பார்ப்பை கூட்டியது. மேலும் அந்த லிப் டு லிப் முத்தம் பற்றிய தகவல் கசிந்தது இளசுகளின் மத்தியில் கிலுகிலுப்பை ஏற்படுத்தியது. இதைதவிர கடந்த நான்கு வாரங்களில் ரிலீஸ் ஆகும் முதல் நேரிடை தெலுங்கு படம் இது என்பதால் மேலும் ஒரு ஆவல். இப்படியாக பலவிதமான எதிர்ப்பர்ப்புகளுடன்  நுழைந்தேன்.

படத்தின் கதை: தனியார் தொலைக்காட்சியில் பனி புரியும் ஒரு துணிச்சலான பெண் நிருபர். அவருடைய சமுதாய நல்லெண்ண சிந்தனைகள் நிறைந்த செய்திகளை,ரேட்டிங் வராது என்பதால் ஒளிபரப்ப மறுக்கிறார் தொலைக்காட்சியின் அதிபர். அதனால் கடுப்பான அந்த நிருபர் "இன்று இரவு நகரத்தில் நடக்கும் அத்தனை தவறான காரியங்களையும் வெளிக்கொணருகிறேன்" என்று கிளம்புகிறார். நிற்க. இது கதை அல்ல. ஆனால் இனிமேல் நான் சொல்லப்போகும் ஒன் லைனரை கவனிக்கவும்.

துணிச்சலான அந்த பெண் நிருபரை துறத்துகிறது ஒரு கொலைகார கும்பல். எதற்க்காக துறத்தப்படுகிறோம் என்பதே தெரியாமல் ஓடுகிறார் அந்த நிருபர். அவரை காப்பாற்றுவது ஒரு மர்மமான நபர். அவன் பேசுவது உண்மையா என்பது அவனுக்கே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவனது துடுக்குத்தனமான (ரா.பார்த்திபன் போன்ற) கேள்விகளால் பலரும் கடுப்பாகின்றனர். இவர்கள் இருவரும் அப்படி எந்த ஒரு உண்மையால் துறத்தப்படுகின்றனர்?

இப்படி ஒரு ஒன் லைனர் இருந்தால் எந்த ஒரு பெரிய நட்சத்திரத்தின் கால்ஷீட்டையும் (நன்கு பேசத்தெரிந்த) ஒரு இயக்குனரால் இலகுவாக பெற இயலும். இங்கேயும் அதுதான் நடந்துள்ளது. ஆனால் இயக்கவே தெரியாத ஒரு இயக்குனரிடம் இந்த ஒரு த்ரில்லர் கதை மகா மொக்கை கதையாகி நின்றதே இந்த படத்தின் அடுத்த கட்டம்.

மொக்கையாகிப்போன திரைக்கதை: ஒரு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்லும்போது காட்டில் அவர்கள் ஒரு பென் டிரைவை கண்டெடுக்கிறார்கள். அது நிஹாரிகா என்ற தொலைகாட்சி நிருபருடயது. அதில் இருக்கும் சம்பவங்களால் கவரப்பட்ட அவர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் செல்கிறார்கள். ஆனால் நிஹாரிகா காணாமல் போய்விட்டது அங்கே சென்ற பின்னரே தெரியவருகிறது. மறுபடியும் அந்த காட்டிற்கு வந்து தேடும்போது இரத்தம் தோய்ந்த சில இடங்களை பார்க்கிறார்கள். அப்போது நிஹாரிகாவின் தோழி இதுவரை நடந்தவற்றை பிளாஷ் பேக்கில் சொல்கிறார்.

பிளாஷ் பேக்: எதிர்கட்சி தலைவர்,  நாட்டில் வன்முறை, கலவர வெறியாட்டங்களை தூண்டிவிட்டு, ஆட்சி மாற்றம் நடத்தி முதல்வராக துடிக்கிறார். அவரது இந்த சதியாலோசனை நிஹாரிகாவின் கேமராவில் அவரையறியாமலேயே பதிவாகி விடுகிறது. அப்போதுதான் அவர் நகரம் தூங்கும்போது அதன் குற்றப்பின்னணியை கண்டறிய புறப்படுகிறார். அவரை கொன்று அந்த பதிவான சங்கதிகளை அழிக்க ஆட்களை ஏவுகிறார் எதிர்கட்சி தலைவர் (இவர் பார்ப்பதற்கு N.T.R மாதிரியே வேறு இருக்கிறார்). அப்போது அவரை காப்பற்றுகிறார் ஜகபதி பாபு. இதன் பின்னர் என்ன நடந்தது என்பதை தயவு செய்து நீங்கள் தெரிந்து கொள்ளாமலே இருத்தல் நலம். அப்படி தேய்ந்து கொள்ள ஆசைப்பட்டு படத்திற்கு சென்றீர்கள் என்றால் (ஒன்று) பாதியிலேயே ஓடி வந்து விடுவீர்கள் (இரண்டு) கடுப்பாகி விடுவீர்கள்.

ஏனென்றால் படம் அதுவரையாவது ஓரளவுக்கு சுமாராக போய்க்கொண்டு இருந்தது. அதற்க்கு பிறகு, அய்யோடா சாமி, சொல்லவே முடியல. படம் திடீரென்று காந்தியின் அஹிம்சா போதனைகளை கொண்டு முன்னேறுகிறது. அதாவது பின்னணியில் காந்தி சிலை இருக்கும், அதன் முன்னே அரசியல்வாதிகளை நக்சலைட்டுகள் (அவங்கதானே?) வந்து கொன்று விட்டு செல்கிறார்கள். அதாவது நியாயம் கேட்டு நிஹாரிகா அஹிம்சா வழியில் போராடியதால் நக்சலைட்டுகள் கொதித்து எழுந்து அந்த அரசியல்வாதிகளை கொன்றுவிட்டு மறுபடியும் காட்டிற்கே சென்றுவிடுவார்கள். நிஹாரிகாவின் கையில் ஒரு இந்தியக்கொடியை கொடுத்துவிட்டு மக்களும் சென்று விடுவார்கள். நம்ம தலையில் மொளகா அரைத்து விட்டு இயக்குனரும் சென்று விடுவார்.

நடிப்பு: வில்லனாக நடிப்பவர் ஓரளவுக்கு சுமாராக நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்த ஜகபதி பாபு ரசிகர்கள் கண்டிப்பாக மனம் நொந்து போய் இருப்பார்கள். நான் அவரின் விசிறி கிடையாது என்றாலும் ஜகபதி பாபுவின் சில படங்களில் அவரது அற்புதமான நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அவர் எந்த பாத்திரம் கிடைத்தாலும் ஒக்கே சொல்கிறார் போலும், இல்லை என்றால் இந்த படத்தில் அவர் நடிக்க சம்மதித்தது எப்படி என்பது அவருக்கே புரியாத புதிராகும். சார்மி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். பேசாமல் மறுபடியும் சார்மி உச்சகட்ட கவர்ச்சிக்கே திரும்புவதே உசிதம். மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேறொன்றும் இல்லை.

இயக்கம் - இயக்குனர்: கண்டிப்பாக இந்த படத்தின் இயக்குனர் (பிரேம்ராஜ்) கையில் கிடைத்தால் அவருக்கு ஒரு பத்து, பதினைந்து டிவிடிக்கள் கொடுத்து அவற்றை பார்க்கும்படி சொல்வேன். ஏனென்றால் இவருக்கு படமெடுப்பது எப்படி என்ற அடிப்படையே சரியாக தெரியவில்லை. ஏன் இவ்வளவு கோபப்படுகிறேன் என்றால் படம் வருவதற்கு முன்பும், ரிலீஸ் ஆன பின்பும் இவர் செய்த சேஷ்டைகள் அப்படி. படம் வருவதற்கு முன்பு படத்தில் சிறந்த காட்சி எது என்று கேட்டால் சார்மியும், ஜகபதி பாபுவும் லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் காட்சியே என்று சொன்னார் (படத்தில் அப்படி ஒரு காட்சியே இல்லை).

இது கூட பரவாயில்லை. படம் ரிலீஸ் ஆன வெள்ளியன்று மதியமே படம் புட்டுகிச்சு என்கிற விஷயம் ஊரெல்லாம் பரவ, மனுஷன் கொஞ்சமும் சளைக்காமல் "இந்த படத்தின் வில்லனுக்கும் கிரண் ரெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, விஷமிகள் சில அப்படி பிரச்சாரம் செய்கிறார்கள்" என்று இவரே கிளப்பிவிட்டு விளம்பரம் தேடப்பார்த்தார். அப்படியும்கூட இந்த படத்தை யாரும் சீண்டவில்லை.

படத்தின் + கள்: எதுவுமே இல்லை. (அப்படியே சொல்லவேண்டுமென்றால் ஓரிரு பாடல்களை சொல்லலாம்)

படத்தின் - கள்: எல்லாமுமே.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 0/6/ இந்த படத்திற்க்கெல்லாம் தோட்டாக்களை வீணடிக்க விரும்பவில்லை.

கிங்'ஸ் பன்ச்: நகரம் தூங்கும் வேளை - திரைக்கதையும் தூங்கிவிட்டது.

Sunday, June 26, 2011

பிள்ளையார் தெரு கடைசி வீடு–திரைவிமர்சனம்:24-06-2011

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிந்து கொள்வது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

சூப்பர் குட் பில்ம்ஸ் படக்கம்பெனியின் உரிமையாளர் R.B.சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ் (கோ பட ஹீரோ ஜீவா'வின் அண்ணன்). ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி 'ஜித்தன்' ரமேஷ் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு அறிமுகமான இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு படங்களில் தொடர்ந்து நடித்தார். அவற்றின் ஓட்டம், ‘ஓட்டம்’ கண்டதால் கடந்த நான்கு ஆண்டுகளாக படங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். இப்போது அவரின் படம் பிள்ளையார் தெரு கடைசி வீடு ரிலீஸ் ஆகி இருக்கிறது. நான்கு ஆண்டுகளாக படம் எதனையும் ஒப்புக்கொள்ளாத  ரமேஷ் இந்த படத்தில் நடித்திருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை தந்தாலும், ஒருவிதமான எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கி இருந்ததை மறுக்க முடியாது. ஆந்திராவின் சிறந்த கதை சொல்லியாகிய எழுத்தாளர் பி.வி.எஸ்.ரவியிடமிருந்து தமிழுக்கு முதல் முறையாக இயக்க வந்திருக்கும் கிஷோரை பற்றியும் ஒரு விதமான கேள்விக்குறி இருந்தது. இத்தகைய எதிர்ப்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்கிறதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்.

பிள்ளையார் தெரு கடைசி வீடு கதை: எண்பதுகளில் வந்த குடும்ப கதை பார்முலா தான் இந்த படத்தின் ஆரம்ப ஒரு மணி நேர கதை. வேலை வெட்டி இல்லாமல் நான்கு நண்பர்களுடன் சுற்றும் ஹீரோ, நகரத்தில் கல்லூரியில் படிக்கும் (எப்போதும் அவனை திட்டிக்கொண்டே இருக்கும்) அவனது தங்கை, மகன் செய்யும் தவறுகளை எப்போதும் மன்னிக்கும் அன்பு மிகுந்த தாய் (துளசி மேடம் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?), கண்டிப்பான ஆனால் மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட அப்பா (ஜெயப்பிரகாஷ்), வெகுளியான மாமா என்று ஒரு அக்மார்க் தமிழ் கிராம குடும்பம். இவர்கள் வசிப்பது பிள்ளையார் தெருவின் கடைசி வீட்டில். இதை தவிர ஜெயப்பிரகாஷின் தங்கையை மணந்து கொண்ட பொறுப்பில்லாத குடிகார தந்தையாக இளவரசு, அவரது மகளாகிய வள்ளி (ஹீரோவுக்கு முறைப்பெண்-திரையில் தோன்றும்போதெல்லாம் பாவாடை தாவணியுடன் சேலை கட்டிக்கொண்டு இருக்கும்படியே அறிமுக காட்சிகள் - இரண்டு முறை) என்று தனி டிராக் வேறு.

இப்படி அமைதியாக செல்லும் கதையில் கல்லூரி விடுமுறைக்காக தங்கையின் தோழி (சஞ்சிதா படுகோனே) ஊரில் வந்து தங்க, அப்போதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. தமிழ் சினிமா இலக்கணப்படி அவரிடம் காதல் கொள்கிறார் ஹீரோ. அதே சமயம் இளவரசு தன்னுடைய கடன்களை கட்டிய போஸ் வெங்கட்டுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்ய முடிவெடுக்க, (ஜித்தன் ரமேஷை கேட்காமலேயே) தன்னுடைய தங்கை மகளை மருமகளாக்க முடிவெடுக்கிறார் ஜெயப்பிரகாஷ். தந்தை சொல்லை தட்டவும் இயலாமல், தன்னுடைய காதலை சொல்லவும் இயலாமல் தவிக்கும் ரமேஷ், திருமண நாளன்று திடீரென்று சஞ்சிதாவையே திருமணம் செய்துக்கொண்டு வந்து அனைவரையும் திகைக்க வைக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்துக்கொண்டது வெறும் காதலுக்காக மட்டும் அல்ல என்பதே கதையை தூக்கி நிறுத்தும் ட்விஸ்ட். அது என்ன ட்விஸ்ட் என்பதை தயவு செய்து வெள்ளித்திரையில் கண்டு ஒரு நல்ல முயற்சியை ஊக்கப்படுத்துங்கள்.

படம் எப்படி?: கதையின் தலைப்புக்கும் படத்திற்கும் முக்கியமான தொடர்பு இல்லையென்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த படங்களிலேயே வித்தியாசமான தலைப்பை கொண்டது இந்த படமே என்பதை மறுக்கவியலாது. முதல் ஒரு மணி நேரம் வழக்கமான தமிழ் படம் தான். ஹீரோ எதற்க்காக டி.ராஜேந்தரின் விசிறி ஆக வருகிறார் என்பது கதைக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் ஓரிரு காட்சிகளை நகர்த்த உதவுகிறது. நண்பர்கள் காமெடி, படத்தின் ஆரம்ப காட்சி, ஹீரோ வருகை, நாயகியை சந்திப்பது, காதலை சொல்ல முயலும் காட்சிகள் என்று தொடர்ந்து பல காட்சிகள்  மொக்கை என்றாலும் விறுவிறுப்பான இரண்டாம் பகுதி காரணமாக இவற்றை மன்னிக்கலாம். இதற்காக இதனை வழக்கமான தமிழ் படம் என்றெண்ணி விடாதீர்கள்.

இயக்கம் - இயக்குனர்: சமீபத்தில் வேறு எந்த ஒரு முதல்பட இயக்குனரும் தமிழில் இந்த அளவுக்கு வலுவான கதையையும், புத்திசாலித்தனமான திரைக்கதையையும் திரையில் கொண்டு வரவில்லை என்பதே உண்மை (தயவு செய்து 95 சதவீதம் ஸ்பானிய படங்களை காப்பி அடித்து எடுத்த படங்களை எல்லாம் பின்னூட்டத்தில் வந்து சொல்லவேண்டாம்). இதோ இந்த காட்சியில் ஒரு காதல் பாட்டு வரும் என்று அடித்து சொல்லும் ரசிகர்களை எல்லாம் தவிக்க விட்டு அங்கே பாடல்களை வைக்காமல் தவிர்த்து இருக்கிறார் கிஷோர். அதே போல மூன்றாவது தடவையாக ஹீரோ ஒரு தனி பாடலை பாடுகையில், 'அய்யோ' என்று எண்ணிக்கொண்டே இருக்கையில் அந்த பாடலை ஒரே ஒரு சரணத்துடன் முடித்துவிட்டு மறுபடியும் நம்மை திகைக்க வைக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒரு ட்விஸ்டில் மற்றுமொரு ட்விஸ்ட்டை புகுத்தி எதிர்பாராத ஒரு முடிவை நோக்கி திரைக்கதையை நகர வைக்கும்போது கிஷோரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நடிகர்கள் - ஜித்தன் ரமேஷ்: கண்டிப்பாக இந்த படம் இவரது வாழ்வில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. ஜீவாவிற்கு எப்படி ராம் திருப்புமுனையாக அமைந்ததோ, இந்த படம் அதைவிட சிறந்த திருப்புமுனையாக ரமேஷிற்கு அமையும். முதல் பாதியில் நடன காட்சிகளில் திறமையை அற்புதமாக வெளிப்படுத்திய இவர், கடைசி நாற்பது நிமிடங்களில் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கிறார். இந்த பதிவின் ஆரம்பத்தில் ஜீவா'வின் அண்ணன் என்று எழுதி இருப்போம். இதே போல நல்ல இயக்குனரும், சிறந்த திரைக்கதையும் கொண்டால், விரைவில் ஜீவா'வை ரமேஷின் தம்பி என்று எழுத வேண்டிய சூழல் வரும்.

ரமேஷிற்கு அவருடைய குரல் ஒரு தடையே என்றாலும் இந்த படத்தில் முடிந்த வரையில் அவர் முயற்சி எடுத்து மாறுபடுத்த முயன்றுள்ளார். இருந்தாலும் மைக் மோகன் போல இவரும் ஒரு டப்பிங் குரலை தேர்ந்தெடுத்தல் நலம். கிளைமேக்சில் அந்த மழை பெய்யும் காட்சியில் உண்மையில் ரமேஷ் நடித்துள்ளார். ஹாட்ஸ்  ஆப் டு யு, ரமேஷ். அதுவும் இந்த அளவுக்கு ஒரு கட்டுபடுத்தப்பட்ட (ரெஸ்டிரெயின் ஆன) நடிப்பை சமீபத்தில் வேறெந்த தமிழ் நடிகரிடமும் காணவில்லை எனதே உண்மை. கண்டிப்பாக இந்த படத்திற்காக அவர் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

ஹீரோயின் - சஞ்சிதா படுகோனே: வேட்டைக்காரன் படத்தில் விஜய்'யின் தங்கையாக வருவாரே, அவர்தான் இவர். இந்த படத்தில் இவர் ஆரம்பத்தில் மொக்கையாக தெரிந்தாலும் படம் முன்னேற முன்னேற, தன்னுடைய நடிப்பிலும் முன்னேற்றத்தை காண்பித்துள்ளார், குறிப்பாக ரமேஷிடம் தன்னுடைய காதலை ஒப்புக் கொள்ளும்போதும்,  கிளைமேக்சிலும் இவரது நடிப்பு அற்புதம். இந்த படம் இவருக்கு ஒரு முக்கியமான மைல்கல். ஆனால் அநேகமாக தமிழ் சினிமா இலக்கணப்படி இனிமேல் இவர் ஹீரோவின் தங்கையாகவோ, மாமனை கட்டிக்கொள்ள ஆசைப்படும் இரண்டாவது முறைப்பெண் ஆகவோ கூட மாறக்கூடும்.

மற்ற பாத்திரங்கள்: இதனை தவிர, ஜெயப்பிரகாஷ் தன்னுடைய டிரேட்மார்க் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீப காலங்களில் நான் இவரின் மிகப்பெரிய விசிறி ஆக மாறிவருகிறேன் என்பதை மறுக்கவியலாது. அதே சமயம் இவரை தொடர்ந்து ஒரே மாதிரி வேடங்களில் பார்ப்பதும் சலிப்பையே அளிக்கிறது. மாற்றிக்கொள்ளுங்கள் சார், இல்லையென்றால் உங்களை இதே மாதிரி பாத்திரங்களுக்கு டைப்காஸ்ட் செய்துவிடப்போகிறார்கள். திருடா, திருடி படம் வந்தபோது மாணிக்க விநாயகம் அவர்களுக்கும் இதே மாதிரி வரவேற்ப்பு இருந்தது. ஆனால் அவர் இப்போது எங்கே என்று யோசித்துப்பாருங்கள்.

ஹீரோவின் தங்கையாக வரும் அகிலாவும், ஹீரோவின் அம்மாவாக வரும் துளசியும் ஆரம்ப காட்சிகளில் வழக்கமாக தெரிந்தாலும் படத்தின் கிளைமேக்சில் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார்கள். அந்த நாற்பது நிமிடமும் படத்தின் உச்சகட்டம். பிரகாஷ் ராஜ் ஒரே ஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்தாரா என்ன என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வரும் அந்த இரண்டு காட்சிகளும் படத்தின் திருப்புமுனை. தயவு செய்து இதுபோன்ற பாலிஷ் ஆன பாத்திரங்களிலேயே நடியுங்கள் பிரகாஷ், உங்களது வில்லன் நடிப்பு எல்லாம் வேண்டாம்.

ஹீரோவின் நண்பராக வரும் சூரி, வழக்கமான நண்பன் பாத்திரம்தான் என்றாலும் கடைசி இரண்டு காட்சிகளில் தன்னால் நடிக்க இயலும் என்பதை நிரூபித்து உள்ளார். அதைப்போலவேதான் அவரது நண்பர் மாரியும். அதுவும் கிளைமேக்சில் மாரி ஆட்டம் போடுவது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் கதையுடன் ஒன்றியிருப்பதே அதன் சிறப்பு. ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் வருகிறார் இளவரசு. அலட்டல் இல்லாமல் அறிமுக காட்சியில் சிக்ஸ் அடிப்பதில் இருந்து வரும் காட்சிகளில் எல்லாம் கைதட்டல் வாங்குகிறார். கொஞ்சமே வந்தாலும் பின்னுகிறார்.

படத்தின் + கள்:

  • எங்கேயும் திருடாத நேர்மையான கதை
  • எதிர்ப்பார்ப்பை தோற்கடிக்கும் காட்சிகளும், திருப்பங்களும்
  • சிறந்த திரைக்கதை
  • இரண்டாம் பகுதியில் நல்ல இயக்கம்
  • மிகையில்லாத நடிப்பு
  • கடைசி நாற்பது நிமிடங்கள்

படத்தின் - கள்:

  • தேவையில்லாத அந்த ஒரு ஹீரோயிச சண்டைக்காட்சி
  • எண்பதுகளின் தமிழ் படங்களை நினைவுபடுத்தும் கதையோட்டம்
  • மெதுவாக நகரும் முதல் பகுதி
  • கவனத்தை கவராத இசை

திருஷ்டி போட்டு: படத்தில் பல விஷயங்கள் கவர்ந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே உறுத்திக்கொண்டு இருந்தது. படத்தின் ஒரு காட்சியில் ஹீரோயின் வீதியில் நின்றுக்கொண்டு இருக்கும்போது சில பல ரவுடிகள் வந்து கிண்டல் செய்ய, அதில் ஒருவன் அவரது பின்பக்கத்தை தட்டிவிடுகிறான். அதானால் கோபமடைந்த ஹீரோ அவனது கையை உடைத்து விடுகிறார். இதில் தவறு எதுவும் இல்லையென்றாலும், அவன் தடவியது இடது கையால், ஹீரோ உடைத்தது வலது கையை.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 3 bullets 3/6. மூன்று தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: பிள்ளையார் தெரு கடைசி வீடு – குடியிருக்கலாம்.

Saturday, June 25, 2011

நூற்றென்பது (180) : 25th JUNE, 2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

1989ல் இதயத்தை திருடாதே என்றொரு படம் வந்தது! ஹீரோவுக்கு கான்சர்! ஹீரோயினுக்கு இதயத்தில் ஓட்டை! ஆனால் படத்தில் புதுமை என்னவென்றால் வழக்கம் போல சோகத்தை பிழியாமல் இருக்கும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியதேயாகும்!

புதுமையான மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய இப்படம் தெலுங்கு டப்பிங் என்றாலும் தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட்! ஒலக சினிமா எடுக்காத அந்த கால மணிரத்னம், எவர்க்ரீன் இசைஞானி இளையராஜா, இருட்டிலும் தெளிவாக படம்பிடித்த பி.சி.ஸ்ரீராம் என்ற அற்புதமான கூட்டணி எப்போதும் சோடை போனதேயில்லை!

இன்று ரிலீஸாகியுள்ள 180 படமும் இதே கருத்தை முன்வைக்க முயல்கிறது! ஆனால்...?!!

கதை: ஹீரோ சித்தார்த்துக்கு கனையத்தில் கான்சர் (தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஹீரோவுக்கு இங்கு கான்சர் வருகிறது)! ஆறு மாதத்தில் (180 நாட்கள் - படத்தின் டைட்டில்) அவர் இறந்து விடுவாராம் (இந்த கால அவகாசத்தை மாத்தவே மாட்டாங்களா?!!) ஆகையால் அவர் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல் தன் கடைசி காலத்தை தனிமையில் சந்தோஷமாக கழிக்க விரும்புகிறார்!

ஆனால் படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே 180 நாட்கள் முடிந்தும் உயிரோடு இருந்து நம்மையெல்லாம் படுத்துகிறார்! நடுவில் இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாடுகிறார்! சமூக சேவையெல்லாம் வேறு செய்கிறார்! க்ளைமாக்ஸ் எப்போதுதான் வருமென்று நம் பொறுமையையும் சோதிக்கிறார்! 

கடைசியில் சித்தார்த் பிரேசிலுக்கு செல்வது போலெல்லாம் காட்டி 180 - பாகம் 2 வரும் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்!

நடிப்பு: சித்தார்த் வழக்கம் போல வந்து போகிறார்! 2 ஹீரோயின்கள்! நித்யா மேனன், ப்ரியா ஆனந்த்! நித்யா சேச்சி ஓடி வரும் போதெல்லாம் அவரோடு சேர்ந்து தியேட்டரும் குலுங்குகிறது! ப்ரியாவை சித்தார்த் அவ்வப்போது மவுத் கிஸ் அடித்து சூட்டைக் கிளப்புகிறார்! இது ஒரு BI-LINGUAL படம் என்பதால் தமிழ் மெளலியும், தெலுங்கு தணிகெல்லா பரணியும் வருகிறார்கள்!

இசை: பாடல்கள் எதுவும் காதிலும், மனதிலும் பதியவில்லை என்பது பெரும் குறை! பலகீனமான கதை/திரைக்கதைக்கு பலம் சேர்க்க வேண்டிய இசை சொதப்பினால் படம் படுத்து விடாதோ?!! எங்கேயும் காதல் படம் பல இடங்களில் படு மொக்கையென்றாலும் பாடல்கள் மூலம் அந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டது நினைவிருக்கலாம்!

ஒளிப்பதிவு: படத்தின் ஹை-லைட் இதுதான்! ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் சூப்பர் ஸ்லோ-மோஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்! அழகிய தமிழ் மகன் படத்தில் இளைய தளபதி மருத்துவர் விஜய்யை அவ்வளவு அழகாக காட்டியவராயிற்றே! சோடை போவாரா?!!

தியேட்டர் டைம்ஸ்:
  • படம் பார்த்த அனைவரும் இரண்டாம் பாதியில் மொக்கை தாள முடியாமல் கதறிக் கொண்டிருக்க அண்ணன் ‘க’னா அவர்கள் மட்டும் சில பல குறியீடுகளைக் கண்டு பிடித்துக் கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது கொடுமையிலும் கொடுமை!
  • படத்தில் நித்யா மேனன் சித்தார்த்தை படத்துக்கு போகலாம் என்று அழைக்கும் போது “தயவு செய்து 180க்கு மட்டும் போயிடாதீங்க!” என்ற கூக்குரல் அண்ணன் ‘க’னாவிடமிருந்து எழுந்தது!
  • படத்தை தயாரித்தது சத்யம் நிறுவனம் என்ற போதிலும் இதுவரை அவர்கள் ப்ரிவியூ ஷோ எதுவும் போடவில்லை! இன்று மாலை ராயப்பேட்டை ரியல் இமேஜில் ஸ்பெஷல் ஷோ மட்டும் இருந்தது! படம் மொக்கைன்னு அவங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்குமோ?!!
நிறைகள்: 
  • ஒளிப்பதிவு!
குறைகள்: 
  • வழக்கமான கதை! மொக்கைத் திரைக்கதை! ஆமை வேகத்தில் நகரும் இரண்டாம் பாகம்!
  • இசை!
  • ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ரசனைகளை மட்டுமே திருப்திப் படுத்தும் வகையில் அமைந்திருக்கும் முதல் பாதி காட்சிகள்!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1/6 - ஒரே ஒரு தோட்டா!

பயங்கரவாதியின் பன்ச்: 180 - 180 ரூவா போச்சே!

ட்ரைலர்:

உதயன் - திரைப்பட விமர்சனம் 24-06-2011

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிவது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

கொஞ்ச நாளாக இருந்த தேக்க நிலை மாறி, இந்த வாரம் மூன்று புத்தம் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் மூன்று படங்களுமே அறிமுக இயக்குனர்களால் இயக்கப்பட்டவை எனபதே. இன்று ரிலீஸ் ஆகிய பிள்ளையார் தெரு கடைசி வீடு படமும், உதயன் படமும் வெளியான அனைத்து இடங்களிலுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அருள்நிதி 'நடிப்பில்' வெளிவந்த உதயன் படத்தினை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

உதயன் - படத்தின் கதை: சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் அருள்நிதி (வசந்த்), எதேச்சையாக ஒருநாள் ப்ரனீதாவை சந்தித்து உடனடியாக திருமணம் பற்றி பேசி, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். பின்னர் தோழியின் வங்கி கடனுக்காக ப்ரியாவும் வசந்திடம் வந்து உதவி கேட்க, மோதலில் ஆரம்பித்தது சிறிய ஊடல்களுக்கிடையே காதலாக மாறுகிறது. ப்ரியாவின் தந்தை ஒரு பெரிய சக்தியின் ஆடிட்டராக பணிபுரிபவர். இந்த காதலை இவர் எதிர்க்க, வசனத்தை மிரட்ட வரும் அந்த பெரிய தாதாவின் தம்பி வசந்த்தை கண்டவுடன் மிரண்டு போய், வசந்த்தை கத்தியால் குத்திவிட, அப்போது எங்கே வந்து அவனை கொன்றுவிடுகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. அவரை பார்த்தவுடன் வசந்த் "அப்பா" என்று கூறியபடி சரிய, இடைவேளை ஆரம்பிக்கிறது. வசந்த் யார்? அவனுக்கும் அந்த பெரிய சக்திக்கும் என்ன பிரச்சினை? எதற்க்காக வசந்தின் அப்பா அவர்களை தேடி வருகிறார்? இந்த காதல் ஜோடிகள் கை கோர்த்தார்களா? என்பதை உண்மையிலே தைரியம் இருந்தால் வெள்ளி திரையில் காண்க.

அருள்நிதி: சில பேர் நேரில் பார்க்க அழகாக இருப்பார்கள்; ஆனால் போட்டோவில் அவர்களை காண சகிக்காது. அதே சமயம் சிலர் போட்டோவில் நன்றாக இருப்பார்கள், ஆனால் நேரில் பார்த்தல் அவர இவர்? என்று வினவும்படி இருப்பார்கள். நம்ம ஹீரோ அருள்நிதி போட்டோக்களில் பார்க்கையில் ஹான்ட்சம் ஆகவே இருக்கிறார். ஆனால் படத்தில் பார்க்கையில் ஒருவிதமான (கஷ்டப்படுகிற) உடல்மொழியுடனே (பாடி லாங்குவேஜ்) இருப்பதை உணர முடிகிறது. உதாரணமாக அவரது கைகளை எப்படி பொசிஷனில் வைப்பது என்பதே அவருக்கு இன்னமும் கைவராத கலை. அதன் பின்னர் அவரது குரல். ஜித்தன் ரமேஷைவிட ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஹீரோவின் குரல் யாருடையது என்றால், வெகு சுலபமாக அருள்நிதியின் குரலே என்று சொல்லிவிடலாம். கண்டிப்பாக ஒரு டப்பிங் குரல் இவருக்கு தேவை. அதே போல இவருடைய உடல் அமைப்பே படங்களில் ஒருவிதமாக Ungainly ஆக இருக்கிறது. ஆனால் போட்டோக்களில் பார்க்கையில் உயரமான பில்லா அஜித்தை போல ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் அமிதாப் பச்ச்னைப்பற்றி கூறுகையில் "He’s got 2 Left Shoes" என்று கூறுவார்கள். அதாவது அவருக்கு நடனம் ஆட வராது என்பதையே அப்படி கிண்டலாக சொல்லி வந்தார்கள். பின்னர் அவர் படிப்படியாக முன்னேறி இப்போது தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு ஒரு அட்டகாசமான நடனம் புரிபவராக மாறிவிட்டார். ஆனால் அருள்நிதி இப்போதும் 2 Left shoes உடனே இருக்கிறார். கண்டிப்பாக இவருக்கு ஒரு நடன பயிற்சியாளர் தேவை. அதே சமயம் முகத்தில் ஒரு Dead-Pan expression எப்போதும் இருக்கிறது. யாராவது வந்து ஒரு சோகமான செய்தியை சொன்னால் கூட " என்ன, இன்னைக்கு வெள்ளிகிழமையா?" என்று விசாரிப்பதைப்போலவே அவரது முகபாவனைகள் உள்ளன.

என்னடா இவன் தொடர்ந்து ஒரே நெகடிவ் விஷயங்களையே சொல்கிறான் என்று யோசிக்காதீர்கள். அருள்நிதியிடம் ஹீரோக்களுக்கான பல நல்ல குணாதிசயங்கள் உள்ளன. அவரது உயரம் ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயின்ட். சண்டை காட்சிகளில் அனாயசமாக ஐந்து பேரை அடிக்கிறார் (ஆரம்ப கால -திமிரு பட-விஷால் போல). ஸ்மார்ட் ஆக தெரிகிறார். ஒரு நல்ல ஆளுமை இவரிடம் இருக்கிறது. கொஞ்சம் ஹோம்வர்க் செய்தால் கண்டிப்பாக ஒரு பெரிய ரவுண்ட் வருவார்.

பிரனீதா: இந்த படம் பார்க்க சென்றதின் முதல் நோக்கமே இவரை மறுபடியும் திரையில் பார்க்கவேண்டும் என்றா ஆசைதான். சென்ற தீபாவளிக்கு பிறகு ரிலீஸ் ஆன பாவா என்கிற தெலுகு படத்தில்தான் இந்த அழகியை நான் முதலில் பார்த்தேன். நல்ல முகபாவங்கள், நேர்த்தியான முகம், ஒல்லியான உடல்வாகு என்று செம கியூட்டாக தெரிந்தார் இவர். ஒரு துறுதுறுப்பான கல்லூரி பெண் பாத்திரத்தில் நன்றாக நடித்து இருந்தார். ஆகையால் இந்த படத்தில் இவரை பார்க்கவே சென்றேன். இந்த படத்தில் இவரை பார்க்கையில் நடிப்புக்கும் இவருக்கும் கொஞ்சம் தூரம் என்றே தோன்றுகிறது. ஒல்லியான பெண்கள் தமிழில் நிலைப்பது அரிதே. ஆனால் இவர் திறமையான ஒரு நடிகை. அதே சமயம் 'தெறம' காட்டும் நடிகையும் கூட. பார்க்கலாம்.

சந்தானத்தின் இரட்டை அர்த்தம் நேரிடையான அர்த்தம் கொண்ட காமெடியும், இரண்டு இளமை ததும்பும் பாடல்களும் இல்லை என்றால் தியேட்டரில் இருந்து மனம் நொந்து வந்திருப்பேன். இடைவேளைக்கு பிறகு எதாவது வித்தியாசமாக இருக்கும் என்றால், இதுவரை இரண்டாயிரம் தடவை தெலுகு படங்களில் வந்துள்ள அதே பழிவாங்கும் கதை தான். ஆனால் வில்லனுக்கும் உதயனுக்கும் சண்டை ஏற்படும் காட்சியில் நியாயம் என்னவோ வில்லன் பக்கமே இருக்கிறது. பின்னே என்னங்க, வில்லன் காரில் வந்துக்கொண்டு இருக்கும்போது உதயன் அவரின் காருக்கு முன்னே செல் போனில் பேசிக்கொண்டே வழிவிடாமல் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு செல்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு கடுப்பாகும் வில்லன் அவரின் வண்டியை ஒரு தட்டு தட்ட, உதயன் கீழே சேற்றில் விழுந்து விடுகிறார். அப்போதும்கூட வில்லன் நல்லதொரு அறிவுரையை மட்டுமே கூறுகிறார் (வண்டி ஓட்டும்போது செல் போனில் பேசவேண்டாம், கூப்பிடுவது எமனாக கூட இருக்கலாம்). ஆனால் உதயன் அவரை துரத்தி சென்று அடித்து, சட்டையை கழட்டி ஊரெல்லாம் நடத்தி சென்று அவமானப்படுத்துகிறார். பின்னர் இவர்களுக்குள் பகை ஆரம்பிக்கிறது. இதில் உதயன் செய்ததே தப்பு என்று படுகிறது.

படத்தின் + கள்:
சந்தானம் + காமெடி
புதிய ஹீரோயின்
இரண்டு பாடல்கள்
சற்றே புத்திசாலித்தனமான வசனங்கள்
இடைவேளை ட்விஸ்ட்
கிளைமேக்ஸ் சண்டையில் திருப்பம்


படத்தின் - கள்:
நடிப்பு ?
மிகவும் பழக்கப்பட்ட திரைக்கதை, யூகிக்ககூடிய காட்சிகள்
இங்கே பாடல் வரும் என்று தெளிவாக அறியும் காட்சியமைப்பு
வித்தியாசம் இல்லாத காட்சிகள், கதையமைப்பு
இசை

இவ்வளவு எதுக்குங்க பாஸ், இரண்டு அருள்நிதி பாத்திரங்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா? ஒருவர் விபூதி வைத்து இருப்பார், இன்னொருவர் வாயில் பீடா போட்டுக்கொண்டே இருப்பார். இதுக்கு மேல என்னங்க வேண்டும் உங்களுக்கு? எம்ஜியார் ஒரு மரு வச்சா, அது மாறுவேஷம் எண்ணும்போது, இந்த வித்தியாசம் போதாதா?

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: single bullet 1/6 (ஒரே ஒரு தோட்டா).

கிங்'ஸ் பன்ச்: உதயன் - அஸ்தமனம் ஆகிவிட்டான்.

Friday, June 24, 2011

தியேட்டர் டைம்ஸ் 03 : 24th June 2011 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம்

சென்ற வாரத்தை கம்பேர் செய்து பார்க்கும்போது இந்த வாரம் கொஞ்சம் பரவாயில்லைதான். ஏனென்றால் மொத்தம் மூன்று தமிழ் படங்களும் ஒரு தெலுகு படமும் ரிலீஸ் ஆகிறது. சமீப காலமாக இருந்த ஒரு வித தேக்க நிலை மாறி, படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆவது பட ரசிகர்களுக்கும் தியட்டர் உரிமையாளர்களுக்கும், ஏன் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கே நல்லது. இந்த டிரென்ட் தொடரும் என்ற நம்பிக்கையில் இந்த வாரம் வரப்போகும் படங்களை பற்றிய முன்னோட்டப்பதிவிற்கு செல்வோம்.

01 அருள்நிதி நடிக்கும் உதயன்; படத்தின் இயக்குனராகிய சாப்ளின் தரணி, கரு பழனியப்பன் மற்றும் பாண்டிராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பாண்டிராஜின் வம்சம் படத்தில் பணி புரியும்போது அருள்நிதியிடம் சொன்ன கதையே இந்த உதயன். இந்த படத்தின் தயாரிப்பாளரை குறித்து சமீபத்தில் கிளம்பிய சர்ச்சை இன்னமும் அடங்கவில்லை. பொங்கல் அன்று பூஜை போடப்பட்ட இந்த படம் மிகவும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் வகையை சேர்ந்த படம் இது என்று இயக்குனரே கூறும்போது நாமென்ன மறுக்கவா போகிறோம்?

Udhayan Poster

இயக்குனர்                        : சாப்ளின் (முதல் படம்)
நடிகர்கள்                           : அருள் நிதி (இரட்டை வேடங்களில்), பிரனீதா (தமிழில் அறிமுகம்)
ஒளி ஓவியர்                    : விஜய் மில்டன்
இசையமைப்பாளர்          : மணிகண்டன் கதிரி (முதல் படம்-கதிரி கோபால்நாத் புதல்வர்)
தயாரிப்பாளர்                    : பிரபாகரன்
மொழி                                : தமிழ்


என்ன மேட்டர் படத்துல:முதல் முறையாக அருள்நிதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் (கொய்யால, நடிச்சதே ஒரே ஒரு படம்; ரெண்டாவது படத்துல டபுள் ஏக்டிங் என்று சொல்வதை விட்டு விட்டு இப்படியா என்று கேட்கவேண்டாம்). வழக்கம்போல எல்லா ஹீரோக்களும் சொல்வதையே இவரும்  சொல்கிறார்:இரண்டு பாத்திரங்களுக்கும் இடையே வித்தியாசம் காட்டியுள்ளேன் என்று. ஹீரோயின் ஒரு அழகு பதுமை. இவர் இந்த ஆண்டு வெளிவந்த சித்தார்த்தின் தெலுகு படத்தில் நடித்து மனதை கொள்ளை கொண்டவர். செம கியூட்டான இந்த ஹீரோயினை ஒரு கன்னட பட பாடலில் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி தமிழில் புக் செய்துள்ளனர். நடிக்க வருகிறதா என்று பார்க்கவேண்டும்.

 

02 ஜித்தன் ரமேஷின் பிள்ளையார் தெரு கடைசி வீடு: கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து ஜித்தன் ரமேஷ் நடித்து வரும் முதல் படம் இது. நடிக்க வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு படங்களில் நடித்தவர், புலி வருது படத்திற்கு பின்பு காணாமலே போய்விட்டார். படத்தின் இயக்குனர் 'திருமலை' கிஷோர். ஆந்திராவின் வெற்றிகரமான எழுத்தாளர் பி.வி.எஸ்.ரவியிடமிருந்து தமிழுக்கு முதல் முறையாக இயக்க வந்திருக்கும் இவருக்கும் விஜய் நடித்த திருமலை படத்திற்கும் சம்பந்தம் இல்லை. திருப்பதி இவரின் சொந்த ஊர். பெருமாளிடம் "முதல் படம் புக் ஆனால் உன் பெயரையே எனக்கு முன்னாள் வைத்துக்கொள்வேன்" என்று வேண்டிக்கொண்டதால் இப்படி.

PKKT Poster

இயக்குனர்                        : 'திருமலை' கிஷோர் (முதல் படம்)
நடிகர்கள்                           : ஜித்தன் ரமேஷ், சஞ்சிதா படுகோனே, சுகாசினி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ்
ஒளி ஓவியர்                    : பன்னீர்செல்வம்
இசையமைப்பாளர்          : சக்ரி (முதல் படம்)
தயாரிப்பாளர்                    : சூப்பர் குட பில்ம்ஸ் R.B.சவுத்ரி
மொழி                                : தமிழ்


என்ன மேட்டர் படத்துல: விஜய டி.ராஜேந்தரின் பரம ரசிகனாக வரும் ரமேஷ், தங்கி இருக்கும் இடமே பிள்ளையார் தெரு கடைசி வீடு. தனக்கு மிகவும் பிடித்தமான சொர்க்கம் போன்ற அந்த வீட்டை, வீட்டில் உள்ளவர்களை காதலுக்காக பிரிந்து வாழுகிறார். அதன் பின்னணியை லிட்டர் லிட்டராக கண்ணீரை கொண்டு சொல்லும் கதையே இந்த படம்.  தன்னை அனைவரும் கிண்டல் செய்வதாக நினைக்கும் விஜய டி ராஜேந்தர், மிகுந்த கெடுபிடிக்கு பிறகே அவரது பெயரை உபயோகிக்க சம்மதித்தார். கடைசியில் படம் பார்த்தவர், ரமேஷ் கட்டிபிடித்து பாரட்டியதோடில்லாமல் தன்னுடைய அடுத்த படத்தில் ரமேஷையே ஹீரோவாக நடிக்கவும் வைத்துள்ளார். கிளைமேக்சில் ரமேஷ் 'உண்மையிலேயே' நடித்துள்ளதாக கோடம்பாக்கத்து பட்சி ஒன்று சொல்கிறது. பார்க்கலாம்.

 

03 சித்தார்த்தின் 180 நூற்றெண்பது: கடைசியாக சித்தார்த் நடித்து வந்த படம் நினைவிருக்கிறதா? ஏழு வருடங்களுக்கு முன்பு வந்த ஆயுத எழுத்து என்ற மொக்கை படமே அது. அதன் பிறகு இப்போதுதான் தமிழில் வருகிறார். அதுவும் இந்த படம் ஒரு இரு மொழி படம் (தமிழ் மற்றும் தெலுகு) என்பதாலேயே இந்த வருகை. இந்த படத்தை இயக்குபவர் பிரபல விளம்பர பட இயக்குனராகிய ஜெயேந்திரா. சுபாவுடன் இவரே கதையையும் எழுதி இருக்கிறார். சத்யம் சினிமாஸ் தயாரிக்கும் படம் என்பதால் விளம்பரங்கள் கலை கட்டுகிறது. முதலில் 180 என்று எண்ணால் மட்டுமே இருந்த படத்தின் தலைப்பு இந்த வாரம் நூற்றெண்பது என்று மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் தெலுகில் 180 என்றுதான் ரிலீஸ் ஆகிறது.

180 Poster

இயக்குனர்                        : ஜெயேந்திரா (முதல் படம்)
நடிகர்கள்                           : சித்தார்த், நித்யா மேனன், ப்ரியா ஆனந்த், மவுலி
ஒளி ஓவியர்                    : நம்ம பாலசுப்ரமணியம் (ரெட் ஒன் கேமராவுடன்)
இசையமைப்பாளர்          : மலையாள இசையமைப்பாளர் ஷரீத் (ஜூன் R பட இசையமைப்பாளர்)
தயாரிப்பாளர்                    : சத்யம் சினிமாஸ்
மொழி                                : கிட்டத்தட்ட தமிழ் & தெலுகு


என்ன மேட்டர் படத்துல: அடுத்த நூற்றெண்பது நாட்களில் இறந்துவிடுவோம் என்பதை தெரிந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் ரசிக்க ஆசைப்படும் ஒரு இளைஞனின் கதையே (ஐயையோ, அந்த 'இளைஞன்' இல்லீங்கோவ்) இந்த நூற்றெண்பது. இந்த படம் தமிழில் ஓடவே ஓடாது என்று (வழக்கம்போல) என்னுடைய நண்பரொருவர் என்னிடம் பந்தையம் கட்டியுள்ளார். பார்க்கலாம், இந்தமுறையாவது நான் ஜெயிக்கிறேனா என்று.

 

04 தெலுகு நகரம் நித்ர போதுன்ன வேல (நகரமே தூங்கும்போது): கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ரிலீஸ் ஆகும் தெலுகு படம். மார்கெட் அவுட் ஆன சார்மியும், இழந்த நட்சத்திர அந்தஸ்தை பிடிக்க போராடும் ஜகபதி பாபுவும் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் டிரைலரை பார்க்கும்போது ஒரு த்ரில்லர் படம் மாதிரியே தெரியவில்லை. ஏதோ தாதாகிரி படம் போலுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் பிரேம் ராஜ் அவர்களை ஜகபதி பாபு மிகவும் நம்புகிறார். தினசரியில் கொடுத்துள்ள விளம்பரத்தில் படத்தின் பெயரில் எழுத்துப்பிழை இருப்பதை திருத்தக்கூட நேரமில்லை வுட்லண்ட்ஸ் தியேட்டர் நிர்வாகத்தினருக்கு.

Nagaram Nidra Pothunna Vela

இயக்குனர்                        : பிரேம் ராஜ்
நடிகர்கள்                           : ஜகபதி பாபு, சார்மி, ஷாயாஜி ஷிண்டே,MS நாராயணா, பாபு மோகன்
இசையமைப்பாளர்          : யஷோ கிருஷ்ணா (யுவக்ருஷ்ணாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லீங்கோவ்)
தயாரிப்பாளர்                    : நந்தி ரெட்டி
மொழி                                : சுந்தர தெலுங்கு


என்ன மேட்டர் படத்துல: படத்தில் சார்மி பத்திரிக்கை ரிபோர்டராக வருகிறார். படத்தின் முக்கால்வாசி பகுதிகள் இரவிலேயே ஷூட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. படத்தின் முக்கியமான விஷயம் என்ன என்று விசாரித்தால் தயாரிப்பாளர் கதையையோ, நடிப்பையோ சொல்லாமல் படத்தில் சார்மி ஜகபதி பாபுவுக்கு கொடுத்த ஒரு முழு நீல நீள லிப் டு லிப் முத்தத்தையே சொல்கிறார். அதை நம்பியே எங்கள் குரூப்பில் பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

05 ஹிந்தி காமெடி படம் டபுள் தமால்: தொண்ணூறுகளில் தில், பேடா, இஷ்க் என்று தொடர்ந்து இளவயது ரசிகர்களுக்கு வெள்ளிவிழா படங்களாக வழங்கியவர் இந்திர குமார். ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் அவர் இயக்கிய படங்கள் எதுவுமே ஹிட் ஆகவில்லை. ஓரளவுக்கு சுமாராக போன படமே தமால். நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வந்திருக்கிறார் இந்திர குமார். இந்த படமாவது அவருக்கு கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக தேடிக்கொண்டு இருக்கும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அவருக்கும் ஆமிர் கானுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பை போக்க உதவுகிறதா என்று பார்க்கலாம்.

Doubls Dhamaal Poster

இயக்குனர்                        : இந்திர குமார்
நடிகர்கள்                           : சஞ்சய் தத், அர்ஷத் வார்சி, ரிதேஷ் ஜெனிலியா தேஷ்முக், மல்லிகா ஷெராவத், கங்கனா ருனாவட்

ஒளி ஓவியர்                    : அசீம் பஜாஜ்
இசையமைப்பாளர்          : ஆனந்த் ராஜ் ஆனந்த் (பாடல்கள் மற்றும் இசை)
தயாரிப்பாளர்                    : அசோக் தாகேரியா
மொழி                                : திராவிடர்கள் எதிர்த்த ஹிந்தி


என்ன மேட்டர் படத்துல: இந்த முறை பெரும் பணக்காரர் ஆன சஞ்சய் தத்திடம் இருந்து பணத்தை பறிக்க முயல்கிறார்கள் நம் விசித்திர நால்வர் குழு. அதில் இருந்து சஞ்சய் தத் எப்படி தப்பிக்கிறார் என்பதே நகைச்சுவையான இந்த படத்தின் கதை. இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு த்ரிதேவ் படத்தில் வந்த "ஒயே ஒய் - ட்ரிச்சி தொப்பி வாலே" பாடலை அனுமதி பெற்று ரீமேக் செய்துள்ளார்கள். மல்லிகா ஷெராவத் படத்தில் 'தெறம' காட்டியுள்ளதால் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அண்ணன் கா'னா கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்) கவனிக்கவும், கங்கணம், கங்கனா அல்ல).

 

06 டிஸ்னி பிக்ஸாரின் அனிமேஷன் படம் கார்ஸ் இரண்டாம் பாகம்: முதல் பாகம் வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வந்துள்ளது இந்த இரண்டாம் பாகம், அதுவும் முப்பரிமான வடிவுடன். நம்ம பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு மிகவும் பிடித்த படம் இது (அவருக்குதான் அனிமேஷன் படங்கள் என்றாலே அல்வா சாப்பிடுவது போலாயிற்றே). அனிமேஷன் படங்களுக்கு ரசித்து ரசித்து விமர்சனம் செய்யும் அவர், வழக்கம் போல இந்த முறை இந்த படத்தின் விமர்சனத்தையும் செய்வார்.

Releasing This Friday

இயக்குனர்                        : ஜான் லாசெட்டர் மற்றும் பிராட் லூயிஸ்
நடிகர்கள்                           : அனிமேஷன் படம் பாஸ், ஒன்லி குரல் மட்டுமே ஸ்டார்களுடையது
இசையமைப்பாளர்          : மைக்கேல் கியாக்கினோ
தயாரிப்பாளர்                    : வால்ட் டிஸ்னி சார்பில் டென்னிஸ் ரீம்
மொழி                                : ஒன்லி ஆங்கிலம், நோ தமிழ் டப்பிங்


என்ன மேட்டர் படத்துல: இந்த படத்தின் சிறப்பு ரெட் கார்பெட் ஸ்கிரீனிங் இப்போதுதான் முடிந்தது. படம் சூப்பர். அதுவும் கார் ரேசிங்கில் துப்பறியும் கதையமைப்பை புகுத்தி அட்டகாசம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டுமணி நேர அனிமேஷன் விருந்து இந்த படம். இதற்க்கு மேலே எதை சொன்னாலும் பயங்கரவாதி கோபித்துக்கொள்வார் என்பதால், மீத விமர்சனத்தை அவரே செய்ய ஆணையிட்டு நகருகிறேன்.

இந்த ஆறு படங்களை தவிர ராங்கோ (அனிமேஷன் படம்) மற்றும் கரிபியன் கடல் திருடர்கள் (Mock-Buster தமிழ் டப்பிங் படம்) ஆகிய இரண்டும்வேறு நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த வாரம் பார்க்க நிறைய புதிய படங்கள் வந்துள்ளது மனதிற்கு நிறைவை தருகிறது.

image

   Carribean Kadal Kolliyargal

நாளை புதிய தமிழ் படத்தின் விமர்சனத்துடன் வருகிறேன். பை தி வே, இந்த 180 படம் நாளைக்கு அல்ல, நாளை மறுநாளே ரிலீஸ் ஆகிறது. சனிக்கிழமை ராசி சத்யம் தியட்டரை காப்பற்றுமா? பார்க்கலாம்.