Recent Posts

Friday, June 10, 2011

ஆரண்ய காண்டம் : 10th June, 2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது ஆரண்ய காண்டம்! நாளை முதல் இந்தப் படம் எந்த ஒலக சினிமாவிலிருந்து சுட்டது என்று பிரபல வலைப்பதிவர்கள் பலர் ஆராய்ந்து நமக்கெல்லாம் அறிவூட்டக்கூடும்!

ஆனால் நான் அவ்வாறு செய்யப்போவதில்லை! ஏன்னா நான் ஒலக சினிமால்லாம் பார்க்கறதில்லைய்யா! அதுக்கு இதே தளத்துல இலக்கியவியாதிக்கு படிச்ச ஒலக சினிமா ரசிகரு ஒருத்தரு இருக்காரு! ஆசையாயிருந்தா அவரு கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க!

இந்தப் படத்தோட கதையை சொல்லனும்னா படத்தை அப்படியே முழுசா இரண்டு மணி நேரம் சொல்லனும்கிறதால அதையும் நான் செய்யப் போறதில்லை! 5 வெவ்வேறு திசைகளில் பயணிக்கும், ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய 5 வெவ்வேறு கிளைக்கதைகள், மற்றும் அந்தக் கதை மாந்தர்கள்! இவர்களை இணைக்கும், இவர்கள் அனைவருமே தேடும் ஒரு பொருள்! இதுக்கு மேல என்னால ஒன்னும் சொல்ல முடியாது! பரபரப்பான ஆக்‌ஷன் திரைக்கதை போலத் தோன்றுகிறது, இல்லையா?!!

திரைக்கதை என்னமோ பயங்கர பரபரப்பாகத் தான் இருக்கிறது! ஆனால் படம் ஆமை வேகத்தில்... இல்லையில்லை... நத்தை வேகத்தில் ஊர்கிறது! இயக்குனரின் பெயரைப் போலவே படமும் நீண்டு கொண்டே செல்கிறது! சென்ற நூற்றாண்டில் தூர்தர்ஷனில் ஞாயிறுக்கிழமைகளில் மதிய நேரங்களில் போடுவார்களே அவார்டு ஃபிலிம்கள்... அத்தனை வேகம்! ஒரு சொம்பு தண்ணியெடுத்து குடிக்கக் கூட பத்து நிமிஷம் எடுத்துக் கொள்கிறார்கள் படத்தில் வரும் பாத்திரங்கள்! இந்த நத்தை வேகத்தில் ஊறும் படத்தில் பல காட்சிகள் ஸ்லோ மோஷன்... இல்லையில்லை சூப்பர் ஸ்லோ மோஷனில் வேறு இருந்து பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது!

இதில் 51 சென்ஸார் வெட்டுகள் என்று வேறு பீதியைக் கிளப்புகிறார்கள்! அதையும் சேர்த்து பார்த்தவர்கள் பாவம்! சென்ஸார் வெட்டுகளுக்கான காரணம் படத்தில் வரும் கெட்ட கெட்ட வார்த்தைகள் மட்டும் காரணமா என்று தெரியவில்லை! இத்தனை வெட்டுக்களை மீறியும் படத்தில் இத்தனை பச்சையான கெட்ட வார்த்தைகள் வருவது ஆச்சரியமாக உள்ளது! இதில் ஜாக்கி ஷ்ராஃப் வேறு தள்ளாத வயதில் அம்மணமாக வந்து கவர்ச்சி காட்டுகிறார்! என்ன வாழ்க்கைடா இது?!!

படத்தில் காட்டப்படும் பாவா லாட்ஜ் என்ற பெயரில் சென்னை பெரியமேட்டில் உண்மையிலேயே ஒரு பிரபல லாட்ஜ் உள்ளது! அது 7 ஸ்டார் ஹோட்டல் இல்லையென்றாலும் படத்தில் காட்டப்படும் அளவிற்கு மொக்கையாக இருக்காது! பாவா லாட்ஜ் உரிமையாளர்கள் விரும்பினால் படத்தயாரிப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கலாம்!

ஒளிப்பதிவு பற்றி சொல்லவே வேண்டாம்! மணிரத்னமே இருட்டில் படமெடுப்பதை விட்டு விட்டார்! ஆனால் இந்தப் படத்தை கும்மிருட்டிலேயே எடுத்திருக்கிறார்கள்! வசனங்களும் காதில் சரியாக விழவில்லை! ஜாக்கி ஷ்ராஃப்புக்கு தமிழ் தெரியாதுதான், ஒகே! பல் துலக்கிக் கொண்டே வாயில் நுரையை வைத்துக் கொண்டு அவர் பேசும் ஆரம்பக் காட்சியைப் பார்த்து விட்டு சரி, அடுத்த காட்சியிலாவது தெளிவாகப் பேசுவார் என்று எதிர்பார்த்தால்... படம் முழுவதும் அப்படித்தான் பேசுகிறார்! டப்பிங் கொடுத்தவரின் புண்ணியத்தால்! 

ரவிக்கிருஷ்ணாவுக்கு இது ப்ரேக்-த்ரூ படமாக அமையுமென்று பயங்கர பில்ட்-அப்! ஆனால் அவர் எப்போதும் போல, அவரது பாத்திரத்தின் பெயருக்கேற்ப சப்பையாகத்தான் இருக்கிறார்! ஒரு வேளை அதனாலத்தான் அவர நடிக்க வெச்சாங்களோ?!!

படத்தில் ஆறுதலான ஒரே விஷயம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை! படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை (அப்பாடா!) எனினும் பிண்ணனி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார்! அந்த அப்பாவுக்கும் மகனுக்கும் அவர் போட்டிருக்கும் தீம் மியூசிக்கும், வில்லன் அறிமுகத்திற்கு அவர் போட்டிருக்கும் தீம் மியூசிக்கும் அமர்க்களம்! அப்படியே அவரது தந்தையை நினைவூட்டுகிறார்! புலிக்கு பிறந்தது பூனையாகுமா?!!

படத்தில் ரசிக்கத்தக்க இன்னொரு விஷயம் பிண்ணனியில் ரேடியோவிலும், டிவியிலும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் 80களின் டிஸ்கோ பாடல்கள்! ரீமிக்ஸ் போட்டுக் கொல்லாமல் ஒரிஜினல் பாடல்களை படத்துக்கு ஏற்றவாறு ஒலிக்க விட்டிருப்பது வரவேற்கத்தக்கது!

கதைக்கு துளியும் சம்பந்தமில்லாத ஆனால் ரசிக்க வைத்த காட்சி! வில்லனுக்கு ஜோசியம் பார்க்க வரும் 5 ஸ்டார் கிருஷ்ணா மனதில் ஏதாவது இரண்டு பூக்களை நினைக்க சொல்லிவிட்டு மல்லிப்பூவும், ரோஜாப்பூவுமா என்று கேட்கிறார்! அதற்கு வில்லன் கூறும் பதிலுக்கு தியேட்டரில் செம அப்ளாஸ்!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:


2/6 தோட்டாக்கள்!
ஒலக சினிமா ரசிகர்களுக்கு மட்டும்!

பயங்கரவாதியின் பன்ச்:

ஆரண்ய காண்டம்! தியேட்டரில் கண்டம்!

ட்ரைலர்:

5 comments:

King Viswa said...

//ஏன்னா நான் ஒலக சினிமால்லாம் பார்க்கறதில்லைய்யா! அதுக்கு இதே தளத்துல இலக்கியவியாதிக்கு படிச்ச ஒலக சினிமா ரசிகரு ஒருத்தரு இருக்காரு! ஆசையாயிருந்தா அவரு கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க!//

அது நான் இல்லீங்கோவ். இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லீங்கோவ்.

Siva - Always at the top of the world said...

மக்களே இந்த படம் மேதுவாகம் போகும் படம் தான், அனால் இதில் ரசிக்க வைக்கும் எதேனையோ விஷயங்கள் இர்ருக்கு. ஒரு நல்ல சினிமா ரசிகருக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்து.

MSK / Saravana said...

உங்களுக்கு இந்த படம் பிடிக்கலயா தல?

Anonymous said...

கழூதைக்கு தெரியுமா கற்புர வாசனை, அதுவும் இல்லாமல் நீ ஒரு சொட்டக் கழூதை.

அண்ணன் க'னா said...

இதுபோன்ற உலக சினிமாக்களை எல்லாம் வரவேற்கவில்லை என்றால் அப்புறம் நல்ல சினிமா வர்றது எப்புடி?

Post a Comment