Friday, December 23, 2011

MISSION: IMPOSSIBLE - ரகசிய வரைமுறை - 16.12.2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,


ஜேம்ஸ்பாண்ட் பாணி உளவாளி கதைகள் பெருவெற்றி பெற்றிருந்த காலம் 1960கள்! அப்போது தொலைக்காட்சித் தொடராக ஆரம்பித்த மிஷன் இம்பாசிபிள் மாபெரும் வெற்றியடைந்தது! அதன் வெற்றிக்கு லாலோ ஷிஃப்ரின் இசையமைத்த தீம் மியூசிக் மிகப்பெரிய காரணம்! பின்னர் 1996ல் டாம் க்ரூஸ் நடிப்பில் திரைப்படமாக வந்தது! அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட தொடர்ந்து படங்கள் வந்த வண்ணமிருந்தன!


மிஷன் இம்பாசிபிள் பட வரிசையின் மிகப் பெரிய ரசிகன் நான் இல்லை! இருப்பினும் அவாரிசைப் படங்கள் எப்போதுமே ஜனரஞ்சக வெற்றியில் சோடை போனதில்லை! ஆகையாலேயே இந்த நான்காம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது!


கதை:


வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் பாணி கதைதான்! ரஷ்ய அணு ஆயுதங்களை முடக்கி விடக்கூடிய ரகசிய கோட்-ஐ ஒரு தீவிரவாதி கைப்பற்றி விடுகிறான்! பழியோ அமெரிக்க உளவாளிகளான ஈதன் ஹண்ட் (டாம் க்ரூஸ்) குழுவின் மீது விழுகிறது! ஆகையால் அவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறையிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்காத நிலை உருவாகிறது!

பிறகு ஈதன் ஹண்ட் குழுவினர் ரஷ்யா, துபாய், இந்தியா என்று ஊர் சுற்றி சாகஸம் செய்து உலகை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தான் கதை!


சுவாரசியமான துணுக்குகள்:
 • வழக்கமாக மிக சீரியஸாக செல்லும் ஆக்‌ஷன் பட வரிசையான மிஷன் இம்பாசிபிள் தொடரில் இப்படம் ஒரு வரவேற்கத் தக்க மாற்றம்! படம் முழுக்க விரவிக் கிடக்கும் சுய நையாண்டி படத்தின் மிகப் பெரிய பலம்! மிஷன் இம்பாசிபிள் படங்கள் என்றாலே ஒரு சில குறிப்பிட்ட காட்சிகள் ஃபார்மூலா போல் எல்லா படங்களிலும் வரும்! அவை அனைத்தையுமே இப்படத்தில் நக்கல் செய்து விதிமுறைகளை மீறியுள்ளனர்! ஜேம்ஸ்பாண்ட் பட வரிசை ஏன் போரடிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! புதிதாக எதுவுமே முயற்சிப்பதில்லை!
 • மிஷனை விளக்கும் ஆரம்பக் காட்சியில் ரகசிய தகவல் வழங்கிய பின் அந்த டேப் வெடித்துச் சிதறுவது வழக்கம்! இப்படத்தில் அதுவும் கிண்டலுக்குள்ளாக்கப் பட்டுள்ளது! 
 • மிஷன் இம்பாசிபிள்  படங்களில் வழக்கமாக ஹீரோதான் மாஸ்க் அணிந்து சென்று வில்லன்களின் பாசறையில் நுழைந்து சாகஸம் செய்வார்! இதில் கடைசி வரை ஹீரோ மாஸ்க் அணிய முடியாமல் போகிறது! ஆனால் வில்லன் மாஸ்க் போட்டு ஹீரோவை ஏமாற்றி விடுகிறார்!
 • டாம் க்ரூஸிற்கு வயது ஏறவே ஏறாதோ?!! இன்னும் இளமை பொங்க வலம் வருகிறார்! ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் டூப் போடாமலே நடித்து அசத்தியுள்ளார்!
 • அந்த துபாய் ஸ்டண்ட் காட்சிகள் மயிர் கூச்செரிய வைக்கும் ரகம்! படத்தின் ஹை-லைட்டே அதுதான்! அற்புதம்! அற்புதம்!
 • ஆனால் அதற்கு பிறகு வரும் மணல் புயல் சண்டையும், இந்தியக் காட்சிகளும் சற்றே போர் அடிக்கின்றன!
 • அணில் கபூர் ஒரேயொரு காட்சியில் மட்டும் காமெடி பீஸாக வருகிறார்! இதற்கு இவருக்கு டாம் க்ரூஸுக்கு இணையாக பில்டப் போஸ்டர் வேறு! அவர் வரும் காட்சி மொக்கையோ மொக்கை!
 • மும்பை என்று சொல்லி விட்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் முழுவதையும் பெங்களூருவில் எடுத்துள்ளனர்! பெங்களூரு சன் டிவி ஆபீசும் முக்கிய காட்சியில் வருகிறது! இதனாலேயே இரண்டாம் பாதி காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
நிறைகள்:
 • டாம் க்ரூஸ்!
 • மயிர்கூச்செரிய வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்!
 • படம் நெடுக விரவிக் கிடக்கும் நையாண்டி தொணி!
குறைகள்:
 • அணில் கபூர்!
 • மணல் புயல் காட்சி!
 • இந்தியாவில் படமாக்கப் பட்ட காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

4/6 - நான்கு தோட்டாக்கள்!
ஒரு கட்டை விரல் மேலே!

ஆக்‌ஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!

ட்ரைலர்:

Thursday, December 22, 2011

PUSS IN BOOTS (3D) - 02.12.2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

ஷ்ரெக் அனிமேஷன் பட வரிசையின் மிகப் பெரிய ரசிகன் நான்! அதில் சைடு ஹீரோவாக வரும் பூடிஸ் கால் பூனையின் (PUSS IN BOOTS) சாகஸங்கள் தனி திரைப்படமாக வரப்போகிறது என்ற அறிவித்த முதலே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது! ஒரு வழியாக மிகத் தாமதமாக பார்த்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே பதிவிடத் தூண்டியது! நீண்ட நெடுநாட்கள் கழித்து இவ்வலைப்பூவை உயிரூட்ட இதுவே காரணம்!

கதை:

பூடிஸ் கால் பூனை,  ஜாக்கும் மந்திர அவரைக்கொடியும்,  ஹம்டி டம்டி, ஜாக்கும் ஜில்லும், தங்க முட்டையிடும் வாத்து, கதை சொல்லும் அம்மா வாத்து முதலிய தேவதைக் கதைகளையும், பாலகர் பாடல்களையும் காமெடியுடன் கலந்து கட்டி அடித்து விட்டால் அதுதான் கதை!

சுவாரசியமான துணுக்குகள்:
 • அண்டோனியோ பண்டெராஸ், சல்மா ஹயெக், பில்லி பாப் தார்ண்டன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்திற்கு குரல் கொடுத்துள்ளனர்!
 • முதலில் இப்படம் DIRECT-TO-VIDEOவாகத்தான் வெளிவரவிருந்தது! ஆனால் ஷ்ரெக் தொடரின் வெற்றியினால் இது முழு நீள 3D திரைப்படமாக வெளிவந்து நமக்கெல்லாம் விருந்தளித்துள்ளது! 
 • குங்ஃபூ பாண்டா 2 பெரு வெற்றியைத் தொடர்ந்து ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு SURE-FIRE WINNER இப்படம்! டிஸ்னியெல்லாம் இனி ரொம்பவே கஷ்டப் பட வேண்டியிருக்கும்! இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன்!
 • NO COMMENTS!

தியேட்டர் டைம்ஸ்:
 • கோவையில் ப்ரூக்ஃபீல்ட் ப்ளாசாவில் புதிதாக துவங்கப் பட்டுள்ள thecinema திரையரங்கில் இப்படத்தை 3Dல் கண்டு களித்தேன்!
 • தினசரி மாலை 4:30 மணிக்கு ஒரேயொரு காட்சி மட்டுமே இப்படம் திரையிடப்பட்டிருப்பதால் அரங்கம் நிறைந்திருந்தது!
 • 3D அதியற்புதமாக இருந்தது! இதுவரை கோவை கனகதாரா தியேட்டரில் இத்துனூண்டு ஸ்கீரினில் மொக்கை 3Dல் படம் பார்த்துவிட்டே ‘ஆஹா! ஓஹோ!’ வென புகழ்ந்து கொண்டிருந்த எனக்கு இந்த அனுபவம் ஒரு EYE-OPENER! 
 • சத்யம் நிறுவத்தின் ஒரு அங்கம்தான் thecinema! மொத்தம் ஆறு திரையரங்குகள்! சத்யம் நிறுவனத்தினரின் தரம் காய்ந்து போய் கிடக்கும் கோவை வாசிகளுக்கு வரப்பிரசாதம்!
 • சென்னையில் 3D திரையரங்குகளில் வழக்கமாக முதல் மற்றும் கடைசி மூன்று வரிசைகள் காலியாகவே விடப்பட்டிருக்கும்! பார்வாயாளர்களின் வசதிக்காக இப்படியொரு ஏற்பாடு! ஆனால் கோவையில் முதல் வரிசையிலும் மக்கள் அமரவைக்கப் பட்டிருப்பது ஆச்சரியமளித்தது!
 • பக்கத்து சீட்டில் ரெண்டு பொடியன்கள் அமர்ந்து செம கூத்து அடித்துக் கொண்டிருந்தனர்! கொறிப்பதற்கு வேறு ஏகப்பட்ட அயிட்டங்களை திரையரங்கினுள்ளேயே ஆர்டர் செய்து படம் முடியும் வரை தின்றே தீர்த்தனர்! இதில் ஒருவன் கண்ணாடியை வேறு தொலைத்து விட்டு இடைவேளை வரை இருட்டில் தேடிக் கொண்டேயிருந்தான்! படத்தை பார்த்து ரசிப்பதா, இவர்களை கண்டு சிரிப்பதா என்றே தெரியவில்லை?!!
நிறைகள்:
 • எல்லாமே
குறைகள்:
 • ஒன்றுமேயில்லை!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:


6/6 - ஆறு தோட்டாக்கள்!

இரண்டு கட்டை விரல்கள் மேலே!

அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்! அதுவும் நிச்சயம் 3Dல்!

பயங்கரவாதியின் பன்ச்: PUSS IN BOOTS - இந்தப் பூனை பீரையும் குடிக்கும்!

ட்ரைலர்: