Sunday, February 12, 2012

ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்

வணக்கம். 

என்னதான் ஹாலிவுட்டில் வந்த பிரம்மாண்டமான படமாக இருந்தாலும் சரி, அதனை தமிழில் டப்பிங் செய்யப்பட்டபின் பார்க்கும் சுகமே அலாதி. அதனால்தான் எங்கள் மொக்கை ஃபில்ம் கிளப்பில் டப்பிங் படங்களுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. சமீப காலமாக டப்பிங் (மொழிமாற்று) திரைப்படங்களுக்கு பெயர்போன ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் (மோசமான சவுண்ட் குவாலிடி காரணமாக) படம் பார்க்கவே பயமாக இருப்பதால், எந்த ஒரு ஆங்கில மொழி மாற்று படங்களையும் பார்க்க இயலவில்லை. கடைசியாக மனதை தேற்றிக் கொண்டு பார்த்த படமாகிய "அன்டர்வேர்ல்ட்" படத்தையும் மறுபடியும் ஆங்கிலத்தில் பார்த்தே புரிந்துகொள்ள வேண்டி இருந்ததால், விஷப்பரிட்சைகளை மேற்கொள்ளவில்லை. 

ஆனால் இந்த ஜர்னி டு தி மிஸ்டீரியஸ் ஐலேன் படத்தின் விளம்பரங்களும், போஸ்டரும் மிகவும் கவர்ந்து விட்டதால், வெள்ளிக்கிழமை அன்றே மொக்கை ஃபில்ம் கிளப் உறுப்பினர்களுடன் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அதுவும் ராயப்பேட்டை வுட்லேண்ட்ஸ் தியேட்டரில் தமிழில் 3டி வசதியுடன் இந்த படம் வெளிவந்து இருப்பது மற்றுமொரு சிறப்பு. அதுவுமில்லாமல் இந்த படத்தை ருத்ரபூமி என்ற பெயரில் வெளியிட்ட புண்ணியவான்கள் அதற்க்கு பன்ச் லைனாக "வெற்றியோடு வருகிறான் வெளிநாட்டு கோச்சடையான்" என்று வேறு தனியாக போட்டு விளம்பரம் செய்தார்கள். ஆனால் சென்னைக்கு வெள்ளியன்றுதான் திரும்பிய நான், வழக்கம்போல ஒரு அரசாங்க ஆணியை புடுங்க வேண்டி இருந்ததால் வெள்ளியன்று மாலை மொக்கை ஃபில்ம் கிளப் உறுப்பினர்களுடன் செல்ல இயலவில்லை. சனிக்கிழமை அன்றுதான் பார்க்க முடிந்தது. 

Journey To The Myesterious Island படத்தின் பின்னணி: நான்கு வருடங்களுக்கு முன்பாக ஜர்னி டு தி செண்டர் ஆப் தி எர்த் என்கிற படம் வந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். மம்மி சீரிஸ் புகழ் பிரெண்டன் பிரேசர் நடித்து பங்கேற்ற படமாகிய அதன் தொடர்பில்லாத இரண்டாம் பாகமே இந்த படம். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு கேட்ஸ் & டாக்ஸ் படத்தை இயக்கிய பிராட் பெய்டன் தான் இந்த படத்தின் இயக்குனர். ஆனால் இந்த படத்தில் பிரெண்டன் பிரேசர் நடிக்காததால், அவருக்கு பதிலாக WWF புகழ் ராக் (ட்வெய்ன் ஜான்சன்)ஐ நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்தனர் தயாரிப்பாளர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வால்ட் டிஸ்னி தயாரித்த ரேஸ் டு தி விட்ச் மவுண்டன் படத்திலும் இதுபோலவே டீனேஜ் சிறுவர்களின் சாகசத்திற்கு துணை போகும் கேரக்டரில் ராக அசத்தி இருப்பார். அதனால் அவரை இந்த படத்திற்கு புக் செய்தனர். 

படத்தின் கதை: ராக் எலிசபெத் ஆண்டர்சனை மறுமணம் செய்துக்கொள்கிறார். எலிசபெத்தின் டீனேஜ் மகன் ஷானுக்கு ராக்கை பிடிக்கவே பிடிக்காது. அனாலும் ராக் அவன் மீது அன்பு செலுத்துகிறார். ஷானின் தாத்தா (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போனவர்)  ஒரு விஞ்ஞானி. அவரை தேடிக்கொண்டு இருக்கிறான் ஷான். ஒரு நாள் திடீரென்று அவனுக்கு ஒரு சாட்டிலைட் சிக்னல் வருகிறது. மிகவும் இலேசாக கிடைக்கும் அந்த சிக்னல் தன்னுடைய தாத்தா அனுப்பியது என்று நம்பும் ஷான், அந்த சிக்னலை தெளிவாக பெற அரசாங்க சாட்டிலைட் ரிசர்ச் சென்டரின் உள்ளே அனுமதியின்றி நுழைந்து அந்த சிக்னலை தெளிவாக பெற்று விடுகிறான். அப்போது போலிஸ் அவனை துரத்தி பிடித்து விடுகின்றனர். ஆனால் போலிஸ் அதிகாரி ராக்கின் நண்பர் என்பதால் ஷானை வெறும் எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறார்.

வீடு திரும்பும் ஷானை ராக் விசாரிக்கிறார். பின்னர் அந்த சிக்னலை டீ-கோட் செய்ய உதவுகிறார். அதன் மூலம் ஒரு மர்ம தீவு ஒன்று இருப்பதையும் அதில் இருந்து தான் அந்த சிக்னல் வந்து இருப்பதையும் கண்டுபிடித்து அங்கே சென்று ஷானின் தாத்தாவை மீட்டு வர முடிவெடுக்கின்றனர். அதன்படி தனியார் ஹெலிகாப்டர் வைத்து இருக்கும் கபாடோ மற்றும் அவரது மகள் கிலானி உடன் நால்வர் அணியாக அந்த மர்ம தீவை நோக்கி செல்கின்றனர். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களை தயவு செய்து வெள்ளித்திரையில் (மட்டுமே) கண்டு ரசிக்கவும். 

நிறைகள்:

 • என்னைபோன்ற பேன்டசி, புதையல் வேட்டை கதைவரிசைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் ஸ்டீவன்சனின் டிரஷர் ஐலேண்ட், ஜோனதன் ஸ்விப்ட் இன் கலிவரின் டிராவல்ஸ் மற்றும் ஜூல்ஸ் வெர்னேவின் மிஸ்டீரியஸ் ஐலேண்ட் ஆகிய மூன்று புதினங்களையும் ஒருங்கிணைத்த ஒரு பிளாட், இந்த கதைக்கு அடித்தளமாக இருப்பது ஒரு பெரிய பிளஸ்.
 • 1960ல் இருந்து 2000 வரையிலான ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். அதில் ஒருவர் எனக்கு பிடித்த நடிகர் மைக்கேல் கெய்ன். அவர் தான் இந்த படத்தில் ஷானின் தாத்தாவாக வருகிறார். அவரது நகைச்சுவை கலந்த நடிப்பும், கிண்டலான வசனங்களும் படத்தின் வெற்றிக்கு காரணம்.
 • பல இடங்களில் படத்தின் வசனங்கள் பளிச்சிடுகின்றன. பின்னர் ஆங்கிலத்தில் பார்க்கும்போதும் ஒரிஜினல் வசனங்கள் நகைச்சுவையுடன் இருந்தது புரிந்தது. ஆனால் மகதீரா தெலுங்கு வசனங்களை தமிழில் மொக்கையாக்கிய பாக்கியராஜ் போல இல்லாமல் இந்த மொழி மாற்று வசனங்கள் சிறப்பாகவே உள்ளன.
 • நண்பர் இரவுக் கழுகு பல இடங்களில் 3டி அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கையில் பின்னே நகர்ந்தார். சில இடங்களில் திடீரென்று மிருகங்கள் நம்மை நோக்கி பாய்வது போல இருப்பதும், தங்கத்துகள் நம் மீதே விழுவது போல் இருப்பதும் 3டியின் வெற்றிக்கு சாட்சிகள்.
 • க்ளைமாக்ஸ்! இந்த படத்தின் முடிவில் டைட்டில் கார்ட் போடும்போது பல மேக்கிங் ஆப் தி மூவி ஷாட்டுகள் மற்றும் சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. முழுவதும் இருந்து பாருங்கள். அதுவும் குறிப்பாக அந்த மினியேச்சர் யானைகள் நீச்சல் அடிப்பது ஒரு செம சீன்.

குறைகள்:

 • படம் முழுக்க அநியாயத்திற்கு ஏகப்பட்ட கிளிஷேக்கள், ஸ்டீரியோடைப்புகள். இயக்குனர் பல ஷாட்டுகளை எப்படி வைக்கப்போகிறார் என்று நண்பர்  இரவுக்கழுகு எனக்கு முன்கூட்டியே சொல்லிக்கொண்டு இருந்தார். அவர் சொல்லியபடியே இருந்தது.
 • At best, இது ஒரு B-Grade படம் என்பதால் லாஜிக் குறைகளையும், டைரக்ஷன் ஓட்டைகளையும் மறந்து விடுவது நலம்.
 • க்ளைமாக்ஸ்க்கு அடுத்து இன்னுமொரு க்ளைமாக்ஸ் வைத்து மூன்றாம் பாகத்திற்கு பிட்டு போடுவது.

தியேட்டர் டைம்ஸ்:

 • வுட்லேண்ட்ஸ் தியேட்டரில் இந்த படம் என்று எதிர்பார்த்து சென்றால் வுட்லேண்ட்ஸ் சிம்பொனி என்கிற சிறிய தியேட்டரிலேயே இந்த படம் ஓடுகிறது. சிறிய தியேட்டர். ஆனால் ஹவுஸ்புல் ஆகவே செல்கிறது.
 • 85 ரூபாய்க்கு தமிழில் 3டி படம் என்பது ஓக்கேதான் என்றாலும் அது வுட்லேண்ட்ஸ் சிம்பொனியின் சின்ன திரையில் பார்ப்பது சற்றே கடினமாக இருக்கிறது. பெரிய சைஸ் டிவி போல இருக்கிறது என்று நண்பர் இரவுக் கழுகு கமென்ட் அடித்தார்.
 • ஆனால் பெரிய திரையை கொண்ட பைலட் தியேட்டரில் சவுண்ட் ஒரு மிகப்பெரிய பிரச்சினை. ஆனால் இங்கே சவுண்ட் மிகவும் துல்லியமாக கேட்கிறது.
 • 3டி கண்ணாடி வாங்கும்போது பார்த்து வாங்குங்கள். பல கண்ணாடிகள் உடைந்தே இருக்கின்றன. நாம் கவனமாக கண்ணாடி கவரை அங்கேயே பிரித்து பார்த்து செக் செய்து வாங்கி செல்வது நலம்.
 • தியேட்டரில் இடைவெளி முடிந்த பின்னர் மணி அடித்தோ அல்லது ஒலிஎழுப்பியோ அறிவிப்பார்கள். ஆனால் இங்கே அப்படி எதுவுமே இல்லை. பெரும்பாலானவர்கள் இடைவேளை முடிந்தவுடன் சில ஆரம்ப காட்சிகளை மிஸ் செய்து விட்டார்கள்.
 • வழக்கம் போல இங்கேயும் இடைஞ்சலாக ஒரு கும்பல் வந்து சேர்ந்தது. வெள்ளை வேட்டியில் வந்த ஒரு பெரிசு படம் படத்தின் முக்கிய காட்சிகளில் பொறுப்பாக செல் போனில் கடோத்கஜ குரலில் பேச ஆரம்பித்துவிட்டார். பக்கத்தில் இருப்பவர்களை பற்றி கொஞ்சமும் அசரவில்லை.
 • அந்த பெருசைக்கூட பொறுத்துக்கொள்ளலாம் என்றால் பின்னால் இருந்த ஒரு குடும்பத்தின் அட்டகாசங்களை தாங்கமுடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து குழந்தைகளுடன் வந்து அவர்களே பேசிக்கொண்டு இருந்தார்கள். முன் இருக்கையில் இருப்பவர்கள் மீது பாப் கார்ன் வீசுவது, முன் இருக்கையின் மீது காலை போடுவது என்று கொடுமைகள் ஓராயிரம்.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 

3 Bullets

3/6 மூன்று தோட்டாக்கள்! பொழுதுபோக்கு படம்.

 

சாவியின் பன்ச்: ஜர்னி டு-கண்டிப்பாக தியேட்டருக்கு ஒரு முறை ஜர்னி போகலாம்.                

ட்ரைலர்:

Friday, February 10, 2012

தியேட்டர் டைம்ஸ்-10th Feb 2012 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம் Part 1

ப்ரிய தோழமைக்கு, ஒரு அருமையான திரைப்படம் ஏற்படுத்தும் உணர்வானது நெடுநாள் பிரிந்த நல்ல சிநேகிதத்தை மீண்டும் சந்தித்தமைக்கு சமம். அவ்வாறே இந்த வாரமும் திரைக்கு வரும் படங்களில் நல்ல சிநேகிதம் கிட்டுமா என்ற கேள்வியுடன் இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன்.நம்பிக்கையே வாழ்க்கையெனும் செயலுக்கு வினையூக்கியாக இருப்பதைப்போல, நானும் நம்பிக்கையுடன் இந்த வாரத்தில் திரைக்குவரும் படங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

வழக்கம் போல ஆரம்பிக்கலாம் என்று நினைத்துதான் ஆரம்பித்தேன். ஆனால் காலச்சுவடு, தீராநதி போன்ற இலக்கிய(வியாதி) புத்தகங்களை ஒரு நோக்கு நோக்கியதால் இப்படி தானாகவே டைப் ஆகி வந்துவிட்டது. மன்னிக்கவும். இனிமேல் அந்த புத்தகங்களை ஏறேடுத்துகூட பார்க்ககூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். அதுவுமில்லாமல் நான் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதனை நானே மதிப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்தானே?

இந்த வெள்ளிக்கிழமை மட்டும் பத்து படங்கள் (அல்லது பதினொன்றா?) ரிலீஸ் ஆகிறது. பத்தாம் தேதி என்பதால் பத்து படம் ரிலீஸ் ஆகிறதா என்று நியூமராலஜிப்படி கேட்க்க தோன்றியது. கட்டுப்படுத்திக்கொண்டேன்.

01: தோனி* (நாட் அவுட்): சிக்ஷானச்ச ஐச்சா கோ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு மராத்திப்படத்தின் ரீமேக் தான் இந்த தோனி படம் என்று ஒரு உறுதிப்படுத்தாத தகவல். அந்த மராத்திப்படம் ஆரம்பம் முதலே பல சிக்கல்களில் சிக்கியது. மராத்தி தெரியாதவர்களுக்கு: சிக்ஷானச்ச ஐச்சா கோ என்றால் "இந்த கல்விமுறை நாசமாகப்போக" என்று அர்த்தம் கொள்ளலாம். முதல் முறையாக தமிழில் பிரகாஷ்ராஜ் இயக்கம் படம் என்பதாலும், டூயட் மூவீஸ் மேல் மக்களுக்கு ஒரு நல்ல மரியாதை இருப்பதும் எதிர்ப்பார்ப்புக்கு காரணம்.

Dhoni pOSTER

 • படம் பெயர் : தோனி நாட் அவுட்
 • இயக்குனர்: பிரகாஷ் ராஜ் 
 • நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், ஆகாஷ் பூரி (பூரி ஜகன்னாத் மகன்), தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம், ராதிகா ஆப்டே, பிரபுதேவா (கௌரவ  தோற்றம்)
 • பட ஜானர்: குணசித்திரம்
 • தயாரிப்பாளர்: டூயட் மூவீஸ் பிரகாஷ் ராஜ் 
 • இசை இயக்குனர்: இசைஞானி இளையராஜா 
 • மொழி:  தமிழ் மற்றும் தெலுகு 
 • என்ன மேட்டர் படத்துல: இப்போதுதான் நண்பர்கள் படத்தின் மூலம் தற்போதைய கல்வி முறையை சாடி ஒரு படம் வந்தது. இந்த படம் கூட கிட்டத்தட்ட அதே சாயலில் கல்விமுறையை எதிர்த்து வந்துள்ள ஒரு படம். குறிப்பாக பள்ளி மாணவர்கள் என்னமாதிரி மன அழுத்தத்தை உணருகிறார்கள் என்றும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை பற்றியும் அலசும் ஒரு படம் தோனி.

02 ஒரு நடிகையின் வாக்குமூலம்: படத்தின் பெயரும் போஸ்டர் டிசைனும் "ஒரு மாதிரி"யாக இருந்தாலும் படத்தின் இயக்குனர் ராஜ் கிருஷ்ணா படம் அப்படிப்பட்டதல்ல என்று விளக்கமாக கூறுகிறார். பலவருட போராட்டங்களுக்கு பிறகு இயக்கம் படம்,அதனை "ஒரு மாதிரி" படம் எடுத்து கெடுத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். இந்த படத்தின் மூலம் சோனியா அகர்வால் செல்வராகவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க போவதாக பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

Oru Nadigaiyin Vaakkumooolam

 • படம் பெயர் : ஒரு நடிகையின் வாக்குமூலம்
 • இயக்குனர்: ராஜ் கிருஷ்ணா
 • நடிகர்கள்: சோனியா அகர்வால், கோவை சரளா,கஞ்சா கருப்பு, மனோ பாலா
 • பட ஜானர்: சோசியல் டிராமா 
 • தயாரிப்பாளர்: Ayangaran + SG Movies புன்னகை பூ கீதா 
 • இசை இயக்குனர்: ஆதிஷ்    
 • மொழி: தமிழ் 
 • என்ன மேட்டர் படத்துல: ஒரு பெண் நடிகையாவதர்க்கு என்னென்ன "தியாகங்கள்" செய்ய வேண்டியுள்ளது என்றும், திரைத்துறையில் உள்ள அவலங்களை தோலுரித்து காட்டும் ஒரு படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் திரைக்கதையை சரியான முறையில் கையாண்டால், தி டர்டி பிக்சர் போல ஒரு ஜாக்பாட் அடிக்கவும் வாய்ப்புண்டு.
 • 03 விளையாட வா: கேரம் போர்ட் விளையாடுவது எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பதின்ம வயது முதல் முப்பது வயது வரை அனைவருக்குமே ஒரு விருப்பமான விளையாட்டாக இருந்து வந்தது. கேபிள் டிவி மற்றும் விடியோ கேம்ஸ் வந்ததில் இருந்து இந்த விளையாட்டு மங்க ஆரம்பித்து விட்டது. இப்போது ஆட்டோ ஸ்டாண்டில் மற்றும் கிளப்புகளில் மட்டுமே விளையாடும் ஒரு ஆட்டமாக இருக்கிறது. தமிழில் விளையாட்டை வைத்து வந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வகையில் இந்த படம் முழுக்க முழுக்க கேரம் போட விளையாட்டை மைய்யமாக கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாய்ஸ் சித்தார்த் நடித்து ஒரு படம் வந்து காணாமல் போய் விட்டது. இந்த படமாவது ஓடுமா என்பதை பார்ப்போம்.

  Vilaiyaada Vaa

 • படம் பெயர் : விளையாட வா 
 • இயக்குனர்: விஜைய நந்தா 
 • நடிகர்கள்: விஸ்வநாத் பாலாஜி, திவ்யா பத்மினி, பொன்வண்ணன், ஐஸ்வர்யா, லட்சுமி ராமகிருஷ்ணன், மனோபாலா, லிவிங்க்ஸ்டன், மயில்சாமி, சார்லி
 • பட ஜானர்: விளையாட்டு சோசியல் டிராமா 
 • தயாரிப்பாளர்: திரிபுர சுந்தரி சினி கிரியேஷன்ஸ்
 • இசை இயக்குனர்: கமலேஷ் குமார்
 • மொழி: தமிழ் 
 • என்ன மேட்டர் படத்துல: ஆதரவில்லாத நாயகன் விஸ்வநாதன் பாலாஜிக்கு பொன்வண்ணன் அடைக்கலம் கொடுத்து, கேரம் விளையாட்டையும் கற்றுக்கொடுக்கிறார்.நாயகன் கேரம் விளையாட்டில் எப்படி வெற்றிப்பெற்று, சாம்பியனாகிறார் என்பதே விளையாட வா திரைப்படத்தின் திரைக்கதையாகும்.
 • 04 ஒரு மழை நான்கு சாரல்: புதுமுகங்கள் ரவி, சுதர்ஷன், கணா, சதீஷ் ஆகிய நான்கு பேருடன் அனகா மற்றும் ரம்யா இணைந்து நடித்திருக்கும் படம் ‘ஒரு மழை நான்கு சாரல்’. தமிழ் இலக்கண விதிமுறைகளுக்கு மாறாக இப்படத்தின் தலைப்பு அமைந்திருப்பதாக சிலர் குறை கூறினாலும் திரையுலக இலக்கத்தின்படி தனது படைப்பு தரமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஆனந்த். இந்த படத்தின் ஆடியோ விழா சென்ற ஆண்டு ஜூன் மாதம் நடந்த போதே மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்து விட்டது. சற்றே தாமதமாக ரிலீஸ் ஆகிறது இந்த படம்.

  1 Mazhai 4 Saaral

 • படம் பெயர் : ஒரு மழை நான்கு சாரல் 
 • இயக்குனர்: ஆனந்த் 
 • நடிகர்கள்: ரவி, சுதர்ஷன், கணா, சதீஷ், அனகா, ரம்யா, ஆக்ஷன் பிரகாஷ், சிங்கமுத்து
 • பட ஜானர்: காதல் என்கிற மென்மையான உணர்வை வெளிப்படுத்தும் காவியம் 
 • தயாரிப்பாளர்: சிகே3 புரொடக்ஷன் - பத்ரி (நம்ம பத்ரி இல்லீங்கோவ்) நாராயணன் 
 • இசை இயக்குனர்: A.D.மேஹன் 
 • மொழி: தமிழ் 
 • என்ன மேட்டர் படத்துல: சோகம் என்பதையே அறியாத ரெண்டு பேரும், சோகத்தை தவிர வேறெதையும் அறியாத ரெண்டு பேரும் சந்திக்கிறார்கள். நட்பை மட்டுமே உறவாக கொண்ட இந்த நாலு பேரும் தங்கள் லட்சிய போராட்டத்தை ஆரம்பிக்க, இவர்களில் ஒருவருக்கு வருகிறது லவ். (அந்த பொண்ணுதான் மழையாக்கும்) இந்த காதலால் மொத்த லட்சியமும் மழைக்கால சென்னை மாதிரி ஆகிவிட, முடிவு என்ன என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறாராம் புதுமுக இயக்குனர் ஆனந்த்.
 •  

  05 வாச்சாத்தி:  தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலை பகுதியான வாச்சாத்தியில் கடந்த 1992ம் ஆண்டு சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை, வருவாய்துறை, காவல் துறையினரால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.அப்போது, பழங்குடி மக்களின் வீடுகள், பொருட்களை சூறையாடியதுடன் 18 பெண்களை பாலியல் பாலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 19 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 269 அரசு அதிகாரிகள் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்து, தண்டனையும் விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், ‘வாச்சாத்தி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது.

  Vachchaathi

 • படம் பெயர் : வாச்சாத்தி
 • இயக்குனர்: ரவித்தம்பி
 • நடிகர்கள்: அறிமுக நாயகன் ரமேஷ் ,நடிகை தர்ஷனி 'பெசன்ட் நகர்’ ரவி, 'மீசை’ ராஜேந்திரன், மகேந்திரன், பாண்டு, நெல்லை சிவா, பாபு ஆனந்த், கொட்டாச்சி, அப்புராஜ், ஷகீலா
 • பட ஜானர்: உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் திரைப்படம்
 • தயாரிப்பாளர்: சிகே3 புரொடக்ஷன் - பத்ரி (நம்ம பத்ரி இல்லீங்கோவ்) நாராயணன் 
 • இசை இயக்குனர்: அறிமுக இசையமைப்பாளர் ஜாக்சன்
 • மொழி: தமிழ் 
 • என்ன மேட்டர் படத்துல: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வாச்சாத்தி சம்பவத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டது. உண்மை சம்பவம் அது நடந்த இடத்திலேயே எடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது . தொடர்ந்து 20 நாள் இப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகனாக புதுமுகம் ரெத்னா ரமேஷ், கீழத்தெரு கிச்சா படத்தில் நடித்த கதாநாயகி தர்ஷனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரையில் தமிழில் உண்மை சம்பவங்களை மைய்யமாக கொண்டு வந்த படங்கள் வெற்றி பெற்றதில்லை. இந்த படம் எப்படி என்பதி நாளை மாலைக்குள் தெரிந்து கொள்ளலாம்.
 • 06 சூழ்நிலை: நெல்லு என்கிற படத்தில் ஹீரோவாக நடித்த சத்யா கதாநாயகனாக நடிப்பதைவிட இசையமைப்பாளர் தினா வில்லனாக நடிப்பதே இந்த படத்தின் அறிமுகம். படத்தின் ஆடியோ விழாவில ஹீரோயின் பவீனா திறந்த வெளியில் திறமை காண்பித்ததை யாரும் மறக்க முடியாது. இது போன்ற விழாக்களுக்கு எல்லாம் பழம்பெரும் பாடகி பீ.சுசீலா ஏன் வருகிறார் எனபதே தெரியவில்லை. 

  Soozhnilai

 • படம் பெயர் : சூழ்நிலை 
 • இயக்குனர்: தர்மசீலன் செந்தூரன் 
 • நடிகர்கள்: சத்யா, பவீனா, நிழல்கள் ரவி, இசையமைப்பாளர் தினா, கஞ்சா கருப்பு 
 • பட ஜானர்: வழக்கமான மசாலா படம் 
 • தயாரிப்பாளர்: Global Television
 • இசை இயக்குனர்: இசையமைப்பாளர் தினா
 • மொழி: தமிழ் 
 • என்ன மேட்டர் படத்துல: ஒரு வருஷத்திற்கு முன்பு இயக்குனர் செந்தூரன் தினாவை சந்தித்தபோது அவர் இசையமைப்பதை பற்றி மட்டுமே பேசினார். ஆனால் தினாவின் நெடுமுடி மற்றும் அவரது குறளின்பால் கவர்ந்து, இந்த படத்திற்கு அவரையே வில்லனாக புக் செய்துவிட்டார் இயக்குனர். ஏற்கனவே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார், இப்போ தினா வில்லனாக நடிக்கிறார். அடுத்தது என்ன? நடிகர்கள் எல்லாம் இசையமைக்கப்போகிறார்களா?
 • இதைதவிர இன்னும் ஐந்து படங்கள் இன்று ரிலீஸ் ஆக உள்ளன. அவற்றை பற்றிய பதிவை இன்று மாலையில் பார்ப்போம்.

  Saturday, February 4, 2012

  மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

  வணக்கம்,

  2003ல் புதிய கீதை என்றொரு படம் வெளிவந்து தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டது! இப்படம் தோல்வியடைந்ததால் தான் அது வரை க்ளாஸ் படங்களில் (?!!) மட்டுமே நடித்து வந்த இளைய தளபதி மருத்துவர் விஜய் மாஸ் படங்களுக்குத் தாவினார்!

  அப்படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் சினிமாவின் கதி என்னவாகியிருக்குமோ என்றென்ன மனம் அஞ்சுகிறது! ஆனால் அப்படத்தை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு தமிழ் சினிமா ரசிகன் அப்போது பக்குவப் பட்டிருக்கவில்லை!

  2009ல் புதிய கீதை படத்தின் கதையை அப்படியே சுட்டு பொடியன்களை வைத்து பாண்டிராஜ் என்கிற அறிமுக இயக்குனர் ‘பசங்க’ என்ற படத்தை எடுத்தார்! படம் தேசிய விருதெல்லாம் வாங்கியது! நியாயமாக பார்த்தால் அந்த விருது இளைய தளபதி மருத்துவர் விஜய்க்குதான் கிடைத்திருக்க வேண்டும்! எல்லாம் அயல் நாட்டு சதி!

  ‘பசங்க’ படம் அவார்டு வாங்கியதால் இயக்குனர் பாண்டிராஜின் அடுத்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது! 'வம்சம்' என்றொரு படத்தை தந்து நம்மையெல்லாம் துவம்சம் செய்தார்!

  இப்போது மீண்டும் பொடியன்களை வைத்து ‘மெரினா’ என்றொரு படத்தை அவர் இயக்கி அவரே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்!

  கதை:

  கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களின் அன்றாட வாழ்வியலில் சந்திக்கும் துன்பங்களையும், துயரங்களையும், துக்கங்களையும், சோகங்களையும், சிறு சிறு சந்தோஷங்களையும், அவர்கள் கடந்து செல்லும் பல வித நிலைகளில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலை வாழ்வியல் கோட்பாடுகளையும்அவதானிக்கும் திரைச் சித்திரமாகவே விளங்குகிறது மெரினா!

  [அல்லது]

  கதையா?!! ... அப்படீன்னா?!!

  சுவாரசியமான துணுக்குகள்:

  சுவாரசியமான விஷயம் படத்தில் ஒன்னுமேயில்லை! இருந்தாலும் நமக்கு கடமை தான் முக்கியம்!

  • தற்போது தமிழ் சினிமாவில் மதுரையின் ஆதிக்கம்தான்! என்றாலும் கூட சென்னையில் வாழும் அனைவருமே மதுரை ஸ்லாங்கிலேயே பேசுவது கொஞ்சம் ஓவராகப் படவில்லையா?!! சுத்தமான சென்னைத் தமிழ் படங்களில் காணக் கிடைப்பது அரிதாகி விட்டது!
  • அதே போல சென்னைக்கு பிழைப்பு தேடி வருபவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களிலிருந்தே வருவது உதைக்கிறது! பக்கத்தில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் முதலிய மாவட்டங்களிலிருந்து யாருமே சென்னைக்கு பிழைப்பு தேடி வருவதில்லையா?!! அல்லது இயக்குனரின் கண்களுக்கு அவர்களெல்லாம் படவில்லையா?!!
  • நகர காதலை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த பெண்கள் சமூகத்தையே கிண்டலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் இயக்குனர்! மாதர் சங்கங்கள் இதையெல்லாம் கண்டிக்க மாட்டார்களா?!!
  • சிவகார்த்திகேயன் சிறப்பான டைமிங் சென்ஸ் உடையவர்! ஆனால் பாவம் SMS ஜோக் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்! அவரும் ஓவியாவும் வரும் காட்சிகள் சுத்த வேஸ்ட்! படத்துடன் ஒட்டவேயில்லை!
  • கதாபாத்திரங்கள் திடீர் திடீரென வருவதும் போவதுமாக ஒரே குழப்பம்! அந்த பிச்சைக்கார தாத்தா கடைசியில் செத்துப் போவது அவர் முதல் ஃப்ரேமில் வந்தவுடனேயே தெரிந்து விடுகிறது!
  • படத்தில் ஜெயப்பிரகாஷ் வரும் காட்சியில் ஒரே அட்வைஸ் மழை! தாங்கலைடா சாமி!
  • படத்தின் காட்சிகளை அன்றன்றைய காலை செய்தித்தாளகளைப் பார்த்து எழுதியிருப்பாரோ என்னமோ?!! படம் முழுவதும் செய்திகளின் கோர்வையாக இருக்கிறதே ஒழிய திரைக்கதை எனவொன்று உருப்படியாக இல்லை!
  • ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பேப்பரில் நியூஸ் வருகிறது! தினகரனோடு IN-FILM பண்ணியதற்காக இப்படியா?!!
  • அவார்டு வாங்கனும்னு முடிவு பண்ணிட்டு ஒலகப் படம் எடுக்கிறீங்க, சரி! அதை ஏன் ஆமை வேகத்தில் எடுக்கிறீங்க?!! இப்படி ஒரு படமெடுத்துட்டு அதை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதை விட அவார்டுதான் நோக்கமென்றால் பேசாமல் ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கலாமே?

  தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

  1/6 - ஒரே ஒரு தோட்டா!
  பயங்கரவாதியின் பன்ச்: 

  மெரினா - படம் பாக்குறதுக்கு தியேட்டர் போற மாதிரி இருந்தா பேசாம பீச்சுக்காவது போங்க! ஏன்னா ரெண்டு இடத்திலேயும் காத்துதான் வாங்குது! 

  ட்ரைலர்: