Wednesday, June 8, 2011

ஆண்மை தவறேல்: 03-06-2011 : விமர்சனம்

நேர்மை என்று ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது எடுத்துக்கொண்டதை அதே சிந்தனையில் முடிக்கும் நேர்மை. தமிழ் சினிமா உலகில் இந்த நேர்மை பெரும்பாலும் இருக்கவே இருக்காது என்பது அடியேனின் கருத்து. எண்பதுகளில் விசு படங்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே சில்க் ஸ்மிதா பாட்டு வைக்கவேண்டிய சூழல் உருவானது நமக்கு தெரிந்ததே. அதாவது விநியோகஸ்தர்களுக்கு என்று 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு தேர்ந்தெடுத்த கதையையும், திரைக்கதையையும் மாற்றி சினிமா எடுக்க வேண்டிய நிலை பெரும்பாலான இயக்குனர்களுக்கு வந்து இருக்கிறது, இருக்கிறது, கண்டிப்பாக இருக்கும். இப்படி பல சிக்கல்களையும் மீறி தான் எடுத்துக் கொண்ட கதையை வேறு எதற்கும் 'அட்ஜஸ்ட்' செய்யாமல் 'நேர்மையாக' முடிக்கும் இயக்குனர்கள் குறைவே. அப்படி படமெடுத்தாலும், அவை திரையில் வருவதற்கு பல மாமாங்கம் ஆகும். சரி, எதற்கு இவ்வளவு பீடிகை என்றால், சமீபத்தில் நான் பார்த்த 'ஆண்மை தவறேல்' படத்தில் அப்படி ஒரு நேர்மை இருந்தது. அதாவது எடுத்துக்கொண்ட கதையை நேர்மையாக (எந்தவிதமான வியாபார/சந்தை மயமாக்கலுக்கும் வளைந்து கொடுக்காமல்) கொண்டு செல்லும் அந்த துணிவு இந்த படத்தில் இருந்தது என்பது அடியேனின் எண்ணம். அதைப்பற்றியே இந்த சில வார்த்தைகள்.

கதை: படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாட்கள் கழித்து எழுதப்படும் விமர்சனம் என்பதால் அதிகமாக கதையை பற்றி சொல்ல வேண்டியது இல்லை என்பது அடியேனின் சிந்தனை (அதுக்குள்ளாக வலைரோஜா நண்பர்கள் விமர்சனம் எழுதி இருப்பார்கள்). சமகால சூழலில் பெண்கள் கடத்தப்படுவதை அலசி ஆராயும் ஒரு படம் இது. படத்தின் ஒன் லைனர் இதுதான்.காதலியை கடத்தல்காரர்கள் இடம் பறிகொடுத்த நாயகன் ஒரு (முன்னாள்) காவலரின் உதவியுடன் மீட்கப்போராடுவதே ஆண்மை தவறேல் படத்தின் நாடி. கதை அரதப்பழசாக தெரிந்தாலும் திரைக்கதை அதனை சுமாராகவே நகர்த்திக்கொண்டு செல்கிறது. தமிழ் சினிமாவில் புதிய காட்சிகள் பலவற்றை இந்த சினிமாவில் காண முடிந்தது.

படத்தில் அடியேன் அவதானித்த விடயம் என்னவெனில் இம்மியளவும் திரைக்கதை என்ற நேர்க்கோட்டில் இருந்து வியாபார விடயங்களுக்காக மாற்றிக்கொள்ளாத தன்மையே. குறிப்பாக படத்தின் இரண்டாவது பகுதியில் ஒரு குத்துப்பாட்டு, ஒரு சோகப்பாட்டு வைக்க பல காட்சிகள் இடம் கொடுத்ததும் அவற்றை இடம்பெறாமல் செய்தது படத்தின் நேர்மையை உணர்த்தும். படத்தின் முதல் பகுதியும் சற்று வேகமாக நகர்ந்து இருந்தால் படம் இன்னும் சிறப்பாக பேசப்பட்டு இருக்கும்.

நடிப்பு: ஹீரோ த்ருவா என்று ஒரு புதியவர். கட்டுமஸ்தான உடல்வாகுவுடன், நட்பில்லாத குரலுடன் அறிமுகமாகிறார். கொஞ்சம் மெனக்கெட்டால் நடிக்கவும் செய்வார் போல. படம் ஓடும் தியேட்டர்களில் அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-அயனாவாரம் கிளை, அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-பெரம்பூர் கிளை, அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-வடபழனி கிளை என்று பலத்த ஆதரவுடன்தான் களம் இறங்கி இருக்கிறார். அடுத்து வரும் படங்கள் தான் இவரை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர உதவும். ஹீரோயினுக்கு இரண்டாவது படம். பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. அந்த அற்புதமான (பெண் என்பேன், பூ என்பேன்) பாடலில் இயக்குனர் சற்றே சிரமம்பட்டு சிரத்தையாக காட்சியமைத்து இருக்கலாம். கஷ்டப்பட்டு பாஸ் மார்க் வாங்குவார் ஹீரோயின். 

சம்பத் திடீரென்று எப்படி இவ்வளவு மாஸ் நடிகர் ஆனார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அவர் அப்படி கவுரவ வேடங்களில் நடித்த படங்களில் எல்லாம் மொக்கையாகவே இருக்கிறார் (உதாரணம்-பாவானி). இந்த படத்தில் பரவாயில்லை. கொஞ்சம் நல்ல பாத்திரம். ஆனால் அவர் தன்னுடைய பாத்திரங்களை இனிமேலாவது நன்றாக யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையென்றால் அவரையும் வீணடித்து விடுவார்கள். 

திரையில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பசைபோல ஒட்டிக்கொள்பவர் ஜான் விஜய். அவருடைய ஸ்டைலும், வசன உச்சரிப்பும் நேர்த்தி. கன்னட பிரசாத் என்ற இவரது பாத்திரத்தை சரியாக திரையில் கொண்டு வந்துள்ளார்கள். மற்றபடி அந்த 3 வில்லன்கள் அவ்வளவாக சித்தரிக்கப்படாததால் அவர்கள் மேல் பயமோ, கோபமோ ஏற்படவில்லை. இங்கேதான் இயக்குனர் தோற்று விடுகிறார் (பரவாயில்லை, முதல் படத்தில் இது ஓக்கேதான்).

லாஜிக்: படத்தை ரசிக்க விரும்பினால் லாஜிக் என்கிற விஷயத்தை எதிர்ப்பார்க்காதே என்பது எங்கள் தலைவர் யூனாவின் கொள்கை. இருந்தாலும் அடியேன் இந்த படத்தில் இருக்கும் அத்துமீறல்களை விளக்கவில்லை எனில் என்னை கண்ணிருந்தும் குருடனாக்கி விடும் இந்த சமுதாயம்.  ஆகையால் சம்பத் எப்படி உயிரோடு வந்தார் என்கிற மகா மொக்கை கேள்விகளை எல்லாம் கேட்காமல் டெக்னிகலாக ஒரு விஷயம் மட்டும் உங்களின் கனிவான கவனத்துக்கு:

சம்பத் கன்னட பிரசாத் என்கிற தரகரிடம் இருந்து பெண்களை ஏலம் விடும் இணையதளத்தின் முகவரி, நுழைவுக்குறியீடு மற்றும் காப்புச்சொல்லை மிரட்டி வாங்குகிறார். பின்னர் ஹீரோவும், சம்பத்தும் ஒரே சமயத்தில் அதே யூசர் நேம், பாஸ் வார்டை பயன்படுத்துகின்றனர். மின் அஞ்சல் தளங்களில் கூட ஒரே நேரத்தில் இருவர் உபயோகப்படுத்துவதை மிக சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்கையில் இருவரும் ஒரே யூசர் நேமை உபயோகப்படுத்தினால் அதை எப்படி வில்லன்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள்? இல்லை ஜான் விஜய் தான் ஏலம் எடுக்கவில்லையா? அப்படி இருந்தாலும் ஜான் விஜய் யூசர் நேம் மூலம் ஏலம் எடுத்த பெண்ணை அவரிடம் அல்லவா ஒப்படைக்க வேண்டும்? இங்கே மட்டுமின்றி இன்னும் சில இடங்களில் கூட இயக்குனர் சிறிது தடுமாறி இருக்கிறார்.

தியேட்டர் டைம்ஸ்: நண்பர் க'னா பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர் சென்னைக்கு புதியவர். ஆகையால் அவர் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் S.S.R பங்கஜம் தியட்டருக்கு சென்று (11.45 AM) அங்கிருந்த மேலாளரிடம் படம் எத்துனை மணிக்கு? என்று வினவியுள்ளார். அவர்களும் 12.15க்கு என்று பதிலளிக்க, சரி இன்னும் அரை மணி நேரம் இருக்கிறதே என்று அருகில் இருந்த பழமுதிர் நிலையம் சென்று மொத்தம் மூணு ஜூஸ் குடித்து நேரம் கழித்தார். 25 நிமிடங்கள் கழித்து (12.10 AM) தியேட்டருக்கு வந்து பார்த்தால் படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிறதே என்று அதே நபர் சொன்னாராம். என்ன வாழ்க்கைடா இது என்று நொந்துக்கொண்டார் நண்பர் க'னா. இதுதான் கொடுமை என்றால். அந்த தியேட்டரில் குளிரூட்டும் வசதி மருந்துக்கு கூட கிடையாதாம். நொந்து போய் வந்தார் க'னா.

 

பின் குறிப்பு: இந்த படத்தை பற்றிய விமர்சனங்களில் பல நகைச்சுவைகளை காண முடிந்தது. உதாரணமாக வெப் துனியா'வில் இது டேக்கன் (ஆங்கில விருதகிரி) படத்தின் தழுவல் என்று எழுதி இருந்தார்கள். இன்னும் சில தளங்களில் பெயருக்கு / வாய்க்கு வந்த சினிமாக்களை எல்லாம் சுட்டிக்காட்டி இருந்தார்கள். உண்மையில் இந்த படம் Independence Day, Godzilla, The Day After Tomorrow, 10,000 BC போன்ற படங்களை இயக்கிய Roland Emmerich’ன் புரொடக்ஷனில், நம்ம Ashok Amritraj இணை தயாரிப்பில் வந்த Trade என்கிற ஜெர்மனி படத்தின் முழுமையான தழுவலாகும். (நம்ம கேபிளார் படத்தின் தலைப்பை சரியாக சொல்லி இருந்தாலும் அது பிரேசில் படம் என்று சொல்லி இருப்பார்).இந்த படத்தை ஆங்கிலத்தில் நம்ம லயன்ஸ்கேட் நிறுவனத்தினர் வெளியிட்டனர். லயன்ஸ் கேட் இப்படி சிறிய, பி கிரேட் படங்களை வெளியட்டு காசு பார்ப்பதில் கில்லாடிகள். 

நம்முடைய வேண்டப்பட்ட விரோதியாகிய பயங்கரவாதி டாக்டர் செவன் இது போன்ற விடயங்களில் கில்லாடி. அவர்தான் இந்த படத்தின் கதையை நான் சொல்கையிலே அந்த படத்தை பற்றியும், அதன் IMDB ரேட்டிங் பற்றியும், அதனை டவுன்லோட் செய்யும் தளத்தின் முகவரியையும் கூறி உதவினார்.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 3 bullets 3/6. மூன்று தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: ஆண்மை தவறேல் - பார்க்க தவறேல் (நேர்மைக்காக).

5 comments:

Lucky Limat - லக்கி லிமட் said...

வந்தோம்ல பஸ்ட்

சி.பி.செந்தில்குமார் said...

குட்

சி.பி.செந்தில்குமார் said...

>>ஒரே சமயத்தில் அதே யூசர் நேம், பாஸ் வார்டை பயன்படுத்துகின்றனர். மின் அஞ்சல் தளங்களில் கூட ஒரே நேரத்தில் இருவர் உபயோகப்படுத்துவதை மிக சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்கையில் இருவரும் ஒரே யூசர் நேமை உபயோகப்படுத்தினால் அதை எப்படி வில்லன்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள்? இல்லை ஜான் விஜய் தான் ஏலம் எடுக்கவில்லையா? அப்படி இருந்தாலும் ஜான் விஜய் யூசர் நேம் மூலம் ஏலம் எடுத்த பெண்ணை அவரிடம் அல்லவா ஒப்படைக்க வேண்டும்? இங்கே மட்டுமின்றி இன்னும் சில இடங்களில் கூட இயக்குனர் சிறிது தடுமாறி இருக்கிறார்.

மதிநுட்பம் ஜாஸ்தி தான்

Cibiசிபி said...

// ஆண்மை தவறேல் //

படத்தோட பேரைப் பார்த்து நவீன ஒளவையார் மாதிரி இருக்கும்னு நினைச்சேன் ;-)
.

Cibiசிபி said...

// நம்முடைய வேண்டப்பட்ட விரோதியாகிய பயங்கரவாதி டாக்டர் செவன் இது போன்ற விடயங்களில் கில்லாடி. //

எது மாதிரி விசயத்துல ;-)

நாங்க கொஞ்சம் TUBELIGHTங்க விவரமா சொன்னா நல்லா இருக்கும் :))
.

Post a Comment