Tuesday, June 21, 2011

பேஜா ப்ரை 2 விமர்சனம் (Bheja Fry Part 2 Hindhi Film 17th June 2011)

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.

ஹிந்தி சினிமாக்களில் மல்டிபிளெக்ஸ் சினிமாக்கள் என்று ஒரு வகை உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட வகையினரை மட்டுமே மனதில் கொண்டு எடுக்கப்படும் படங்கள். தெளிவாக சொல்வதென்றால் ஹிந்தியில் எடுக்கப்படும் ஆங்கில சினிமாக்கள் என்றும் இவற்றை சொல்லலாம். அதாவது, படம் வெறும் ஏ சென்டர்களில் மட்டுமே ஓடும் அளவிற்கு கதையையும், கதை நடைபெறும் களனையும் கொண்டு இருக்கும். ஆகையால் இவற்றை ஒரே திரை கொண்ட சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டரில் திரையிட தயங்குவார்கள். ஆனால் பல திரைகளை கொண்டு இருக்கும் மல்டிபிளெக்ஸ் அரங்கங்களில் இப்படி பட்ட பிரச்சினைகள் இருக்காததால் தைரியமாக இந்த மாதிரி படங்களை வெளியிடுவார்கள். இப்படி பட்ட படங்களில் ஒரு தனி மரியாதை பெற்ற படமே பேஜா ப்ரை (மூளையை வறுத்தல் அல்லது மூளை பொறியல்).

படத்தின் பின்னணி: நான்கு வருடங்களுக்கு முன்பு சாகர் பெல்லாரி என்கிற இயக்குனர் தி டின்னர் கேம் என்கிற பிரெஞ்சு படத்தின் கதையை ஹிந்தியில் எடுத்தார். ஒரு அப்பிரானியின் சாகசங்கள் என்கிற வகையில் இந்த படம் சேர்த்தி. போகோ சேனலில் மிஸ்டர் பீன் என்றொரு பாத்திரம் வரும் (பின்னர் இரண்டு திரைப்படங்கள் வேறு). அதனைப்போலவே இந்த பாத்திரமும் புத்திகூர்மையில் சோடை போனாலும் தன்னுடைய தூய மனதால்,வெள்ளை உள்ளத்தால் பார்ப்பவர் அனைவரையும் கவரும் விதத்திலேயே இருந்தது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலும் டிவி நட்சத்திரங்களை மட்டுமே கொண்டு எடுக்கப்பட்ட் இந்த பேஜா ப்ரை என்கிற படம் மல்டிபிளெக்ஸ் படங்களில் ஒரு முக்கியமான படமாக மாறியது (அதற்க்கு முன்னர் மல்டிபிளெக்ஸ் எல்லாம் வருவதற்கு முன்பு வந்த ஒரு முக்கியமான படம் ஹைதராபாத் ப்ளூஸ்).

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் பல இன்டி படங்கள் வந்து வெற்றியையும் பெற்றன. அதனை தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வந்துள்ளது. முதல் பாகம் ஏப்ரலில் வந்ததால் இரண்டாம் பாகமும் ஏப்ரலில் ரிலீஸ் செய்யலாம் என்று முதலில் ஏப்ரல் மாதத்தில் வருவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்த இந்த படம் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது.

பேஜா ப்ரை படத்தின் கதை: பல துறைகளில் தடம் பதித்து, வெற்றியும் பெற்று புகழுடன் இருக்கும் ஒரு போலி தொழில் அதிபர் (கே கே மேனன்). இவர் ஒரு சபலிஸ்ட். இவர் அடுத்து தொலைக்காட்சி துறையில் வரவிருப்பதை அடுத்து அவரது நிதி உதவியை பெற நினைக்கிறார் பிரபல தொலைக்காட்சியின் அதிபராகிய அவரது நண்பர் (ராகுல் வோரா). அப்போது அவரது சேனலில் நடக்கும் ஒரு போட்டியில் ஜெயிக்கிறார் இன்கம் டேக்ஸ் துறையில் பணி புரியும் நம்ம ஹீரோ (வினய் பாதக்).அந்த நிகழ்ச்சியின் புரோட்டியூசர் ரஞ்சனி (மினிஷா லாம்பா).வெற்றி பெற்றதால் ஒரு சொகுசு கப்பலில் பிரயாணம் செய்யும் வாய்ப்பை பெறுகிறார் வினய். இன்கம் டேக்ஸ் ரெயிட் இருப்பதால் தன்னுடைய இன்வெஸ்டார் மீட்டிங்கை கப்பலில் வைக்கவும், இவர்களுடன் பிரயாணம் செய்யவும் சம்மதிக்கிறார் கே கே மேனன். அவருக்கு ரஞ்சனி மீது ஒரு ரெண்டு கண்.

இந்த நிலையில் கே கே மேனனின் வரி ஏய்ப்பு பற்றி விசாரிக்கும் வினய் பாதக்கின் உயர் அதிகாரி மாறுவேடத்தில் அதே கப்பலில் வருகிறார். இந்த தகவலை அரை-குறையாக தெரிந்துகொள்ளும் கே கே மேனன், வினய் தான் அந்த இன்கம் டேக்ஸ் அதிகாரி என்றெண்ணி அவரை அழிக்க திட்டமிடுகிறார். இதன் பிறகு நடந்தது என்ன என்பதை (கண்டிப்பாக) வெள்ளி திரையில் கண்டு களிக்கவும்.

படத்தின் சிறப்பு அம்சங்கள்: கண்டிப்பாக இயக்கமும், பாத்திரங்கள் தேர்வும் முதல் இடத்தை பிடிக்கின்றன. குறிப்பாக கே கே மேனன், தீவில் தனியே இருக்கும் பர்மன், கே கே மேனனின் பாதுகாப்பு அதிகாரி, வினய் பாதக்கின் உயர் அதிகாரியாக வரும் சுரேஷ் என்று இவர்களது பாத்திரங்களும், அந்த பாத்திரங்களின் அமைப்பிற்கு இவர்களது பாந்தமான நடிப்பும் பிரம்மாதம். குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் கே கே மேனனும், வினய்’யும் போட்டி போட்டுக்கொண்டு நம்மை மகிழ்விக்கிறார்கள். இவர்களது வசனங்கள் மற்றும் டைமிங் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.

இரண்டாம் பாகம் என்பதால் மிகுந்த பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வந்து உள்ளது இந்த படம். அதுவும் மூன்று மாதங்கள் கால தாமதமாக வந்து இருப்பதால் இன்னமும் கூடி உள்ளது எதிர்ப்பார்ப்பு. அதன் காரணமாகவே இந்த படம் நன்றாக இருந்தாலும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். அதுவும் வினய் பாதக் கதாபாத்திரம் இன்னமும் சிறப்பாக காமெடி சாகசங்கள் செய்யும் என்று பலரும் கற்பனையுடன் வந்து இருப்பார்கள். அவர் நன்றாகவே நடித்து இருந்தாலும், எதிர்ப்பார்ப்பு மிகுதி என்பதால் சற்று ஏமாற்றமே வருகிறது. அதுவும் முதல் பகுதி கொஞ்சம் போர் என்று அருகில் இருந்த இளம் பெண் கைபேசி மூலம் தன நண்பர்களுக்கு அப்டேட் செய்துக்கொண்டு இருந்ததை மறுக்க இயலாது (அதாவது கொஞ்சம் போர் என்பதை மறுக்க இயலாது).

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:   3/6 - மூன்று தோட்டாக்கள்!

கிங்'ஸ் பன்ச்: பேஜா ப்ரை - பேஷா ட்ரை (பண்ணலாம்). மூளைக்கு வேலை இல்லை.

5 comments:

Lucky Limat - லக்கி லிமட் said...

வந்தோம்ல பஸ்ட்

கேரளாக்காரன் said...

Mokka padam boss 180 roopa out

Cibiசிபி said...

என்ன சார் நடக்குது இங்கே

இடைவெளி இல்லாமல் வரிசையாக தோட்டாவ போட்டு தாக்கிகிட்டே இருக்குறீங்க :))

(விமர்சனத்தை )
.

Cibiசிபி said...

// அருகில் இருந்த இளம் பெண் கைபேசி மூலம் தன நண்பர்களுக்கு அப்டேட் செய்துக்கொண்டு இருந்ததை மறுக்க இயலாது (அதாவது கொஞ்சம் போர் என்பதை மறுக்க இயலாது). //

யாரை சொன்னீங்க அந்த பெண்ணையா
நாங்க கொஞ்சம் TUBE LIGHTங்க அதான் ;-)
.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

//// அருகில் இருந்த இளம் பெண் கைபேசி மூலம் தன நண்பர்களுக்கு அப்டேட் செய்துக்கொண்டு இருந்ததை மறுக்க இயலாது (அதாவது கொஞ்சம் போர் என்பதை மறுக்க இயலாது). //

யாரை சொன்னீங்க அந்த பெண்ணையா
நாங்க கொஞ்சம் TUBE LIGHTங்க அதான் ;-)//

ஒரு வேளை நம்ம அண்ணன் படத்தை பாக்காம அந்த பொண்ணையே பாத்துட்டிருந்ததால்தானோ என்னவோ படம் அவருக்கு போரடிச்சிருக்கலாம்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

Post a Comment