Friday, June 3, 2011

LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!

வணக்கம்,

தமிழ் காமிக்ஸ் உலகைத் தொடர்ந்து எனது வேண்டப்பட்ட விரோதியாகிய கிங் விஸ்வா தமிழ் சினிமா உலகம் தொடங்கிய போது வழக்கம் போலவே என்னையும் கூட்டுக் களவாணியாக்கிக் கொண்டு பதிவுகள் இடுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்! அதன் விளைவாகவே இந்தப் பட விமர்சனம்!

எதேச்சையாக இன்று கோவையில் ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் போது  ஜாக்கி சானின் 99வது படம் என்று போஸ்டர் ஒன்றைக் கண்டு ஆர்வக் கோளாரில் திரையரங்கினுள் நுழைந்தேன்! படம்: லிட்டில் பிக் சோல்ஜர்!

சமீப கால ஜாக்கி சான் படங்களைக் கண்டு வரும் தமிழ் ரசிகர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கக் கூடும்! அதாவது தனது வழக்கமான ஆக்‌ஷன் ஹீரோ பாணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஒரு சீரியஸ் நடிகனாக தன்னை உருமாற்றி வருகிறார்!

கடைசியாக அவர் தன் ரசிகர்களை முழுமையாக திருப்திப் படுத்திய படம் WHO AM I? அதன் பிறகு வந்த RUSH HOUR படங்களிலும், SHANGHAI NOON/ SHANGHAI KNIGHTS போன்ற படங்களிலும் ஹாலிவுட்டின் புண்ணியத்தால் தன் ரசிகர்களை அவர் சற்றே ஏமாற்றினாலும் காமெடியில் குறையேதும் வைக்கவில்லை!

ஆனால் சமீப காலங்களில் வந்த கார்ஜியஸ், நியூ போலீஸ் ஸ்டோரி,  ROB-B-HOOD, ஷின்ஜுக்கு இன்சிடெண்ட் போன்ற படங்களில் தன்னை ஒரு தேர்ந்த நடிகராக வெளிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்!

இந்நிலையில் வந்திருக்கும் ஜாக்கி சானின் 99வது படமான லிட்டில் பிக் சோல்ஜருக்கு எவ்வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் திரையரங்கினுள் நுழைந்தேன்!

தமிழில் இப்படம் டப் செய்யப்பட்டு வந்திருப்பதால் இப்பதிவில் காணப்படும் கருத்துக்கள் யாவும் அதைக் குறித்ததே!

கதை: சீனாவின் ஆரம்பக் கால சரித்திரத்தின் பின்னனியில் அமைந்த படம் இது! பல்வேறு குறுநில மன்னர்களின் சந்ததிகளின் கீழ் ஆளுமைக்கு உட்பட்டிருக்கும் பிரதேசங்களை ஒன்றினைத்து ஒரே கொடியின் கீழ் ஆளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான் க்வின் சந்ததியின் மூத்த வாரிசு! படைத்தளபதியும் அவனே! அவனது தம்பியாகிய இளவரசன் அவனைக் கொன்று விட்டு மன்னராக விழைகிறான்!

இந்நிலையில் லியாங் நாட்டுக்கு எதிரான போரில் அனைவரும் உயிரிழந்து விட பலத்த காயங்களுடன் தளபதி மட்டும் தப்பி விடுகிறான்! ஆனால் எதிரணியிலுள்ள சாதாரண போர் வீரனாகிய ஜாக்கி சான் தான் இறந்து விட்டதாக ஜோடனை செய்து உயிர் தப்புகிறார்! தளபதியையும் கைது செய்து தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முயல்கிறார், அதற்கு வெகுமதியாகக் கிடைக்கும் 5 காணி நிலத்தைக் கொண்டு போரிலிருந்து ஓய்வு பெற! இளவரசரின் க்வின் படைவீரர்கள் துரத்துகிறார்கள்!

அவர்களிருவரும் வழி நெடுக சந்திக்கும் ஆபத்துக்களையும் அவர்களுக்குள் உருவாகும் நட்பையும் படம் விவரிக்கிறது!

ஜாக்கி சான்: இவரைத் தவிர படத்தில் நடித்துள்ள மற்ற எவரையும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லை என்பதால் ஜாக்கி சான் பற்றி மட்டும் கூறி விடுகிறேன்!

போரை வெறுக்கும் சாதாரண விவசாயியாக, சண்டையைக் கண்டு அஞ்சும் கோழையாக, தன் சோகங்களை பாடல்களில் மறைக்கும் பாடகனாக, உயிரைக் காக்க இறந்து விட்டது போல் நடிக்கும் தந்திரியாக என தன் நடிப்புத் திறமைகளுக்கு வேறொரு பரிணாமம் காட்டியுள்ளார்!

கதை, திரைக்கதை, ஆக்‌ஷன் என மூன்று களங்களுக்கும் பொறுப்பேற்று புகுந்து விளையாடியுள்ளார்! ஜாக்கியின் ஹாலிவுட் படங்களைப் பார்த்து போரடித்துப் போயிருப்பவர்களுக்கு இப்படத்தில் அவரது வேறுபல திறமைகள் வெளிப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கும்!

ஆனால் அவரது பழைய ஹாங்-காங் ஆக்‌ஷன் படங்களின் ரசிகர்களுக்கு படம் பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கிறது!

சண்டைக்காட்சிகள்: கூழாங்கற்களை வைத்து அவர் செய்யும் சில மணித்துளி சாகஸம் அவரது பழைய ரசிகர்களை வெகுவாகக் கவரும்! கிழடு தட்டிப் போனாலும் ஆசிய சிங்கம் சில சமயங்களில் சீறத்தான் செய்கிறது!

காமெடி: படத்தின் ஒரிஜினல் எப்படியென்று தெரியவில்லை! ஆனால் தமிழ் டப்பிங்கில் சொதப்பியிருக்கிறார்கள்!

ஜாக்கியின் கதாபாத்திரம் அவருடையே வழக்கமான கோனங்கித் தனங்கள் நிறைந்தேயிருக்கிறது! ஆனால் தமிழ் டப்பிங்கில் அதெல்லாம் காணாமல் போய் விடுகிறது! படத்தின் கேளிக்கைத் திறன் குறைய டப்பிங்கும் ஒரு பெரிய காரணம்!

அடுத்து வரப்போகும் ஜாக்கி சானின் 100வது படமான 1911ன் டப்பிங்கில் நமது ஒலக காமிக்ஸ் ரசிகரின் பங்களிப்பும் உள்ளது! அவரின் முயற்சியில் படம் எப்படி வருகிறதென்று பார்க்கலாம்! இதுவும் ஜாக்கியின் ஒரு வித்தியாசமான படம் தான்! சரித்திரப் பிண்ணனியில் அமைந்துள்ளது!

ஜாக்கியின் ஆக்‌ஷன் ரசிகர்கள் இனி அடுத்த ஆண்டுகளில் வரப்போகும் ஆர்மர் ஆஃப் காட் மூன்றாம் பாகத்தை தான் எதிர்நோக்கியிருக்க வேண்டியிருக்கும்!

தியேட்டர் நோட்ஸ்: சிங்கம் என்றுமே சிங்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் திரையில் முதல் முறையாக ஜாக்கி சான் தோன்றும்போது ரசிகர்கள் கரவொலி எழுப்பி கரகோஷம் இட்டனர். மேலும் படம் முடிந்தவுடன் அவுட் டேக்ஸ் முடிந்து முழு கிரெடிட் போடும் வரை இருந்து பின்னரே வெளியேறினர். ஜாக்கி சான் ரசிகர்கள் இன்னமும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பதை இது மறுபடியும் உணர்த்தியது.

ஒலக சினிமா முயற்சி: ஜாக்கி சானின் ஹாலிவுட் மொக்கைத் திரைப்படங்களைக் கண்டு சோர்ந்து போயிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இப்படம் சற்று வித்தியாசமாகவே படுகிறது! உலக அளவில் அவரின் இம்முயற்சிக்கு பெரிதும் பாராட்டுக்கள் குவிகின்றன! விரைவில் அவரை ஒரு சீரியஸ் நடிகராக உலகம் ஏற்றுக் கொள்ளத் தான் போகிறது!

ஆனால் அவரது ஆக்‌ஷன் காமெடி படங்களைக் கண்டு வளர்ந்த ஒரு சாதாரண தமிழ்நாட்டு ரசிகனாகிய நான் அவருடைய வயதைக் கணக்கில் கொண்டு கடைசியாக பழைய ஜாக்கி சானை நினைவு படுத்தும் வகையில் ஒரு முழு நீள அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்தை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!

தசாவதாரம் திரைப்பட விழாவில் கலைஞரின் வாயால் என்னவென்றே புரியாமல் வாங்கிய பாராட்டுதான் ஜாக்கி சான் இது போல தன் ரசிகர்களை ஏமாற்றக் காரணம்  என்று அய்யம்பாளையத்தார் கூறுகிறார்! என்ன வாழ்க்கைடா இது?!!

ஆசிய சிங்கம் கடைசியாக ஒரு முறை கர்ஜிக்குமா?!! பொறுத்திருந்து பார்ப்போம்!!!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 2/6

பயங்கரவாதியின் பன்ச்: ஜாக்கியின் ரசிகர்கள் பார்க்கலாம்! கண்டிப்பாக தமிழில் அல்ல!

7 comments:

King Viswa said...

தமிழ் சினிமா உலகிற்கு பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

King Viswa said...

இந்த நியூ போலிஸ் ஸ்டோரி படம் ஒரு அக்மார்க் தமிழ் மசாலா படம், ஆனால் அதில் பல காட்சிகளில் ஜாக்கி அசத்தி இருப்பார். அவரது டிரேட்மார்க் காமெடியும், அசத்தலான நடிப்பும் ஒருங்கே காணக்கிடைக்கும் படம் இது.

ஜாக்கியின் இதுமாதிரியான முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்களிடையே வரவேற்ப்பு கிடைப்பது கடினமே. நீங்கள் சொன்னதுபோல டப்பிங் சொதப்பலே.


//அடுத்து வரப்போகும் ஜாக்கி சானின் 100வது படமான 1911ன் டப்பிங்கில் நமது ஒலக காமிக்ஸ் ரசிகரின் பங்களிப்பும் உள்ளது! அவரின் முயற்சியில் படம் எப்படி வருகிறதென்று பார்க்கலாம்! இதுவும் ஜாக்கியின் ஒரு வித்தியாசமான படம் தான்! சரித்திரப் பிண்ணனியில் அமைந்துள்ளது!//

நம்ம ஒலக காமிக்ஸ் ரசிகர் தன்னுடைய திறமையை ஜாக்கியின் அடுத்த படத்தின் தமிழாக்கத்தில் வெளிப்படுத்துவாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

சிவ் said...

\\ஆனால் சமீப காலங்களில் வந்த கார்ஜியஸ், நியூ போலீஸ் ஸ்டோரி, ROB-B-HOOD, ஷின்ஜுக்கு இன்சிடெண்ட் போன்ற படங்களில் தன்னை ஒரு தேர்ந்த நடிகராக வெளிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்!\\

நான் ஜாக்கியின் தீவிர ரசிகனாக இருந்து பல படங்களை சமீபட்த்தில் மிஸ் செய்து இருப்பது தெரிகிறது.

Lucky Limat - லக்கி லிமட் said...

தமிழ் சினிமா உலகிலும் பயங்கரவாதி டாக்டர் செவனின் தீவிரவாத தாக்குதல் ஆரம்பமா...

ஆசிய சிங்கத்துக்கும் ஆஸ்கார் வாங்கும் எண்ணம் வந்து விட்டது போல

யுவகிருஷ்ணா said...

பயங்கரவாதியின் பயங்கரப்பதிவு பப்பரப்பாவென்று பரபரப்பாக இருக்கிறது. அமர்க்களத்தை தொடரவும்.

சி.பி.செந்தில்குமார் said...

>>சமீப கால ஜாக்கி சான் படங்களைக் கண்டு வரும் தமிழ் ரசிகர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கக் கூடும்! அதாவது தனது வழக்கமான ஆக்‌ஷன் ஹீரோ பாணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஒரு சீரியஸ் நடிகனாக தன்னை உருமாற்றி வருகிறார்!

வயசாகும்போது எல்லாருக்கும் மெச்சூரிட்டி வந்துடுது

Anonymous said...

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some important modifications in adding a label feed in google reader ....see it....d...

Post a Comment