Sunday, June 19, 2011

மஹா சக்திமான் (GREEN LANTERN) : 17th JUNE 2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படங்களைக் காண்பதென்றாலே எனக்குப் பெரிய கொண்டாட்டம்தான்! அந்த வரிசையில் தற்போது வந்துள்ள படம் தான் க்ரீன் லாண்டர்ன்! சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், X-மென் அளவிற்கு இல்லையென்றாலும் க்ரீன் லாண்டர்னும் அமெரிக்காவில் ஒரு பிரபல காமிக்ஸ் ஹீரோவே! இவரது காமிக்ஸ் கதைகளை நான் சிறிதளவே படித்திருந்தாலும் இக்கதைத்தொடரின் BASIC OUTLINE எனக்கு பரிச்சயம் என்பதால் இப்படத்தை சிறிதளவு எதிர்பார்த்திருந்தேன்!

காமிக்ஸ்களைப் படிக்காதோருக்குஒரு சிறு அறிமுகம்! பிரபஞ்சத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் படைதான் க்ரீன் லாண்டர்ன் கார்ப்ஸ்! இவர்களின் சக்திக்கு மூலதனம் இவர்கள் கையில் அணிந்திருக்கும் ஒரு மோதிரம்! அதை செல்ஃபோன் போல அவ்வப்போது சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்! அதற்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பச்சை விளக்கு இருக்கும்! மோதிரத்தின் சக்தியைக் கொண்டு பூமியைச் சேர்ந்த க்ரீன் லாண்டர்ன் செய்யும் சாகஸங்களே கதைக்களம்!

பேட்மேன், சூப்பர்மேன் அளவிற்கு ஆழமான கதையம்சம் இல்லாத காரணத்தாலோ என்னவோ காமிக்ஸ்களில் க்ரீன் லாண்டர்ன் அடிக்கடி பல மாற்றங்களுக்கு உள்ளாகும்! விற்பனை குறைந்தால் பழைய க்ரீன் லாண்டர்னை கொன்றுவிட்டு புதிதாக ஒருவரை க்ரீன் லாண்டர்னாக நியமிப்பது சகஜம்! பின்னர் மீண்டும் அவரை உயிர்பித்து கொண்டு வருவதும் வழக்கம்! ஆகையாலேயே இத்தொடரின் மீது பெரிதாக ஈடுபாடு ஏற்பட்டதில்லை!

படம் வேறு மொக்கை என பல தரப்பினரும் கூறி விட்டதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றிதான் தியேட்டருக்குள் நுழைந்தேன்! படம் சுமாராகவே இருந்தது! நல்ல டைம்பாஸ்! அவ்வளவே!

ஹீரோ ரையன் ரெனால்ட்ஸ் பார்ப்பதற்கு அச்சு அசலாக க்ரிஷ் படத்தில் வரும் ஹ்ரித்திக் ரோஷன் போலவே உள்ளார்! படத்தில் டிம் ராபின்ஸும் வருகிறார்! ஸினெஸ்ட்ரோவாக  மார்க் ஸ்ட்ராங்! அடுத்த பாகத்தை மனதில் கொண்டு இவரை நடிக்க வைத்துள்ளனர்!

இது ஒரு சூப்பர் ஹீரோ படம் என்பதால் நடிப்பு, லாஜிக் போன்ற விஷயங்களை அவ்வளவாக எதிர்பார்ப்பது மடத்தனம்! படத்தில் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே பார்க்க வேண்டும்! க்ராஃபிக்ஸ், சண்டைக்காட்சிகள் சிறப்பாக இருந்தாலே போதும்! சிறப்பாகவே உள்ளன!

ஆனாலும் நம் ஹிந்து பத்திரிக்கை விமர்சகர் விட மாட்டேனென்கிறார்! அவருக்கு பிடிக்காத இந்த மாதிரி படங்களுக்கெல்லாம் ஓசியில் சென்றுவிட்டு ஏன் தான் புலம்புகிறாரோ தெரியவில்லை!
படத்தை மொக்கையென்றாலும் கூட பரவாயில்லை! ஆனாலும் ஒட்டுமொத்த காமிக்ஸ் தொடரையே அதில் ஒரு வரி கூட படித்திராமல் மொக்கையெனக் கூறுவது எந்த ஊர் நியாயம்?!!

படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான அடிக்கோலையும் நாட்டியுள்ளனர்! இப்படத்தின் வெற்றி தோல்வியே அதை நிர்ணயிக்கும்! பார்க்கலாம்!

தியேட்டர் டைம்ஸ்:
  • படம் முடிந்ததும் மறக்காமல் POST-CREDIT SEQUENCEஐ பார்க்கவும்! அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சி வரும்! நம்மூர் தியேட்டர்களில் வழக்கமாக இக்காட்சி துண்டிக்கப்படும் அபாயம் நிறையவே உண்டு! 
  • கோவை கனகதாரா தியேட்டரில் 3Dல் படம் பார்த்தேன்! இது அவதார், குங்ஃபூ பாண்டா போல இல்லாமல் 2Dல் படமாக்கப்பட்டு 3Dக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது! படம் பார்ப்போரிடமிருந்து பணம் பிடுங்குவதற்கான ஒரு யுக்தியே என்றாலும் 3D நன்றாகவே இருந்தது! குங் ஃபூ பாண்டா அளவிற்கு சிறப்பாக இல்லையெனினும் பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் 4 அளவிற்கு மொக்கையாக இல்லை!
  • படத்தை ஆங்கிலத்தில்தான் பார்த்தேன் என்றாலும் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிட்டிருந்தது பாராட்டுக்குரியது!
  • தமிழில் இப்படம் மஹா சக்திமான் என்று ரிலீஸாகியிருக்கிறது! வந்துவிட்டான் பச்சை அவதார் என்ற TAGLINE வேறு! தமிழில் பார்த்த வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வா டப்பிங் ஓகே ரகம் என்று கூறுகிறார்!
  • சென்னையிலுள்ள டப்பிங் பட ரசிகர்களுக்கு ஒரு செய்தி! வழக்கமாக எந்த டப்பிங் படம் ரிலீஸானாலும் அதைத் தேடி பைலட் தியேட்டருக்கு ஓடும் மக்கள் இம்முறை ஏமாந்து போகக் கூடும்! X-மென் ஃபர்ஸ்ட் க்ளாஸ் இன்னும் எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் பைலட்டிலும் அதுவே ஓடுகிறது! மஹா சக்திமான் காஸினோவில் ரிலீஸாகியுள்ளது! சமூக நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3/6 - மூன்று தோட்டாக்கள்! டைம்பாஸ் படம்!

சூப்பர் ஹீரோ திரைப்பட ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்!

பயங்கரவாதியின் பன்ச்:

க்ரீன் லாண்டர்ன்- லோ வோல்டேஜ்!

ட்ரைலர்:

4 comments:

அண்ணன் க'னா said...

ஹல்லோ,

படத்தின் முக்கிய வசனமாகிய "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" பற்றி ஒரு வரி கூட எழுதாததால் நான் இந்த பதிவை விட்டு வெளிநடப்பு செய்கிறேன்.

அண்ணன் க'னா said...

உங்களுக்கும் ஹிந்து பேப்பர்காரர்களுக்கும் ஏதாவது பிரச்சினையா? தொடர்ந்து அவங்களையே வாங்கு வாங்குன்னு வாங்குறீங்க?

இல்லை, உங்களுக்கும் (சென்னையில் டைம்ஸ் ஆப் இந்தியா மாதிரி) சப்ஸ்கிரிப்ஷன் பிரச்சினையா

லேபிள் சங்கர் said...

படம் ஓக்கேவா? பாக்கலாமா?

லேபிள் சங்கர் said...

தமிழ்த்திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக மீண்டும் பாரதிராஜவே வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் சங்க தேர்தல் இன்று(19.06.11) நடந்தது. பாரதிராஜா தலைமையிலான ஒரு அணியினரும், உதவி இயக்குநர் முரளி தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர். சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் யூனியன் வளாகத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுபதிவு தொடங்கியது. தேர்தல் அதிகாரியாக கவிஞர் பிறைசூடன் செயல்பட்டார்.

தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும், உதவி இயக்குநர் முரளியும் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு அமீரும், அவரை எதிர்த்து அப்துல் மஜீத்தும் போட்டியிட்டனர். இதுதவிர 4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு 10 பேரும், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேரும் போட்டியிட்டனர்.காலைமுதலே இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், கே.எஸ்.ரவிக்குமார், அமீர் சசிகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், தியாகராஜன், ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்து ஓட்டளித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடந்தது போன்று, இயக்குநர் சங்க தேர்தலிலும் அதிகளவு ஓட்டுகள் பதிவாகின. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 99 சதவீத ஓட்டுபதிவு நடந்துள்ளது. தேர்தலில் ஓட்டு போடுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் எப்பவும் 4மணிக்கு முடியும் தேர்தல் ஒரு மணி நேரம் கூடுதலாக 5மணி வரை நடந்தது. பிறகு தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கான ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் மாலை 8மணிக்கு மேல் வெளியிடப்பட்டது. இதில் பாரதிராஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட, உதவி இயக்குநர் முரளி‌யை விட ஆயிரம் ஓட்டிற்கு மேல் வாங்கி அமோக வெற்றி பெற்றார். இதனை தேர்தல் அதிகாரியும், கவிஞருமான பிறைசூடன் அறிவித்தார். இதனையடுத்து இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே பொருளாரார் பதவிக்கு ஜனநாதனும், துணைத்தலைவர் பதவிக்கு சேரன், சமுத்திரகனி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதுதவிர பொதுச்செயலாளர் பதவி, மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.

Post a Comment