Wednesday, June 22, 2011

ஷாருக் கானின் ஆல்வேஸ் கபி கபி-ஹிந்தி திரைப்படம் (Always Kabhi Kabhi 17th June 2011)

வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வரப்போகும் படங்களை வரிசைக்கிரமமாக பிரித்து அவற்றை பார்த்து விடுவது என்னுடைய வழக்கம்.அப்படி இருக்கையில் இந்த படம் Out of Nowhere திடீரென்று வந்தது என்றே சொல்ல வேண்டும். ஹிந்தி சேனல்களில் இதன் விளம்பரத்தை பார்த்து இருந்தாலும் இந்த படம் சென்னையில் ரிலீஸ் ஆகும் என்று நினைக்கவே இல்லை. அதுவும் ஐந்து ஆறு தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆனதைக்கண்டு இரண்டு விஷயங்கள் புரிந்தன: 1. எந்த கட்சி ஆட்சி செய்தாலும், சமீப காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் படங்கள் குறைவு. 2. மற்ற மொழி படங்கள் இங்கே நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன.

ஆனால் இந்த இரண்டு விஷயங்களை விடவும் வேறொரு முக்கியமான விஷயமே இந்த படத்தை தமிழ் நாட்டில் இப்படி ரிலீஸ் ஆகும்படி செய்து இருக்கிறது. அதாவது இந்த படத்தின் புரோட்டியூசர் ஷாருக் கான் (அதாவது அவங்க மனைவி கவுரி கான்). இந்த காரணத்திற்க்காகவே இந்த ஆல்வேஸ் கபி கபி படம் இங்கே பெருவாரியாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. பின்னே என்னங்க, ஒரு நட்சத்திர நடிகரும் கூட இல்லாமல், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டிராமல், பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் வரும் ஒரு ஹிந்தி படம் சென்னையில் நல்ல தமிழ் படங்களுக்கு கிடைக்கும் தியட்டர்களை விட அதிக அளவில் ரிலீஸ் ஆனால் அதற்க்கு புரோட்டியூசரின் பெயர் தானே காரணமாக இருக்க முடியும்? இதற்கான விடையை பதிவின் இறுதியில் காண்க.

படத்தின் பின்னணி: ஷாருக் கான் ஆரம்ப காலங்களில் ஒரு டிவி சீரியல் நடிகர் என்பது பலருக்கும் தெரியும். அதன் காரணமாகவே அவர் சீரியல், நாடக துறைகளில் இருந்து வரும் கலைஞர்களை ரசிப்பார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு நாடகம் ‘கிராபிட்டி’. அந்த நாடகத்தை எழுதி, இயக்கியவர் ரோஷன் அப்பாஸ் (இவருக்கும் நம்ம நடிகர் திலகம் அப்பாசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). அந்த கால கட்டங்களில் (Late 90’s) இளைஞர்களின் எழுச்சியையும், அவர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தையும் மைய்யமாக கொண்டு வந்த இந்த நாடகம் சிலாகித்து பேசப்பட்டது. அப்போதே இவர் ஷாருக்கை சந்தித்து இருந்தாலும், இந்த நாடகம் படமாக மாறுவதற்கு இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது. நாடகத்தில் இருந்து பல பகுதிகளை மாற்றி, விளம்பர பகுதிகளை புகுத்தி இன்றைய யங்கிஸ்தான் டேஸ்ட்டிர்க்கு மாற்றி படமாக்கியுள்ளார்கள். படத்தின் புரோட்டியூசர் ஷாருக் என்பதால் ஏதோ விஷயம் இருக்கும் என்றெண்ணி பலரும் இந்த படத்தை பார்க்க துணிந்தார்கள்.

ஆல்வேஸ் கபி கபி படத்தின் கதை: நான்கு மாணவர்கள் (சினிமா இலக்கணத்தின்படி இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்). அவர்களுக்கு பள்ளி வாழ்வில் ஏற்படும் சுக,துக்கங்களையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்கிற கண்ணதாசன் காலத்து கதைதான் என்றாலும் அதனை பயங்கர பில்ட்-அப்புடனும், சந்தையாக்கல் யுத்திகளாலும் படமாக்கியிருக்கிறார்கள். தன்னால் முடியாததை தன்னுடைய மகள் மூலமாக சாதிக்க நினைக்கும் அம்மாவின் பேராசையால் பள்ளி நாட்களிலேயே நடிகையாகவிருக்கும் ஐஸ்வர்யா, மிகவும் கண்டிப்பான அப்பாவிற்கு பிறந்து அவரை எதிர்த்து பேசும் வாய்ப்பிலாமல் புழுங்கும் சமீர், தன்னுடைய குடும்பத்தில் எல்லோரும் M.I.T.யில் படித்ததால்  அங்கு அட்மிஷன் பெற எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் தாரிக் மற்றும் எந்நேரமும் வேலை, வேலை என்று உலக அளவில் வியாபாரம் செய்யும் பெற்றோர்களுக்கு மகளாக பிறந்து தனிமையில் தாயன்பை ஏங்கி பிடிவாத குணங்களின் உருவாக திகழும் நந்தினி என்கிற இந்த நால்வரே படத்தின் முக்கிய பாத்திரங்கள்.

இப்படி ஆரம்பிக்கும் கதையில் வருடாந்திர நாடகபோட்டியில் ரோமியோ ஜூலியட் போட்டிக்கான பாத்திரதேர்வில் ஆரம்பிக்கிறது பிரச்சினை. அதன் பிறகு ஒரு இரவுநேர விடுதியில் (தமிழில் பார்).நண்பர்களை காப்பாற்ற வலிய சென்று போலிஸ் இடம் சிக்கிக் கொள்கிறான் சமீர். அவனிடம் ஐம்பதாயிரம் லஞ்சம் கேட்க, முன் பணதிர்க்கே வழியில்லாமல் வீட்டில் திருடுகிறான். இதன் தொடர்ச்சியான சம்பவங்களில் ஐஸ்வர்யா இவனை தவறாக புரிந்துகொண்டு பேச மறுக்கிறாள். ஒரு சிறிய சம்பவம் மூலம் தாரிக்கை பழி வாங்க அவனது மெயில் ஐடியை ஹாக் செய்து ஏதோ தகிடுதத்தம் செய்து (படத்தை பார்த்த யாருக்குமே புரியல இந்த ஸீன்) அவனுக்கு MITயில் அட்மிஷன் கிடைக்காமல் செய்து விடுகிறாள் நந்தினி. மனமுடைந்து தற்கொலை செய்துக்கொள முயல்கிறான் தாரிக். தன்னுடைய நண்பன் மூலமாக கர்ப்பம் தரித்திருக்கிறோமோ என்று கவலையடையும் நந்தினியை கைவிடுகிறான் அவளது பாய் பிரென்ட். இப்படி நகருகிறது கதை. ஆனால் இடைவெளியில் இருந்து அடுத்து ஒரு நாற்பது நிமிடங்கள் கதை (உண்மையிலேயே) விறுவிறுப்பாகவும், ஜாலியாகவும் நகருகிறது. என்னமோ, ஏதோ என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கிளைமேக்ஸ் சொதப்பல் ரகம்.

படத்தின் + கள்: படத்தின் மிகப்பெரிய பலமே இந்த நால்வரின் அட்டகாசமான நடிப்புதான்.சரியான பாத்திரங்களுக்கு நேர்த்தியாக ஆட்களை தேர்வு செய்த இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. அதுவும் தாரிக் ஆக வரும் அந்த நடிகர் மனதை கவருகிறார். கண்டிப்பாக கவனிக்கப்படுவார். தன்னுடைய முதல் படமாக இருந்தாலும் பல இடங்களில் 'அட' என்று வியக்க வைக்கிறார் இயக்குனர். பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர் ரகமே என்றாலும் அந்த ஸ்கூல் தின் பாடலும், படமாக்கலும் அருமை. பிரெண்ட்ஸ்கேப் , பான்டா என்று பல விளம்பரங்கள் திரைக்கதையில் நுழைவதைக்கண்டவுடனே அது ஷாருக்கின் வேலை என்பது தெரிகிறது. வசனங்கள் பல இடங்களில் பளிச். அதுவும் தாரிக் தற்கொலை செய்துக்கொள்ள முயலும்போது அவனுக்கும் பிரின்சிபலுக்கும் இடையேயான உரையாடல் நம்ம கிரேசி மோகன் வகை.

படத்தின் - கள்: மேலே சொன்னதைதவிர மற்ற எல்லாமே குறைகள்தான். ஹிந்தி படங்கள் அப்படி, ஹிந்தி படங்கள் இப்படி என்று சொல்லும் நண்பர்கள் அங்கேயும் பெரிய பெரிய சொதப்பல்கள் உண்டு என்பதற்கு இந்த படம் ஒரு பிரதான எடுத்துக்காட்டு. இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் தயாரிக்கும் படம் என்றால் மட்டுமே ஓடிவிடாது என்பது கண்கூடாக தெரிகிறது. திரைக்கதை என்று ஒன்று, படத்தில் மிகவும் மெதுவாக வந்து படம் முடியும்போது எட்டிப்பார்க்கிறது. இப்போது முடியும், இப்போது முடியும் என்று பல காட்சிகளை கண்டவுடன் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதை எல்லாம் மீறி படம் ஓடிக்கொண்டே இருந்தது. எப்போது முடியும் என்று நொந்து போனேன். ஆரம்பத்தில் வரும் அனைத்து பாடல்களும் தேவையற்றவையே.

படத்தின் மிகப்பெரிய ஐரணி: ஷாருக் கான் தயாரிப்பு என்பதால் படத்தை புரமோட் செய்ய அவரே ஒரு குத்துப்பாட்டில் நடித்து இருந்தார். விளம்பரங்களில் எல்லாம் அவற்றை பற்றியே பெரிதாக சொல்ல, மக்களும் அதனை எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் கிளைமேக்சில் மொக்கை தாங்க முடியாமல் அந்த பாடல் வரும்முன்பே ஓடிவிட்டார்கள். எதனை விளம்பரம் மூலம் எதிர்பார்த்து வந்தார்களோ, அதனைக்கூட பார்க்காமல் விட்டால் போதும்டா சாமி என்று மக்கள் சென்றதே இந்த படத்தின் பெரிய ஐரணி (இதுக்கு தமிழ் வார்த்தை இன்னாபா? யாராவது சொல்லுங்களேன்?).

இந்த கானின் தயாரிப்பு இப்படி சோடைபோக, அடுத்த கானின் தயாரிப்பு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் யூலை மாதம் முதல் நாள் வெளிவருகிறது. ஆமிர் கானின் அடுத்த தயாரிப்பு பல சர்ச்சைகளுடன் எதிர்ப்பார்ப்பை தூண்டி இருக்கிறது. பார்க்கலாம், அதாவது தேறுமா என்று.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: single bullet 1/6 (ஒரே ஒரு தோட்டா).

கிங்'ஸ் பன்ச்: ஆல்வேஸ் கபி கபி - ஆல்வேஸ் நஹி நஹி.

4 comments:

Cibiசிபி said...

Haiya me the 1st... :))
.

Cibiசிபி said...

ஆல்வேஸ் கபி கபி - ஆல்வேஸ் நஹி நஹி.

நாங்க ஆல்வேஸ் ஹி ஹி :))
.

gonzalez said...

he he he


http://funny-indian-pics.blogspot.com/

Anonymous said...

irony in tamil is "muran nagai"

Post a Comment