Sunday, June 26, 2011

பிள்ளையார் தெரு கடைசி வீடு–திரைவிமர்சனம்:24-06-2011

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிந்து கொள்வது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

சூப்பர் குட் பில்ம்ஸ் படக்கம்பெனியின் உரிமையாளர் R.B.சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ் (கோ பட ஹீரோ ஜீவா'வின் அண்ணன்). ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி 'ஜித்தன்' ரமேஷ் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு அறிமுகமான இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு படங்களில் தொடர்ந்து நடித்தார். அவற்றின் ஓட்டம், ‘ஓட்டம்’ கண்டதால் கடந்த நான்கு ஆண்டுகளாக படங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். இப்போது அவரின் படம் பிள்ளையார் தெரு கடைசி வீடு ரிலீஸ் ஆகி இருக்கிறது. நான்கு ஆண்டுகளாக படம் எதனையும் ஒப்புக்கொள்ளாத  ரமேஷ் இந்த படத்தில் நடித்திருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை தந்தாலும், ஒருவிதமான எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கி இருந்ததை மறுக்க முடியாது. ஆந்திராவின் சிறந்த கதை சொல்லியாகிய எழுத்தாளர் பி.வி.எஸ்.ரவியிடமிருந்து தமிழுக்கு முதல் முறையாக இயக்க வந்திருக்கும் கிஷோரை பற்றியும் ஒரு விதமான கேள்விக்குறி இருந்தது. இத்தகைய எதிர்ப்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்கிறதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்.

பிள்ளையார் தெரு கடைசி வீடு கதை: எண்பதுகளில் வந்த குடும்ப கதை பார்முலா தான் இந்த படத்தின் ஆரம்ப ஒரு மணி நேர கதை. வேலை வெட்டி இல்லாமல் நான்கு நண்பர்களுடன் சுற்றும் ஹீரோ, நகரத்தில் கல்லூரியில் படிக்கும் (எப்போதும் அவனை திட்டிக்கொண்டே இருக்கும்) அவனது தங்கை, மகன் செய்யும் தவறுகளை எப்போதும் மன்னிக்கும் அன்பு மிகுந்த தாய் (துளசி மேடம் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?), கண்டிப்பான ஆனால் மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட அப்பா (ஜெயப்பிரகாஷ்), வெகுளியான மாமா என்று ஒரு அக்மார்க் தமிழ் கிராம குடும்பம். இவர்கள் வசிப்பது பிள்ளையார் தெருவின் கடைசி வீட்டில். இதை தவிர ஜெயப்பிரகாஷின் தங்கையை மணந்து கொண்ட பொறுப்பில்லாத குடிகார தந்தையாக இளவரசு, அவரது மகளாகிய வள்ளி (ஹீரோவுக்கு முறைப்பெண்-திரையில் தோன்றும்போதெல்லாம் பாவாடை தாவணியுடன் சேலை கட்டிக்கொண்டு இருக்கும்படியே அறிமுக காட்சிகள் - இரண்டு முறை) என்று தனி டிராக் வேறு.

இப்படி அமைதியாக செல்லும் கதையில் கல்லூரி விடுமுறைக்காக தங்கையின் தோழி (சஞ்சிதா படுகோனே) ஊரில் வந்து தங்க, அப்போதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. தமிழ் சினிமா இலக்கணப்படி அவரிடம் காதல் கொள்கிறார் ஹீரோ. அதே சமயம் இளவரசு தன்னுடைய கடன்களை கட்டிய போஸ் வெங்கட்டுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்ய முடிவெடுக்க, (ஜித்தன் ரமேஷை கேட்காமலேயே) தன்னுடைய தங்கை மகளை மருமகளாக்க முடிவெடுக்கிறார் ஜெயப்பிரகாஷ். தந்தை சொல்லை தட்டவும் இயலாமல், தன்னுடைய காதலை சொல்லவும் இயலாமல் தவிக்கும் ரமேஷ், திருமண நாளன்று திடீரென்று சஞ்சிதாவையே திருமணம் செய்துக்கொண்டு வந்து அனைவரையும் திகைக்க வைக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்துக்கொண்டது வெறும் காதலுக்காக மட்டும் அல்ல என்பதே கதையை தூக்கி நிறுத்தும் ட்விஸ்ட். அது என்ன ட்விஸ்ட் என்பதை தயவு செய்து வெள்ளித்திரையில் கண்டு ஒரு நல்ல முயற்சியை ஊக்கப்படுத்துங்கள்.

படம் எப்படி?: கதையின் தலைப்புக்கும் படத்திற்கும் முக்கியமான தொடர்பு இல்லையென்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த படங்களிலேயே வித்தியாசமான தலைப்பை கொண்டது இந்த படமே என்பதை மறுக்கவியலாது. முதல் ஒரு மணி நேரம் வழக்கமான தமிழ் படம் தான். ஹீரோ எதற்க்காக டி.ராஜேந்தரின் விசிறி ஆக வருகிறார் என்பது கதைக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் ஓரிரு காட்சிகளை நகர்த்த உதவுகிறது. நண்பர்கள் காமெடி, படத்தின் ஆரம்ப காட்சி, ஹீரோ வருகை, நாயகியை சந்திப்பது, காதலை சொல்ல முயலும் காட்சிகள் என்று தொடர்ந்து பல காட்சிகள்  மொக்கை என்றாலும் விறுவிறுப்பான இரண்டாம் பகுதி காரணமாக இவற்றை மன்னிக்கலாம். இதற்காக இதனை வழக்கமான தமிழ் படம் என்றெண்ணி விடாதீர்கள்.

இயக்கம் - இயக்குனர்: சமீபத்தில் வேறு எந்த ஒரு முதல்பட இயக்குனரும் தமிழில் இந்த அளவுக்கு வலுவான கதையையும், புத்திசாலித்தனமான திரைக்கதையையும் திரையில் கொண்டு வரவில்லை என்பதே உண்மை (தயவு செய்து 95 சதவீதம் ஸ்பானிய படங்களை காப்பி அடித்து எடுத்த படங்களை எல்லாம் பின்னூட்டத்தில் வந்து சொல்லவேண்டாம்). இதோ இந்த காட்சியில் ஒரு காதல் பாட்டு வரும் என்று அடித்து சொல்லும் ரசிகர்களை எல்லாம் தவிக்க விட்டு அங்கே பாடல்களை வைக்காமல் தவிர்த்து இருக்கிறார் கிஷோர். அதே போல மூன்றாவது தடவையாக ஹீரோ ஒரு தனி பாடலை பாடுகையில், 'அய்யோ' என்று எண்ணிக்கொண்டே இருக்கையில் அந்த பாடலை ஒரே ஒரு சரணத்துடன் முடித்துவிட்டு மறுபடியும் நம்மை திகைக்க வைக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒரு ட்விஸ்டில் மற்றுமொரு ட்விஸ்ட்டை புகுத்தி எதிர்பாராத ஒரு முடிவை நோக்கி திரைக்கதையை நகர வைக்கும்போது கிஷோரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நடிகர்கள் - ஜித்தன் ரமேஷ்: கண்டிப்பாக இந்த படம் இவரது வாழ்வில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. ஜீவாவிற்கு எப்படி ராம் திருப்புமுனையாக அமைந்ததோ, இந்த படம் அதைவிட சிறந்த திருப்புமுனையாக ரமேஷிற்கு அமையும். முதல் பாதியில் நடன காட்சிகளில் திறமையை அற்புதமாக வெளிப்படுத்திய இவர், கடைசி நாற்பது நிமிடங்களில் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கிறார். இந்த பதிவின் ஆரம்பத்தில் ஜீவா'வின் அண்ணன் என்று எழுதி இருப்போம். இதே போல நல்ல இயக்குனரும், சிறந்த திரைக்கதையும் கொண்டால், விரைவில் ஜீவா'வை ரமேஷின் தம்பி என்று எழுத வேண்டிய சூழல் வரும்.

ரமேஷிற்கு அவருடைய குரல் ஒரு தடையே என்றாலும் இந்த படத்தில் முடிந்த வரையில் அவர் முயற்சி எடுத்து மாறுபடுத்த முயன்றுள்ளார். இருந்தாலும் மைக் மோகன் போல இவரும் ஒரு டப்பிங் குரலை தேர்ந்தெடுத்தல் நலம். கிளைமேக்சில் அந்த மழை பெய்யும் காட்சியில் உண்மையில் ரமேஷ் நடித்துள்ளார். ஹாட்ஸ்  ஆப் டு யு, ரமேஷ். அதுவும் இந்த அளவுக்கு ஒரு கட்டுபடுத்தப்பட்ட (ரெஸ்டிரெயின் ஆன) நடிப்பை சமீபத்தில் வேறெந்த தமிழ் நடிகரிடமும் காணவில்லை எனதே உண்மை. கண்டிப்பாக இந்த படத்திற்காக அவர் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

ஹீரோயின் - சஞ்சிதா படுகோனே: வேட்டைக்காரன் படத்தில் விஜய்'யின் தங்கையாக வருவாரே, அவர்தான் இவர். இந்த படத்தில் இவர் ஆரம்பத்தில் மொக்கையாக தெரிந்தாலும் படம் முன்னேற முன்னேற, தன்னுடைய நடிப்பிலும் முன்னேற்றத்தை காண்பித்துள்ளார், குறிப்பாக ரமேஷிடம் தன்னுடைய காதலை ஒப்புக் கொள்ளும்போதும்,  கிளைமேக்சிலும் இவரது நடிப்பு அற்புதம். இந்த படம் இவருக்கு ஒரு முக்கியமான மைல்கல். ஆனால் அநேகமாக தமிழ் சினிமா இலக்கணப்படி இனிமேல் இவர் ஹீரோவின் தங்கையாகவோ, மாமனை கட்டிக்கொள்ள ஆசைப்படும் இரண்டாவது முறைப்பெண் ஆகவோ கூட மாறக்கூடும்.

மற்ற பாத்திரங்கள்: இதனை தவிர, ஜெயப்பிரகாஷ் தன்னுடைய டிரேட்மார்க் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீப காலங்களில் நான் இவரின் மிகப்பெரிய விசிறி ஆக மாறிவருகிறேன் என்பதை மறுக்கவியலாது. அதே சமயம் இவரை தொடர்ந்து ஒரே மாதிரி வேடங்களில் பார்ப்பதும் சலிப்பையே அளிக்கிறது. மாற்றிக்கொள்ளுங்கள் சார், இல்லையென்றால் உங்களை இதே மாதிரி பாத்திரங்களுக்கு டைப்காஸ்ட் செய்துவிடப்போகிறார்கள். திருடா, திருடி படம் வந்தபோது மாணிக்க விநாயகம் அவர்களுக்கும் இதே மாதிரி வரவேற்ப்பு இருந்தது. ஆனால் அவர் இப்போது எங்கே என்று யோசித்துப்பாருங்கள்.

ஹீரோவின் தங்கையாக வரும் அகிலாவும், ஹீரோவின் அம்மாவாக வரும் துளசியும் ஆரம்ப காட்சிகளில் வழக்கமாக தெரிந்தாலும் படத்தின் கிளைமேக்சில் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார்கள். அந்த நாற்பது நிமிடமும் படத்தின் உச்சகட்டம். பிரகாஷ் ராஜ் ஒரே ஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்தாரா என்ன என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வரும் அந்த இரண்டு காட்சிகளும் படத்தின் திருப்புமுனை. தயவு செய்து இதுபோன்ற பாலிஷ் ஆன பாத்திரங்களிலேயே நடியுங்கள் பிரகாஷ், உங்களது வில்லன் நடிப்பு எல்லாம் வேண்டாம்.

ஹீரோவின் நண்பராக வரும் சூரி, வழக்கமான நண்பன் பாத்திரம்தான் என்றாலும் கடைசி இரண்டு காட்சிகளில் தன்னால் நடிக்க இயலும் என்பதை நிரூபித்து உள்ளார். அதைப்போலவேதான் அவரது நண்பர் மாரியும். அதுவும் கிளைமேக்சில் மாரி ஆட்டம் போடுவது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் கதையுடன் ஒன்றியிருப்பதே அதன் சிறப்பு. ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் வருகிறார் இளவரசு. அலட்டல் இல்லாமல் அறிமுக காட்சியில் சிக்ஸ் அடிப்பதில் இருந்து வரும் காட்சிகளில் எல்லாம் கைதட்டல் வாங்குகிறார். கொஞ்சமே வந்தாலும் பின்னுகிறார்.

படத்தின் + கள்:

  • எங்கேயும் திருடாத நேர்மையான கதை
  • எதிர்ப்பார்ப்பை தோற்கடிக்கும் காட்சிகளும், திருப்பங்களும்
  • சிறந்த திரைக்கதை
  • இரண்டாம் பகுதியில் நல்ல இயக்கம்
  • மிகையில்லாத நடிப்பு
  • கடைசி நாற்பது நிமிடங்கள்

படத்தின் - கள்:

  • தேவையில்லாத அந்த ஒரு ஹீரோயிச சண்டைக்காட்சி
  • எண்பதுகளின் தமிழ் படங்களை நினைவுபடுத்தும் கதையோட்டம்
  • மெதுவாக நகரும் முதல் பகுதி
  • கவனத்தை கவராத இசை

திருஷ்டி போட்டு: படத்தில் பல விஷயங்கள் கவர்ந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே உறுத்திக்கொண்டு இருந்தது. படத்தின் ஒரு காட்சியில் ஹீரோயின் வீதியில் நின்றுக்கொண்டு இருக்கும்போது சில பல ரவுடிகள் வந்து கிண்டல் செய்ய, அதில் ஒருவன் அவரது பின்பக்கத்தை தட்டிவிடுகிறான். அதானால் கோபமடைந்த ஹீரோ அவனது கையை உடைத்து விடுகிறார். இதில் தவறு எதுவும் இல்லையென்றாலும், அவன் தடவியது இடது கையால், ஹீரோ உடைத்தது வலது கையை.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 3 bullets 3/6. மூன்று தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: பிள்ளையார் தெரு கடைசி வீடு – குடியிருக்கலாம்.

3 comments:

saravananfilm said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.


hot tamil actress gallery

Cibiசிபி said...

// கோபமடைந்த ஹீரோ அவனது கையை உடைத்து விடுகிறார். இதில் தவறு எதுவும் இல்லையென்றாலும், அவன் தடவியது இடது கையால், ஹீரோ உடைத்தது வலது கையை. //

எப்புடிங்க உங்களால மட்டும் இப்புடி

ஹி ஹி ஹி :))
.

Vijayakumar A said...

// கோபமடைந்த ஹீரோ அவனது கையை உடைத்து விடுகிறார். இதில் தவறு எதுவும் இல்லையென்றாலும், அவன் தடவியது இடது கையால், ஹீரோ உடைத்தது வலது கையை. //

இதுக்கு பேரு தான் உன்னிப்பா கவனிப்பதோ....!

Post a Comment