இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.
சமீபத்தில் இந்த படத்திற்கு உருவாக்கப்பட்ட எதிர்ப்பார்ப்பை போல வேறு எந்த மத்திம தர ஹிந்தி படத்திற்கும் உருவாக்கப்படவில்லை. மத்திம தரம் என்பது நட்சத்திரங்களை வைத்து கூறப்பட்ட வார்த்தை. இந்த படத்தில் ராஜீவ் காண்டேல்வால் தவிர வேறு எந்த நடிகரையும் நீங்கள் பேர் சொல்லி இனம் காண முடியாது. அப்போ ஏன் மத்திம தரம் என்று கேட்பவர்களுக்கு இந்த பதில்: படத்தில் இருக்கும் டெக்னிகல் திறமையாளர்களை கண்டு தான் இந்த படம் இப்படி ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது (தமிழில் சமீபத்தில் இப்படி பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வந்த படம் ஆரண்ய காண்டம்).
படத்தின் பின்னணி: இந்த படத்தின் இசை இயக்குனரும், என்னுடைய பழைய சகாவும், நண்பருமாகிய பிரஷாந்த் பிள்ளை இந்த படத்தை பற்றி அழகாக விவரிப்பார். இந்த படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த கதையை ரெடி செய்துவிட்டு பல தயாரிப்பாளர்களிடம் சான்ஸ் கேட்டுக்கொண்டு இருந்த சமயம். அப்போது படத்தில் வரும் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்துக்கு முன்னாபாய் புகழ் அர்ஷத் வார்சியை புக் செய்துவிட்டு படத்தில் வரும் ஐந்து முக்கிய இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராக புதுச்சேரியை சேர்ந்த கல்கி கோயலீனை தேர்ந்தெடுத்து இருந்தார். கல்கி அந்த வருடம் வந்த அனுராக் காஷ்யப் படமாகிய தேவ் டி படத்தில் நடித்ததற்காக பில்ம் பேர் விருது வாங்கி இருந்த நேரம் (அதே சமயம் அனுராக்கை காதலிக்க ஆரம்பித்த நேரமும் கூட). கதையை சொல்ல அவர் அடிக்கடி கல்கியின் வீட்டிற்கு செல்வார். அப்போதெல்லாம் அங்கே அனுராக்கையும் காண்பார்.
நாளாக, நாளாக இவரைப்பற்றி விசாரித்த அனுராக், கதையை கேட்டு இம்ப்ரெஸ் ஆகிவிட்டு “வேறு எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை என்றால் சொல்லுங்கள், ஓரளவுக்கு சுமாரான பட்ஜெட்டில் நானே தயாரிக்கிறேன்” என்று சொல்ல, நம்பியாருக்கு அடித்தது யோகம். ஏனென்றால் 'நல்ல' சினிமாவை எடுப்பவர் என்று பெயர் வாங்கிய அனுராக் காஷ்யப் தயாரிப்பில் வந்த படம் என்றாலே படத்திற்கு ஓபனிங் வந்து விடும் என்பது பாலிவுட் விதியாகி இருந்த நேரமது.இப்படியாக அனுராக் தயாரிப்பாளராக மாறியவுடன் படத்தின் பட்ஜெட் குறைந்து (படிக்கவும்: நட்சத்திரங்கள் நீக்கப்பட்டனர்). திறமையான புதிய நடிகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புதிய உத்வேகத்துடன் வெளிவந்துள்ள படமே இந்த ஷைத்தான்.
ஷைத்தான் படத்தின் கதை: ஏற்கனவே தேவர் மகன் படத்தில் நம்ம கமல் சொன்ன வசனமே இந்த படத்தின் மைய்யக்கரு (நம்ம எல்லாருக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிட்டு இருக்கு, அதை நாம எப்போ எழுப்புறோம் என்பதே கேள்வி). படத்தில் ஐந்து நண்பர்கள். அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்து இருக்கும் எமி (கல்கி), தந்தையின் சொத்தை அழிக்க பாடுபடும் கேசி (குல்ஷன் தேவையா), சீரியல்களில் நடிக்கும் தான்யா (கீர்த்தி), நண்பர்களுக்காக எதையும் செய்யும் ஜுபின் (நீல் பூபாளம்) மற்றும் கஞ்சா விற்று உல்லாசம் காணும் டேஷ் (ஷிவ் பண்டிட்). இதில் கல்கிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. குறிப்பாக தன்னுடைய மனநலம் குன்றிய தாயின் மறைவுக்கு பின்னர் மறுமணம் செய்துக்கொண்ட தந்தையை வெறுக்கும் காட்சிகளிலும், இல்லாத அம்மாவை நினைத்து உருகுவதாகட்டும் கல்கி, கல்கி அவதாரம் எடுக்கிறார்.
இந்த ஐந்து நண்பர்களும் எதற்காகவும், யாருக்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள். ஜாலியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் மேல்தட்டு மக்களின் பிள்ளைகள் அடுத்து என்ன செய்வதென்பது தெரியாமல் வாழும் வாழ்க்கையை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் இயக்குனர். ஒருநாள் திடீரென்று ஒரு விபத்து. அந்த விபத்தை மறைக்கவும், தங்களை காக்க போலிஸ்காரனுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகிறது. ஒன்றல்ல, ரெண்டல்ல, மொத்தம் 25 லட்சங்கள். அந்த பணத்தை புரட்ட அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும், ஒவ்வொரு நடையிலும், தாங்கள் விரித்த வலையில் தாங்களே சிக்குவது தெரியாமல் தொடர்ந்து திட்டத்தை மேற்கொள்ள, இவர்களை கண்டுபிடிக்க வருகிறார் ஒரு நேர்மையான, துடிப்பான போலிஸ் அதிகாரி (ராஜீவ் காண்டேல்வால்). இது வரையில் ஓடிக்கொண்டு இருந்த படம் இதற்க்கு பின்னர் புயல் வேகத்தில் பறக்க ஆரம்பிக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் இருக்கும் அந்த சைத்தான் சூழ்நிலையை இனம்கண்டு வெளியே வந்து நம்முடைய உண்மையான சொரூபத்தை உலகுக்கு காட்டுகிறதா அல்லது நம்முடைய சமூக அந்தஸ்தும், நம்முடைய நடத்தைகளும் அந்த சைத்தானை கட்டுப்படுத்துகிறதா என்பதே கேள்வி. இந்த படம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். மிஸ் செய்து விடாதீர்கள்.
படத்தின் சிறப்பு அம்சங்கள்: இயக்கம்-இந்த படத்தை பற்றி பிரஷாந்த் கூறும்போதே எனக்கு பார்க்கும் ஆசைவந்துவிட்டது. ஆனால் என்னை பயமுறுத்திய ஒரே விஷயம் இந்த படத்தின் இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனர் என்பதே. எங்கே அவரைப்போலவே படம் எடுத்துவிடுவாறோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அவ்வாறெல்லாம் இல்லை என்று இசை அமைக்கும்போதே நம்பிக்கையூட்டி இருந்தான் பிரஷாந்த். ஆகையால் தைரியமுடன் சென்று பார்த்தேன். முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவுக்கு அப்படி ஒரு முழுமையான ஆளுமை நம்பியாருக்கு. படத்தின் முதல் நாற்பது நிமிடங்கள் கொஞ்சம் ஸ்லோவாக தெரிந்தாலும் இரண்டாவது பாதியின் அசுர ஓட்டத்திற்கு அது தேவையே. இயக்குனரின் திறமையை பறைசாற்ற இரண்டே இரண்டு காட்சிகளை மட்டும் சொல்கிறேன்:
ஆக்சிடென்ட்: படத்தில் வரும் முக்கியமான் காட்சி. ஆனால் அந்த விபத்து நடப்பதற்கு முந்தைய காட்சிகளில் அவ்வளவு வேகமாகவும், சப்தங்களுடனும் இருக்கும் திரை திடீரென்று மரண அமைதியுடன் அந்த செல் போன் விழுவதையும், அடுத்த காட்சியில் கேசி ஸ்டியரிங்கை நடுங்கும் கைகளுடனும் விடுவதையும் மட்டுமே பின்னணி இசையில்லாமல் காட்டி அந்த விபத்தை விளக்கி இருப்பார் இயக்குனர். ஹாட்ஸ் ஆப் டு யு, பிஜாய்.
தப்பித்தல்: ஐந்து பெரும் போலிசுக்கு பயந்து ஒரு மொக்கையான லாட்ஜ் போன்ற இடத்தில் தங்கி இருக்க, அங்கிருக்கும் ஒரு சபலிஸ்ட் தான்யாவை இழுத்து சென்றுவிடுகிறான். அதே நேரம் போலிஸ் அங்கே வர, உண்மையிலேயே பெண்களை கடத்தும் ஒரு கும்பல் அதே இடத்தில இருக்க முழு வேகத்தில் காட்சிகள் நகருகின்றன. திடீரென்று அந்த ஐவரும் மொட்டைமாடியின் கதவுகளை திறந்து கொண்டு ஓட, அங்கே ஆரம்பிக்கிறது ஸ்லோ மோஷன் காட்சிகளும், அந்த அற்புதமான 'கோயா கோயா சாந்' பாடலும். ஒரு முழு நீள துப்பாக்கிசண்டை நடக்க, இந்த ஐவரும் தப்பிக்க வழி தேடி ஓட, பின்னணியில் வெறும் இந்த பழைய பாடல் மட்டுமே. (கண்டிப்பாக இதே போன்று கட்சி இந்த வருடத்திற்குள் ஒரு தெலுகு/தமிழ் படத்தில் வந்துவிடும்). இங்கே ரீமிக்ஸ் செய்யாமல் பழைய பாடலை அப்படியே கொடுத்த இயக்குனருக்கு நன்றி.
நடிப்பு: படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் பின்னி, பெடலேடுத்து இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. அதில் சிக்சர் அடித்து இருபது கல்கியும், ராஜீவும். இதனை தவிர்த்து ஷிவ் பண்டிட்டும், கேசியும் அசதி இருக்கிறார்கள். குறிப்பாக எந்த நடிகருமே சோடைபோகவில்லை என்பதே சிறப்பு அம்சம். ராஜீவுக்கு இது ஒரு திருப்பு முனை படமாக அமையும். அவரது அந்த கோபமான பாத்திரம் கண்டிப்பாக பேசப்படும். அதிலும் குறிப்பாக கமிஷனரிடம் 'என்னை இந்த கேசில் இருந்து எடுத்து விட்டு நீங்களே கண்டுபிடியுங்கள்' என்று கத்தி விட்டு திரும்புகையில் ஒரு இன்ஸ்பெக்டர் வந்து புதிய தகவை சொல்ல, அப்படியே திரும்பி கமிஷனருக்கு சல்யூட் அடித்துவிட்டு கடமையை செய்ய செல்லும் காட்சியாகட்டும், கிளைமேக்சில் கல்கியை பார்க்கும் பார்வையில் ஆகட்டும், மனுஷன் அசத்துகிறார். அதே சமயம் இவரது முன்கோப புத்தியை காட்டமட்டுமே வரும் கிளைக்கதையாக தோன்றினாலும் அவரது அந்த டைவர்ஸ்-கோபம்-அன்பு-குடும்பம்-மனைவி விஷயங்கள் ஒரு தனி ஹைக்கூ.
இசை: படத்தில் தனியாக பாடல்கள் என்று எதுவுமே இல்லை. எல்லாமே பின்னணியில் வருபவை மட்டுமே. ஆனாலும் இசை 'உள்ளேன் ஐயா' என்று அய்யம்பாளயத்தாரை போல இருப்பினை உணர்த்துகிறது. அதுவே தனி பலம். இதற்க்கு மேலும் சொன்னால் அது நண்பனை புகழ்வது போல ஆகிவிடும் என்பதால் இப்போதைக்கு ஸ்டாப்.
இதற்க்கு மேலும் படத்தின் ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் புகழ்ந்துகொண்டே போகலாம் தான். இப்போதே பதிவின் நீளம் அதிகம் என்று தோன்றுவதால், படம் பாருங்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 5/6. ஐந்து தோட்டாக்கள்.
இரண்டு கட்டை விரல்கள் மேலே! (2 Thumbs Up).
கிங்'ஸ் பன்ச்: சைத்தான் - வேதம் ஓதுகிறான்.
4 comments:
// இந்த படத்தில் ராஜீவ் காண்டேல்வால் தவிர வேறு எந்த நடிகரையும் நீங்கள் பேர் சொல்லி இனம் காண முடியாது.//
எச்சூஸ் மீ! இவரையே யாருன்னு எங்களை மாதிரி தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு தெரியாது! ஏன்னா நாங்க கடைசியா பாத்த இங்கிலீஷ் படம் ஷோலே!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//இந்த படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார்//
இவரு எம்.என்.நம்பியார் கொள்ளுப் பேரனா?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//அந்த அற்புதமான 'கோயா கோயா சாந்' பாடலும்.//
ஆஹா! என்றும் மங்காது நினைவில் நிற்கும் அந்த அற்புத பாடலின் யூடியூப் இணைப்பை வழங்கியிருக்கலாமே?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
மி த ரெண்டாவது :))
ஹையா தலைவர் ஒரு வழியா வந்துட்டாரு ;-)
எச்சூஸ் மீ! இவரையே யாருன்னு எங்களை மாதிரி தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு தெரியாது! ஏன்னா நாங்க கடைசியா பாத்த இங்கிலீஷ் படம் குர்பானி !
.
Post a Comment