Sunday, June 12, 2011

பத்ரிநாத் 2011 - தெலுகு படம் விமர்சனம்

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.

இப்போ நாம படர அவஸ்தைக்கு எல்லாம் நம்ம ஜாக்கி சானை தான் குறை சொல்லவேண்டும். பின்னே, அவருதானே த மித் என்று ஒரு படத்தில் நடித்து எல்லோருக்கும் இப்படிபட்ட மறுஜென்ம திரைக்கதை ஐடியாக்களை கொடுக்கிறார்? அந்த படம் வந்தவுடனே தெலுகில் 'மகதீரா' வந்தது (இப்போ தமிழில் டப் செய்யப்பட்டு மாவீரன்). அந்த படம் வேறு சூப்பர் ஹிட் ஆகிவிட்டதால் அதனை தொடர்ந்து தெலுகில் இருக்கும் அணைத்து இளைய தலைமுறை ஹீரோக்களுக்கும் ராஜா காலத்து காஸ்டியூமில் கத்தி சண்டை போட வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது.அதன் விளைவே ஜூனியர் NTR  நடித்து வந்த சக்தியும் (வழக்கம் போல தமிழில் டப் செய்யப்பட்டது), இப்போது அல்லு அர்ஜுன் நடித்து வந்து இருக்கும் பத்ரிநாத் படமும்.

பின்னணி: அதற்காக பத்ரிநாத் கதையும் பூர்வஜென்ம கதை என்று நினைத்து விடாதீர்கள். இந்த படமானது தெலுகு பட உலகிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது எதிர்ப்பார்ப்பை கூட்டியது. மேலும் படத்தில் வரும் கத்தி சண்டைக்காக அல்லு அர்ஜுன் தீவிரமான மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மேற்கொண்டார். இந்தியன் சாமுராய் ஆக அல்லு அர்ஜுன் நடித்து இருக்கிறார் என்பதே படத்தின் முக்கிய பேச்சாக இருந்தது. அதுவுமில்லாமல் தென்னகத்தின் அனைத்து மொழிகளிலும் இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளிவரும் என்பதும் எதிர்ப்பார்ப்பை கூட்டிய ஒரு விஷயம். ஆனால் கடைசியில் மொழி மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு தெலுகில் மட்டுமே ரிலீஸ் ஆனது. இந்த கொடுமையான காரணத்தினால் தமிழ் நாட்டில் தெலுகில் வேறு ரிலீஸ் ஆகவில்லை. இந்த படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜூலை மாதம் வெளிவர இருக்கிறது.

பத்ரிநாத் - கதை: இந்திய நாட்டின் கோவில்களை காப்பற்றுவதற்க்காக 'பாதுகாவலர்களை' உருவாக்கி ஒவ்வொரு பாதுகாவலனுக்கும் ஒரு கோவிலை காக்க பயிற்சி அளிக்கிறார் பிரகாஷ் ராஜ். அப்படி பத்ரிநாத் கோவிலை காப்பாற்றும் பொறுப்பு பெற்றவரே நம்ம ஹீரோ பத்ரி. இவர்தான் பிரகாஷ் ராஜின் பிரதம சீடர். ஒரு முறை அமர்நாத் கோவிலை தீவிரவாதிகள் முற்றுகை இட, தனி ஆளாக வெறும் கத்தியுடன் சென்று அனைத்து தீவிரவாதிகளையும் வென்று தன்னுடைய வீரத்தை நிரூபிக்கிறார் பத்ரி. இந்த சூழலில் கடவுள் நம்பிக்கையை இழந்த தமன்னா பத்ரிநாத் கோவிலுக்கு வர, அவருக்கு கடவுள் நம்பிக்கையையும் காதலையும் வரவழைக்கிறார் பத்ரி. திடீரென்று தமன்னாவின் மாமா (வில்லன் கெல்லி டோர்ஜி) தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய தமன்னாவை கடத்த, பிரகாஷ் ராஜ் தமன்னாவை மீட்டுவருமாறு பத்ரியிடம் சொல்கிறார். பிறகு என்ன நடக்கும் என்பதை தல அதிஷாவின் பக்கத்துக்கு வீட்டு பையன் கூட சொல்லிவிடுவான். அதனால் நான் அதனை சொல்லவில்லை.

படத்தின் +கள் (கூட்டல்கள்): சந்தேகமே இல்லாமல் அல்லு அர்ஜுன் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். மனிதர் அவ்வளவு அழகாக திரையில் தெரிகிறார். இந்த படத்தில் கட்டியதை போன்று வேறு எந்த படத்திலும் தமன்னா 'தெறம' கட்டியதில்லை என்பது உச்சம். மிகவும் சிறப்பான காட்சியாக்கமும் அதற்க்கு காரணமான சினிமோட்டோகிராபர் ரவி வர்மனும், அப்படியே நம்ப வைக்கும் அளவிற்கு செட் போட்ட கலை இயக்குனர் ஆனந்த் சாய் அவர்களும் பாராட்டிற்க்குரியவர்கள்.

படத்தின் –கள் (கழித்தல்கள்): மற்ற எல்லாமுமே படத்தின் வேகத்தடை போலத்தான் உள்ளது. மிகவும் சிறப்பான காமெடி நடிகர்கள் இருந்தும் (பிரம்மானந்தம், M.S.நாராயணா, வேணு மாதவ் மற்றும் கிருஷ்ணா பகவான்) படத்தில் துளிக்கு கூட நகைச்சுவை என்பதே இல்லை. மிகவும் பிரபலமாக பேசப்பட்ட Peter Hein சண்டைக்காட்சிகள் கூட சாதாரணமாகவே தெரிகிறது. குறிப்பாக திறமையான நடனம் ஆட தெரிந்த ஒரு ஜோடி இருந்தும் (அல்லு அர்ஜுன்-தமன்னா) படத்தில் பாடல்கள் அனைத்துமே புகுத்தப்பட்ட மாதிரியே தெரிகிறது. ஒன்றிரண்டை தவிர மற்றவை தேறவில்லை.

திரைக்கதை மிகவும் மோசம். கோவிலில் தமன்னாவின் அம்மாவின் சேலை தீப்பிடித்து அதனால் அவரும், காப்பாற்ற வரும் தமன்னாவின் தந்தையும் இறக்க நேரிடுவதால் தமன்னாவிற்கு கடவுள் பக்தி இல்லையாம். பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்கும் ஹீரோவிடம் கொஞ்ச நாள் பழகியதும் மீண்டும் கடவுள் நம்பிக்கை வந்துவிடுகிறதாம். உண்மையை சொல்வதென்றால் படம் முழுக்க இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

முக்கிய குறிப்பு: ஏற்கனவே சொன்னதுபோல டப்பிங் விஷயத்தால் படம் சென்னையிலும், தமிழகத்திலும் எங்கேயுமே ரிலீஸ் ஆகவில்லை. மற்றபடி ஆந்திராவில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. விளம்பரங்களும் சிறப்பாகவே இருப்பதால் நல்ல ஓபனிங் இருக்கும். ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் ஐநாக்ஸ் தியேட்டரில் இன்று மட்டும் 12 காட்சிகள் திரையிடப்படுகிறது. நாங்கள் பார்த்தது ஞாயிறு காலை 10 மணி சிறப்பு காட்சி. மதியக்காட்சிக்கே டிக்கெட்டுகள் இருக்கின்றனவாம். நம்ப முடியவில்லை. ஏனென்றால் இந்த படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பார்ப்பினால் கண்டிப்பாக அட்வான்ஸ் புக்கிங் அளவில் ஒரு வசூலை தியேட்டர்காரர்கள் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

எவ்வளவுதான் மொக்கையான கதையாக இருந்தாலும்கூட விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் ஒரு படத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல முடியும். ஆனால் இந்த படத்தில் கதையும் சரி, திரைக்கதையும் சரி தேறவில்லை. அதனாலேயே படம் அடிபடுகிறது. அல்லு அர்ஜுனின் மிக தீவிரமான விசிறியாகிய என்னைபோன்றவர்களே கடுப்பாகும் அளவுக்கு இந்த படம் இருக்கிறது. இந்த படம் ஓடுவது மிகவும் கடினம்

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 2 bullets  2/6. இரண்டு தோட்டாக்கள் (அதுவும் அழகியல் காட்சிகளுக்கே).

கிங்'ஸ் பன்ச்: பத்ரிநாத் - ரன் அவுட் (நேற்றைய 3rd ODI மேட்சில் நம்ம சென்னை மட்டைபந்தாட்ட வீரர் பத்ரிநாத் ஒரு நல்ல எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் செய்துவிட்டு கவனக்குறைவால் ரன் அவுட் ஆனது போலத்தான் இந்த படமும்).

4 comments:

Cibiசிபி said...

அப்பாடா நாங்களும் வந்தோம்ல 1st
:))
.

Indian said...

பேசாம S.P.சரண் ஆரண்ய காண்டம் படத்த தெலுகுல டப்பலாமோ?

King Viswa said...

//பேசாம S.P.சரண் ஆரண்ய காண்டம் படத்த தெலுகுல டப்பலாமோ?//

அந்த யோசமை மட்டும் வேண்டாம். நம்ம ஆளுங்க ரசனையே ரசனை. படம் மொக்கை என்றாலும்கூட இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓபனிங் பெற்றுள்ள தெலுகு படம் இதுதான் (இத்துணைக்கும் இந்த ஆண்டு ஜூனியர் படம் மற்றும் பவன் கல்யான் படங்கள் வந்துள்ளன). கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அபீசியல் கணக்கு: முதல் நாள் ஓபனிங் கலெக்ஷன் அமவுண்ட் 7.52 Crores.

தமன்னா தெறம காட்டியதால் இதுவா? என்றெல்லாம் என்னை கேட்கவேண்டாம்.

N.H. Narasimma Prasad said...

அப்பாடா, இந்த படத்த பார்க்காம நான் தப்பிச்சேன். ரொம்ப நன்றி அண்ணே.

Post a Comment