Saturday, June 11, 2011

எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் 2011 - விமர்சனம்

வரலாற்றில் நடைபெறும் சம்பவங்களை கற்பனை கலந்து சம்பவங்களின் இயல்பு மாறாமல் கதை எழுதுவது ஒரு திறமையான கலை. முத்து காமிக்ஸ்'ல் வரும் மர்ம மனிதன் மார்டின் கதைகள் இப்படிப்பட்டவையே. அதனைப்போலவே தமிழிலும் பல முயற்சிகள் நடந்துள்ளன. நட்சத்திர நடிகர்கள் தோன்றும் படங்களிலும் இதுபோன்ற விஷயங்கள் இருக்கும். குறிப்பாக நடிகர் கமல் ஹாசன் இதுபோன்ற விஷயங்களை அதிகம் ரசிப்பவர். அதனால்தான் அவரது படங்களில் இதுபோல சம்பவங்களை கற்பனை கலந்து கதையுடன் நகர்த்தி இருப்பார். இந்தியன் படத்தில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் வரும் காட்சியாகட்டும், தசாவதாரம் படத்தில் சுனாமி அலைகள் தோன்றுவதாகட்டும் , அவை கதையின் போக்கோடு நடப்பது போலவே சித்தரிக்கப்பட்டு இருக்கும். 

அதைப்போல வரலாற்றில் மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்று உலக நாடுகளால் அஞ்சப்பட்ட 'கியூபா அணு ஆயுத' பிரச்சினையை (1962) மையக்கருவாக கொண்டு கதையை நகர்த்தி இருப்பதில் இந்த எக்ஸ் மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படம் வெற்றி பெறுகிறது. இதுவரை எக்ஸ் மென் பட வரிசையில் நான்கு படங்கள் வந்துள்ளன. மூன்று படங்கள் எக்ஸ் மென் வரிசையிலும், நான்காவது படம் வூல்வரின் கதையாகவும் வந்துள்ள நிலையில், இந்த படத்தில் புரபெசர் சேவியர் மற்றும் மேக்நீடோ ஆகியோரது பால்யகாலத்து பராக்கிரமங்களை பறைசாற்றும் விதத்தில் (அப்பாடா, மூன்று ப வாக்கியங்கள் அடுததுத்து) வந்துள்ளதே இந்த எக்ஸ் மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படம்.

எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் கதை: வழக்கமான "அம்மாவை கொன்ற வில்லனை தேடிப்பிடித்து பழி வாங்கும்" தமிழ் சினிமா கதையை எடுத்து அதில் பரிணாம வளர்ச்சியில் புதிய குரோமோசோம்களை கொண்ட எக்ஸ் மென் கதாபாத்திரங்களை புகுத்தி, புகழ்பெற்ற கியூபா அணு ஆயுத பிரச்சினையை கிளைமேக்சில் கருவாக்கி எழுதப்பட்டதே இந்த எக்ஸ் மென் படத்தின் கதை.

1962-ம் ஆண்டு. அமெரிக்க உளவு நிறுவனமாகிய CIA தன்னுடைய சந்தேக லிஸ்ட்டில் இருக்கும் கர்னல் ஹென்றி என்பவரை கண்காணிக்க ஏஜென்ட் மொய்ரா மெக்டாக்கர்ட் என்னும் அழகியை அனுப்புகிறது. முதல் காட்சியிலேயே தமிழ் சினிமா ஹீரோயின் போல ஆடைகளை துறந்து அதிரடி அறிமுகம் கொடுக்கிறார் மொய்ரா. ஹென்றியை கண்காணிக்கும் அவர், செபாஸ்டியன் ஷா என்ற சந்தகதிற்குரிய நபரையும், அவரது மனித ஆற்றலை மீறிய சக்திகளையும் கண்டு குழப்பம் அடைந்து, தீர்வு காண புரொபெசர் சேவியரை பிடிக்கிறார்.

சேவியர், மியூட்டன்ட் எனப்படும் ஒரு மனித இனத்தை மீறிய சக்திகளை கொண்ட ஒரு வகை சிறப்பு குழுவை சேர்ந்தவர்.  சிறுவயதில் டாக்டர் ஸ்மித்தால்  யூத வதை முகாமில் தன்னுடைய தாயை பறிகொடுத்த எரிக், பழிவாங்கும் புயலாக அலைவதைக்கண்டு அவரையும், C.I.A உதவியுடன் ஏஜென்ட் மொய்ராவின் துணைகொண்டு இவ்வாறான சிறப்பு சக்தி வாய்ந்த நபர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை உருவாக்கி அவர்களின் சக்தியை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும் அளிக்கிறார். இந்த குழுவானது செபாஸ்டியன் ஷாவின் குழுவையும், அவர்களது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கும் சதியையும் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை. நான் என்னுடைய பதிவில் மொக்கையாக எழுதி இருந்தாலும், படத்தின் வெற்றியே இந்த விறு விறுபபான கதையிலும், தொய்வில்லாத திரைக்கதையிலுமே இருக்கிறது. 

படத்தில் ரசிக்க வைக்கும் காட்சிகள் பல இருக்கின்றன. தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தியிடப்படும் திரையரங்கங்களில் ஒரே விசில் சத்தமும், கைத்தட்டல்களும் நிறைந்த காட்சிகளாகவே இந்த படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக (ஒரே) ஒரு காட்சியில் வூல்வரின் தோன்றும்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாத அளவிற்கு கரகோஷம் விண்ணை பிளக்கிறது. கண்ணை விரிய வைக்கும் காட்சிகள் (வியப்பில்தான்!) படமெங்கும் நிறைந்தே உள்ளது. குறிப்பாக கிளைமேக்சில் வரைகலை நிபுணர்களும், நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு நமக்கு விருந்தினை படைத்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரங்கள் கழிந்ததே தெரியாமல் நிறைவான மனதோடு திரையரங்கினை விட்டு வெளிய வரும்போது, இந்த எக்ஸ் மென் பட வரிசையில் இதுதான் சிறந்த படம் என்று நம்மை கூற வைக்கிறார் இயக்குனர். அவருக்கு வாழ்த்துக்கள். 

கேஸ்டிங் - பாத்திரம் தேர்வு செய்வது: இந்த படத்தின் வெற்றியே இதன் நடிகர்கள் தேர்வில் அமைந்துவிட்டது. குறிப்பாக மூன்று பிரதான பாத்திரங்களாகிய செபாஸ்டியன் ஷா (கெவின் பேகன்), புரொபெசர் சேவியர் (ஜேம்ஸ் மக்வாய்) மற்றும் எரிக் (மைக்கேல் பாஸ்பெண்டர்) ஆகியோரது மிகையற்ற நடிப்பும், அலட்டல் இல்லாத பாத்திர பாங்கும் வெற்றிக்கு வித்திடுகின்றன என்றால் அது குறைவல்ல.

எக்ஸ் மென் பட வரிசையில் முதல் படத்தை பார்க்கும் வரையில் நான் அந்த காமிக்ஸ் புத்தகங்களை ஒன்றினைக்கூட நான் முழுதாக வாசித்தவன் அல்ல. இருந்தாலும் என்னை அந்த முதல் படமே கவர்ந்தது. ஆனால் காமிக்ஸ் வாசகர்கள் பலரையும் ஏமாற்றம் அடைய வைத்து அந்த படம். அதே சமயம், அந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த இரண்டாம் பாகம் காமிக்ஸ் ரசிகர்களையும், காமிக்ஸ் படிக்காத சினிமா ரசிகர்களையும் ஒருங்கே கவர்ந்தது. மூன்றாம் பாகம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வந்ததால், சிறப்பாக இருந்தாலும் சிறியதொரு ஏமாற்றதுடனே முடிந்தது. வூல்வரின் படமானது ஒரு அக்மார்க் ஹிந்தி மசாலா சினிமாவிற்குரிய அணைத்து அம்சங்களையும் கொண்டு விளங்கியது. (அதனாலேயே எனக்கு பிடித்திருந்தது). இந்த வகையில் பார்த்தால், இந்த எக்ஸ் மென் பட வரிசையில் இந்த எக்ஸ் மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படமே மிகச் சிறந்து என்று எனக்கு படுகிறது.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 6 bullets 6/6-ஆறு தோட்டாக்கள்!

2 Thumbs Upஇரண்டு கட்டை விரல்கள் மேலே! (Two Thumbs Up).

கிங்'ஸ் பன்ச்: எக்ஸ் மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் – Passing With Distinction.

3 comments:

MSK / Saravana said...

அட. இப்போத்தான் நானும் இந்த படத்தை பத்தி ஒரு பதிவு போட்டேன். :)


படம் செம இல்ல.. :)

முரளிகண்ணன் said...

பார்க்கத் தூண்டும் பதிவு

அண்ணன் க'னா said...

இன்றுதான் முழுமையாக இந்த படத்தை பார்த்து முடித்தேன். இப்போதுதான் புரிகிறது ஏன் அவர்கள் செல் போன் யூஸ் பண்ணவில்லை, ஏன் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியே காணப்பட்டது என்று. படம் நடப்பது 1962'ம் ஆண்டாம். என்ன கொடுமை சரவணன் இது?

இனிமே நானும் தலைவர் யூனா மாதிரி படங்களை ஆரம்பம் முதலே பார்ப்பது என்று முடிவெடுத்து இருக்கிறேன்.

Post a Comment