இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இந்த படத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிந்து கொள்வது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகமாக இருக்கும் நடிகை சார்மியின் மார்கெட்டை சரிகட்ட அவரும் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். அதீத கவர்ச்சி காட்டி நடித்த பல படங்கள், தனி நாயகியாக (அருந்ததியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட) மங்களா படம் - இது ஸ்பைடர்மேன் இயக்குனர் சாம் ரெய்மியின் Drag me to Hell படத்தின் தழுவல்-, ஒரே ஒரு குத்தாட்ட பாடல் போட்ட படம், ராம் கோபால் வர்மாவின் வித்தியாச படம் -தொங்கால முட்டா-, என்று பல படங்கள். ஆனாலும் முடிவு ஒன்றுதான் - படுதோல்வி. சரி இனிமேல் விஜயசாந்தி போல புரட்சிகரமான பாத்திரங்களை முயற்சிப்போம் என்று துணிந்து நடித்த படமே நகரம் நித்ர போதுன்ன வேள (நகரம் உறங்கும் வேளை). அருமையான, கவித்துவமான தலைப்பு கொண்ட இந்த படத்தில் ஜோடியாக (?!?) நடிப்பவர் ஜகபதி பாபு. இவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு ஹிட் படத்திற்காக துடித்துக்கொண்டு இருப்பவர்தான். இப்படி ஒரு வெற்றிப்படதிற்க்காக ஏங்கும் இரு முன்னணி நட்சத்திரங்கள் சேர்ந்து வந்ததாலேயே இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு கூடியது.
படத்தின் பின்னணி: இந்த படத்தில் முதல் பாடலாக இருக்கும் அந்த தெலங்கானா / பிராக்ஷனிஷ பாடலை பலமுறை தொடர்ந்து டிரைலரில் ஒளிபரப்பி ஒருவிதமான எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருந்தார்கள். அதுவும் இல்லாமல் ஜகபதி பாபுவின் அந்த டைட்டில் சாங் (நித்ர போதுந்தி பட்னம்), அருமையான வரிகளுடன் தாலாட்டி தூங்க வைக்கும் தன்மையை கொண்டிருப்பதால் மற்ற பாடல்களும், படமும் நன்றாகவே இருக்கும் என்று நம்பி இருந்தேன். அதுவுமில்லாமல் படத்தின் இயக்குனர் வேறு இது ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் பின்னணி கதை என்றெல்லாம் சொல்லி இருந்தார். அதுவும் எதிர்ப்பார்ப்பை கூட்டியது. மேலும் அந்த லிப் டு லிப் முத்தம் பற்றிய தகவல் கசிந்தது இளசுகளின் மத்தியில் கிலுகிலுப்பை ஏற்படுத்தியது. இதைதவிர கடந்த நான்கு வாரங்களில் ரிலீஸ் ஆகும் முதல் நேரிடை தெலுங்கு படம் இது என்பதால் மேலும் ஒரு ஆவல். இப்படியாக பலவிதமான எதிர்ப்பர்ப்புகளுடன் நுழைந்தேன்.
படத்தின் கதை: தனியார் தொலைக்காட்சியில் பனி புரியும் ஒரு துணிச்சலான பெண் நிருபர். அவருடைய சமுதாய நல்லெண்ண சிந்தனைகள் நிறைந்த செய்திகளை,ரேட்டிங் வராது என்பதால் ஒளிபரப்ப மறுக்கிறார் தொலைக்காட்சியின் அதிபர். அதனால் கடுப்பான அந்த நிருபர் "இன்று இரவு நகரத்தில் நடக்கும் அத்தனை தவறான காரியங்களையும் வெளிக்கொணருகிறேன்" என்று கிளம்புகிறார். நிற்க. இது கதை அல்ல. ஆனால் இனிமேல் நான் சொல்லப்போகும் ஒன் லைனரை கவனிக்கவும்.
துணிச்சலான அந்த பெண் நிருபரை துறத்துகிறது ஒரு கொலைகார கும்பல். எதற்க்காக துறத்தப்படுகிறோம் என்பதே தெரியாமல் ஓடுகிறார் அந்த நிருபர். அவரை காப்பாற்றுவது ஒரு மர்மமான நபர். அவன் பேசுவது உண்மையா என்பது அவனுக்கே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவனது துடுக்குத்தனமான (ரா.பார்த்திபன் போன்ற) கேள்விகளால் பலரும் கடுப்பாகின்றனர். இவர்கள் இருவரும் அப்படி எந்த ஒரு உண்மையால் துறத்தப்படுகின்றனர்?
இப்படி ஒரு ஒன் லைனர் இருந்தால் எந்த ஒரு பெரிய நட்சத்திரத்தின் கால்ஷீட்டையும் (நன்கு பேசத்தெரிந்த) ஒரு இயக்குனரால் இலகுவாக பெற இயலும். இங்கேயும் அதுதான் நடந்துள்ளது. ஆனால் இயக்கவே தெரியாத ஒரு இயக்குனரிடம் இந்த ஒரு த்ரில்லர் கதை மகா மொக்கை கதையாகி நின்றதே இந்த படத்தின் அடுத்த கட்டம்.
மொக்கையாகிப்போன திரைக்கதை: ஒரு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்லும்போது காட்டில் அவர்கள் ஒரு பென் டிரைவை கண்டெடுக்கிறார்கள். அது நிஹாரிகா என்ற தொலைகாட்சி நிருபருடயது. அதில் இருக்கும் சம்பவங்களால் கவரப்பட்ட அவர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் செல்கிறார்கள். ஆனால் நிஹாரிகா காணாமல் போய்விட்டது அங்கே சென்ற பின்னரே தெரியவருகிறது. மறுபடியும் அந்த காட்டிற்கு வந்து தேடும்போது இரத்தம் தோய்ந்த சில இடங்களை பார்க்கிறார்கள். அப்போது நிஹாரிகாவின் தோழி இதுவரை நடந்தவற்றை பிளாஷ் பேக்கில் சொல்கிறார்.
பிளாஷ் பேக்: எதிர்கட்சி தலைவர், நாட்டில் வன்முறை, கலவர வெறியாட்டங்களை தூண்டிவிட்டு, ஆட்சி மாற்றம் நடத்தி முதல்வராக துடிக்கிறார். அவரது இந்த சதியாலோசனை நிஹாரிகாவின் கேமராவில் அவரையறியாமலேயே பதிவாகி விடுகிறது. அப்போதுதான் அவர் நகரம் தூங்கும்போது அதன் குற்றப்பின்னணியை கண்டறிய புறப்படுகிறார். அவரை கொன்று அந்த பதிவான சங்கதிகளை அழிக்க ஆட்களை ஏவுகிறார் எதிர்கட்சி தலைவர் (இவர் பார்ப்பதற்கு N.T.R மாதிரியே வேறு இருக்கிறார்). அப்போது அவரை காப்பற்றுகிறார் ஜகபதி பாபு. இதன் பின்னர் என்ன நடந்தது என்பதை தயவு செய்து நீங்கள் தெரிந்து கொள்ளாமலே இருத்தல் நலம். அப்படி தேய்ந்து கொள்ள ஆசைப்பட்டு படத்திற்கு சென்றீர்கள் என்றால் (ஒன்று) பாதியிலேயே ஓடி வந்து விடுவீர்கள் (இரண்டு) கடுப்பாகி விடுவீர்கள்.
ஏனென்றால் படம் அதுவரையாவது ஓரளவுக்கு சுமாராக போய்க்கொண்டு இருந்தது. அதற்க்கு பிறகு, அய்யோடா சாமி, சொல்லவே முடியல. படம் திடீரென்று காந்தியின் அஹிம்சா போதனைகளை கொண்டு முன்னேறுகிறது. அதாவது பின்னணியில் காந்தி சிலை இருக்கும், அதன் முன்னே அரசியல்வாதிகளை நக்சலைட்டுகள் (அவங்கதானே?) வந்து கொன்று விட்டு செல்கிறார்கள். அதாவது நியாயம் கேட்டு நிஹாரிகா அஹிம்சா வழியில் போராடியதால் நக்சலைட்டுகள் கொதித்து எழுந்து அந்த அரசியல்வாதிகளை கொன்றுவிட்டு மறுபடியும் காட்டிற்கே சென்றுவிடுவார்கள். நிஹாரிகாவின் கையில் ஒரு இந்தியக்கொடியை கொடுத்துவிட்டு மக்களும் சென்று விடுவார்கள். நம்ம தலையில் மொளகா அரைத்து விட்டு இயக்குனரும் சென்று விடுவார்.
நடிப்பு: வில்லனாக நடிப்பவர் ஓரளவுக்கு சுமாராக நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்த ஜகபதி பாபு ரசிகர்கள் கண்டிப்பாக மனம் நொந்து போய் இருப்பார்கள். நான் அவரின் விசிறி கிடையாது என்றாலும் ஜகபதி பாபுவின் சில படங்களில் அவரது அற்புதமான நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அவர் எந்த பாத்திரம் கிடைத்தாலும் ஒக்கே சொல்கிறார் போலும், இல்லை என்றால் இந்த படத்தில் அவர் நடிக்க சம்மதித்தது எப்படி என்பது அவருக்கே புரியாத புதிராகும். சார்மி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். பேசாமல் மறுபடியும் சார்மி உச்சகட்ட கவர்ச்சிக்கே திரும்புவதே உசிதம். மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேறொன்றும் இல்லை.
இயக்கம் - இயக்குனர்: கண்டிப்பாக இந்த படத்தின் இயக்குனர் (பிரேம்ராஜ்) கையில் கிடைத்தால் அவருக்கு ஒரு பத்து, பதினைந்து டிவிடிக்கள் கொடுத்து அவற்றை பார்க்கும்படி சொல்வேன். ஏனென்றால் இவருக்கு படமெடுப்பது எப்படி என்ற அடிப்படையே சரியாக தெரியவில்லை. ஏன் இவ்வளவு கோபப்படுகிறேன் என்றால் படம் வருவதற்கு முன்பும், ரிலீஸ் ஆன பின்பும் இவர் செய்த சேஷ்டைகள் அப்படி. படம் வருவதற்கு முன்பு படத்தில் சிறந்த காட்சி எது என்று கேட்டால் சார்மியும், ஜகபதி பாபுவும் லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் காட்சியே என்று சொன்னார் (படத்தில் அப்படி ஒரு காட்சியே இல்லை).
இது கூட பரவாயில்லை. படம் ரிலீஸ் ஆன வெள்ளியன்று மதியமே படம் புட்டுகிச்சு என்கிற விஷயம் ஊரெல்லாம் பரவ, மனுஷன் கொஞ்சமும் சளைக்காமல் "இந்த படத்தின் வில்லனுக்கும் கிரண் ரெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, விஷமிகள் சில அப்படி பிரச்சாரம் செய்கிறார்கள்" என்று இவரே கிளப்பிவிட்டு விளம்பரம் தேடப்பார்த்தார். அப்படியும்கூட இந்த படத்தை யாரும் சீண்டவில்லை.
படத்தின் + கள்: எதுவுமே இல்லை. (அப்படியே சொல்லவேண்டுமென்றால் ஓரிரு பாடல்களை சொல்லலாம்)
படத்தின் - கள்: எல்லாமுமே.
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 0/6/ இந்த படத்திற்க்கெல்லாம் தோட்டாக்களை வீணடிக்க விரும்பவில்லை.
கிங்'ஸ் பன்ச்: நகரம் தூங்கும் வேளை - திரைக்கதையும் தூங்கிவிட்டது.