Saturday, June 11, 2011

எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் 2011 - விமர்சனம்

வரலாற்றில் நடைபெறும் சம்பவங்களை கற்பனை கலந்து சம்பவங்களின் இயல்பு மாறாமல் கதை எழுதுவது ஒரு திறமையான கலை. முத்து காமிக்ஸ்'ல் வரும் மர்ம மனிதன் மார்டின் கதைகள் இப்படிப்பட்டவையே. அதனைப்போலவே தமிழிலும் பல முயற்சிகள் நடந்துள்ளன. நட்சத்திர நடிகர்கள் தோன்றும் படங்களிலும் இதுபோன்ற விஷயங்கள் இருக்கும். குறிப்பாக நடிகர் கமல் ஹாசன் இதுபோன்ற விஷயங்களை அதிகம் ரசிப்பவர். அதனால்தான் அவரது படங்களில் இதுபோல சம்பவங்களை கற்பனை கலந்து கதையுடன் நகர்த்தி இருப்பார். இந்தியன் படத்தில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் வரும் காட்சியாகட்டும், தசாவதாரம் படத்தில் சுனாமி அலைகள் தோன்றுவதாகட்டும் , அவை கதையின் போக்கோடு நடப்பது போலவே சித்தரிக்கப்பட்டு இருக்கும். 

அதைப்போல வரலாற்றில் மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்று உலக நாடுகளால் அஞ்சப்பட்ட 'கியூபா அணு ஆயுத' பிரச்சினையை (1962) மையக்கருவாக கொண்டு கதையை நகர்த்தி இருப்பதில் இந்த எக்ஸ் மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படம் வெற்றி பெறுகிறது. இதுவரை எக்ஸ் மென் பட வரிசையில் நான்கு படங்கள் வந்துள்ளன. மூன்று படங்கள் எக்ஸ் மென் வரிசையிலும், நான்காவது படம் வூல்வரின் கதையாகவும் வந்துள்ள நிலையில், இந்த படத்தில் புரபெசர் சேவியர் மற்றும் மேக்நீடோ ஆகியோரது பால்யகாலத்து பராக்கிரமங்களை பறைசாற்றும் விதத்தில் (அப்பாடா, மூன்று ப வாக்கியங்கள் அடுததுத்து) வந்துள்ளதே இந்த எக்ஸ் மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படம்.

எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் கதை: வழக்கமான "அம்மாவை கொன்ற வில்லனை தேடிப்பிடித்து பழி வாங்கும்" தமிழ் சினிமா கதையை எடுத்து அதில் பரிணாம வளர்ச்சியில் புதிய குரோமோசோம்களை கொண்ட எக்ஸ் மென் கதாபாத்திரங்களை புகுத்தி, புகழ்பெற்ற கியூபா அணு ஆயுத பிரச்சினையை கிளைமேக்சில் கருவாக்கி எழுதப்பட்டதே இந்த எக்ஸ் மென் படத்தின் கதை.

1962-ம் ஆண்டு. அமெரிக்க உளவு நிறுவனமாகிய CIA தன்னுடைய சந்தேக லிஸ்ட்டில் இருக்கும் கர்னல் ஹென்றி என்பவரை கண்காணிக்க ஏஜென்ட் மொய்ரா மெக்டாக்கர்ட் என்னும் அழகியை அனுப்புகிறது. முதல் காட்சியிலேயே தமிழ் சினிமா ஹீரோயின் போல ஆடைகளை துறந்து அதிரடி அறிமுகம் கொடுக்கிறார் மொய்ரா. ஹென்றியை கண்காணிக்கும் அவர், செபாஸ்டியன் ஷா என்ற சந்தகதிற்குரிய நபரையும், அவரது மனித ஆற்றலை மீறிய சக்திகளையும் கண்டு குழப்பம் அடைந்து, தீர்வு காண புரொபெசர் சேவியரை பிடிக்கிறார்.

சேவியர், மியூட்டன்ட் எனப்படும் ஒரு மனித இனத்தை மீறிய சக்திகளை கொண்ட ஒரு வகை சிறப்பு குழுவை சேர்ந்தவர்.  சிறுவயதில் டாக்டர் ஸ்மித்தால்  யூத வதை முகாமில் தன்னுடைய தாயை பறிகொடுத்த எரிக், பழிவாங்கும் புயலாக அலைவதைக்கண்டு அவரையும், C.I.A உதவியுடன் ஏஜென்ட் மொய்ராவின் துணைகொண்டு இவ்வாறான சிறப்பு சக்தி வாய்ந்த நபர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை உருவாக்கி அவர்களின் சக்தியை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும் அளிக்கிறார். இந்த குழுவானது செபாஸ்டியன் ஷாவின் குழுவையும், அவர்களது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கும் சதியையும் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை. நான் என்னுடைய பதிவில் மொக்கையாக எழுதி இருந்தாலும், படத்தின் வெற்றியே இந்த விறு விறுபபான கதையிலும், தொய்வில்லாத திரைக்கதையிலுமே இருக்கிறது. 

படத்தில் ரசிக்க வைக்கும் காட்சிகள் பல இருக்கின்றன. தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தியிடப்படும் திரையரங்கங்களில் ஒரே விசில் சத்தமும், கைத்தட்டல்களும் நிறைந்த காட்சிகளாகவே இந்த படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக (ஒரே) ஒரு காட்சியில் வூல்வரின் தோன்றும்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாத அளவிற்கு கரகோஷம் விண்ணை பிளக்கிறது. கண்ணை விரிய வைக்கும் காட்சிகள் (வியப்பில்தான்!) படமெங்கும் நிறைந்தே உள்ளது. குறிப்பாக கிளைமேக்சில் வரைகலை நிபுணர்களும், நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு நமக்கு விருந்தினை படைத்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரங்கள் கழிந்ததே தெரியாமல் நிறைவான மனதோடு திரையரங்கினை விட்டு வெளிய வரும்போது, இந்த எக்ஸ் மென் பட வரிசையில் இதுதான் சிறந்த படம் என்று நம்மை கூற வைக்கிறார் இயக்குனர். அவருக்கு வாழ்த்துக்கள். 

கேஸ்டிங் - பாத்திரம் தேர்வு செய்வது: இந்த படத்தின் வெற்றியே இதன் நடிகர்கள் தேர்வில் அமைந்துவிட்டது. குறிப்பாக மூன்று பிரதான பாத்திரங்களாகிய செபாஸ்டியன் ஷா (கெவின் பேகன்), புரொபெசர் சேவியர் (ஜேம்ஸ் மக்வாய்) மற்றும் எரிக் (மைக்கேல் பாஸ்பெண்டர்) ஆகியோரது மிகையற்ற நடிப்பும், அலட்டல் இல்லாத பாத்திர பாங்கும் வெற்றிக்கு வித்திடுகின்றன என்றால் அது குறைவல்ல.

எக்ஸ் மென் பட வரிசையில் முதல் படத்தை பார்க்கும் வரையில் நான் அந்த காமிக்ஸ் புத்தகங்களை ஒன்றினைக்கூட நான் முழுதாக வாசித்தவன் அல்ல. இருந்தாலும் என்னை அந்த முதல் படமே கவர்ந்தது. ஆனால் காமிக்ஸ் வாசகர்கள் பலரையும் ஏமாற்றம் அடைய வைத்து அந்த படம். அதே சமயம், அந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த இரண்டாம் பாகம் காமிக்ஸ் ரசிகர்களையும், காமிக்ஸ் படிக்காத சினிமா ரசிகர்களையும் ஒருங்கே கவர்ந்தது. மூன்றாம் பாகம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வந்ததால், சிறப்பாக இருந்தாலும் சிறியதொரு ஏமாற்றதுடனே முடிந்தது. வூல்வரின் படமானது ஒரு அக்மார்க் ஹிந்தி மசாலா சினிமாவிற்குரிய அணைத்து அம்சங்களையும் கொண்டு விளங்கியது. (அதனாலேயே எனக்கு பிடித்திருந்தது). இந்த வகையில் பார்த்தால், இந்த எக்ஸ் மென் பட வரிசையில் இந்த எக்ஸ் மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படமே மிகச் சிறந்து என்று எனக்கு படுகிறது.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 6 bullets 6/6-ஆறு தோட்டாக்கள்!

2 Thumbs Upஇரண்டு கட்டை விரல்கள் மேலே! (Two Thumbs Up).

கிங்'ஸ் பன்ச்: எக்ஸ் மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் – Passing With Distinction.

Friday, June 10, 2011

ஆரண்ய காண்டம் : 10th June, 2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது ஆரண்ய காண்டம்! நாளை முதல் இந்தப் படம் எந்த ஒலக சினிமாவிலிருந்து சுட்டது என்று பிரபல வலைப்பதிவர்கள் பலர் ஆராய்ந்து நமக்கெல்லாம் அறிவூட்டக்கூடும்!

ஆனால் நான் அவ்வாறு செய்யப்போவதில்லை! ஏன்னா நான் ஒலக சினிமால்லாம் பார்க்கறதில்லைய்யா! அதுக்கு இதே தளத்துல இலக்கியவியாதிக்கு படிச்ச ஒலக சினிமா ரசிகரு ஒருத்தரு இருக்காரு! ஆசையாயிருந்தா அவரு கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க!

இந்தப் படத்தோட கதையை சொல்லனும்னா படத்தை அப்படியே முழுசா இரண்டு மணி நேரம் சொல்லனும்கிறதால அதையும் நான் செய்யப் போறதில்லை! 5 வெவ்வேறு திசைகளில் பயணிக்கும், ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய 5 வெவ்வேறு கிளைக்கதைகள், மற்றும் அந்தக் கதை மாந்தர்கள்! இவர்களை இணைக்கும், இவர்கள் அனைவருமே தேடும் ஒரு பொருள்! இதுக்கு மேல என்னால ஒன்னும் சொல்ல முடியாது! பரபரப்பான ஆக்‌ஷன் திரைக்கதை போலத் தோன்றுகிறது, இல்லையா?!!

திரைக்கதை என்னமோ பயங்கர பரபரப்பாகத் தான் இருக்கிறது! ஆனால் படம் ஆமை வேகத்தில்... இல்லையில்லை... நத்தை வேகத்தில் ஊர்கிறது! இயக்குனரின் பெயரைப் போலவே படமும் நீண்டு கொண்டே செல்கிறது! சென்ற நூற்றாண்டில் தூர்தர்ஷனில் ஞாயிறுக்கிழமைகளில் மதிய நேரங்களில் போடுவார்களே அவார்டு ஃபிலிம்கள்... அத்தனை வேகம்! ஒரு சொம்பு தண்ணியெடுத்து குடிக்கக் கூட பத்து நிமிஷம் எடுத்துக் கொள்கிறார்கள் படத்தில் வரும் பாத்திரங்கள்! இந்த நத்தை வேகத்தில் ஊறும் படத்தில் பல காட்சிகள் ஸ்லோ மோஷன்... இல்லையில்லை சூப்பர் ஸ்லோ மோஷனில் வேறு இருந்து பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது!

இதில் 51 சென்ஸார் வெட்டுகள் என்று வேறு பீதியைக் கிளப்புகிறார்கள்! அதையும் சேர்த்து பார்த்தவர்கள் பாவம்! சென்ஸார் வெட்டுகளுக்கான காரணம் படத்தில் வரும் கெட்ட கெட்ட வார்த்தைகள் மட்டும் காரணமா என்று தெரியவில்லை! இத்தனை வெட்டுக்களை மீறியும் படத்தில் இத்தனை பச்சையான கெட்ட வார்த்தைகள் வருவது ஆச்சரியமாக உள்ளது! இதில் ஜாக்கி ஷ்ராஃப் வேறு தள்ளாத வயதில் அம்மணமாக வந்து கவர்ச்சி காட்டுகிறார்! என்ன வாழ்க்கைடா இது?!!

படத்தில் காட்டப்படும் பாவா லாட்ஜ் என்ற பெயரில் சென்னை பெரியமேட்டில் உண்மையிலேயே ஒரு பிரபல லாட்ஜ் உள்ளது! அது 7 ஸ்டார் ஹோட்டல் இல்லையென்றாலும் படத்தில் காட்டப்படும் அளவிற்கு மொக்கையாக இருக்காது! பாவா லாட்ஜ் உரிமையாளர்கள் விரும்பினால் படத்தயாரிப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கலாம்!

ஒளிப்பதிவு பற்றி சொல்லவே வேண்டாம்! மணிரத்னமே இருட்டில் படமெடுப்பதை விட்டு விட்டார்! ஆனால் இந்தப் படத்தை கும்மிருட்டிலேயே எடுத்திருக்கிறார்கள்! வசனங்களும் காதில் சரியாக விழவில்லை! ஜாக்கி ஷ்ராஃப்புக்கு தமிழ் தெரியாதுதான், ஒகே! பல் துலக்கிக் கொண்டே வாயில் நுரையை வைத்துக் கொண்டு அவர் பேசும் ஆரம்பக் காட்சியைப் பார்த்து விட்டு சரி, அடுத்த காட்சியிலாவது தெளிவாகப் பேசுவார் என்று எதிர்பார்த்தால்... படம் முழுவதும் அப்படித்தான் பேசுகிறார்! டப்பிங் கொடுத்தவரின் புண்ணியத்தால்! 

ரவிக்கிருஷ்ணாவுக்கு இது ப்ரேக்-த்ரூ படமாக அமையுமென்று பயங்கர பில்ட்-அப்! ஆனால் அவர் எப்போதும் போல, அவரது பாத்திரத்தின் பெயருக்கேற்ப சப்பையாகத்தான் இருக்கிறார்! ஒரு வேளை அதனாலத்தான் அவர நடிக்க வெச்சாங்களோ?!!

படத்தில் ஆறுதலான ஒரே விஷயம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை! படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை (அப்பாடா!) எனினும் பிண்ணனி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார்! அந்த அப்பாவுக்கும் மகனுக்கும் அவர் போட்டிருக்கும் தீம் மியூசிக்கும், வில்லன் அறிமுகத்திற்கு அவர் போட்டிருக்கும் தீம் மியூசிக்கும் அமர்க்களம்! அப்படியே அவரது தந்தையை நினைவூட்டுகிறார்! புலிக்கு பிறந்தது பூனையாகுமா?!!

படத்தில் ரசிக்கத்தக்க இன்னொரு விஷயம் பிண்ணனியில் ரேடியோவிலும், டிவியிலும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் 80களின் டிஸ்கோ பாடல்கள்! ரீமிக்ஸ் போட்டுக் கொல்லாமல் ஒரிஜினல் பாடல்களை படத்துக்கு ஏற்றவாறு ஒலிக்க விட்டிருப்பது வரவேற்கத்தக்கது!

கதைக்கு துளியும் சம்பந்தமில்லாத ஆனால் ரசிக்க வைத்த காட்சி! வில்லனுக்கு ஜோசியம் பார்க்க வரும் 5 ஸ்டார் கிருஷ்ணா மனதில் ஏதாவது இரண்டு பூக்களை நினைக்க சொல்லிவிட்டு மல்லிப்பூவும், ரோஜாப்பூவுமா என்று கேட்கிறார்! அதற்கு வில்லன் கூறும் பதிலுக்கு தியேட்டரில் செம அப்ளாஸ்!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:


2/6 தோட்டாக்கள்!
ஒலக சினிமா ரசிகர்களுக்கு மட்டும்!

பயங்கரவாதியின் பன்ச்:

ஆரண்ய காண்டம்! தியேட்டரில் கண்டம்!

ட்ரைலர்:

தியேட்டர் டைம்ஸ் 01 : 10th June 2011 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம்

நண்பர்களே,

இந்த இணையதளம் ஆரம்பித்த நாளில் இருந்தே இதுபோல ஒரு பகுதியை கொண்டு வர வேண்டும் என்பது செயல் படுத்த முடியாத ஒரு திட்டம் ஆகவே இருந்தது. சரி, இப்போதுதான் புதிய படங்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டோமே, இனிமேல் இதனையும் கொண்டுவந்து விடலாம் என்று இந்த புதிய முன்னோட்ட பகுதி இன்று ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு வாரமும் ரிலீஸ் ஆகும் முக்கிய படங்களை பற்றிய என்னுடைய கருத்துக்களை பதியவே இந்த பகுதி. இங்கு சில படங்கள் இருக்காமல் இருக்கலாம். உதாரணமாக இன்று சாந்தி (அப்புறம் நித்யா) என்று ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. அதனைப்பற்றி இங்கு எழுதுவது குடும்ப வாசகர்களைக்கொண்ட இந்த தளத்திற்கு உசிதமல்ல என்பதாலும், இன்னும் மேட்டர் படம் பார்க்கும் அளவிற்கு நான் இலக்கியவியாதியாக மாறவும் இல்லை எனபதே நிதர்சன உண்மை.

வெறும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி தெலுகு படங்கள் மட்டும்தானா என்றும் பலர் வினவலாம்.  கண்டிப்பாக மற்ற மொழிப்படங்கள் இங்கே இருக்கும். ஆனால் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகும் படங்களையே பெரும்பாலும் இங்கே காண முடியும்.  இன்று மச்சான் புகழ் நமிதா நடிக்கும் "நமிதா, ஐ லவ் யூ" என்கிற கன்னட படம் ரிலீஸ் ஆகிறது. புல்லட் பிரகாஷும், டென்னிஸ் கிருஷ்ணாவும் நடித்துள்ள இந்த படத்தை பற்றி எழுதி என்ன பயன்? கண்டிப்பாக தமிழ் ரசிகர்கள் அந்த படத்தை திரையில் காணும் வாய்ப்பு குறைவு என்பதால் இவ்வாறான சில படங்கள் மிஸ் ஆகும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் படித்து வாருங்கள். நீங்கள் தரமான படங்களை தவறாமல் பார்க்க இந்த பகுதி உதவக்கூடும்.

1. எக்ஸ் மென்: 1st க்ளாஸ்

X Men 1st class Poster
Film Title X Men: First Class
Director Matthew Vaughn
Star Cast

James McAvoy, Michael Fassbender, Rose Byrne, January Jones, Oliver Platt & Kevin Bacon

Genre Super Hero Film
Producer(s) Marvel Entertainment
Music Director Henry Jackman
Language English (Dubbed in Tamil)
என்ன மேட்டர் படத்துல? 

இது வரைக்கும் இந்த படவரிசையில் மொத்தம் நான்கு படங்கள் வந்துள்ளன. இது மற்றுமொரு முன்னோட்ட படமாகும். அதாவது முதல் மூன்று படங்களில் புரொபெசர் சேவியர் மற்றும் மேக்நிடோ ஆக அறிமுகம் ஆன இரு துருவங்களின் இளமைக்கால கதை. எப்படி அவர்கள் வாழ்க்கை திசை திரும்பி தற்போது இருக்கும் நிலையில் வந்தடைந்தனர் என்பதை அசத்த வைக்கும் கிராபிக்ஸ் உதவியுடன் படமாக்கியுள்ளனர்.

 

2. ஆரண்ய காண்டம்: படத்தில் 51 சென்சார் கட் என்று ஒரு செய்தி, படம் ரொம்பவும் சர்ச்சைக்குரிய ஒன்று என்று ஒரு செய்தி, படம் ஓடவே ஓடாது என்று அடித்து சொல்லும் ஒரு சாரார், என்று இந்த படத்தை பற்றி கடந்த மூன்று வருடங்களாக வராத செய்திகளே இல்லை. இதுக்கு அப்புறம் ஜாக்கி ஷெராப் ஒரு தெலுகு படத்தில் நடித்து, அது ரிலீசும் ஆகி விட்டது. ஆனால் இந்த படம்தான் உலகம் முழுவதும் சுற்றி இங்கே இப்போதுதான் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் பெற்றுள்ள  விருதை "வாங்கிய" விருது என்றும் ஒரு பட்சி கூறுகிறது. விருதுகளை விடுங்கள், சனிக்கிழமை காலைக்காட்சியில் இதே ஆரவத்துடன் மக்கள் வருவார்களா? என்பதே இப்போதைய தலையாய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் இப்போதெல்லாம் இரண்டாவது காட்சியிலேயே படத்தின் ரிசல்ட் வந்து விடுகிறது. டிவிட்டரும், குறுஞ்செய்திகளும் இப்போது குமுதம், விகடன் இடத்தை பிடிதுக்கொண்டடுள்ளது என்று அண்ணன் க'னா கூறுவதில் தப்பேதும் இல்லையல்லவா?

aaranya kaandam posteR
Film Title  Aaranya Kandam
Director Written & Directed by Newcomer/Ad Film Maker Thiagarajan Kumararaja
Star Cast Jackie Shroff (in his 1st Tamil film), Ravi Krishna, Sampath Raj & debutante Yasmin Ponnappa
Genre How to Define, Yet? {153 Minutes of Newness?}
Producer(s) S. P. B. Charan (Capital Film Works)
Music Director Yuvan Shankar Raja
Language தமிழ் Tamil
என்ன மேட்டர் படத்துல? 

நம்ம ஊர்ல அவார்ட் வாங்குன படம் எப்பவுமே ஓடாது. அதே சமயம் பல படங்கள இது அவார்ட் படம் என்றும் முத்திரை குத்தியே வெளியிடுவார்கள். ஆரண்ய காண்டம் இந்த இரண்டு வகையிலும் இருந்தாலும் கண்டிப்பாக ஓடும் என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் விளம்பர படங்களின் ஜித்தன் என்பதால் படத்தின் ட்ரைலர் முதல் போஸ்டர் வரை முற்றிலும் புதுமையான விஷயங்களை காண முடிகிறது.

 

3. ஆசைப்படுகிறேன்: நேற்று மதியம் திடீரென்று இந்த போஸ்டரைப்பார்த்து ஆச்சர்யப்பட்டு போய் இது என்ன புதியதாக இருக்கே என்று பலரிடம் விசாரித்து பின்னர் தெரிந்து கொண்ட படம் இது. போஸ்டரைப் பார்த்து பலரும் இது ஏதோ லவ் ஸ்டோரி என்று நினைக்க பெரும்பாலான வாய்ப்புகள் உண்டு. பார்க்கலாம், இது போன்ற சின்ன படங்களே சமீபத்தில் என்னை வியக்க வைத்துள்ளன. உதாரணம் - மைதானம். இதுவும் விளையாடுமா என்பதை நாளை இரவு பார்க்கலாம்.

Aasaippadugiren 2011 tamil film poster
Film Title ஆசைப்படுகிறேன்
Director பாலு மணிவண்ணன்
Star Cast இந்தியாவின் தடகள வீராங்கனை காயத்ரி, புதுமுகம் சேகர், எஸ்.கே.ஜெயக்குமார், பாரதி கண்ணன் நிஷா, தினேஷ், அனந்தலட்சுமி, கவிதா, அபிநயா ஆகியோருடன், தென்னவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நகைச்சுவை நடிகராக பழனி அறிமுகம் ஆகிறார்.
Genre விளையாட்டு
Producer(s) மக்கள் கலைக்கூடம் சார்பில் டி.ஷீலா
Music Director ஆதிஷ் உத்ரியன்
Language தமிழ்
என்ன மேட்டர் படத்துல? 

வறுமையான சூழலில் பிறந்து வளர்ந்த ஒரு பெண், தடகள வீராங்கனையாக உயர்ந்து வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறாள்? என்பதை கருவாக வைத்து இந்த படம் வருகிறது. இந்தியாவின் தடகள வீராங்கனை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட தடகள காட்சிகளை, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் படமாக்கியுள்ளார்கள். விளையாட்டை மைய்யப்படுத்தி வரும் குறைந்த பட்ஜெட் படம். இப்படி ஒரு படம் வருவதே நேற்று போஸ்டரைப்பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

 

4. ஷைத்தான் (அ) சைத்தான்: சமீப நாட்களில் வந்தா இதுபோன்ற சிறிய பட்ஜெட் ஹிந்தி படங்கள் பெரிய அளவில் பேசப்படுகின்றன. பாத்து வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு அலையை ஏற்படுத்திய நாகேஷ் குக்குனூர் தான் இப்போதும் கண்ணின் முன்னே தோன்றுகிறார்.

Shaitan-2011-Movie-Poster 
Film Title Shaitan (2011 Hindhi Film)            Official Site: cultofshaitan.com
Director Bijoy Nambiar
Star Cast Rajeev Khandelwal, Kalki Koechlin, Pavan Malhotra, Sheetal Menon, Shiv Pandit
Genre Thriller
Producer(s) Anurag Kashyap Films (Anurag Kashyap, Sunil Bohra, Guneet Monga)
Music Director Ranjit Barot (OST By Prashanth Pillai, My Friend & Ex colleague).
Language Hindhi

என்ன மேட்டர் படத்துல?

வாழ்க்கையில் சாகசத்தை தேடி அலையும் ஐந்து மும்பைவாசிகளின் கதையானது ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு (Accident) பிறகு எப்படி மாறுகிறது என்பதே மேட்டர். நமக்கு தெரிந்த ஒரே முகமான ராஜீவ் காண்டேல்வால் இன்ஸ்பெக்டராக வருகிறார். அந்த ஐந்து பேரையும் கண்டு பிடிக்கும் பொறுப்பு இவருடையது. நமக்குள்ளே ஒளிந்திருக்கும் அந்த சைத்தானை வெளிக்கொணரும் ஒரு தருணத்தில் நாம் எப்படி இயல்பு மாறுகிறோம் என்பதே படத்தின் அடிநாதம்.

 

5. பத்ரிநாத்: இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு இன்றே தமிழிலும் ரிலீஸ் ஆவதாக இருந்ததால் தெலுகில் இங்கே யாருமே ரிலீஸ் செய்ய முடியாத சூழல். ஆனால் டப்பிங்கில் ஏற்பட்ட சுணக்கம், படத்தை ஜூலை மாதம் வரை தள்ளி போட்டு விட்டது. தமிழுக்கென்று காமெடி போர்ஷனை நடிகர் சந்தானத்தை வைத்து எடுத்தார்கள். ஆனால் இப்போது இந்த படத்தை தமிழ் நாட்டில் எங்கேயுமே நாளை பார்க்க இயலாது. பேசாமல் நாமும் கேபிளார் மாதிரி ஆந்திரா சென்று பார்த்துவிட வேண்டியதுதான்.

 Badrinath 2011 Film Poster
Film Title  BadriNath (2011 Telugu Film)
Director V.V. Vinayak
Star Cast Allu Arjun, Tamannaah Bhatia and Prakash Raj + Santhanam (Tamil Version)
Genre Action
Producer(s)  Allu Aravind (Geetha Arts)
Music Director M.M. Keeravani
Language Telugu (To Be Dubbed in Tamil, Kannada & Malayalam)
என்ன மேட்டர் படத்துல? 

இந்த ஜாக்கி சானின் மித் படம் வந்ததில் இருந்து நம்ம ஆளுங்களுக்கு ராஜா காலத்து கதை மீது ஒரு ஆர்வம் வந்து விட்டது. தெலுகில் மகதீரா வேறு சூப்பர் ஹிட் என்பதால் அதைப்போலவே பல படங்கள். இப்போதுதான் ஜூனியர் NTR சக்தி என்று நம்மை சோதித்தார். ஆனால் இந்த படம் அப்படி இருக்காது என்று ஒரு குண்டு நம்பிக்கை.

 

நாளைக்கு ஆரண்ய காண்டம் விமர்சனத்தை படிக்க நீங்கள் செல்லவேண்டிய முகவரி: தமிழ் சினிமா உலகம்.

Wednesday, June 8, 2011

ஆண்மை தவறேல்: 03-06-2011 : விமர்சனம்

நேர்மை என்று ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது எடுத்துக்கொண்டதை அதே சிந்தனையில் முடிக்கும் நேர்மை. தமிழ் சினிமா உலகில் இந்த நேர்மை பெரும்பாலும் இருக்கவே இருக்காது என்பது அடியேனின் கருத்து. எண்பதுகளில் விசு படங்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே சில்க் ஸ்மிதா பாட்டு வைக்கவேண்டிய சூழல் உருவானது நமக்கு தெரிந்ததே. அதாவது விநியோகஸ்தர்களுக்கு என்று 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு தேர்ந்தெடுத்த கதையையும், திரைக்கதையையும் மாற்றி சினிமா எடுக்க வேண்டிய நிலை பெரும்பாலான இயக்குனர்களுக்கு வந்து இருக்கிறது, இருக்கிறது, கண்டிப்பாக இருக்கும். இப்படி பல சிக்கல்களையும் மீறி தான் எடுத்துக் கொண்ட கதையை வேறு எதற்கும் 'அட்ஜஸ்ட்' செய்யாமல் 'நேர்மையாக' முடிக்கும் இயக்குனர்கள் குறைவே. அப்படி படமெடுத்தாலும், அவை திரையில் வருவதற்கு பல மாமாங்கம் ஆகும். சரி, எதற்கு இவ்வளவு பீடிகை என்றால், சமீபத்தில் நான் பார்த்த 'ஆண்மை தவறேல்' படத்தில் அப்படி ஒரு நேர்மை இருந்தது. அதாவது எடுத்துக்கொண்ட கதையை நேர்மையாக (எந்தவிதமான வியாபார/சந்தை மயமாக்கலுக்கும் வளைந்து கொடுக்காமல்) கொண்டு செல்லும் அந்த துணிவு இந்த படத்தில் இருந்தது என்பது அடியேனின் எண்ணம். அதைப்பற்றியே இந்த சில வார்த்தைகள்.

கதை: படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாட்கள் கழித்து எழுதப்படும் விமர்சனம் என்பதால் அதிகமாக கதையை பற்றி சொல்ல வேண்டியது இல்லை என்பது அடியேனின் சிந்தனை (அதுக்குள்ளாக வலைரோஜா நண்பர்கள் விமர்சனம் எழுதி இருப்பார்கள்). சமகால சூழலில் பெண்கள் கடத்தப்படுவதை அலசி ஆராயும் ஒரு படம் இது. படத்தின் ஒன் லைனர் இதுதான்.காதலியை கடத்தல்காரர்கள் இடம் பறிகொடுத்த நாயகன் ஒரு (முன்னாள்) காவலரின் உதவியுடன் மீட்கப்போராடுவதே ஆண்மை தவறேல் படத்தின் நாடி. கதை அரதப்பழசாக தெரிந்தாலும் திரைக்கதை அதனை சுமாராகவே நகர்த்திக்கொண்டு செல்கிறது. தமிழ் சினிமாவில் புதிய காட்சிகள் பலவற்றை இந்த சினிமாவில் காண முடிந்தது.

படத்தில் அடியேன் அவதானித்த விடயம் என்னவெனில் இம்மியளவும் திரைக்கதை என்ற நேர்க்கோட்டில் இருந்து வியாபார விடயங்களுக்காக மாற்றிக்கொள்ளாத தன்மையே. குறிப்பாக படத்தின் இரண்டாவது பகுதியில் ஒரு குத்துப்பாட்டு, ஒரு சோகப்பாட்டு வைக்க பல காட்சிகள் இடம் கொடுத்ததும் அவற்றை இடம்பெறாமல் செய்தது படத்தின் நேர்மையை உணர்த்தும். படத்தின் முதல் பகுதியும் சற்று வேகமாக நகர்ந்து இருந்தால் படம் இன்னும் சிறப்பாக பேசப்பட்டு இருக்கும்.

நடிப்பு: ஹீரோ த்ருவா என்று ஒரு புதியவர். கட்டுமஸ்தான உடல்வாகுவுடன், நட்பில்லாத குரலுடன் அறிமுகமாகிறார். கொஞ்சம் மெனக்கெட்டால் நடிக்கவும் செய்வார் போல. படம் ஓடும் தியேட்டர்களில் அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-அயனாவாரம் கிளை, அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-பெரம்பூர் கிளை, அகில இந்திய த்ருவா ரசிகர் மன்றம்-வடபழனி கிளை என்று பலத்த ஆதரவுடன்தான் களம் இறங்கி இருக்கிறார். அடுத்து வரும் படங்கள் தான் இவரை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர உதவும். ஹீரோயினுக்கு இரண்டாவது படம். பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. அந்த அற்புதமான (பெண் என்பேன், பூ என்பேன்) பாடலில் இயக்குனர் சற்றே சிரமம்பட்டு சிரத்தையாக காட்சியமைத்து இருக்கலாம். கஷ்டப்பட்டு பாஸ் மார்க் வாங்குவார் ஹீரோயின். 

சம்பத் திடீரென்று எப்படி இவ்வளவு மாஸ் நடிகர் ஆனார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அவர் அப்படி கவுரவ வேடங்களில் நடித்த படங்களில் எல்லாம் மொக்கையாகவே இருக்கிறார் (உதாரணம்-பாவானி). இந்த படத்தில் பரவாயில்லை. கொஞ்சம் நல்ல பாத்திரம். ஆனால் அவர் தன்னுடைய பாத்திரங்களை இனிமேலாவது நன்றாக யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையென்றால் அவரையும் வீணடித்து விடுவார்கள். 

திரையில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பசைபோல ஒட்டிக்கொள்பவர் ஜான் விஜய். அவருடைய ஸ்டைலும், வசன உச்சரிப்பும் நேர்த்தி. கன்னட பிரசாத் என்ற இவரது பாத்திரத்தை சரியாக திரையில் கொண்டு வந்துள்ளார்கள். மற்றபடி அந்த 3 வில்லன்கள் அவ்வளவாக சித்தரிக்கப்படாததால் அவர்கள் மேல் பயமோ, கோபமோ ஏற்படவில்லை. இங்கேதான் இயக்குனர் தோற்று விடுகிறார் (பரவாயில்லை, முதல் படத்தில் இது ஓக்கேதான்).

லாஜிக்: படத்தை ரசிக்க விரும்பினால் லாஜிக் என்கிற விஷயத்தை எதிர்ப்பார்க்காதே என்பது எங்கள் தலைவர் யூனாவின் கொள்கை. இருந்தாலும் அடியேன் இந்த படத்தில் இருக்கும் அத்துமீறல்களை விளக்கவில்லை எனில் என்னை கண்ணிருந்தும் குருடனாக்கி விடும் இந்த சமுதாயம்.  ஆகையால் சம்பத் எப்படி உயிரோடு வந்தார் என்கிற மகா மொக்கை கேள்விகளை எல்லாம் கேட்காமல் டெக்னிகலாக ஒரு விஷயம் மட்டும் உங்களின் கனிவான கவனத்துக்கு:

சம்பத் கன்னட பிரசாத் என்கிற தரகரிடம் இருந்து பெண்களை ஏலம் விடும் இணையதளத்தின் முகவரி, நுழைவுக்குறியீடு மற்றும் காப்புச்சொல்லை மிரட்டி வாங்குகிறார். பின்னர் ஹீரோவும், சம்பத்தும் ஒரே சமயத்தில் அதே யூசர் நேம், பாஸ் வார்டை பயன்படுத்துகின்றனர். மின் அஞ்சல் தளங்களில் கூட ஒரே நேரத்தில் இருவர் உபயோகப்படுத்துவதை மிக சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்கையில் இருவரும் ஒரே யூசர் நேமை உபயோகப்படுத்தினால் அதை எப்படி வில்லன்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள்? இல்லை ஜான் விஜய் தான் ஏலம் எடுக்கவில்லையா? அப்படி இருந்தாலும் ஜான் விஜய் யூசர் நேம் மூலம் ஏலம் எடுத்த பெண்ணை அவரிடம் அல்லவா ஒப்படைக்க வேண்டும்? இங்கே மட்டுமின்றி இன்னும் சில இடங்களில் கூட இயக்குனர் சிறிது தடுமாறி இருக்கிறார்.

தியேட்டர் டைம்ஸ்: நண்பர் க'னா பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர் சென்னைக்கு புதியவர். ஆகையால் அவர் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் S.S.R பங்கஜம் தியட்டருக்கு சென்று (11.45 AM) அங்கிருந்த மேலாளரிடம் படம் எத்துனை மணிக்கு? என்று வினவியுள்ளார். அவர்களும் 12.15க்கு என்று பதிலளிக்க, சரி இன்னும் அரை மணி நேரம் இருக்கிறதே என்று அருகில் இருந்த பழமுதிர் நிலையம் சென்று மொத்தம் மூணு ஜூஸ் குடித்து நேரம் கழித்தார். 25 நிமிடங்கள் கழித்து (12.10 AM) தியேட்டருக்கு வந்து பார்த்தால் படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிறதே என்று அதே நபர் சொன்னாராம். என்ன வாழ்க்கைடா இது என்று நொந்துக்கொண்டார் நண்பர் க'னா. இதுதான் கொடுமை என்றால். அந்த தியேட்டரில் குளிரூட்டும் வசதி மருந்துக்கு கூட கிடையாதாம். நொந்து போய் வந்தார் க'னா.

 

பின் குறிப்பு: இந்த படத்தை பற்றிய விமர்சனங்களில் பல நகைச்சுவைகளை காண முடிந்தது. உதாரணமாக வெப் துனியா'வில் இது டேக்கன் (ஆங்கில விருதகிரி) படத்தின் தழுவல் என்று எழுதி இருந்தார்கள். இன்னும் சில தளங்களில் பெயருக்கு / வாய்க்கு வந்த சினிமாக்களை எல்லாம் சுட்டிக்காட்டி இருந்தார்கள். உண்மையில் இந்த படம் Independence Day, Godzilla, The Day After Tomorrow, 10,000 BC போன்ற படங்களை இயக்கிய Roland Emmerich’ன் புரொடக்ஷனில், நம்ம Ashok Amritraj இணை தயாரிப்பில் வந்த Trade என்கிற ஜெர்மனி படத்தின் முழுமையான தழுவலாகும். (நம்ம கேபிளார் படத்தின் தலைப்பை சரியாக சொல்லி இருந்தாலும் அது பிரேசில் படம் என்று சொல்லி இருப்பார்).இந்த படத்தை ஆங்கிலத்தில் நம்ம லயன்ஸ்கேட் நிறுவனத்தினர் வெளியிட்டனர். லயன்ஸ் கேட் இப்படி சிறிய, பி கிரேட் படங்களை வெளியட்டு காசு பார்ப்பதில் கில்லாடிகள். 

நம்முடைய வேண்டப்பட்ட விரோதியாகிய பயங்கரவாதி டாக்டர் செவன் இது போன்ற விடயங்களில் கில்லாடி. அவர்தான் இந்த படத்தின் கதையை நான் சொல்கையிலே அந்த படத்தை பற்றியும், அதன் IMDB ரேட்டிங் பற்றியும், அதனை டவுன்லோட் செய்யும் தளத்தின் முகவரியையும் கூறி உதவினார்.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 3 bullets 3/6. மூன்று தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: ஆண்மை தவறேல் - பார்க்க தவறேல் (நேர்மைக்காக).

Tuesday, June 7, 2011

ரெடி-2011-ஹிந்திப்படம்

சல்மான் கானின் தீன்க சிக்கா, தீன்க சிக்கா, தீன்க சிக்கா, தீன்க சிக்கா,ஹொய், ஹொய், ஹொய், ஹோய்

இந்த வருடத்தின் மிகப்பெரிய முதல் இந்தியப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இன்னும் பல காத்திருக்கின்றன. என்ன, ராணா பற்றி ஏதாவது பேசுகிறேனோ என்று நினைப்பவர்கள் எல்லாம் ஒரு ஸ்டெப் பேக். நான் சொல்வது ஜனங்களின் ஸ்வீட்ஹார்ட் சல்மான் கானின் லேட்டஸ்ட் படமாகிய ரெடி பற்றி. 23 வருடங்களாக நடித்துக்கொண்டு இருந்தாலும்கூட சமீபத்தில்தான் நம்ம சூப்பர் ஸ்டாரின் பாணியை பின்பற்ற ஆரம்பித்து இருக்கும் சல்மானுக்கு தபங் படத்திற்கு பிறகு மற்றுமொரு மகத்தான வெற்றி(யை தரப்போகும்)  படமே இந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன ரெடி. இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னாள் கொஞ்சம் கொசுவத்தி கலந்த ஹிஸ்டரி.

ஒரு சின்ன பிளாஷ்பேக்: கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு முன்பாக தெலுகு இயக்குனர் சீனு வைட்லாவின் இயக்கத்தில் ராம், ஜெனிலியாவின் நடிப்பில் வந்து சக்கை போடு போட்ட சூப்பர் ஹிட் படம் ரெடி. இந்த படத்தை உடனடியாக அடுத்த வருடமே கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரை ஹீரோவாக்கி எடுத்தார்கள் (ஒரு நாள் பெங்களுருவில் நம்ம ப்ரியாமணியின் போஸ்டரைக்கண்டு நண்பரிடம் விசாரிக்க, அவர் நம்மை படத்துக்கே அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், அதுதான் இந்த படம்) . அந்த படமும் வெள்ளிவிழா கண்டு சூப்பர் ஹிட் ஆகி விட்டது. அதற்க்கு அடுத்த வருடம் அந்த படத்தை தமிழில் எடுத்து சரிந்திருந்த தனுஷ் மார்கெட்டை தூக்கி நிறுத்தினார் மித்திரன் R ஜவஹர். தெலுகில் ரெடி என்று வந்தது கன்னடாவில் ராம் என்று ஆனதுபோல தமிழில் இது உத்தமபுத்திரன் என்று பெயர் மாற்றப்பட்டது. இப்போது இந்த ரெடி படமே ஹிந்தியில் ரிமேக்கப்பட்டு இருக்கிறது. தமிழில் நான் உத்தமபுத்திரன் படம் பார்த்துவிட்டேன். காமெடி காட்சிகளை டிவியிலே பார்த்துகொள்கிறேன் என்று சொல்பவர்கள் மறுபடியும் ஒரு முறை யோசியுங்கள். இது தெலுகு, கன்னட மற்றும் தமிழ் படங்களை விட சிறப்பாக வந்துள்ளது.

என்னை எங்க அப்பா சின்ன வயசுல இலக்கியவாதியாக படிக்க வைக்காததால், நான் வெகுஜன ரசனையோடு வளர்ந்துவிட்டேன். ஆகையால் ஒரு படத்தை இப்படிதான் பார்க்கவேண்டும், படங்களின் காட்சிகள் இடையே இருக்கும் குறியீட்டை இப்படிதான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆகையால் அறிவுஜீவிகள் இந்த படத்திற்கு செல்லவேண்டாமென்று சொல்வதோடில்லாமல் இரண்டரை மணி நேரம் டைம் பாஸ் செய்ய நினைப்பவர்கள் அனைவருமே கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இந்த ரெடி என்றும் சொல்வேன்.

கதை: இந்த கதை என்கிற வஸ்து இந்த படத்தில் இருக்குமா என்று முந்தைய பத்தியை படித்துவிட்டு சந்தேகப்படும் நண்பர்கள் பயப்பட வேண்டாம். எண்பதுகளில் வந்த இரண்டு குடும்பங்களை சேர்த்து வைத்து காதலியை கைப்பிடிக்கும் ஹீரோவின் கதையே ரெடி. என்னடா முப்பது வருடதிற்ற்கு முந்தைய கதையை கொண்டுள்ள படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று சொல்கிறானே என்று நினைக்கவேண்டாம். படத்தின் சிறப்பு அம்சங்களாக காமெடி காட்சிகளும், சிரிப்பை வரவழைக்கும் வசனங்களும், மிகச்சிறப்பான பாடல்களும் இருந்தாலும் மூன்று விஷயங்களே படத்தை பார்க்க தூண்டுகிறது: சல்மான் கானின் I, ME & MYSELF. சுருங்க சொல்வதாயின் இது ஒரு சல்மான் கான் படம். வேறு எதையும் எதிர்பார்த்து செல்லாதீர்கள். சல்மானின்ரி வேறில்லை இந்த ரெடியில்.

நடிப்பு: சல்மான் கானைப்பற்றி சொல்லவே தேவை இல்லை. மனுஷன் அசத்தி விட்டார். இந்த படத்தில் காமெடி விஸ்வரூபம் எடுத்துள்ளார் சல்மான். அசின் பல இடங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் சில இடங்களில் சுமாரே. ஆனால் அதை ஈடுகட்டும் விதத்தில் கர்சீப்பை விட சின்ன வெள்ளைக்கலர் ஸ்கர்ட்'டில் செமையான குத்தாட்டம் போட்டு 'திறமையை' வெளிப்படுத்தியுள்ளார்.  ஹிந்தியின் மிகச்சிறந்த குணசித்திர நடிகராக (நான் கருதும்) பரேஷ் ராவல் இந்த படத்தில் சிக்சர் மேல் சிக்சர் அடித்துள்ளார். ஆனால் காமெடியில் அனைவரையும் மிஞ்சுபவர் சிறிதே அறிமுகம் ஆன சுதேஷ் லேஹ்ரி. அவருக்கு ஒரு ஓ போடுவோம்.

இதையும் தாண்டி படத்தில் சல்மானின் தந்தையாக வரும் இயக்குனர் மகேஷ் மான்ஜ்ரேகர், அங்கிள்களாக வரும் மனோஜ் ஜோஷி மற்றும் மனோஜ் பக்வா, வில்லன்களாக வரும் சரத் சக்சேனா, அகிலேந்திர மிஸ்ரா, அவர்களின் தந்தையாக வரும் புனீத் இஸார் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. 

இயக்குனர் அனீஸ் பாஸ்மி என்றாலே நட்சத்திரங்களின் கூட்டம் இருக்கும் என்று ஹிந்தியில் சொல்வார்கள்.அதை நிரூபிக்கும் வகையில் இந்த படத்திலும் பலர் மரியாதி நிமித்தம் தலையை காட்டியுள்ளார்கள். அஜய் தேவ்கன், சஞ்சய் தத், அர்பாஸ் கான், சங்கி பாண்டே, கங்கனா ருனாவட், ஜரின் கான் என்று பலர் கெஸ்ட் ரோலில் வந்து நம்ம அய்யம்பாளையத்தார் போல 'உள்ளேன் ஐயா' என்று அட்டென்டன்ஸ் இட்டு உள்ளார்கள்.

பாடல்கள்: நம்ம யூனா மாதிரி படம் ஆரம்பிக்கும் முன்னாடியே சென்று விடுங்கள். அப்போதுதான் ஆரம்பத்திலேயே வரும் சூப்பர் ஹிட் பாடல் 'கேரக்டர் டீலா' பாடலை ரசிக்க முடியும். அதைப்போலவே படம் முடிந்தவுடனேயே கிளம்பி விடாதீர்கள். தீன்க சிக்கா ரீமிக்ஸ் பாடல் படம் முடிந்தவுடன் வருகிறது (அசின் இன் ரெட் ஸ்கர்ட்). தெலுகில் சென்ற ஆண்டு வந்த ஆர்யா படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்தீர்களா? அதில் வந்த ரிங்க ரிங்கா பாடலைதான் ஹிந்தியில் தீன்க சிக்கா என்று மாற்றியுள்ளார்கள். அந்த பாடலும், அதற்க்கு சல்மான் + அசினின் குத்தாட்டமும், அதனை படமாக்கிய விதமும் சூப்பர். மொத்தத்தில் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக வருவதற்கு பிரகாசமான வாய்ப்புகளை பெற்றுள்ளது இந்த தீன்க சிக்கா பாடல்.

தியேட்டர் நோட்ஸ்: படம் பார்க்கும் ஆடியன்ஸிடமிருந்து செம ரெஸ்பான்ஸ்! குறிப்பாக சல்மான் கானின் ஒவ்வொரு வசனத்திற்கும் ஏகப்பட்ட கைதட்டல்கள். அதிலும் கிளைமேக்சில் சல்மான் சட்டையை கழட்டி தன்னுடைய கட்டுடலை காட்டும் அந்த காட்சியில் பெண்களே கத்தி ஆரவாரம் செய்கிறார்கள் (விட்டால் விசில் கூட அடிப்பார்கள் போல) அதிலும் அந்த காட்சியில் அசினின் முக பாவங்களும் அந்த வசனமும் அற்புதம் (கோயி தொ ரோகோ). இந்த படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸ் கண்டிப்பாக இருப்பார்கள்.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6. ஐந்து தோட்டாக்கள்.

imageஒரு கட்டை விரல் மேலே. 

கிங்'ஸ் பன்ச்: ரெடி, கோடை கடுமைக்கு மழை தந்த இடி.

Saturday, June 4, 2011

குங்ஃபூ பாண்டா (2011) - திரைவிமர்சனம்!

வணக்கம்,

இரண்டாவது நாளாக இரண்டாவது பதிவிடுவதென்பது எனக்கு சுத்தமாக பழக்கமில்லாத விஷயம் என்பது ஒரு பக்கம் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!
 
இந்த வருடம் வேறு பருவ மழை பல வருடங்களுக்குப் பிறகு சரியாக ஜூன் 1ம் தேதி துவங்கியிருப்பது ஆட்சிமாற்றத்தின் காரணமாகத்தான் என்று அய்யம்பாளையத்தார் வேறு அடித்துக் கூறுகிறார்! எது எப்படியோ! கோவையில் மீண்டும் பழைய பருவநிலை வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி!
 
இந்த மழைக்காலத்தில் வீடு விட்டால் தியேட்டர், தியேட்டர் விட்டால் வீடு என்று நல்ல பிள்ளையாக நடந்து வரும் என்னை பதிவு போடுமாறு உசுப்பேற்றி விட்ட வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வாவைத் தான் கூற வேண்டும்!
 
இம்முறை நான் கண்டு ரசித்தது குங் ஃபூ பாண்டா2! சென்னையில் சென்ற வாரமே இந்தப் படம் ரிலீஸாகி விட்டாலும் கோவையில் இந்த வாரம்தான் ரிலீஸ்! அதுவும் 3Dல்! ஆனால் கனகதாரா தியேட்டரில் காலை 11 மணி காட்சி மட்டுமே! வார இறுதிகளில் சிறப்புக் காட்சி மாலை 4:30 மணிக்கு!

விமர்சனத்துக்குப் போகும் முன் சிறிது சரித்திரம்!

அனிமேஷன் படங்கள் என்றாலே வால்ட் டிஸ்னிதான் என்று பல வருடங்களுக்கு அத்துறையை ஆண்டு வந்தது அந்த நிறுவனம்! 2D, 3D என்று அனைத்து துறைகளிலும் போட்டிக்கு ஆளின்றி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தயாரித்து வந்தது அந்த நிறுவனம்! 90களின் இறுதியில் அவர்களுக்குப் போட்டியாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் தலைமையில் துவங்கியதுதான் ட்ரீம்வர்க்ஸ் நிறுவனம்!

ஏட்டிக்குப் போட்டியாக இரு நிறுவனங்களும் தொடர்ந்து படங்களை வழங்கி அனிமேஷன் பட ரசிகர்களுக்கு வயிறு முட்ட விருந்தளித்து வந்தாலும், சமீப காலம் வரை வால்ட் டிஸ்னியே முன்னிலையில் இருந்தது, ஷ்ரெக் வரிசைப் படங்கள் வரும் வரை!

பல வருடங்களாக வால்ட் டிஸ்னி படங்களை பார்த்து ரசித்தவன் என்ற முறையில் அவர்களது குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ச்சோ-ச்வீட் வகைப் படங்கள் திகட்ட ஆரம்பித்திருந்தன! ஆனால் ஷ்ரெக் மற்றும் குங்ஃபூ பாண்டா போன்ற அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் டிஸ்னியை ட்ரீம்வர்க்ஸ் மிஞ்சி விட்டதென்றே நான் எண்ணுகிறேன்! இந்நிலையில் தான் குங்ஃபூ பாண்டா படத்தின் இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்துள்ளது!

இது குறித்த மேலதிக விவரங்களுக்கு ஹாலிவுட் பாலாவின் அனிமேஷன் குறித்த தொடரைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்!

கதை: வழக்கமான தமிழ் சினிமா கதையான குடும்பத்தை அழித்த வில்லனை பழி வாங்கும் கதைதான்! ஹிந்து பேப்பரில் வேலை செய்து, ஓசியில் சினிமா பார்க்கும், ஒலக சினிமாவை ரசிக்கும் போலி விமர்சகன் நான் இல்லை என்பதால் கதையில் ஆழம் இல்லை என்ற சிறு விஷயம் என்னை உறுத்தவில்லை!

வாய்ஸ் ஆக்டிங்: ஆஞ்சலினா ஜோலி, டஸ்டின் ஹாஃப்மேன், கேரி ஓல்ட்மேன், ஜாக்கி சான், செத் ரோகன், லூசி லியூ, மிஷேல் யோ, ஜான்...சாரி...ழான் க்ளாட் வாண்டேம் என பெரிய நட்சத்திர பட்டாளமேயிருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் துளியும் இடமளிக்காமல் தூக்கி சாப்பிடுகிறார் பாண்டாவுக்கு குரலளித்திருக்கும் ஜாக் ப்ளாக்!  ஜாக்கி சான் இரண்டு படங்களிலும் சேர்த்து மொத்தம் 25 வரி வசனம் பேசியிருந்தால் பெரிய விஷயம்! ஜாக் ப்ளாக் ராக்ஸ்!
 
3D அல்லது முப்பரிமாணம்: படத்திற்கு 3D சிறப்பு சேர்க்கிறதென்பதே உண்மை! பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் 4 போல் 2Dல் எடுக்கப்பட்டு பின்னர் காசு பிடுங்கவதற்காக 3D மாற்றம் செய்யப்படவில்லை! படம் உருவாக்கப்பட்டதே 3Dல் தான் என்பதால் அதன் சிறப்புகள் முழுமையாக வெளிப்படுகின்றன! படத்தை கண்டிப்பாக 3Dல் பார்க்கவும்!

தியேட்டர் நோட்ஸ்: படம் பார்க்கும் ஆடியன்ஸிடமிருந்து செம ரெஸ்பான்ஸ்! குழந்தைகளுடன் வரும் பெற்றோரை விட இளசுகள் கூட்டமே அதிகம்! பாண்டா அடிக்கும் ஒவ்வொரு லூட்டிக்கும் க்ளாப்ஸ், விசில் சத்தம் தூள் பறந்தது ஆச்சரியமளித்தது! வசனங்களுக்கும் சிறப்பு அப்ளாஸ்!

சிறப்புக் காட்சி என்பதால் மதியக் காட்சிக்கும் சிறப்புக் காட்சிக்கும் பெரிதாக இடைவெளி விடாத காரணத்தாலும், ட்ரைலர்களை ஓட விட்டதால் படம் போட்டு விட்டதாக ரசிகர்கள் தவறாக நினைத்து விட்டதாலும் ஏகப்பட்ட தள்ளு முள்ளு! உள்ளே நுழைந்து உட்கார்ந்து படம் பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
 
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 6 bullets 6/6-ஆறு தோட்டாக்கள்!
 
2 Thumbs Upஇரண்டு கட்டை விரல்கள் மேலே!

கண்டிப்பாக 3Dல் பார்க்க வேண்டிய படம்! 7 முதல் 77 வரை அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படம்!

பயங்கரவாதியின் பன்ச்:

குங்ஃபூ பாண்டா!
மசாலா போண்டா!
(மழைக்கால மாலைநேரங்களில் சூடாக சுவைக்க!)

படத்தின் ட்ரைலர்:

Friday, June 3, 2011

LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!

வணக்கம்,

தமிழ் காமிக்ஸ் உலகைத் தொடர்ந்து எனது வேண்டப்பட்ட விரோதியாகிய கிங் விஸ்வா தமிழ் சினிமா உலகம் தொடங்கிய போது வழக்கம் போலவே என்னையும் கூட்டுக் களவாணியாக்கிக் கொண்டு பதிவுகள் இடுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்! அதன் விளைவாகவே இந்தப் பட விமர்சனம்!

எதேச்சையாக இன்று கோவையில் ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் போது  ஜாக்கி சானின் 99வது படம் என்று போஸ்டர் ஒன்றைக் கண்டு ஆர்வக் கோளாரில் திரையரங்கினுள் நுழைந்தேன்! படம்: லிட்டில் பிக் சோல்ஜர்!

சமீப கால ஜாக்கி சான் படங்களைக் கண்டு வரும் தமிழ் ரசிகர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கக் கூடும்! அதாவது தனது வழக்கமான ஆக்‌ஷன் ஹீரோ பாணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஒரு சீரியஸ் நடிகனாக தன்னை உருமாற்றி வருகிறார்!

கடைசியாக அவர் தன் ரசிகர்களை முழுமையாக திருப்திப் படுத்திய படம் WHO AM I? அதன் பிறகு வந்த RUSH HOUR படங்களிலும், SHANGHAI NOON/ SHANGHAI KNIGHTS போன்ற படங்களிலும் ஹாலிவுட்டின் புண்ணியத்தால் தன் ரசிகர்களை அவர் சற்றே ஏமாற்றினாலும் காமெடியில் குறையேதும் வைக்கவில்லை!

ஆனால் சமீப காலங்களில் வந்த கார்ஜியஸ், நியூ போலீஸ் ஸ்டோரி,  ROB-B-HOOD, ஷின்ஜுக்கு இன்சிடெண்ட் போன்ற படங்களில் தன்னை ஒரு தேர்ந்த நடிகராக வெளிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்!

இந்நிலையில் வந்திருக்கும் ஜாக்கி சானின் 99வது படமான லிட்டில் பிக் சோல்ஜருக்கு எவ்வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் திரையரங்கினுள் நுழைந்தேன்!

தமிழில் இப்படம் டப் செய்யப்பட்டு வந்திருப்பதால் இப்பதிவில் காணப்படும் கருத்துக்கள் யாவும் அதைக் குறித்ததே!

கதை: சீனாவின் ஆரம்பக் கால சரித்திரத்தின் பின்னனியில் அமைந்த படம் இது! பல்வேறு குறுநில மன்னர்களின் சந்ததிகளின் கீழ் ஆளுமைக்கு உட்பட்டிருக்கும் பிரதேசங்களை ஒன்றினைத்து ஒரே கொடியின் கீழ் ஆளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான் க்வின் சந்ததியின் மூத்த வாரிசு! படைத்தளபதியும் அவனே! அவனது தம்பியாகிய இளவரசன் அவனைக் கொன்று விட்டு மன்னராக விழைகிறான்!

இந்நிலையில் லியாங் நாட்டுக்கு எதிரான போரில் அனைவரும் உயிரிழந்து விட பலத்த காயங்களுடன் தளபதி மட்டும் தப்பி விடுகிறான்! ஆனால் எதிரணியிலுள்ள சாதாரண போர் வீரனாகிய ஜாக்கி சான் தான் இறந்து விட்டதாக ஜோடனை செய்து உயிர் தப்புகிறார்! தளபதியையும் கைது செய்து தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முயல்கிறார், அதற்கு வெகுமதியாகக் கிடைக்கும் 5 காணி நிலத்தைக் கொண்டு போரிலிருந்து ஓய்வு பெற! இளவரசரின் க்வின் படைவீரர்கள் துரத்துகிறார்கள்!

அவர்களிருவரும் வழி நெடுக சந்திக்கும் ஆபத்துக்களையும் அவர்களுக்குள் உருவாகும் நட்பையும் படம் விவரிக்கிறது!

ஜாக்கி சான்: இவரைத் தவிர படத்தில் நடித்துள்ள மற்ற எவரையும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லை என்பதால் ஜாக்கி சான் பற்றி மட்டும் கூறி விடுகிறேன்!

போரை வெறுக்கும் சாதாரண விவசாயியாக, சண்டையைக் கண்டு அஞ்சும் கோழையாக, தன் சோகங்களை பாடல்களில் மறைக்கும் பாடகனாக, உயிரைக் காக்க இறந்து விட்டது போல் நடிக்கும் தந்திரியாக என தன் நடிப்புத் திறமைகளுக்கு வேறொரு பரிணாமம் காட்டியுள்ளார்!

கதை, திரைக்கதை, ஆக்‌ஷன் என மூன்று களங்களுக்கும் பொறுப்பேற்று புகுந்து விளையாடியுள்ளார்! ஜாக்கியின் ஹாலிவுட் படங்களைப் பார்த்து போரடித்துப் போயிருப்பவர்களுக்கு இப்படத்தில் அவரது வேறுபல திறமைகள் வெளிப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கும்!

ஆனால் அவரது பழைய ஹாங்-காங் ஆக்‌ஷன் படங்களின் ரசிகர்களுக்கு படம் பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கிறது!

சண்டைக்காட்சிகள்: கூழாங்கற்களை வைத்து அவர் செய்யும் சில மணித்துளி சாகஸம் அவரது பழைய ரசிகர்களை வெகுவாகக் கவரும்! கிழடு தட்டிப் போனாலும் ஆசிய சிங்கம் சில சமயங்களில் சீறத்தான் செய்கிறது!

காமெடி: படத்தின் ஒரிஜினல் எப்படியென்று தெரியவில்லை! ஆனால் தமிழ் டப்பிங்கில் சொதப்பியிருக்கிறார்கள்!

ஜாக்கியின் கதாபாத்திரம் அவருடையே வழக்கமான கோனங்கித் தனங்கள் நிறைந்தேயிருக்கிறது! ஆனால் தமிழ் டப்பிங்கில் அதெல்லாம் காணாமல் போய் விடுகிறது! படத்தின் கேளிக்கைத் திறன் குறைய டப்பிங்கும் ஒரு பெரிய காரணம்!

அடுத்து வரப்போகும் ஜாக்கி சானின் 100வது படமான 1911ன் டப்பிங்கில் நமது ஒலக காமிக்ஸ் ரசிகரின் பங்களிப்பும் உள்ளது! அவரின் முயற்சியில் படம் எப்படி வருகிறதென்று பார்க்கலாம்! இதுவும் ஜாக்கியின் ஒரு வித்தியாசமான படம் தான்! சரித்திரப் பிண்ணனியில் அமைந்துள்ளது!

ஜாக்கியின் ஆக்‌ஷன் ரசிகர்கள் இனி அடுத்த ஆண்டுகளில் வரப்போகும் ஆர்மர் ஆஃப் காட் மூன்றாம் பாகத்தை தான் எதிர்நோக்கியிருக்க வேண்டியிருக்கும்!

தியேட்டர் நோட்ஸ்: சிங்கம் என்றுமே சிங்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் திரையில் முதல் முறையாக ஜாக்கி சான் தோன்றும்போது ரசிகர்கள் கரவொலி எழுப்பி கரகோஷம் இட்டனர். மேலும் படம் முடிந்தவுடன் அவுட் டேக்ஸ் முடிந்து முழு கிரெடிட் போடும் வரை இருந்து பின்னரே வெளியேறினர். ஜாக்கி சான் ரசிகர்கள் இன்னமும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பதை இது மறுபடியும் உணர்த்தியது.

ஒலக சினிமா முயற்சி: ஜாக்கி சானின் ஹாலிவுட் மொக்கைத் திரைப்படங்களைக் கண்டு சோர்ந்து போயிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இப்படம் சற்று வித்தியாசமாகவே படுகிறது! உலக அளவில் அவரின் இம்முயற்சிக்கு பெரிதும் பாராட்டுக்கள் குவிகின்றன! விரைவில் அவரை ஒரு சீரியஸ் நடிகராக உலகம் ஏற்றுக் கொள்ளத் தான் போகிறது!

ஆனால் அவரது ஆக்‌ஷன் காமெடி படங்களைக் கண்டு வளர்ந்த ஒரு சாதாரண தமிழ்நாட்டு ரசிகனாகிய நான் அவருடைய வயதைக் கணக்கில் கொண்டு கடைசியாக பழைய ஜாக்கி சானை நினைவு படுத்தும் வகையில் ஒரு முழு நீள அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்தை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!

தசாவதாரம் திரைப்பட விழாவில் கலைஞரின் வாயால் என்னவென்றே புரியாமல் வாங்கிய பாராட்டுதான் ஜாக்கி சான் இது போல தன் ரசிகர்களை ஏமாற்றக் காரணம்  என்று அய்யம்பாளையத்தார் கூறுகிறார்! என்ன வாழ்க்கைடா இது?!!

ஆசிய சிங்கம் கடைசியாக ஒரு முறை கர்ஜிக்குமா?!! பொறுத்திருந்து பார்ப்போம்!!!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 2/6

பயங்கரவாதியின் பன்ச்: ஜாக்கியின் ரசிகர்கள் பார்க்கலாம்! கண்டிப்பாக தமிழில் அல்ல!