வணக்கம்.
என்னதான் ஹாலிவுட்டில் வந்த பிரம்மாண்டமான படமாக இருந்தாலும் சரி, அதனை தமிழில் டப்பிங் செய்யப்பட்டபின் பார்க்கும் சுகமே அலாதி. அதனால்தான் எங்கள் மொக்கை ஃபில்ம் கிளப்பில் டப்பிங் படங்களுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. சமீப காலமாக டப்பிங் (மொழிமாற்று) திரைப்படங்களுக்கு பெயர்போன ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் (மோசமான சவுண்ட் குவாலிடி காரணமாக) படம் பார்க்கவே பயமாக இருப்பதால், எந்த ஒரு ஆங்கில மொழி மாற்று படங்களையும் பார்க்க இயலவில்லை. கடைசியாக மனதை தேற்றிக் கொண்டு பார்த்த படமாகிய "அன்டர்வேர்ல்ட்" படத்தையும் மறுபடியும் ஆங்கிலத்தில் பார்த்தே புரிந்துகொள்ள வேண்டி இருந்ததால், விஷப்பரிட்சைகளை மேற்கொள்ளவில்லை.
ஆனால் இந்த ஜர்னி டு தி மிஸ்டீரியஸ் ஐலேன் படத்தின் விளம்பரங்களும், போஸ்டரும் மிகவும் கவர்ந்து விட்டதால், வெள்ளிக்கிழமை அன்றே மொக்கை ஃபில்ம் கிளப் உறுப்பினர்களுடன் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அதுவும் ராயப்பேட்டை வுட்லேண்ட்ஸ் தியேட்டரில் தமிழில் 3டி வசதியுடன் இந்த படம் வெளிவந்து இருப்பது மற்றுமொரு சிறப்பு. அதுவுமில்லாமல் இந்த படத்தை ருத்ரபூமி என்ற பெயரில் வெளியிட்ட புண்ணியவான்கள் அதற்க்கு பன்ச் லைனாக "வெற்றியோடு வருகிறான் வெளிநாட்டு கோச்சடையான்" என்று வேறு தனியாக போட்டு விளம்பரம் செய்தார்கள். ஆனால் சென்னைக்கு வெள்ளியன்றுதான் திரும்பிய நான், வழக்கம்போல ஒரு அரசாங்க ஆணியை புடுங்க வேண்டி இருந்ததால் வெள்ளியன்று மாலை மொக்கை ஃபில்ம் கிளப் உறுப்பினர்களுடன் செல்ல இயலவில்லை. சனிக்கிழமை அன்றுதான் பார்க்க முடிந்தது.
படத்தின் பின்னணி: நான்கு வருடங்களுக்கு முன்பாக ஜர்னி டு தி செண்டர் ஆப் தி எர்த் என்கிற படம் வந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். மம்மி சீரிஸ் புகழ் பிரெண்டன் பிரேசர் நடித்து பங்கேற்ற படமாகிய அதன் தொடர்பில்லாத இரண்டாம் பாகமே இந்த படம். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு கேட்ஸ் & டாக்ஸ் படத்தை இயக்கிய பிராட் பெய்டன் தான் இந்த படத்தின் இயக்குனர். ஆனால் இந்த படத்தில் பிரெண்டன் பிரேசர் நடிக்காததால், அவருக்கு பதிலாக WWF புகழ் ராக் (ட்வெய்ன் ஜான்சன்)ஐ நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்தனர் தயாரிப்பாளர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வால்ட் டிஸ்னி தயாரித்த ரேஸ் டு தி விட்ச் மவுண்டன் படத்திலும் இதுபோலவே டீனேஜ் சிறுவர்களின் சாகசத்திற்கு துணை போகும் கேரக்டரில் ராக அசத்தி இருப்பார். அதனால் அவரை இந்த படத்திற்கு புக் செய்தனர்.
படத்தின் கதை: ராக் எலிசபெத் ஆண்டர்சனை மறுமணம் செய்துக்கொள்கிறார். எலிசபெத்தின் டீனேஜ் மகன் ஷானுக்கு ராக்கை பிடிக்கவே பிடிக்காது. அனாலும் ராக் அவன் மீது அன்பு செலுத்துகிறார். ஷானின் தாத்தா (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போனவர்) ஒரு விஞ்ஞானி. அவரை தேடிக்கொண்டு இருக்கிறான் ஷான். ஒரு நாள் திடீரென்று அவனுக்கு ஒரு சாட்டிலைட் சிக்னல் வருகிறது. மிகவும் இலேசாக கிடைக்கும் அந்த சிக்னல் தன்னுடைய தாத்தா அனுப்பியது என்று நம்பும் ஷான், அந்த சிக்னலை தெளிவாக பெற அரசாங்க சாட்டிலைட் ரிசர்ச் சென்டரின் உள்ளே அனுமதியின்றி நுழைந்து அந்த சிக்னலை தெளிவாக பெற்று விடுகிறான். அப்போது போலிஸ் அவனை துரத்தி பிடித்து விடுகின்றனர். ஆனால் போலிஸ் அதிகாரி ராக்கின் நண்பர் என்பதால் ஷானை வெறும் எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறார்.
வீடு திரும்பும் ஷானை ராக் விசாரிக்கிறார். பின்னர் அந்த சிக்னலை டீ-கோட் செய்ய உதவுகிறார். அதன் மூலம் ஒரு மர்ம தீவு ஒன்று இருப்பதையும் அதில் இருந்து தான் அந்த சிக்னல் வந்து இருப்பதையும் கண்டுபிடித்து அங்கே சென்று ஷானின் தாத்தாவை மீட்டு வர முடிவெடுக்கின்றனர். அதன்படி தனியார் ஹெலிகாப்டர் வைத்து இருக்கும் கபாடோ மற்றும் அவரது மகள் கிலானி உடன் நால்வர் அணியாக அந்த மர்ம தீவை நோக்கி செல்கின்றனர். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களை தயவு செய்து வெள்ளித்திரையில் (மட்டுமே) கண்டு ரசிக்கவும்.
நிறைகள்:
- என்னைபோன்ற பேன்டசி, புதையல் வேட்டை கதைவரிசைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் ஸ்டீவன்சனின் டிரஷர் ஐலேண்ட், ஜோனதன் ஸ்விப்ட் இன் கலிவரின் டிராவல்ஸ் மற்றும் ஜூல்ஸ் வெர்னேவின் மிஸ்டீரியஸ் ஐலேண்ட் ஆகிய மூன்று புதினங்களையும் ஒருங்கிணைத்த ஒரு பிளாட், இந்த கதைக்கு அடித்தளமாக இருப்பது ஒரு பெரிய பிளஸ்.
- 1960ல் இருந்து 2000 வரையிலான ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். அதில் ஒருவர் எனக்கு பிடித்த நடிகர் மைக்கேல் கெய்ன். அவர் தான் இந்த படத்தில் ஷானின் தாத்தாவாக வருகிறார். அவரது நகைச்சுவை கலந்த நடிப்பும், கிண்டலான வசனங்களும் படத்தின் வெற்றிக்கு காரணம்.
- பல இடங்களில் படத்தின் வசனங்கள் பளிச்சிடுகின்றன. பின்னர் ஆங்கிலத்தில் பார்க்கும்போதும் ஒரிஜினல் வசனங்கள் நகைச்சுவையுடன் இருந்தது புரிந்தது. ஆனால் மகதீரா தெலுங்கு வசனங்களை தமிழில் மொக்கையாக்கிய பாக்கியராஜ் போல இல்லாமல் இந்த மொழி மாற்று வசனங்கள் சிறப்பாகவே உள்ளன.
- நண்பர் இரவுக் கழுகு பல இடங்களில் 3டி அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கையில் பின்னே நகர்ந்தார். சில இடங்களில் திடீரென்று மிருகங்கள் நம்மை நோக்கி பாய்வது போல இருப்பதும், தங்கத்துகள் நம் மீதே விழுவது போல் இருப்பதும் 3டியின் வெற்றிக்கு சாட்சிகள்.
- க்ளைமாக்ஸ்! இந்த படத்தின் முடிவில் டைட்டில் கார்ட் போடும்போது பல மேக்கிங் ஆப் தி மூவி ஷாட்டுகள் மற்றும் சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. முழுவதும் இருந்து பாருங்கள். அதுவும் குறிப்பாக அந்த மினியேச்சர் யானைகள் நீச்சல் அடிப்பது ஒரு செம சீன்.
குறைகள்:
- படம் முழுக்க அநியாயத்திற்கு ஏகப்பட்ட கிளிஷேக்கள், ஸ்டீரியோடைப்புகள். இயக்குனர் பல ஷாட்டுகளை எப்படி வைக்கப்போகிறார் என்று நண்பர் இரவுக்கழுகு எனக்கு முன்கூட்டியே சொல்லிக்கொண்டு இருந்தார். அவர் சொல்லியபடியே இருந்தது.
- At best, இது ஒரு B-Grade படம் என்பதால் லாஜிக் குறைகளையும், டைரக்ஷன் ஓட்டைகளையும் மறந்து விடுவது நலம்.
- க்ளைமாக்ஸ்க்கு அடுத்து இன்னுமொரு க்ளைமாக்ஸ் வைத்து மூன்றாம் பாகத்திற்கு பிட்டு போடுவது.
தியேட்டர் டைம்ஸ்:
- வுட்லேண்ட்ஸ் தியேட்டரில் இந்த படம் என்று எதிர்பார்த்து சென்றால் வுட்லேண்ட்ஸ் சிம்பொனி என்கிற சிறிய தியேட்டரிலேயே இந்த படம் ஓடுகிறது. சிறிய தியேட்டர். ஆனால் ஹவுஸ்புல் ஆகவே செல்கிறது.
- 85 ரூபாய்க்கு தமிழில் 3டி படம் என்பது ஓக்கேதான் என்றாலும் அது வுட்லேண்ட்ஸ் சிம்பொனியின் சின்ன திரையில் பார்ப்பது சற்றே கடினமாக இருக்கிறது. பெரிய சைஸ் டிவி போல இருக்கிறது என்று நண்பர் இரவுக் கழுகு கமென்ட் அடித்தார்.
- ஆனால் பெரிய திரையை கொண்ட பைலட் தியேட்டரில் சவுண்ட் ஒரு மிகப்பெரிய பிரச்சினை. ஆனால் இங்கே சவுண்ட் மிகவும் துல்லியமாக கேட்கிறது.
- 3டி கண்ணாடி வாங்கும்போது பார்த்து வாங்குங்கள். பல கண்ணாடிகள் உடைந்தே இருக்கின்றன. நாம் கவனமாக கண்ணாடி கவரை அங்கேயே பிரித்து பார்த்து செக் செய்து வாங்கி செல்வது நலம்.
- தியேட்டரில் இடைவெளி முடிந்த பின்னர் மணி அடித்தோ அல்லது ஒலிஎழுப்பியோ அறிவிப்பார்கள். ஆனால் இங்கே அப்படி எதுவுமே இல்லை. பெரும்பாலானவர்கள் இடைவேளை முடிந்தவுடன் சில ஆரம்ப காட்சிகளை மிஸ் செய்து விட்டார்கள்.
- வழக்கம் போல இங்கேயும் இடைஞ்சலாக ஒரு கும்பல் வந்து சேர்ந்தது. வெள்ளை வேட்டியில் வந்த ஒரு பெரிசு படம் படத்தின் முக்கிய காட்சிகளில் பொறுப்பாக செல் போனில் கடோத்கஜ குரலில் பேச ஆரம்பித்துவிட்டார். பக்கத்தில் இருப்பவர்களை பற்றி கொஞ்சமும் அசரவில்லை.
- அந்த பெருசைக்கூட பொறுத்துக்கொள்ளலாம் என்றால் பின்னால் இருந்த ஒரு குடும்பத்தின் அட்டகாசங்களை தாங்கமுடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து குழந்தைகளுடன் வந்து அவர்களே பேசிக்கொண்டு இருந்தார்கள். முன் இருக்கையில் இருப்பவர்கள் மீது பாப் கார்ன் வீசுவது, முன் இருக்கையின் மீது காலை போடுவது என்று கொடுமைகள் ஓராயிரம்.
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:
3/6 மூன்று தோட்டாக்கள்! பொழுதுபோக்கு படம்.
சாவியின் பன்ச்: ஜர்னி டு-கண்டிப்பாக தியேட்டருக்கு ஒரு முறை ஜர்னி போகலாம்.
ட்ரைலர்:
8 comments:
வந்தோம்ல பஸ்ட்
இதன் முதல் பாகம் Journey to the Center of the Earth மொக்கையாக இருந்தது. இது பரவாயில்லை போலவே...
உங்களுக்கு வுட்லேண்ட்ஸ் என்றால் எங்களுக்கு கோயம்பேடு ரோகினி
எங்களுக்கு கேசினோ மற்றும் பைலட் தியேட்டர்தான் வசதிப்படும். ஆனால் சவுண்ட் கிளாரிட்டி காரணமாக இந்த முறை வுட்லேண்ட்ஸ் சென்றோம்.
ரோகிணியில் தான் நாங்கள் மௌன குரு பார்த்தோம். கொஞ்சம் கஷ்டமான தியேட்டரே. இருக்கைகள் மற்றும் ஸ்க்ரீன் என்று பல விஷயங்கள் வசதிப்படவில்லை.
விமர்சனம் சூப்பர் நண்பரே..படம் பார்க்க வேண்டும் போல இருக்கிறது...நல்ல எழுத்து நடை..நன்றி.தொடரட்டும் தங்கள் பணி.
விமர்சனம் நன்று.
மொத பார்ட் மொக்கையா இருந்தது,..இது நல்ல இருக்குனு சொல்றிங்க!!!! பார்கிறேன்.
நான் எப்படியும் இதைப் பார்க்க இன்னும் 2 மாதம் போகும். ஒரிஜினல் ப்ரிண்ட் வரணும்ல? ஆனால் மொக்கையோ பொக்கையோ ... பார்த்துவிடுவேன்.
"வெளிநாட்டு கோச்சடையானா"??
நீங்கள் பொழுதுபோக்காக இருக்கும் என்று சொல்வதால் படம் பார்க்க முயற்சிக்கிறேன்!
நல்ல விமர்சனம்..
ரொம்ப சுவாரிசியமா எழுதரீங்க. உங்க தியேட்டர் டைம்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. உங்கள இப்ப தான் பாதி படிச்சு இருக்கேன். இன்னும் நிறைய படங்களை பத்தி எழுதுங்க.
நம்ப ஊருல போஸ்டர் டிசைன் வாய்பே இல்ல "வெளிநாட்டு கோச்சடையான்"., அந்த அந்த டிரெண்டக்கு ஏத்த மாதிரி போஸ்டர் செஞ்சுடுவாங்க
oru time recharge panna time evlo venum? ana neenga sonna mathiri niraya kuraigal irunthalum migavum nanragave irukkirathu.
Post a Comment