வணக்கம்.
சமீப காலமாகவே தெலுகு படவுலகம் கொஞ்சம் மழை,ரொம்ப வெயில் என்றுதான் இருக்கிறது. தூகுடு, பிசினெஸ்மேன் என்று மெகா ஹிட்டுகள் வந்தாலும், பெரும்பாலான ஹீரோக்களின் மெகா படங்கள் தொடர் தோல்வியையே தழுவி வருகின்றன. நம்முடைய மொக்கை ஃபிலிம் கிளப் மெம்பர்களுக்கு அது ஒரு வகையில் திருப்தியே என்றாலும்கூட தெலுகு சினிமா தொழிற்சாலையை அது பெரிதளவும் பாதித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் தொடர் தோல்வியை தழுவுவது ஆபத்தான ஒரு விஷயம். இந்த சூழலில் நிதின் (தெலுகில் ஜெயம் படத்தில் நடித்தவர்) நிலைமை மிகவும் மோசம். பாவம் ஐவரும் என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டார். ஆனால் ஒன்றும் நடப்பது போல இல்லை. ஆகையால் அடுத்து என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு இருந்தபோது ஆபத்தாந்தவனாக வந்து சேர்ந்தார் யாவரும் நலம் பட இயக்குனர் விக்ரம் குமார். இவர்கள் இருவரின் கூடு முயற்சியில் வெளிவந்துள்ள படமே இஷ்க் (காதல்).
படத்தின் பின்னணி: விக்ரம் குமார் என்றவுடன், ஆஹா யாவரும் நலம் என்ற விறுவிறுப்பான ஹிட் படத்தை கொடுத்தவர் என்று மட்டும் நினைத்துவிடவேண்டாம். இவர்தான் சிம்புவை வைத்து அலை என்ற மெகா ஹிட் படத்தையும் கொடுத்தவர். ஆகையால் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு மிக்சட் ஆகவே இருந்தது. அதிலும் ஹீரோ நிதின் ஒரு ஹிட் படம் கொடுத்து எட்டு வருடங்கள் ஆகியதும் சற்றே கிலேசம் ஏற்பட காரணமாக இருந்தது. ஆனால் இந்த மாத மத்தியில் நடந்த ஆடியோ லான்ச் விழாவில் பவன் கல்யான் வந்து இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியது நிஜமே.
அதிலும் என் பழைய நண்பர் ரூபன் இசை என்பதும், இந்த படத்தின் முதல் பாடல் (கிளப் சாங்) மெகா ஹிட் ஆகி பிளாட்டினம் டிஸ்க் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதில் சொல்லவேண்டிய மற்றுமொரு விஷயம்: ரூபன் நிதின் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டது. தொடர்ந்து நான்கு/ஐந்து நிதின் படங்களுக்கு இசையமைத்தவர் யார் என்பதை சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும். அதுவுமின்றி பழைய ஜிகிடி சிந்து தொலானி இந்த படத்தில் "மிகவும் முக்கியமான" ஒரு பாத்திரத்தில் "நடித்திருப்பதாக" ஒரு தகவல் வர, சிந்துவின் மீதிருந்த "திறமைகளின்" எதிர்பார்ப்புடனே இந்த படத்திற்கு சென்றோம். படம் ரிலீஸ் ஆன அன்று சென்னையில் இல்லாமல் இருந்தது ஒரு பெரிய குறை. இருந்தாலும் சென்னை வந்தவுடன் பார்த்த முதல் படம் இஷ்க் தான்.
படத்தின் கதை: ஒரே லைனில் சொல்லகூடிய மிகவும் சாதாரணமான "கண்டவுடன் காதல்" வகைதான் என்றாலும் திரைக்கதையை நேர்த்தியாக அமைத்து போரடிக்காமல் படத்தை இயக்கியுள்ளார் விக்ரம்.நித்யா மேனனை முதல் பார்வையில் கண்டதில் இருந்து காதல் கொள்ளும் நிதின், மழை காரணமாக விமானப்பயணம் தடைபட, இடைப்பட்ட நேரத்தில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு பின்னர் அது காதலாக மலர, ஒரு ஃபிளாஷ்பேக் அவர்கள் காதலுக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறது. என்ன, எப்படி என்பதை மேலே விளம்பரத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் கண்டு களிக்கவும்.
படத்தின் நிறைகள்:
- சிறப்பான திரைக்கதை அமைந்தால், வெறும் மூன்று கேரக்டர்களை மட்டுமே மைய்யமாக கொண்டு ஒரு முழு படத்தை நகர்த்த இயலும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். பழைய பாக்கியராஜ் சாயல் திரைக்கதை இந்த படத்தில் பளிச்சிடுகிறது.
- நிதின் என்னுடைய மனம் கவர்ந்த நடிகர். இந்த படத்தில் அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். இதைப்போலவே தொடர்ந்து நல்ல படங்களை செலக்ட் செய்தால் மறுபடியும் டாப் ஹீரோவாக வருவார் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க இயலாது.
- மிக மிக சாதாரண ஒரு கதையை சிறப்பான திரைக்கதையால் ஜாலியான ஒரு டைம்பாஸ் படமாக மாற்றியதில் இயக்குனருக்கு பெரும் பங்கு உண்டு. அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.
- கண்டிப்பாக சினிமொட்டோகிராபி பற்றி கூறியே ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக அந்த கோவா பீச்சில் நடக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டவிதம் அற்புதம்.
- நித்யா மேனனை பற்றி கூறாவிடில் ஜன்ம சாபல்யம் அடையவே அடையாது. அம்மிணி அடுத்த ஜோதிகாவாக மாறி வருகிறார். குறிப்பாக அந்த துருதுரு முக பாவனைகளும், அந்த கண்களும் மயக்குகின்றன. லக்கியார் ஏன் இன்னமும் இவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்காமல் இருக்கிறார் என்பது புரியவில்லை.
- முதல் பாடல் மெகா ஹிட் ஆனாலும், மற்ற பாடல்கள் படத்தில் வரும்போது ரசிக்க வைக்கின்றன. படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.
படத்தின் குறைகள்:
- சீனு வைட்லா ஸ்டைல் ஃபிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் கிளிஷே ஆக தெரிகிறது.
- மிஷன் இம்ப்பாசிபில் (மூன்றாம் பாகம்) படத்தில் வரும் அந்த லொகேஷன் கண்டுபிடிக்கும் காட்சிகளை அப்படியே கிளைமேக்சில் யூஸ் செய்து இருக்கிறார்கள்.
- ஓரிரு பாடல் காட்சிகள் திணிக்கப்பட்டவையாக இருப்பது.
- சில காட்சிகள் மிகவும் நாடகத்தனமாக இருக்கின்றது. குறிப்பாக அந்த ஹாஸ்பிடல் காட்சி.
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:
3/6 மூன்று தோட்டாக்கள்! பொழுதுபோக்கு படம்.
சாவியின் பன்ச்: ஜாலியான படம். காதல் கொள்ளலாம்.
ட்ரைலர்: