சல்மான் கானின் ச்சில்லர் பார்ட்டி என்றவுடன் ஏதோ சல்மான் கான் நடித்த புதிய படமோ அல்லது புதிய பார்ட்டியோ என்று எண்ணிவிடவேண்டாம். இது யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் உடன் இணைந்து சல்மான் கான் தயாரித்து வந்துள்ள குழந்தைகளுக்கான படம். இந்த படத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தேன். சல்மான் கான் மற்றும் யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு, ட்ரைலரில் சல்மான் கான் தோன்றி ஆச்சர்யப்படுத்தியது, முதல் முறையாக ரன்பீர் கபூர் ஒரு ஐட்டம் பாட்டிற்கு குத்தாட்டம் போட்டது, ராஜு என்கிற செல்ல நாய்க்குட்டி பிடு என்கிற பெயரில் நடித்துள்ளது, ஒரு நாய்க்குட்டிக்கும் அரசியல் தலைவருக்கும் நடக்கும் போராட்டம் என்று விளம்பரப்படுத்தியது, ரொம்ப நாள் கழித்து நட்சத்திரங்கள் இல்லாத ஒரு முழு நீள குழந்தைகளுக்கான படம் என்று பல விஷயங்கள் இந்த படத்தை எதிர்ப்பார்க்க வைத்தது.
குழந்தைகளுக்கான படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். ஏனென்றால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், குழந்தைகளுக்கான படம் எடுக்கிறேன் பேர்வழி என்று முழுக்க முழுக்க வயது முதிர்ந்தவர்களுக்கான படங்களை சிறுவர்களை நடிக்க வைத்து மொக்கை போடுவார்கள். அதிலும் அந்த படத்தில் வரும் சிறுவர்கள் தங்களது வயதுக்கு முதிர்ந்த வசனங்களை பேசி, வயதை மீறிய விஷயங்களை செய்வார்கள். அதையும் நாம் பார்த்து தொலைக்க வேண்டி இருக்கும். இருட்டிலேயே படம் எடுக்கும் மணிரத்னம் முதல் லேட்டஸ்ட் ஆக படம் எடுத்த பாண்டிராஜ் வரை அனைவருமே இதற்க்கு விதி விலக்கல்ல. சிறுவர்களுக்கான படம் என்றால் என்ன என்பதை இந்த படம் தெளிவாக உணர்த்துகிறது. சமீபத்தில் ஹிந்தியில் கூட கச்சா லம்பூ, ஸ்டான்லி க டப்பா என்று சிறுவர்களை மைய்யப்படுத்தி படங்கள் வந்தாலும் அவை சீரியஸ் ஆன கருத்துக்களை கொண்ட படங்களே தவிர சிறுவர்களுக்கான படங்கள் அல்ல.
ச்சில்லர் பார்ட்டி படத்தின் கதை: ஒரு காம்பவுண்டில் குடி இருக்கும் சிறுவர்களின் கிரிக்கெட் டீமிற்கு அந்த காலனி வாசிகள் வைத்த பெயரே ச்சில்லர் பார்ட்டி (சில்லரைப் பசங்க). திடீரென்று அந்த காம்பவுண்டில் வேலைக்கு வரும் ஒரு சிறுவனும் அவனுடைய ஒரே துணைவனான பீடு என்கிற செல்ல நாய்க்குட்டியும் இந்த சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். மோதலில் ஆரம்பித்து நட்பில் முடிகின்ற வேளையில் திடீரென்று ஒரு பிரச்சினை முளைக்க, அதனை சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதை மிகவும் அற்புதமான திரைமொழியில் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள் விகாஷ் பல் மற்றும் நிதேஷ் திவாரி. 6 முதல் 66 வயதுள்ள, ஏன் அதற்க்கும் மேலுள்ள அணைத்து வயது சிறுவர்களும் ரசிக்கும்படி, போரடிக்காமல் நகருகிறது இந்த படம். தெளிவான திரைக்கதையும், அற்புதமான நடிப்பும் இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள். போத்திஸ் விளம்பரத்தில் வரும் சிறுமி ஸ்ரேயா இந்த படத்திலும் ஒரு விளம்பர மாடலாக வருகிறார் (யாருப்பா அது, இந்திரன் Part 3 படத்துக்கு ரஜினிக்கு ஹீரோயின் ரெடி).
திரைக்கதை: தெளிவான நீரோட்டம் போல அழகான, நேர்க்கோட்டில் பிரயாணம் செய்யும் திரைக்கதை. முதல் காட்சியில் ஒவ்வொரு சிறுவனாக அறிமுகம் ஆவதில் இருந்து படத்தின் கடைசி காட்சி வரை எங்கேயுமே சலிப்படைய வைக்காத, நேர்த்தியான இயக்கம் இந்த படத்தை மறுபடியும், மறுபடியும் பார்க்க வைக்கும். இந்த படத்தை சிறுவர்களுக்கான படம் என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. படத்தில் பிடு என்கிற ஒரு நாய்க்குட்டி மிக முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. செல்லப்பிராணிகள் பிரியர்களுக்கு, குறிப்பாக நாய்க்குட்டிகளை வளர்ப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் (அப்போ சாரு நிவேதிதா இதுக்கும் விமர்சனம் எழுதுவாரா?). மற்றவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
படத்தின் +கள்: - நட்சத்திரங்கள் யாருமே இல்லாத ஒரு அணிவகுப்பு
- சிறப்பான நடிகர் தேர்வு
- யாரையுமே நோகடிக்காத திரைக்கதை
- ரசிக்க வைக்கும் காட்சிகள்
- நம்ப வைக்கும் சிறுவர் பாத்திரங்கள்
- அருமையான பின்னணி இசை
- டெக்னிகலாக அனைத்துமே சிறப்பாக இருப்பது
- ரன்பீர் கபூரின் அந்த ஐட்டம் பாடல், படம் முடிந்து பெயர்கள் போடப்பட்ட பிறகு வருவது வேஸ்ட்.
- வேறு குறைகளே கண்ணிற்கு தெரியாமல் படம் எடுத்தது.
தியேட்டர் டைம்ஸ்: அண்ணன் க'னா இந்த படத்தை சென்னை வுட்லண்ட்ஸ் தியட்டரில் இன்று காலை பார்த்தார். மொத்தம் மூன்று பேர் மட்டுமே பால்கனியில் இருந்ததாக கூறி கலைப்பட்டார். ஆனால் படம் பார்த்த அந்த மூவருமே படம் முடிந்து கடைசி வரை எழுந்து செல்ல மனமில்லாமல் சென்றதாக கூறினார். மும்பையில் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மல்டிப்ளெக்ஸ் படம்தான், இருந்தாலும் கண்டிப்பாகஒரு முறை பார்க்க வேண்டிய படம்.
ச்சில்லர் பார்ட்டி பட ட்ரைலர்: இந்தியாவின் மாஸ் ஹீரோ சல்மான் கான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரே இந்த படத்தின் ட்ரைலரை வழங்கி உள்ளார். மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப்பட்ட இந்த காணொளி, சமீபத்தில் நான் பார்த்த சிறந்த ட்ரைலர்களில் ஒன்றாகும்.
சாவியின் பன்ச்: ச்சில்லர்ஸ் பார்ட்டி - சில்லறை அல்ல, முழு ஆயிரம் ருபாய் நோட்டு.
3 comments:
Haiya me the 1st :)))
.
// 6 முதல் 66 வயதுள்ள, ஏன் அதற்க்கும் மேலுள்ள அணைத்து வயது சிறுவர்களும் ரசிக்கும்படி //
Super Punch ;-)
.
//செல்லப்பிராணிகள் பிரியர்களுக்கு, குறிப்பாக நாய்க்குட்டிகளை வளர்ப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்//
அப்ப இது ஒரு ராமநாராயனன் படமா?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
Post a Comment