Friday, July 8, 2011

சல்மான் கானின் ச்சில்லர் பார்ட்டி (Chillar Party) 08th July 2011

சல்மான் கானின் ச்சில்லர் பார்ட்டி என்றவுடன் ஏதோ சல்மான் கான் நடித்த புதிய படமோ அல்லது புதிய பார்ட்டியோ என்று எண்ணிவிடவேண்டாம். இது யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் உடன் இணைந்து சல்மான் கான் தயாரித்து வந்துள்ள குழந்தைகளுக்கான படம். இந்த படத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தேன். சல்மான் கான் மற்றும் யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு, ட்ரைலரில் சல்மான் கான் தோன்றி ஆச்சர்யப்படுத்தியது, முதல் முறையாக ரன்பீர் கபூர் ஒரு ஐட்டம் பாட்டிற்கு குத்தாட்டம் போட்டது, ராஜு என்கிற செல்ல நாய்க்குட்டி பிடு என்கிற பெயரில் நடித்துள்ளது, ஒரு நாய்க்குட்டிக்கும் அரசியல் தலைவருக்கும் நடக்கும் போராட்டம் என்று விளம்பரப்படுத்தியது, ரொம்ப நாள் கழித்து நட்சத்திரங்கள் இல்லாத ஒரு முழு நீள குழந்தைகளுக்கான படம் என்று பல விஷயங்கள் இந்த படத்தை எதிர்ப்பார்க்க வைத்தது.
குழந்தைகளுக்கான படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். ஏனென்றால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், குழந்தைகளுக்கான படம் எடுக்கிறேன் பேர்வழி என்று முழுக்க முழுக்க வயது முதிர்ந்தவர்களுக்கான படங்களை சிறுவர்களை நடிக்க வைத்து மொக்கை போடுவார்கள். அதிலும் அந்த படத்தில் வரும் சிறுவர்கள் தங்களது வயதுக்கு முதிர்ந்த வசனங்களை பேசி, வயதை மீறிய விஷயங்களை செய்வார்கள். அதையும் நாம் பார்த்து தொலைக்க வேண்டி இருக்கும். இருட்டிலேயே படம் எடுக்கும் மணிரத்னம் முதல் லேட்டஸ்ட் ஆக படம் எடுத்த பாண்டிராஜ் வரை அனைவருமே இதற்க்கு விதி விலக்கல்ல. சிறுவர்களுக்கான படம் என்றால் என்ன என்பதை இந்த படம் தெளிவாக உணர்த்துகிறது. சமீபத்தில் ஹிந்தியில் கூட கச்சா லம்பூ, ஸ்டான்லி க டப்பா என்று சிறுவர்களை மைய்யப்படுத்தி படங்கள் வந்தாலும் அவை சீரியஸ் ஆன கருத்துக்களை கொண்ட படங்களே தவிர சிறுவர்களுக்கான படங்கள் அல்ல.
ச்சில்லர் பார்ட்டி படத்தின் கதை: ஒரு காம்பவுண்டில் குடி இருக்கும் சிறுவர்களின் கிரிக்கெட் டீமிற்கு அந்த காலனி வாசிகள் வைத்த பெயரே ச்சில்லர் பார்ட்டி (சில்லரைப் பசங்க). திடீரென்று அந்த காம்பவுண்டில் வேலைக்கு வரும் ஒரு சிறுவனும் அவனுடைய ஒரே துணைவனான பீடு என்கிற செல்ல நாய்க்குட்டியும் இந்த சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். மோதலில் ஆரம்பித்து நட்பில் முடிகின்ற வேளையில் திடீரென்று ஒரு பிரச்சினை முளைக்க, அதனை சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதை மிகவும் அற்புதமான திரைமொழியில் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள் விகாஷ் பல் மற்றும் நிதேஷ் திவாரி. 6 முதல் 66 வயதுள்ள, ஏன் அதற்க்கும் மேலுள்ள அணைத்து வயது சிறுவர்களும் ரசிக்கும்படி, போரடிக்காமல் நகருகிறது இந்த படம். தெளிவான திரைக்கதையும், அற்புதமான நடிப்பும் இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள். போத்திஸ் விளம்பரத்தில் வரும் சிறுமி ஸ்ரேயா இந்த படத்திலும் ஒரு விளம்பர மாடலாக வருகிறார் (யாருப்பா அது, இந்திரன் Part 3 படத்துக்கு ரஜினிக்கு ஹீரோயின் ரெடி).
திரைக்கதை: தெளிவான நீரோட்டம் போல அழகான, நேர்க்கோட்டில் பிரயாணம் செய்யும் திரைக்கதை. முதல் காட்சியில் ஒவ்வொரு சிறுவனாக அறிமுகம் ஆவதில் இருந்து படத்தின் கடைசி காட்சி வரை எங்கேயுமே சலிப்படைய வைக்காத, நேர்த்தியான இயக்கம் இந்த படத்தை மறுபடியும், மறுபடியும் பார்க்க வைக்கும். இந்த படத்தை சிறுவர்களுக்கான படம் என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. படத்தில் பிடு என்கிற ஒரு நாய்க்குட்டி மிக முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. செல்லப்பிராணிகள் பிரியர்களுக்கு, குறிப்பாக நாய்க்குட்டிகளை வளர்ப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் (அப்போ சாரு நிவேதிதா இதுக்கும் விமர்சனம் எழுதுவாரா?). மற்றவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
படத்தின் +கள்:
  • நட்சத்திரங்கள் யாருமே இல்லாத ஒரு அணிவகுப்பு
  • சிறப்பான நடிகர் தேர்வு
  • யாரையுமே நோகடிக்காத திரைக்கதை
  • ரசிக்க வைக்கும் காட்சிகள்
  • நம்ப வைக்கும் சிறுவர் பாத்திரங்கள்
  • அருமையான பின்னணி இசை
  • டெக்னிகலாக அனைத்துமே சிறப்பாக இருப்பது
படத்தின் - கள்:
  • ரன்பீர் கபூரின் அந்த ஐட்டம் பாடல், படம் முடிந்து பெயர்கள் போடப்பட்ட பிறகு வருவது வேஸ்ட்.
  • வேறு குறைகளே கண்ணிற்கு தெரியாமல் படம் எடுத்தது.
தியேட்டர் டைம்ஸ்: அண்ணன் க'னா இந்த படத்தை சென்னை வுட்லண்ட்ஸ் தியட்டரில் இன்று காலை பார்த்தார். மொத்தம் மூன்று பேர் மட்டுமே பால்கனியில் இருந்ததாக கூறி கலைப்பட்டார். ஆனால் படம் பார்த்த அந்த மூவருமே படம் முடிந்து கடைசி வரை எழுந்து செல்ல மனமில்லாமல் சென்றதாக கூறினார். மும்பையில் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மல்டிப்ளெக்ஸ் படம்தான், இருந்தாலும் கண்டிப்பாகஒரு முறை பார்க்க வேண்டிய படம்.
ச்சில்லர் பார்ட்டி பட ட்ரைலர்: இந்தியாவின் மாஸ் ஹீரோ சல்மான் கான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரே இந்த படத்தின் ட்ரைலரை வழங்கி உள்ளார். மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப்பட்ட இந்த காணொளி, சமீபத்தில் நான் பார்த்த சிறந்த ட்ரைலர்களில் ஒன்றாகும்.
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6 (ஐந்து தோட்டாக்கள்). imageஒரு கட்டை விரல் மேலே.
சாவியின் பன்ச்: ச்சில்லர்ஸ் பார்ட்டி - சில்லறை அல்ல, முழு ஆயிரம் ருபாய் நோட்டு.

Tuesday, July 5, 2011

CARS 2 (3D): 24.06.2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

டிஸ்னி பிக்ஸார் தயாரிப்பில் இதுவரை வெளிவந்துள்ள அனிமேஷன் படங்களிலேயே மிக மொக்கையானது எனப் பெயர் பெற்ற படம் கார்ஸ்! அப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது என்றதும் ‘இதைப் போய் யாராவது இரண்டாம் பாகம் வேறு எடுப்பார்களா?!!’ என்ற கேள்வி எழுந்தது! அந்த பயம் நியாயமானதே என்று நிரூபிக்கிறது கார்ஸ் 2 (3D)!

முதல் பாகம் பற்றி அறியாதோருக்கு ஒரு சிறு அறிமுகம்! முழுக்க முழுக்க பேசும் கார்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமே கார்ஸ்! லைட்னிங் மெக்குவீன் என்ற தலைக்கனம் பிடித்த சாம்பியன் ரேஸ் கார் தான் ஹீரோ! அது எப்படி தன்னிலை உணர்ந்து வாழ்விலும் ரேஸிலும் வெற்றி பெறுகிறது என்பதே கதை! ஓவன் வில்சன், பால் நியூமன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் தங்கள் குரல் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும் படத்தின் நீளம் ஒரு பெரிய குறையாகவே இருந்தது! கார்ஸ் 2ம் அப்படித்தான்!

பரவலான கருத்து என்னவென்றால் முதல் பாகத்தை விட இது படு மொக்கை என்பதே! நான் இதில் வேறுபடுகிறேன்! ஏனெனில் இதில் வரும் ஜேம்ஸ்பாண்ட் கார் கதாபாத்திரமே! அது மட்டும் இல்லையெனில் மேடரின் மொக்கைகள் தாங்க முடியாமல் தியேட்டரை விட்டு ஓடியிருப்பேன்!

கதை:

முதல் பாகத்தில் அல்லக்கையாக வரும் மேடர் தான் இதில் ஹீரோ! இந்த ஓட்டை லாரியை அமெரிக்க உளவாளி என்று இருதரப்பு உளவாளிகளும் எண்ணிவிட என்ன நடக்கிறதென்பதே கதை! நடுவில் வழக்கமான டிஸ்னியின் நட்பு, உறவுகள், காதல் பற்றிய செண்டிமெண்ட் காட்சிகள்!

சுவாரசியமான துணுக்குகள்:

  • லைட்னிங் மெக்குவீன் என்பது பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்டீவ் மெக்குவீன் நினைவாக வைக்கப்பட்ட பெயராகும்! ஸ்டீவ் மெக்குவீன் நமது தல அஜீத்தைப் போலவே தீவிர ரேஸ் பிரியர்! இவர் பல படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தார்! கார் சேஸிங் காட்சிகளில் டூப் போடாமல் தானே காரை ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்!
  • லைட்னிங் மெக்குவீனுக்கு குரல் கொடுத்திருப்பது ஓவன் வில்சன்!
  • பால் நியூமன் இறந்து விட்டதால் அவரது கதாபாத்திரம் இப்படத்தில் இல்லை!
  • ஜேம்ஸ் பாண்ட் கார் வழக்கமாக ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் ஓட்டி வந்து சாகஸம் புரியும் ஆஸ்டன் மார்ட்டின் கார்களை ஒத்திருக்கிறது! இதற்கு குரலளித்திருப்பவர் மைக்கேல் கெய்ன்!
  • இவர்கள் தவிர ஃப்ராங்கோ நீரோ, வனெஸ்ஸா ரெட்க்ரேவ், சீச் மரின் போன்ற பல பிரபலங்கள் சிறு சிறு வேடங்களை ஏற்றுள்ளனர்!
  • ரேஸில் பங்கேற்கும் கார்கள் சிலவற்றுக்கு நிஜ ரேஸ் கார் ட்ரைவர்களே குரல் கொடுத்துள்ளனர்! அவர்கள் நிஜத்தில் ஓட்டும் கார் போலவே படத்திலும் கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்!
  • கார்ஸ் திரைப்படங்களின் இயக்குனர் ஜான் லாஸிட்டர் ஒரு கார் வெறியர்! இவர் தன் படங்களுக்கு உந்துதலாக அமைந்தது டிஸ்னியின் இந்த கார்ட்டூன் தான் என்று குறிப்பிடுகிறார்! இந்தக் கார்ட்டூன் கார்ஸ் படங்களை விட பல மடங்கு உயர்ந்தது என்று பார்த்தாலே புரியும்!


தியேட்டர் டைம்ஸ்:

  • இப்படம் கோவையில் ரிலீஸாகவில்லை! சென்னையில் ஐநாக்ஸில் 3Dல் கண்டு களித்தேன்!
  • இப்படம் 3Dல் உருவாக்கப்படிருந்தாலும் கூட குங் ஃபூ பாண்டா, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் அளவுக்கு 3D சிறப்பாக இல்லை!

நிறைகள்:

  • ஜேம்ஸ்பாண்ட் காரின் சாகஸங்கள்!
  • போப், இங்கிலாந்து ராணி, இளவரசர் வில்லியம் போன்ற பல பிரபலங்களை கார் வடிவில் சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது! டிஸ்னி பிக்ஸார் கலைஞர்களின் கற்பனைத்திறனுக்கு இது ஒரு சோறு பதம்!
  • ஒவ்வொரு ஊருக்கும் கதை பயணிக்கும் போதும் காட்டப்படும் அந்தந்த ஊரின் கண்கவர் காட்சிகள்! 3Dல் இன்னும் சிறப்பு!

குறைகள்:

  • நீளம்!
  • அனிமேஷன் படத்தில், அதுவும் ரேஸ் கார்கள் பற்றிய படத்தில் பேசியே கழுத்தறுக்கிறார்கள்! வளவளா வசனங்கள்!
  • டிஸ்னியின் வழக்கமான குழந்தைகள் பட ஃபார்மூலா! சலிப்பு தட்டி விட்டது!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3/6 - மூன்று தோட்டாக்கள்!

அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்! முடிந்தால் 3Dல்!

பயங்கரவாதியின் பன்ச்: CARS 2 - கட்டை வண்டி!

ட்ரைலர்:

Monday, July 4, 2011

TRANSFORMERS: DARK OF THE MOON (3D) - 29.06.2011 - திரைவிமர்சனம்!


வணக்கம்,

விம்பிள்டன் காலிறுதியில் ரோஜர் ஃபெடரர் தோற்றதிலிருந்து கடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த எனது வேண்டப்பட்ட விரோதி கடந்த வாரம் முழுதும் பல படங்களைப் பார்த்தும் கூட பதிவுகளேதும் இடாமல் இருந்தார்! ஃபெடரர் ‘டொக்’காயிட்டாருன்னு சொன்னால் அடிக்க வருகிறார்! ஆனால் இறுதியில் நடால் தோற்றதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தவர் இன்று முதல் மீண்டும் பதிவுகள் இடுவதாக கூறுகிறார்! மக்களே... உஷார்!!!

விமர்சனத்திற்கு முன் TRANSFROMERS பற்றிய சிறு குறிப்பு! 1980களில் HASBRO எனும் ஜப்பானிய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த பொம்மைகளே ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்! இந்த பொம்மைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் சாதாரண கார் அல்லது லாரி போலத் தோன்றும் இவற்றை பிரித்தால் ஒரு ரோபோவாக உருமாறும்! நூதனமான இந்த பொம்மைகள் உலகெங்கிலும் சூப்பர் ஹிட்!

இந்த பொம்மைகளின் சாகஸங்களை காமிக்ஸ் புத்தகங்களாகவும், கார்ட்டூன் தொடர்களாகவும் வெளியிட்டு மேலும் காசு பார்த்தார்கள்! க்ராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தின் அசுரப் பரிணாம வளர்ச்சியின் மூலம் இந்த பொம்மைகளின் சாகஸங்களை இப்போது நாம் திரைப்படங்களாகவும் கண்டு மகிழ முடிகிறது!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் மைக்கேல் பே இயக்கத்தில் ஷியா லபீஃப், கவர்ச்சிக் கன்னி மெகான் ஃபாக்ஸ் நடிக்க முதல் படம் வந்தது! படம் உலகெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்! இரண்டாவது பாகமும் வந்தது! அதுவும் சக்கை போடு போட்டது! இப்போது மூன்றாம் பாகம் 3Dல் வந்திருக்கிறது!

ஒரு மாதமாக ட்ரைலர்கள் மூலம் திரையரங்குகளிலும், டிவியிலும் மிரட்டி படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தார்கள்! ஏற்கெனவே முதலிரண்டு பாகங்களைப் பார்த்திருக்கிறேன்! அவற்றின் மீது பெரிதாக ஈடுபாடு ஏற்படவில்லை! எனினும் ட்ரைலர்கள் உண்டாக்கிய பெருத்த எதிர்பார்ப்புடன் திரையரங்கினுள் நுழைந்தேன்!

கதை: வழக்கம் போல கெட்ட ரோபோக்களுடன் சண்டை போடும் நல்ல ரோபோக்களின் கதைதான்! புதிதாக ஏதுமில்லை!

தியேட்டர் டைம்ஸ்:

  • இப்படம் உலகெங்கிலும் 29-06-2011 புதனன்று ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது! இந்தியாவில் ஆங்கிலத்திலும், தமிழ் உட்பட பல மாநில மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது!
  • ஐநாக்ஸில் செவ்வாய் இரவே சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள்! அந்த ஷோவும் ஹவுஸ்-ஃபுல்!!! அவ்வ்வ்வ்வ்...!!! 
  • கோவை கனகதாராவில் புதனன்றே ரிலீஸாகி விட்டாலும் வெள்ளிக்கிழமை வரை டிக்கெட் கிடைக்கவில்லை! 
  • பைலட் தியேட்டரில் வழக்கத்தை விட கால் மணி நேரம் முன்பாகவே படம் ஆரம்பித்து விட்டது! முதல் காட்சியில் ஏசி பல நேரங்களில் வேலை செய்யவில்லை! சவுண்ட் பல இடங்களில் சுத்தமாக காதில் விழவில்லை! இருந்தாலும் தியேட்டரில் ஃபுல் கூட்டம் என்று அண்ணன் ‘க’னா கூறிகிறார்! 
  • ஐநாக்ஸில் படம் பார்க்க வந்திருந்த பீட்டர் இளசுகள் படம் முழுவதும் ‘அடிச்சான் பாரு!’, ‘செம குத்து!’ என்றெல்லாம் ஆங்கிலத்தில் ஆர்ப்பரித்த படியிருந்தனர்! படம் முடிந்ததும் கேட்ட கைதட்டல்களும், விசில்களும் இப்படங்களுக்கு ரசிகர்கள் இல்லாமலில்லை என்று உணர்த்தியது! இனி எத்தனை பாகங்கள் வந்தாலும் இவர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு!
  • தமிழில் டப்பிங் வழக்கம் போல சுமார்தான் என்று அண்ணன் ‘க’னா கூறுகிறார்! ஆங்கிலத்தில் இரண்டாவது முறையாக பார்த்த அவர் பல விஷயங்கள் தெளிவாகப் புரிவதாக கூறினார்!
  • க்ளைமாக்ஸில் வரும் ஒரு சண்டைக் காட்சி அப்படியே எந்திரன் க்ளைமாக்ஸிலிருந்து அப்பட்டமாக சுடப் பட்டிருப்பதாக அண்ணன் ‘க’னா கூறுகிறார்!

நிறைகள்:

  • 3D
  • க்ராஃபிக்ஸ்
  • இதுதான் கடைசி பாகமாம்! தப்பிச்சோம்டா சாமி!!! ஆனால் இந்தப் படம் ஓடி விட்டால் எப்படியும் நாலாவது பாகத்தையும் எடுத்து நம்மை மேலும் சோதிப்பார்கள் என்று அண்ணன் ‘க’னா வேறு டெரரை கிளப்புகிறார்!

குறைகள்:

  • மெகான் ஃபாக்ஸ்! அவர் படத்தில் இல்லாதது பெரும் குறை! ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கும் அவருக்கும் ஏதோ சண்டையாம்! அதுக்காக படத்திலிருக்கும் ஒரேயொரு நல்ல விஷயத்தையும் இல்லாமல் செய்து நம்மை இப்படி பழி வாங்கலாமா?!! இதனால் அண்ணன் ‘க’னா பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்!
  • ஷியா லபீஃப்! இவர் ஒரு ஹாலிவுட் அபிஷேக் பச்சன்! நடிப்பென்றால் கிலோ என்ன விலையென்று கேட்கிறார்! ராட்சத ரோபோக்கள் படம் முழுவதும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருக்க இவர் புத்திசாலித்தனமாக ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் காச் மூச்சென்று கத்திக் கொண்டு தேமேவென்று திரிகிறார்!  
  • ஏற்கெனவே நீளமான படத்தில் காட்டுத்தனமாக ஓடிக் கொண்டேயிருக்கும் அமெரிக்கப் படை வீரர்கள்! இவர்கள் வரும் காட்சிகளைத் துண்டித்திருந்தாலே படம் ஒரு அரை மணி நேரம் குறைந்திருக்கும்!
  • ஒரே மாதிரியான சண்டைக் காட்சிகள்! 3Dம், க்ராஃபிக்ஸும் திகட்டி விடுகிறது!
  • பாக்கியுள்ள அனைத்து விஷயங்களும்!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

2/6 - இரண்டு தோட்டாக்கள்!
முதலிரண்டு பாகங்களின் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்! 3Dல் கண்டு களித்தல் மேலும் சிறப்பு!

பயங்கரவாதியின் பன்ச்: 

TRANSFORMERS - OVERKILL!

ட்ரைலர்: